இது தான் பாரதம்
முதல் காதல்
சார்வாகன்
பாரதப் போர் - அன்றைய போரில் அர்ச்சுனனும் கர்ணனும் மோதுகிறார்கள். முந்தைய நாள் போரில் பாண்டவர்களில் மூத்தவனான தருமன் கர்ணனிடம் சண்டையிட்டுத் தோற்றுப் போய் மூலையில் முடங்கி விட்டான். இன்றையப் போரின் முடிவு எப்படி இருக்கும்?
- கர்ணன் கொல்லப்பட்டான் என்றுதான் இருக்கும். நியாயமான முறையில் நடத்தப் படும் போர் அல்லவே! சூழ்ச்சிக்கார கண்ணன் அல்லவா போரை நடத்துகிறான். சூதும் வாதும் வஞ்சகமும் பித்தலாட்டமும் நிறைந்த முறையில் நடத்துகிறான். பின் எப்படி கர்ணன் வெற்றி பெற முடியும்? தேரை அழுத்தி அம்பு தாக்காமல் ஒருவனைக் காத்தான். யானை இறந்தது என உரக்கச் சொல்லி, மயக்கி ஒருவனை மாய்த்தான். சூரிய ஒளியை மறைத்துப் போரை முன்னதாகவே முடிக்கச் செய்து தோற்றுக் கொண்டிருந்த ஒருவனின் உயிரைக் காப்பாற்றினான். இப்படி எத் தனையோ நய வஞ்சகங்கள். அவனுக்கு முடிவு முக்கியம். வழிகளில் நேர்மை தேவையில்லை.
- உள்ளம் பதைபதைக்க பாண்டவர் குடும்பத்தார் அனைவரும் எதிர்பார்த்த முடிவு போர்க்களத்திலிருந்து சங்கும் தடயையும் சேர்ந்து ஒலித்தன. சத்தம் பயங்கரமாகக் கேட்டது என்றாலும் அதனையும் மீறிக் கேட்டது ஓர் ஓலம். குந்திதேவியின் குரல். போர்க்களம் நோக்கி ஆவேசமாக ஓடிக் கொண்டே எழும்பிய குரல். ஏன்?
- மாமியார் ஓடுவதைப் பார்த்த மருமகளும் ஓடினாள். குந்திக்கு மகன்கள் அய்ந்து என் றாலும் மருமகள் ஒருத்திதான். அய்ந்து பேருக்கும் ஈடுகொடுத்த அழியாத பத்தினி. அய்வருக்கும் ஈடு கொடுத்தாளா? உண்மை நிலை வேறு நிலை.
- நல்ல கணவன் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள் திரவு பதை தாம் முனுமுனுத்தது கடவுளின் காதில் விழுந்ததோ இல்லையோ என்ற சந்தேகம் எழவே மறுபடியும் முனகல் பதிம்தேஹி என்று. மீண்டும் மீண்டும் அய்யம். அம்மணி அய்ந்து முறை உச்சரித்தாளாம். ஆகவே அய்ந்து கணவன்களாம். அய்ந்து கணவன்கள் இருந்தும் திரவுபதையின் பிள்ளை அல்லது பிள்ளைகளின் பெயர்கள் என்ன? குழந்தையே இல்லையாம்.
- தருமன் ரிஷி மாதிரியாம். மனைவியிடம் தரும நீதி பேசுவாரோ? இருக்காதே! பள்ளி யறை இருக்கும் போதே ஆயுதப் பாசறையைப் படுக்கறையாக்கி அர்ச்சுனன் பார்க்கும்படி ஆகிவிட்டதே! அப்படியும் புழுபூச்சி வைக்க வில்லை.
- பல்லோ பலகாதம், பல்லிடுக்கு முக்காதம் என்று வருணிக்கப்படும் பீமன் நளின காம சூத்திரச் செயல்களுக்கு சரிப்பட்டு வராத ஆள் போலிருக்கிறது. - அர்ச்சுனன் பல பூக்களின் மகரந்தத்தைத் துய்க்கும் தும்பி. விளையாட்டுப் பிள்ளை. தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணனின் மைத்துனன். வெளி விளையாட்டுக்கே முக் கியத்துவம். அய்ந்தில் ஒரு பங்கு தேவைப் படவில்லை போல.
