Saturday, August 15, 2009

புலிகளின் புதிய தலைவராக நோர்வேத் தமிழர்?

புலிகளின் புதிய தலைவராக நோர்வேத் தமிழர்? செய்தி உண்மையானால் கைது செய்து ஒப்படைக்க நோர்வேயை கோருவோம்: பாலித ஹோகன

விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலுள்ள தமிழர் ஒருவரை நியமிக்கும் சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கும் நிலையில் அந்தச் செய்தி உண்மையானால் அவரைக் கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் கோரிக்கை விடுப்போம் என வெளிவிவகார செயலாளர் பாலித ஹோகன கூறியுள்ளார்.

நோர்வேயில் வெஸ்ற்லான பகுதியைச் சேர்ந்தவரான தமிழர் ஒருவர் விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக அப்பென் போஸ்ரன் (Aften Posten) பத்திரிகை தெரிவித்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சியானதாகும் என்று வெளிவிவகாரச் செயலாளர் பாலித ஹோகன கூறியுள்ளார். கெரில்லாக் குழுவான விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலுள்ள தமிழர் ஒருவர் நியமிக்கப்படும் சாத்தியம் குறித்து அவருக்கு கூறப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்ததாக நோர்வே செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்திற்கான முன்னணி வேட்பாளர்களின் ஒருவராக தமிழ் வெஸ்ற்லான பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் குறிப்பிடப்பட்டிருப்பதை கேள்வியுற்று தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக  கூறுகிறார். அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகள் விடுதலைப்புலிகளை தடைசெய்தபோதிலும் நோர்வே தடைசெய்யவில்லை. இந்நிலையில் நோர்வேயில் விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவர் சுதந்திரமாக நடமாடுகின்றார் என்பது அசாதாரணமான விடயமாகும் என அப்பென் போஸ்ரனுக்கு பாலித ஹோகன கூறியுள்ளார்.

இது தொடர்பாக தாம் நோர்வே அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வது இயற்கையான விடயம் என்றும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் அவரை நிச்சயமாக கையளிக்குமாறு நாம் கோரிக்கை விடுப்போம் என்றும் அவர் கூறினார். விடுதலைப்புலிகளின் எஞ்சியிருக்கும் தலைவர்களைப் பிடிப்பதற்கு ஏனைய நாடுகள் ஏற்கனவே ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக கூறிய ஹோகன,  அண்மையில் பத்மநாதன் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தகவலை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் பத்மநாதனும் ஏனைய தலைவர்களும் எமக்கு பல தகவல்களை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட தமிழர் நோர்வேயின் மேற்குக் கரையில் வசிப்பவர் என்றும் அவர் விடுதலைப்புலிகளின் இராணுவப் பிரிவைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அவர் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் தலைவராகும் சாத்தியம் இருப்பதாக பல வட்டாரங்கள் குறிப்பிட்டன. நோர்வே இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான நடவடிக்கைகளின்போது மத்தியஸ்தராக பங்காற்றியுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போதும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தது. 

நோர்வேத் தமிழரான இந்த மனிதர் 2005 ம் ஆண்டிலிருந்து நோர்வேயிலிருந்து இயங்கி வருவதாகவும், பத்மநாதனின் வன்முறையற்ற பாதைக்கு எதிரான அணியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இவர் மிகவும் ஆபத்தான மனிதர் என்று இந்தியாவின் புகழ்பெற்ற பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் கே போன்ஸ்லே கூறியுள்ளார். நோர்வேயில் சுதந்திரமாக வெளிநாட்டு அமைப்பொன்றின் தலைவர் இயங்கினால் அது நோர்வேக்கு துரதிஸ்டமான விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் முன்னர் சமாதான அனுசரணையாளராக செயற்பட்டவருமான எரிக் சொல்கெய்ம் கூறுகையில்,

நாங்கள் அறிக்கைகளை பதிவு செய்துள்ளோம். எது உண்மை, எது பொய் என்பது பற்றி எமக்கு சிறிதளவே தெரியும் என்று அவர் கூறியதாக அப்ரென் போஸ்ரன் பத்திரிகை தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டால் சர்வதேச ரீதியாக அது தொடர்பாக சகிப்புத்தன்மை ஏற்படாது என்று சொல்கெய்ம் கூறியுள்ளார்.

அவர் மிதவாத கொள்கையுடையவர். அகிம்சாவழியில் செல்பவர். விடுதலைப்புலிகள் எந்தப் பாதையை இப்போது தேர்ந்தெடுக்கப் போகின்றனர் என்பது பற்றி எப்போது எமக்கு தெரியாது என்று நோர்வே அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்ததாக அப்ரென் போஸ்ரன் கூறியுள்ளது.

இது இவ்வாறிருக்க, விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுபவரின் மனைவி தனது கணாவருக்கு விடுதலைப்புலிகளின் நடவடிக்கையுடன் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். 2005 இல் திருமணம் செய்த அவர்களுக்கு பிள்ளையொன்று உள்ளது. 2004 இல் விடுதலைப்புலிகளின் தூதுக்குழு நோர்வேக்கு வருகை தந்தபோது அவரும்(கணவரும்) வந்ததாக அப்பெண் கூறியுள்ளார். ஆனால், புதிய தலைவராக அவர் நியமிக்கப்படும் சாத்தியத்தை வதந்திகள் என்று அவர் நிராகரித்திருக்கிறார்.

தரக்குறைவான பிரசாரத்தினால் எமக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பலர் ஏன் அவருடைய பெயரை குறிப்பிடுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. எனது கணவர் அரசியல் ரீதியாக செயற்படுபவர் அல்ல என்று அவர் தெரிவித்திருக்க்கிறார். தனது கணாவர் புலிகளின் தலைவர் எனக் கூறுபவர்கள் பற்றி பொலிஸார் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பொலிஸ் பாதுகாப்புத் துறை இது தொடர்பாக அப்ரென் போஸ்டனுக்கு கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக அப்பத்திரிகை கூறியுள்ளது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails