Sunday, August 9, 2009

தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது: அமெரிக்கா

 
வன்னியில் தமிழ் மக்கள், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து கலக்கமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  

தமிழ் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் தாமதப்படுவது குறித்தும் அது கவலை தெரிவித்துள்ளது.

வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 75 ஆயிரம் பேர் இந்த மாத இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர் என்று சிறிலங்கா அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.

இது குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க சனத்தொகை, அகதிகள் மற்றும் குடிப்பெயர்ச்சி துறை துணை அமைச்சர் எரிக் சுவார்ட்ஸ், சிறிலங்காவின் நடவடிக்கையை வரவேற்றதுடன் மீள்குடியமர்வுப் பணிகள் மேலும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த மாதம் சிறிலங்கா சென்றிருந்த அமைச்சர் சுவார்ட்ஸ், வன்னியில் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் சென்று பார்வையிட்டிருந்தார்.

பொதுவாக மீள்குடியமர்வு என்று வரும்போது அகதிகளும் ஏனைய இடம்பெயர்ந்த மக்களும் தமது விதியைத் தாமே தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். போர் முடிந்த பின்னர் எப்போது சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்வது என்பதை அவர்களே முடிவு செய்வார்கள்.

எல்லா இடங்களிலும் அதுதான் நடக்கிறது. சிறிலங்காவிலும் அதுதான் நடக்க வேண்டும் ஆனால், அங்கு அப்படி நடக்கவில்லை. ஏனென்றால் அந்த மக்கள் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார் எரிக் சுவார்ட்ஸ்.

மக்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைக்கப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தனது சட்டப்பூர்வமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கொழும்பு சரியான வேறு வழிவகைகளைக் கண்டறிய வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails