Friday, August 21, 2009

நாஜி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட யூதர்களின் நிலையில் முகாம் அகதிகள்

ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் கொல்லப்படுவதற்காக யூதர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைப் போல இன்று வடக்கில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா  எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழைக் காலத்தில் சந்திக்கப் போகும் அதைவிட பாரிய பேரவலத்தை தவிர்க்க அம் மக்கள் உடனடியாக சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய இலங்கை அரசாங்கம் மட்டுமல்லாது இந்தியா, ஐ.நா. என முழு சர்வதேச சமூகமும் செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 


பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வவுனியா முகாம்களிலுள்ள மக்கள் கடும் மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை விவாதத்துக்கென சமர்ப்பித்து பேசும் போதே மாவை சேனாதிராஜா இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.


அவர் இங்கு மேலும் பேசுகையில்;


யுத்தத்தினால் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இன்று முகாம்களில் மழை, வெள்ளம் காரணமாக இன்று பெரும் கஷ்டங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர். நிலைமை நாளுக்கு நாள் அங்கு மோசமடைந்து வருகிறது. தொற்று நோய் பரவி உயிரிழக்கும் நிலைமைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மிகவும் கொடூரமான முறையில் இந்த மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.


அங்கு சட்டபூர்வமான நிலைமை இல்லை. சட்டபூர்வமாக அகதிகளை தடுத்து வைக்க முடியாது. சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் மூன்றரை இலட்சம் மக்கள் இருப்பதாக நாம் கூறியபோது அதை ஏற்காத அரசாங்கம் அங்கு 70 ஆயிரம் மக்களே இருப்பதாக கூறியது. 


எனினும் மே மாதம் இறுதித் தருணத்தில் அனைத்து மக்களும் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தபோது அரசாங்கமே 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வந்திருப்பதாகக் கூறியது.


இந்த மக்கள் அனைவரும் வன்னியில் அவர்களது சுய உழைப்பில் வாழ்க்கை நடத்திய மக்கள். ஆனால் இன்று முட்கம்பி வேலிகளுக்கு நடுவே இராணுவ சுற்றி வளைப்புக்கு மத்தியில் மரணத்தை தழுவும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 


முகாம்களின் நிலைமை மோசமாக இருப்பதாக ஐ.நா.செயலாளர் நாயகம் உட்பட உலகில் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். எனவே இம் மக்கள் கூடிய விரைவில் மீள்குடியேற்றப்பட வேண்டுமென்பதே இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தலாக இருக்கிறது.


கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் முகாம்களிலிருக்கும் சுமார் 20 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வயோதிபர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், சிறுபிள்ளைகள் என பலரும் இருக்கின்றனர். இப்படி அனைவருமே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருப்பது பெரும் சதுப்பு நிலமும் கூட. உணவுகளை கூட கொண்டு செல்ல முடியாத நிலைமை நிலவுகிறது.


இதேநேரம், முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டமைக்கு ஐ.நா.வேகாரணமென மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் ஐ.நா.வோஅதை மறுத்திருக்கிறது.


எது எப்படியிருப்பினும் இந்த இடத்தை தெரிவு செய்தது யார்? ஐ.நா.அரசின் நடவடிக்கைகளுக்கு உதவி ஒத்துழைப்புகளையே வழங்கி வருகிறது. இன்று முகாம்களில் மக்கள் உயிரிழப்பின் விளிம்பில் இருக்கின்றனர். சில நாட்களாக பெய்த மழையிலேயே இவ்வளவு பெரிய ஆபத்து என்றால், எதிர்வரும் மாதம் பருவப் பெயர்ச்சி மழைக்காலம் ஆரம்பமாகவுள்ளது.


வன்னியானது நீர் நிலைகளையும் குளங்களையும் சதுப்பு நிலங்களையும் கொண்ட நிலப் பிரதேசம். எனவே அந்த மக்கள் எதிர்வரும் நாட்களில் பெரும் மழை, வெள்ளத்தில் சிக்கி நோய்வாய்ப்பட்டு சாகப் போகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.


நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூட மக்கள் முகாம்களிலிருந்து உடைத்துக் கொண்டு வெளியேற முற்பட்டுள்ளனர். இதனால் அங்கு இராணுவத்தினர் அதிகமாக வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். 


எதிர்வரும் நாட்களில் ஏதேனும் நடக்கப் போகிறதோ என எச்சரிக்கிறோம். குழுந்தைகளுக்கான மருந்துகளை வெளியிலிருந்து பெறுமாறு வைத்தியர்கள் கூறும் போதும் இராணுவத்தினர் அதற்கு அனுமதிக்க மறுக்கின்றனர்.


நாம் இந்த மக்களின் நிலைமைகள் குறித்து ஜனாதிபதியுடனும் ஐ.நா.அதிகாரிகளுடனும் ஏனைய தரப்பினருடனும் பேசியுள்ளோம். இதேநேரம் முகாம்களிலுள்ள மக்களை கூடிய விரைவில் மீள்குடியேற்றம் செய்வதாக ஜனாதிபதி ஐ.நா.செயலாளர் நாயகத்துடன் இணைந்து விடுத்த கூட்டறிக்கையில் உறுதியளித்திருக்கிறார்.


இதேநேரம், 180 நாட்களில் மீள் குடியேற்றம் செய்வதாக அரசாங்கம் இந்தியாவிடம் உறுதியளித்திருக்கிறது. ஆனால் 3 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அடுத்த 3 மாதங்களில் பருவப்பெயர்ச்சி மழைக் காலம் நிலவப் போகிறது. 


இந்த மக்களின் வரலாற்று உரிமையுள்ள பிறந்த பூமியில் வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஹிட்லர் காலத்தில் கொல்வதற்காக யூதர்களை அடைத்து வைத்திருந்தது போல் தமிழ் மக்களும் இன்று முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.


அந்த மக்கள் இன்று ஈர நிலங்களில் தங்கியிருக்க முடியாமல் துன்பம் அனுபவிக்கின்றனர். குழுந்தைகள் பாலுக்காக துடிக்கின்றன. எமது இந்த மக்களின் பேரழிவை தடுக்கும் அதிகாரம் உங்களிடம் இருக்கிறதா? நாம் இன்று அழிக்கப்படும் சமூகமாகிவிட்டோம் அதுதான் இன்றைய நிலைமை.


எனவே, இந்த மக்களை மழை, வெள்ளத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமெனில் அம்மக்களின் வாழும் உரிமையையும் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேறும் உரிமையையும் ஏற்று அவர்களை வெகுவிரைவில் மீள்குடியேற்றம் செய்யவேண்டும். இதை செய்யுமாறு நாம் இலங்கை அரசாங்கத்தையும் அத்துடன் இந்தியாஇ ஐ.நா. உள்ளிட்ட முழு சர்வதேச சமூகத்தையும் கேட்கிறோம் என்றார்.

  

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails