Thursday, August 6, 2009

4000 ரியாலுக்கு கொத்தடிமையாகி சவூதியில் தவிக்கும் இளைஞர்கள்

 

4000 ரியாலுக்கு கொத்தடிமையாகி சவூதியில் தவிக்கும் நெல்லை, தூத்துக்குடி, குமரி இளைஞர்கள்

நெல்லை: சொன்ன வேலையை செய்கிறாயா... இல்லையா..உன்னை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவோம் எனக் கூறி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட வாலிபர்களை தெருவை சுத்தம் செய்யும் கொத்தடிமைகளாக சவூதியில் வாட்டி வதைக்கும் திடுக்கிடும் தகவல் வெளியே தெரிய வந்துள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்த மாவடிக்காலை சேர்ந்த சமுத்திரம், விரலக்குட்டி, ஆலங்குளம் அருகேயுள்ள பன்னீர்குளத்தை சேர்ந்த முருகன், பரமசிவன், கதிரேசன், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த நடராஜன், தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த ராஜ பாண்டியன், குமரி மாவட்டம் மேக்கா மண்டபத்தை சேர்ந்த ரகுமான், மற்றும் மதுரை, தஞ்சை, திருவண்ணாமலையை சேர்ந்த 21 பேர் ஒன்று சேர்ந்து சவூதியில் இருந்து இந்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

சவூதியில் தாங்கள் கொத்தடிமைகளாக இருப்பதாகவும், பல்வேறு சித்ரவதைகள் தாங்கமுடியாமல் கஷ்டப்படுவதாகவும் உடனே காப்பாற்றுங்கள் என்றும் பல பரபரப்பு தகவல்களை அவர்கள் எழுதியுள்ளனர். தங்கள் பாஸ்போர்ட் எண்களை எழுதி அனைவரும் கையெழுத்து போட்டு அனுப்பி உள்ளார்கள்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ள கண்ணீர் தகவல்கள் பின் வருமாறு..

எங்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தருவதாக மும்பையில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் சவூதிக்கு வந்தோம். விமான நிலையம் மற்றும் மருத்துவமனையை சுத்தம் செய்யும் வேலை என்று கூறி அழைத்து வந்தனர். ஆனால் இங்கு வந்த பிறகு எங்களுக்கு தெருகூட்டும் வேலை தந்துள்ளனர். நாங்கள் அனைவரும் இங்குள்ள தெருக்களை சுத்தம் செய்து வருகிறோம்.

இதற்கு சம்பளமாக ரூ.6 ஆயிரம் மட்டுமே தருகின்றனர். இந்த பணத்தை வைத்து சாப்பிட மட்டுமே முடிகிறது.

எங்களிடம் சொன்ன வேலையை கொடுங்கள் என்று கேட்டால் உங்களை 4 ஆயிரம் சவூதி ரியாலுக்கு விலை கொடுத்து வாங்கி இருக்கிறோம். நாங்கள் என்ன வேலை கொடுத்தாலும் செய்துதான் ஆக வேண்டும் என்கிறார்கள். யாராவது எதிர்த்து பேசினால் அவர்களை துப்பாக்கியால் சுடுகிறார்கள்.

தமிழர்கள் பலரை பைத்தியமாக மாற்றி உள்ளனர். உடனே எங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்படி உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தை சேர்ந்த கிட்டத்தட்ட 50 பேர் அங்கு இதுபோல் கொத்தடிமைகளாக போராடி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
 
source:eegara

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails