அமெரிக்க இராஜாங்க விவகார துணை அமைச்சர் றொபேர்ட் பிளேக், நேற்று திங்கட்கிழமை அசோசியேட் பிறஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அனேகமாக அடுத்த ஜனவரி மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் அரச தலைவர் தேர்தல் நடந்து முடியும் வரைக்கும் அரசியல் முரண்பாடுகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டப் போவதில்லை என்று குறிப்பிட்டுக் காட்டியிருப்பது தன்னை விசனமடைய வைத்துள்ளது எனவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார். "2010 ஜனவரி மாதம் என்பதை விட்டுவிட்டு இன்னும் விரைவாக, தீர்வு நோக்கி முன்னேறுவதற்கான வழிவகைகளை அரசு கண்டறிய வேண்டும். ஏனெனில் மக்கள் நம்பிக்கை இழக்கும் ஆபத்து இருக்கிறது. அது பயங்கரவாதத்துக்கான புதிய உந்துதலை, பலத்தைக் கொடுக்கக்கூடும்" என்றார் பிளேக். 80 ஆயிரத்துக்கும் ஒரு லட்சத்திற்கும் இடைப்பட்ட மக்கள் கொல்லப்பட்ட போர் முடிந்துவிட்ட பின்னர், தாமும் அரசியல் செயற்பாடுகளில் ஒரு பாகம் என்று தமிழ் மக்களை அரசு உணர வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசு நடமாட்ட சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பிளேக் கூறினார். அத்துடன், முகாம்களில் இருந்து 10 ஆயிரம் பேர் வெளியேறிச் செல்வதற்கு அரசு அனுமதியளித்துள்ளமை குறித்தும் இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 ஆயிரம் பேருக்கு அவ்வாறான அனுமதி வழங்கப்பட உள்ளமை தொடர்பிலும் குறிப்பிட்ட பிளேக், இருப்பினும் அந்த மக்கள் "தமது விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்" என்றார். "நடமாடுவதற்கான சுதந்திரம் அவர்களுக்கு அவசியம். ஆனால் முகாம்களைவிட்டு வெளியேற அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை" என்றார் பிளேக். மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா நிபந்தனைகள் எதனையும் விதிக்காது எனக் கூறிய பிளேக், எனினும் புனர்நிர்மாணத்திற்கான நீண்டகால உதவிகள், மக்களின் மீள்குடியமர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு விடங்களில் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது எனவும் தெளிவுபடுத்தினார். இதேவேளையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக ஒரு கோடி 50 லட்சம் டொலர் பெறுமதியான உணவுப் பொருட்களை நேற்று வழங்கியுள்ளது. முகாம்களில் இருந்து தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்பவர்களுக்கு வழங்குவதற்காகவே இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு திரும்புபவர்களுக்கு ஆறு மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இதன் மூலம் வழங்கப்படும் என அனைத்துலக மேம்பாட்டுக்கான அமெரிக்க நிலையம் தெரிவித்தது. |
No comments:
Post a Comment