Sunday, August 30, 2009

காட்சிப் பதிவான சிங்களக் கொடூரங்கள்! - ஈழநாடு ஆரியர் தலையங்கம்

காட்சிப் பதிவான சிங்களக் கொடூரங்கள்! - ஈழநாடு ஆரியர் தலையங்கம்
சாட்சிகள் இல்லாமல் நடாத்தப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் படுகொலைகள் அம்பலத்திற்கு வராத வேளையில், மனிதாபிமானமுள்ள புலம் பெயர்ந்த சிங்கள ஊடகவியலாளர்களால் வெளியிடப்பட்ட அந்த வீடியோப் பதிவு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
சிங்கள அரசின் தமிழினப் படுகொலைகளுக்கும் பின் புலமாக இருந்து, இறுதிவரை வன்னியின் அவலக் குரல்கள் அடங்கிப் போகும்வரை சிங்கள அரசுக்குத் துணை நின்ற இந்திய அரசும் இந்தக் காட்சிப் பதிவு பற்றி விசாரணை தேவை என்று கூறியுள்ளது.

ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பாரிய வளங்களையும் ஆயுதங்களையும் வழங்கிய மேற்குலகு, சிறிலங்கா அரசு மேற்கொண்ட சாட்சிகளற்ற தமிழினப் படுகொலைகளைக் கண்டு, சிறிலங்கா அரசு மீது போர்க் குற்ற விசாரணை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. முன்றலில் வைத்த போதும் சிங்கள அரசுக்கு உறுதுணையாக நின்று அதைத் தோற்கடித்த பெருமை இந்தியாவுக்கு உண்டு. புதிதாக வெளிவந்த இந்தப் படுகொலைக் காட்சிப் பதிவு இந்தியாவையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. 

உலக நாடுகளை அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ள இந்த வீடியோ காட்சிப் பதிவு உண்மையற்றது. சிறிலங்கா இராணுவத்திற்கு அபகீர்த்தி உண்டாக்கும் விதத்தில் போலியாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது என்று சிங்கள அரசு அதனை வழமை போலவே மறுத்துள்ளது. 

வன்னியில் நடந்தேறிய கொடூரங்களை அங்கிருந்த ஊடகவியலாளர்கள் பதிவு செய்து வெளியிட்ட காட்சிப் பதிவுகள் உலக நாடுகளால் அலட்சியம் செய்யப்பட்டது. வன்னி மக்கள் 'எங்களைக் காப்பாற்றுங்கள்' என்று எழுப்பிய அவலக் குரல்களும் அவர்கள் புதை யுண்டும், எரியுண்டும் போகும்வரை உலக நாடுகளால் கண்டு கொள்ளப்படாமலே விடப்பட்டதன் பின்னணியிலும் இந்தியாவே இருந்துள்ளது. 

புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களையும், தமிழகத் தமிழர்களின் கொந்தளிப்ப்புக்களையும், மனித உரிமை அமைப்புக்களின் தொடர் வற்புறுத்தல்களையும் அசட்டை செய்ய முடியாத நெருக்கடி காரணமாக இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப் பகுதிகளில் 7,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்த ஐ.நா. 'வேலிக்கு ஓணான் சாட்சி' என்பது போல, சிறிலங்காவிற்கு மிகவும் வேண்டப்பட்டவரான விஜய் நம்பியார் அவர்களைத் தூது அனுப்பி யுத்தத்தை நிறுத்தச் சொன்னது. 

தமிழக மக்களை ஏமாற்ற நாராயணன், சிவசங்கர் மேனன் ஆகியோரை அனுப்பிய இந்தியா செய்த அதே காரியங்களை விஜய் நம்பியாரும் கச்சிதமாகச் செய்து முடித்த பின்னர் இந்தியாவுக்குச் சென்று தனது கடமையை முடித்துக்கொண்டு ஐ.நா.விற்கு அறிக்கை சமர்ப்பித்தார். 

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா சென்ற ஐ.நா. வின் செயலாளர் நாயகம் பான் கி மூன் மகிந்த ராஜபக் ஷக்களின் வரவேற்பிலும், கவனிப்பிலும் குளிர்ந்து போய் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மூடிமறைக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். முள்ளிவாய்க்கால் மேலாகப் பறந்து சென்ற பான் கி மூன், அங்கு கனரக ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கான தடயங்களைக் காணவே முடியவில்லை என்று அறிவித்தார். 

ஈழத் தமிழர்களின் ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டத்தைப் 'பயங்கரவாதம்' என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கி, விடுதலைப் புலிகளையும் பயங்கரவாதிகளாகப் பட்டியலிட்ட உலக நாடுகள் அத்தனையும் ஈழத் தமிழர்கள் மீதான இந்தப் படுகொலைகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. 

