உள்ளங்கையில் சாவை ஏந்திக்கொண்டு உலகத்துக்குக் கடிதம் எழுதிய கலகக்காரன். மூலக்கொத்தலம் சுடுகாட்டில் நள்ளிரவு 2 மணிக்கு பெருஞ்சோதியாக அவன் எரிந்துகொண்டு இருந்த காட்சி இப்போதும் என் விழி நனைக்கிறது. இந்தத் தலைமுறையில்தமிழ் நாடு கண்ட முதல் மக்கள் தன்னெழுச்சி, முத்துக்குமாரின்மரணம் தான். ஈழத் தமிழர்களுக்காகத் தன்னையே எரித்துக் கொடுத்த அந்த எழுச்சி இளைஞனின் குடும்பம் இப்போது எப்படி இருக்கிறது?
முத்துக்குமாரின் அப்பா குமரேசன், தாம்பரம் அருகே சேலையூர் பகுதியில் தள்ளுவண்டியில் ஐஸ் க்ரீம் விற்கிறார். இனத்துக்காக இன்னுயிர் தந்தவனின் தந்தைக்கு வறுமையும் எளிமையுமே அடையாளம். ஆனால், ஓர் உண்மைப் போராளியின் தந்தையாக கம்பீரம் சுமக்கிறார் பேச்சில்...
|
''ஜனவரி 29-ம் தேதி வரைக்கும் குமரேசனோட மகனா இருந்தான் முத்து. இப்போ நானே என்னை 'முத்துக்குமாரோட அப்பா'ன்னுதான் வெளியேசொல்லிக்கிறேன். எவ்வளவு கூட்டம்... அவன் செத்துப் பொணமா கெடக்கான். சுத்தி தமிழ்நாட்டு சனமே திரண்டு நிக்குது. யாருன்னே தெரியாத புள்ளைகள்லாம், 'அப்பா, அப்பா'ன்னு என் கையைப் பிடிச்சுக்கிட்டு அழுவுதுக, ஆறுதல் சொல்லுதுக. கொளத்தூர்லேர்ந்து மூலக்கொத்தலம் சுடுகாடு வரைக்கும் எங்க பார்த்தாலும் அவ்வளவு சனம். இந்த சனத்தை நம்பித்தானய்யா எம் புள்ள செத்துச்சு... 'நம்ம செத்தாலும் இவங்கள்லாம் இருந்து போராடி அங்கே சாவுற நம்ம சனங்களை எப்படியும் காப்பாத்திடுவாங்க'ன்னு நினைச்சுத்தானே அவன் கரிக்கட்டையாக் கருகிக்கெடந்தான். திரண்டு வந்த புள்ளைங்கள்லாம் எவ்வளவு வேகத்தோடு இருந்துச்சுக... கோபத்தோட துடிச்சுதுக... கடைசியில எல்லாத்தையும் ஒண்ணும் இல்லாமப் பண்ணிட்டாங்களே..." - அடிமனதின் ஆதங்கம் வெடிக்கப் பேசுகிறார் குமரேசன். அருகில் முத்துக் குமாரின் தங்கை தமிழரசி தனது இரண்டு பிள்ளை களுடன் அமர்ந்து இருக்கிறார். கொளத்தூர்வீட்டுச் சுவரின் புகைப்படத்தில் இருந்து எங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான் முத்துக்குமார்.
''அவனோட டைரியில, 'என் மீது அக்கறைகொண்ட அனைவரும் பொறுத்தருள்க... இன்று என் வாழ்நாளில் பொன்னானதொரு நாள்'னு செத்துப்போன அன்னிக்கு எழுதிட்டுப் போயிருக்கான். இந்த மக்களுக்காக உசுரைத் தூக்கிக் குடுத்துட்டுப் போனானே... அப்பதான் நெனைச்சேன். 'ஐயோ முத்து... நீ மகன் இல்லடா. என் அப்பன்'னு.
அவன் காசுக்காகச் சாகலை. அரசாங்கம் தர்றதாச் சொன்ன 2 லட்ச ரூபாய் காசைக்கூட வேண்டாம்னு சொல்லிட்டோம். அவனே அரசாங்கத்தை விமர்சனம் பண்ணிட்டுத்தான் செத்தான். அந்த அரசாங்கம் குடுக்குற காசை வாங்குறது அசிங்கம் இல்லையா? இந்த இனம் வாழணும்... நம்ம சனம் வாழணும்னு எரிஞ்சு சாம்பலான ஒவ்வொரு உசுருக்கும் நீங்க விலைவைக்க முடியுமாய்யா? அந்த உணர்ச்சிக்கும் உண்மைக் கும் முன்னாடி உங்க காசு தூசுய்யா!
எங்க பொழப்பு, வறுமை எல்லாம் எங்களோட.எல்லாரும் உழைச்சுத்தானே சாப்புடணும். அதை விடுங்க... நான் வருத்தப்படுறது எல்லாம் இந்த தியாகம், அவன் உருவாக்குன எழுச்சி எதாலயும் அந்த மக்களைக்காப்பாத்த முடியலையேன்னுதான். எல்லாம் இந்தவீணாப் போன தமிழ்நாட்டுஅரசியல் வாதிகளாலதான். இவங்க ஒழுங்கா இருந்திருந்தா, அந்த மக்களைக் காப்பாத்தி இருக்கலாம். ஆனாலும், முத்துக்குமாரோட உண்மையான தியாகம் என்னிக்கும் வீண் போகாதுன்னு நம்புறோம். என்ன ஒண்ணு... அவனை மறக்க முடிய மாட்டேங்குது. இன்னிக்கு நினைச்சாலும் கண்ணீர் தான் வருது''விழியோரம் துளிர்த்த நீர்த் துளி உருண்டோடப் பேசுகிறார்.
''இதான் முத்து மாமா ஃப்ரெண்ட்'' என பிரபாகரனின் புகைப்படத்தை ஓடிவந்து என்னிடம் காட்டுகிறான் முத்துக்குமாரின் தங்கை மகன் மோனேஷ். முத்துக்குமார் சாகும்போது அவரது தங்கை தமிழரசி 8 மாதக் கர்ப்பம். பிறகு, பிறந்த அந்தப் பெண் குழந்தைக்குப் பெயர் முத்து எழில்!
''திருச்செந்தூர் பக்கம் கொழுவைநல்லூர்தான் எங்க சொந்த ஊர். 10 வருஷங்களுக்கு முன்னாடி எங்க அம்மா கேன்சர்ல செத்துப்போயிருச்சு. வசந்தகுமார்னு என் இன்னொரு அண்ணன் ரெண்டு வருஷம் முன்னாடி ஆக்ஸிடென்ட்ல செத்துட்டான். இப்போ முத்துக்குமாரும் செத்துட் டான். எங்க அம்மா பெத்த மூணு பிள்ளைகள்ல நான் மட்டும்தான் மிச்சம் இருக்கேன். எல்லாரும் அந்தப் பழைய வீட்டுல இருக்கும்போதுதான் செத்தாங்க. அதனாலதான் வீட்டை மாத்திக்கிட்டு இங்கே வந்துட்டோம். சொந்தக்காரங்கள்லேர்ந்து எல்லாரும் முத்துக்குமார் செத்ததும் நாங்க ஏதோ லட்சம் லட்சமா சம்பாதிச்சுட்டதா நினைக்குறாங்க. ஆனா, நாங்க இன்னிக்கும் இந்த வீட்டுக்கு 3 ஆயிரம் ரூபா வாடகையே ஒழுங்காக் குடுக்க முடியாமத்தான் கஷ்டப்படுறோம். அதுக்காக முத்துக்குமார் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்க விரும்பலை. தயவுசெஞ்சு அந்த மாதிரி எழுதிடா தீங்க. ஏன்னா, எங்க அண்ணன் பணத்துக்காகச் சாகலை. இனத்துக்காகச் செத்தான். அந்த மக்கள் நல்லா இருந்தா, அவங்களுக்கு ஒரு நல்ல வழி பொறந்தா... அதுவே எங்களுக்குப் போதும்'' - அண்ணனின் வார்த்தைகளை அப்படியே பேசுகிறார் தங்கை.
No comments:
Post a Comment