- நகுல சகாதேவச் சிறுவர்கள் அண்ணியைத் தாயாகவே எண்ணி இருந்து விட்டார்களோ? இருக்கலாம்.
- எது எப்படியோ, குழந்தை இல்லை. - எனவே தனியாகவே ஓடினாள். ஓடிக் கொண்டே திரும்பிப் பார்த்தாள். தருமன் ஓடி வந்து கொண்டிருந்தான்.
- மூவரும் போர்க்களம் போயினர். கர்ணன் அடிபட்டு, இதோ அதோ என்று சாகும் காலத் தை நெருங்கிக் கொண்டு.. அந்தக் கடைசிக்கால வேதனை முகத்தில் படர... புஸ்புஸ் என்று ஏங்கி மூச்சு விட்டுக் கொண்டு.. கண்கள் செருகிக் கொண்டு..... மார்பில் தைத்த அம்பின் மீது கை வைத்தவாறு... எடுத்துஎறிந்திடத் தெம் பில்லாத நிலையில்.. தேர்ச் சக்கரத்தில் தலையைச் சாய்த்தவாறு...
- கூவியபடி முதலில் ஓடிய குந்தி கர்ணனின் மேல் விழுந்தாள்...
- வந்தாயா, அம்மா... கர்ணனின் உதடுகள் பிளந்து வார்த்தைகள் வந்தன. குந்தியின் காது களில் மட்டுமே கேட்டிருக்கும் அருகில் இருந்ததால்.
- அய்யோ, மகனே! அலறிக் கொண்டே அழுதாள் குந்தி.
- நான் செய்து கொடுத்த சத்தியத்தை மறந்து விடவில்லை, மகனே என்று அரற்றிய வாறு தன் மார்புச் சேலையை விலக்கினாள். அரச குடும்பத்து வாளிப்பில் வளர்ந்துள்ள தன் மார்பில் கர்ணனின் வாய்படுமாறு அணைத் துக் கொண்டாள்.
- என்ன சத்தியம்? கர்ணன் தேரோட்டியின் மகன். இழி ஜாதி மகன் இறக்கும் தறுவாயில் ராஜமாதாவின் ஸ்தனத்தில் வாய் வைப்பதா? பால் குடிப்பதா? ராஜமாதாவே இந்தப் பாதகத்தைச் செய்வதா?
- பின்னாலேயே ஓடிவந்த திரவுபதையும் சிந்தித்தாள். தருமனும் சிந்தித்தான். பின்னாலே கூடிவிட்ட பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் நால்வர் மனதிலும் இதே கேள்விதான்.
- கர்ணன் குந்திக்கு மகனா?
- என் நெஞ்சின் கனமும் உன் நெஞ்சின் ஆசையும் தீர, மகனே! ஸ்தன்யபானம் செய்து கொள்! - எனக் கதறினாள் குந்தி. - சுற்றி இருந்தோர்க்குப் புரிந்து விட்டது. அய்ந்து பேரைப் பெற்ற மாதிரியே கர்ணனை யும் பெற்றிருக்கிறாள். முதலில் பிறந்தவனே கர்ணன்! அப்படியானால்..
- தர்மன் இரண்டாமவன்.
- திரவுபதைக்குக் கிட்டாமல் போய்விட்ட ஆறாவது கணவன். திரவுபதையின் மனதில் ஆறாமல் இருந்த ஆசை நாயகன்.
- அவள் மனதில் கடந்த கால நிகழ்ச்சிகள் நிழலாக வந்து போயின.
திரவுபதைக்குச் சுயம்வரம். வில்லை வளைத்து நாண் ஏற்றி இலக்கைத் தாக்க வேண்டும். அந்தக் காலத்தில் இப்படி ஒரு போட்டி. இதற்கும் இவ்வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? திரவுபதையின் அப்பாதான் பதில் கூற வேண்டும்.
- போட்டிக்கு கர்ணனும் வந்திருந்தான். தேரோட்டியின் மகனாக இருந்தாலும் துரியோதனன்தான் அவனுக்குச் சரியாசனம் தந்து அரசனாக்கியிருந்தானே? என்ன செய்தும் என்ன? நாணேற்றும்போது வில் நழுவி விட்டது. திரவுபதையும் நழுவிப் போய் விட்டாள்.
- ஆனாலும் அன்று கர்ணனைப் பார்த்த மாத்திரத்தில் மனதில் எழுந்த ஆசையை திரவுபதை மறக்க முடியவில்லை. மணக்க முடியவில்லையே தவிர ஒரு தடவையாவது மருவிவிட வேண்டும் என்ற ஆசை அவன் மனதில் இருந்து மறையவேயில்லை.
- காட்டில் அத்திரி முனிவரின் தோட்டத்தில் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனி. ஆண்டில் ஒன்று மட்டுமே காய்க்கும் என்கிற அதிசயக் கனி. முனிவர் மட்டுமே சாப்பிட என்றே காய்க்கும் கனி. அது கிடைக்கா விட்டால் முனிவரின் கோபத்திற்கு அளவில்லாமல் போய்விடும் என்கிற கனி.
- கணவன்களுடன் நடந்து சென்ற திரவுபதை கனி வேண்டும், அந்தக் கனிதான் வேண்டும் எனக் கேட்டாள். கணவன்களில் ஒருவனான அர்ச்சுனன் அம்பால் அடித்துக் கனியைப் பிடித்தான். அதன் பிறகுதான் சொன்னார்கள் -அய்யய்யோ, முனிவன் அறிந்தால் விடவே மாட்டான், சாபம் தந்து முடக்கி விடுவான் என்பதை, - கைபிசைந்து நின்றபோது, கண்ணன் சொன்னான். அவரவர் மனத்து ஆசையை மறைக்காமல் வெளிப்படுத்தினால் மரத்தில் போய் கனி ஒட்டிக் கொள்ளும் என்றான்.
- எல்லாரும் சொன்னார்கள். கனி மெல்ல மெல்ல மேலே போனது. திரவுபதைதான் பாக்கி. அவளையும் சொல்லச் சொன்னான் கண்ணன்.அவளும் சொன்னாள். அய்ந்து பேர் கணவனாக இருந்தும் என் தாகம் தணியவில்லை. ஆறாவதாக ஒரு கணவன் வேண்டும் என்கிற ஆசை என் மனதில் அமிழ் ந்து கிடக்கிறது என்றாள். கனி மரத்தில் ஒட்டிக் கொண்டது.
- சுயம்வரத்தில் பார்த்த அந்த ஆணழகன் இதோ.. திரவுபதையின் மனதில் அவ்வப்போது ஏற்படும் கிளர்ச்சிக்குக் காரணமான கர்ணன் இதோ.. அதுவும் தன் கணவன்களுக்கெல்லாம் மூத்தவனாக இதோ.. தன் மாமியாரின் முதல் மகனாக இதோ..
- புதிதாகப் பழி ஏதும் வந்துவிடப் போவதில்லை என்பதால் குந்தி கர்ணனைத் தன் மகன் என்பதை வெளிப்படுத்தி விட்டாள். கர்ணன்மீதுதான் கண்டது முதல் காதல்.. ஆசை.. காமம்.. அடையத் துடிக்கும் ஆவல்... என்பதையெல்லாம் எப்படி வெளிப்படுத்து வாள், திரவுபதை?
- பாவம், தன் உள்ளத்தில் குடி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கும் கர்ணனை திரவுபதை கொன்றுவிட வேண்டியதுதான். வேறு வழியில்லை.
- கர்ணன் தன் விருப்பம் - ஆசை - பிறந்தவுடனேயே தொட்டிலில் வைத்து ஆற்று நீர்ப் போக்கில் போகவிட்டு விட்ட தாயின் முலைப் பாலைக் குடித்து உயிரை விட வேண்டும் என்பதை நிறைவேற்றிக் கொண்ட மனநிறைவில் கண்களை மூடிக் கொண்டான்.
- தருமனும் அவன் தம்பிகளும் என்ன நினைப்பார்கள்? கர்ணன் அண்ணன் என்பதால் சாவுக்காக அழுவார்களா? எதிரி என்பதால் மகிழ்வார்களா?
- போர்க்களத்தில் முடிவு மாறிப் போயிருந்தால்... கர்ணன் வென்று அர்ச்சுனைக் கொன்று இருந்தால்.. திரவுபதையின் மனம் எப்படி இருந்திருக்கும்? அர்ச்சுனனுக்காக அழுவாளா? கர்ணன் கிடைத்து விட்டான் என்பதற்காக மகிழ்வாளா?
பாரதப் புத்திரியின் மனம் கூடப் புதிர்தானோ?
No comments:
Post a Comment