அதைவிடவும் முக்கியமாக எஞ்சியுள்ள தமிழீழ மக்களை யாவது காப்பாற்றுவதற்காகத் தொடர்ந்தும் போராட வேண்டிய அவசியம் புலம் பெயர் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிங்கள தேசத்தின் உச்சக்கட்ட கொடூரங்களின் ஒரு துளியாவது வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த வேளையில் உலக நாடுகளினதும், மனித உரிமைகள் அமைப்புக்களினதும் மனச்சாட்சியுடன் போராடுவதற்கான பெரும் பணியினை அந்தக் கொடூரக் காட்சிகள் எம்மிடம் சுமத்தியுள்ளது. 

தமிழீழப் போராட்ட வரலாற்றில், தம்மை அர்ப்பணித்த ஒவ்வொரு விடுதலைப் புலியும், ஒவ்வொரு ஈழத் தமிழனும் வரலாற்றை நகர்த்தியே மண்ணில் வீழ்ந்துள்ளார்கள். அவர்களது மரணங்கள் மகாத்தானவை. அவற்றில் வீரமும் தியாகமும் மட்டுமல்ல, விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஆற்றலும் எமக்காக விட்டுச் செல்லப்படுகின்றன. 

சிங்கள தேசம் ஊடகவியலாளர்களையும், தொண்டு நிறு வனங்களையும் உள்ளே அனுமதிக்காமலேயே நிகழ்த்தி முடித்த, நிகழ்த்தி வரும் இந்தப் படுகொலைகள் அம்பலத்திற்கு வந்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால், அது அவர்களது மகத்துவத்தையும், அவர்களது புனிதத்தையும் எங்களுக்கு உணர்த்துகின்றது. 

அந்த வீடியோப் பதிவில் எத்தனையோ இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, நிர்வாணப்படுத் தப்பட்டு கொலைக்களத்தில் நிறுத்தப்பட்ட இறுதிக் கணத்தில்கூட அவர்கள் மண்டியிடவில்லை. உயிர்வாழ்வதற்காக இலட்சியத்தை விட்டுக் கொடுக்கவில்லை. மாறாக, அவர்கள் இறுதிக் கணத்திலும் தமிழீழ விடிவுக்காகவே பிரார்த்தித் திருப்பார்கள். அந்த மகத்தான தியாகமே இந்தக் காட்சிப் பதிவுகள் சிங்கள ஊடகவியலாளர்களால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

சிங்கள தேசத்துடன் யுத்தத்தை நிறுத்தி, சமாதான வழிகளில் ஈழத் தமிழர்களின் சோகத்திற்கு முடிவு தேட முயற்சித்த விடுதலைப் புலிகளின் புதிய செயலாளர் நாயகமாகப் பொறுப்பேற்றுக்கொண்ட கே.பி. அவர்களும் சதி மூலம் கடத்தப்பட்டு சிங்கள தேசம் கொண்டு செல்லப்பட்டுள்ளாhர். இது சிங்கள தேசத்தின் சமரசமற்ற இனவெறி சிந்தனையின் உச்சக்கட்ட வெளிப்பாடே. 

சிங்கள அரசைப் பொறுத்தவரை, தமிழர்கள் அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள். சிங்களவர்களால் ஆளப்பட வேண்டியவர்கள். சரத் பொன்சேகாவின் வார்த்தைப்படி 'எதையுமே மேலதிகமாகக் கேட்காமல்' வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். 

இந்தக் கணத்திலாவது நாங்கள் எமக்குக் காலம் வழங்கியுள்ள வரலாற்றுக் கடமையினை நிறைவேற்றி ஈழத்தில் எஞ்சியுள்ள எமது உறவுகளைக் காப்பாற்றத் தவறினால், இலங்கைத் தீவு எதிர்காலத்தில் தமிழர்களற்ற சிங்களத் தீவாக மாற்றம் பெற்றுவிடும். 

சிங்கள இனவாத மேலாதிக்கத்தை ஏற்க மறுக்கும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட, அதைச் சீரணிக்க மறுப்பவர்கள் கடல் கடந்து செல்ல, தமிழீழம் அதன் சொல்லை இழந்து சிங்கள பூமியாகிவிடும். அப்போது, நாம் அந்த மண்ணுக்கு உரிமையோடு அல்ல, உல்லாசப் பிரயாணமாகக் கூடச் செல்ல முடியாத அவலங்களை எதிர்கொள்ள நேரிடும். 

இரண்டாவது உலகப் போரின்போது கிட்லரின் நாசிப் படைகளால் எண்ணற்ற யூதர்கள் சிங்களப் பாணியில் படுகொலை செய்யப்பட்ட பின்னர், புலம்பெயர் தேசங்களிலிருந்து யூதர்கள் உயிர்த்தெழுந்து இஸ்ரயேல் என்ற தங்கள் தேசத்தை உருவாக்கியது போலவே, புலம் பெயர் தமிழர் தமிழர்களும் சிலிர்த்தெழுந்து தமிழீழ மண்ணை மீட்கவேண்டும். அந்த மாவீரர்களதும், மக்களதும் அணையாத தமிழீழக் கனவை நிறைவேற்ற வேண்டும். இதுவே வரலாறு படைக்கப் புறப்பட்ட அந்த மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி!

நன்றி: பாரிஸ் ஈழநாடு
தகவல் : உழவன்


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails