யாழ்., வவுனியா தேர்தல்கள் மூலம் தமிழர்களின் அரசியல் வேட்கையை மீண்டும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இலங்கையில் யாழ்ப்பாண மாநகரசபை, வவுனியா நகரசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இந்த தேர்தல்களால் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு நேரடியான பயன் எதுவுமில்லை என்பது உண்மையே. ஆனால் அதன் காரணத்தாலேயே இத்தேர்தலைப் புறந்தள்ளி இருந்துவிட முடியாது.
இலங்கை அரசுக்கும் உலக நாடுகளுக்கும் இந்தத் தேர்தலின் மூலமாக தமிழ் மக்கள் தமது அரசியல் வேட்கையை, தமது கோரிக்கைகளை, தமது கொள்கைகளை மீண்டும் ஒலிக்கச் செய்யவேண்டிய தேவையுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் முழுமையான அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அமைப்பு.
அக்கோட்பாடுகளின் அடிப்படையில் தேர்தலைச் சந்தித்து ஈழத் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்று வெற்றி பெற்றதோடு இன்றுவரை அதன் அடிப்படையிலேயே செயல்பட்டும் வருகிறது.
சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் அல்லது நடவடிக்கைகள் சிலவேளைகளில் அவர்கள் மீதான சந்தேகத்தை உண்டு பண்ணினாலும்கூட அவர்கள் அனைவரும் தமிழர்களின் அடிப்படைக் கோட்பாடுகளான தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கொள்கையில் இன்றுவரை உறுதியோடு இருக்கிறார்கள் என்பதையும் அதற்காக அவர்களும் பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதையும் மறக்கக்கூடாது.
அதேவேளையில், இலங்கை அரச – இராணுவ இயந்திரத்திற்குள்ளிருந்துதான் அவர்கள் செயல்படவேண்டிய இக்கட்டில் உள்ளார்கள் என்பதையும் அதற்குள் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளையும் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவே, தமிழ்த் தேசியத்தின் அடிப்படை கோட்பாடுகளை நீர்த்துப் போகவிடாமல் தக்கவைத்திருப்பதற்கும், தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை தொடர்ந்தும் உலகுக்கு வெளிப்படுத்துவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைய வேண்டிய தேவை உள்ளது. இதற்காக தமிழர்கள் அனைவரும் உழைக்க வேண்டிய கடமை உள்ளது.
நடைபெறப்போகும் தேர்தலில் யாழ்ப்பாண மற்றும் வவுனியாப் பகுதியில் வாழும் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்புத்தான் தமிழர்கள் இதுவரை காலமும் நடத்திய போராட்டத்தின் நியாயதன்மையைப் போருக்குப்பின்னும் உணர்த்திய வரலாற்றுத் தீர்ப்பாக இருக்கப்போகிறது.
அந்த வகையில், தேர்தலில் வாக்களிக்கப் போகும் தமிழர்கள் தமது வரலாற்றுக் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment