இத்தகவலை பத்தி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் தமது இணையத்தளத்தில் எழுதியுள்ளார். கே.பி.யின் கைது தொடர்பாக ஜெயராஜ் மேலும் எழுதியிருப்பதாவது; கழுதையானது தனது முதுகில் பொதிகளை சுமந்து வரும். தனது முயற்சியால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத மூடைகளை விநியோகித்தவர் கே.பி. அதனால், அவருக்கு இப்பெயர் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த மே மாதத்தில் பிரபாகரன் மரணமடைந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் உயிருடன் இருக்கும் தலைவர்களில் சிரேஷ்ட உறுப்பினரான கே.பி.யை தலைவராக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை புலிகளின் வெளிநாடுகளிலுள்ள சில உறுப்பினர்கள் எதிர்த்திருந்தனர். பேரின்பநாயகம் சிவபரன் அல்லது நெடியவன் என்பவரது தலைமையில் புலிகளின் ஒரு பகுதியினர் கே.பி. தலைவராவதை எதிர்த்திருந்தனர். அதன்பின் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று தலைமைச் செயலராக கே.பி.யை நியமிக்க உடன்பாடு காணப்பட்டது. இந்த உடன்பாட்டுக்கு மத்தியிலும் வெளிநாடுகளிலுள்ள புலி உறுப்பினர்கள் மத்தியில் கே.பி.யை தலைவராக ஏற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நெடியவன் இந்த எதிர்ப்பின் பின்னணியில் செயற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. உள்மட்டத்திலான இந்த எதிர்ப்புச் சூழ்நிலையின் மத்தியில் கே.பி.தமது தலைமைத்துவத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார். இன்ரர்போலினால் தேடப்பட்டு வந்த நிலையிலும் உடல்நலக் குறைவினாலும் அவர் சர்வதேச பயணங்களை தவிர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். இதன் விளைவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் இவருடன் கலந்துரையாடுவதற்காக மலேசியாவிற்கு சென்று வந்தார். சனல்4 தொலைக்காட்சி பணியாளர் கூட கோலாலம்பூருக்கு புலிகளின் புதிய தலைவரை பேட்டி காணச் சென்றிருந்தார். பாங்கொக்கிற்கும் கோலாலம்பூருக்கும் இடையில் கே.பி.பயணங்களை மேற்கொண்டிருந்தார். கடந்த புதன்கிழமை 5 ஆம் திகதி கே.பி. கோலாலம்பூரில் இருந்தார். கோலாலம்பூர் நகரின் மையப்பகுதியில் 316 ஜலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலிருந்த ஹோட்டலுக்கு அவர் சென்றிருந்தார். லண்டனிலிருந்து வருகை தந்திருந்த இரு விருந்தினர்களை சந்திப்பதற்காகவே அவர் சென்றிருந்தார். கே.பி.க்கு உதவியாளர்களாக சிலர் பணியாற்றினர். சாரதிகளாகவும் பாதுகாவலராகவும் அவர்கள் செயற்பட்டு வந்தனர். ஆட்களைச் சந்திக்க கே.பி.வெளியே செல்லும் போது அவருடைய வாகனத்தில் சாரதி மட்டுமே இருப்பார். குறிப்பிட்ட அந்தத் தினத்தில் கே.பி.அந்த ஹோட்டலுக்கு அப்பு என்று அழைக்கப்படும் தமது சாரதியுடன் சென்றுள்ளார். ஹோட்டல் அறைக்கு வெளியே காத்திருந்த விருந்தாளிகளுடன் கே.பி. சென்றுள்ளார். அப்பு வாகனத்தை நிறுத்திவிட்டு அதற்குள் இருந்திருக்கிறார். பிரிட்டனிலிருந்து வருகை தந்திருந்த விருந்தாளிகளில் ஒருவர் பாலசிங்கம் பாலேந்திரனாவார். இவர், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் பாலசிங்கம் மகேந்திரன் அல்லது நடேசன் என்பவரின் இளைய சகோதரனாவார். மற்ற விருந்தாளி நடேசனின் மகனாவார். நடேசனின் மகன் சில வருடங்களுக்கு முன்னர் லண்டனுக்குச் சென்று அங்கு தனது சிறிய தகப்பனாருடன் இருக்கின்றார். மூவரும் கதைத்துக்கொண்டு இருந்தனர். அப்போது, நண்பரொருவர் கே.பி.யின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பிற்பகல் 2 மணியாகும். அச்சமயம் தனது கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்து விட்டு கே.பி.கதைக்கத் தொடங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தான் வெளியே தாழ்வாரத்திற்குச் சென்று கதைக்கப்போவதாக விருந்தாளிகளுக்கு சைகையால் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். விருந்தாளிகள் சுமார் 15 - 20 நிமிடங்கள் வரை அறைக்குள் காத்திருந்தனர். நடேசனின் மகன் வெளியே சென்று பார்த்திருக்கிறார். கே.பி.யை காணவில்லை. பின்னர் இருவருமாக தேட ஆரம்பித்தனர். அங்கு கே.பி.யின் வாகனமோ அப்புவோ இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கவலையடைந்த பாலேந்திரன் தமது தமிழ் தரப்பு தொடர்புகளுக்கு அழைப்பு விடுத்து கே.பி. திடீரெனக் காணாமல் போய்விட்டது பற்றிக் கூறியுள்ளார். அதேசமயம், கே.பி.க்கு தொலைபேசி அழைப்பு விடுத்த நண்பனும் குழப்பமடைந்திருக்கிறார். கே.பி.யுடன் உரையாடிக் கொண்டிருந்த வேளை சடுதியான சத்தம் கேட்டுள்ளது.பின்னர் தொலைபேசி செயலிழந்து விட்டது. குழப்பமடைந்த நண்பர் தொடர்ந்து கே.பி.க்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். பதில் கிடைக்கவில்லை. பின்னர் தொலைபேசி நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நண்பர் கே.பி.யின் தொடர்புகள் மற்றும் கோலாலம்பூரிலுள்ள உதவியாளர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து தெரியப்படுத்தி எச்சரிக்கைப் படுத்தினார். கே.பி. தங்கியிருந்த இடத்திற்கு அவர்கள் சென்றுள்ளனர். திடீரென ஏதோவொரு காரணத்திற்காக கே.பி.அங்கு சென்றிருக்கலாம் என்று அவர்கள் கருதியிருந்தனர். ஆனால், அங்கு கே.பி.இருக்கவில்லை. ஆனால், கே.பி.யின் இன்சுலின் ஊசிகள், இதர மருந்துப் பொருட்கள் அவரது அறையில் காணப்பட்டன. நீரிழிவு நோயாளியான கே.பி. இன்சுலின் இல்லாமல் எங்கும் பயணம் செய்யமாட்டார். தமது எஜமான் இன்சுலின் இல்லாமல் தூர இடத்திற்கு போகமாட்டார் என்பதைத் தெரிந்திருந்த அவரது உதவியாளர்கள் கவலையடைந்திருந்தனர். தங்களுக்குத் தெரிந்ததை பிரிட்டன் விருந்தாளிகள் கே.பி.யின் உதவியாளர்களுக்கு தெரிவித்திருந்தனர். புலிகளின் புதிய தலைவர் கைதாகியதோ அல்லது கடத்தப்பட்டோ இருக்கலாம் என்பதை அவரின் நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் புரிந்து கொண்டனர். மலேசிய அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாமென அவர்கள் சந்தேகப்பட்டனர். அத்துடன், இலங்கை, இந்தியா மீதும் சந்தேகம் ஏற்பட்டிருந்தது. செய்திகள் பரவத் தொடங்கின. புலிகளின் புதிய தலைவர் கே.பி.தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக பத்திரிகைகளும் ஏஜென்சி செய்திகளும் அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்தன. பாங்கொக்கில் வைத்து கே.பி. கைது செய்யப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார ராய்ட்டருக்கு கூறியிருந்தார். இந்தத் தருணத்தில் அந்தளவுக்கே தமக்குத் தெரியும் என்று அவர் தெரிவித்திருந்தார். என்ன நடந்தது என்பது தொடர்பாக இரு முரண்பட்ட கருத்துகள் வெளியாகியிருந்தன. கே.பி.யும் அப்புவும் கோலாலம்பூரிலிருந்து பாங்கொக்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒரு தகவல் தெரிவித்தது. கே.பி.தாய்லாந்தில் வைத்து கைதானார் என்ற மனப்பதிவு உருவாக்கப்பட்டிருந்தது. இலங்கையில் இருந்து சென்ற பயங்கரவாத விசாரணை திணைக்களக் குழுவொன்று பாங்கொக்கிலிருந்து கே.பி.யை விசேட விமானத்தில் கொழும்புக்குக் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், இலங்கைக் குழு மலேசியாவிற்குப் போயிருந்ததாக மற்றொரு கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. கோலாலம்பூரில் வைத்து கே.பி.யைக் கைது செய்து அவரை விமான மார்க்கமாக கொழும்புக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறுகிய காலப்பகுதியில் அந்த விசேட விமானம் பாங்கொக்கில் தரித்து நின்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், தாய்லாந்தின் ஏஜென்சி செய்தி அறிக்கையின் பிரகாரம் கே.பி.யின் கைது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தாய்லாந்துப் பிரதமர் அபிஜித் பாதுகாப்புத் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கைதான விடுதலைப் புலிகளின் வெளிநாட்டைத் தளமாகக் கொண்ட தலைவர் செல்வராஜா பத்மநாதன் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அங்கு அவர் மீது விசாரணை இடம்பெறுவதாகவும் ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்திருந்தது. இந்த விடயம் குறித்து வியாழக்கிழமை பின்னிரவு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விபரங்களை சமர்ப்பிக்குமாறு தான் பாதுகாப்பு தரப்புக்கு பணித்திருப்பதாகவும் தாய்லாந்துப் பிரதமர் கூறியிருந்தார். இதேவேளை, கே.பி.தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லையென்றும் சிங்கப்பூரிலேயே கைதானதாகவும் தாய்லாந்தின் விசேட பொலிஸ் பிரிவின் தலைவர் தீரா தேஜ் கூறியிருந்தார். கட்டுநாயக்காவுக்கு கொண்டு வரப்பட்ட இருவரும் உடனடியாக வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் இருவரது முகங்களும் மூடப்பட்டு கைவிலங்குடன் அவர்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் கட்டுநாயக்கவிலுள்ள வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருந்தன. கொழும்பில் கே.பி.மீது விசாரணை நடத்தப்படுவதாக பசில் ராஜபக்ஷ எம்.பி. இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார். அப்பு தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இரு வருடங்களுக்கு முன்னர் 2007 செப்டெம்பரில் கே.பி.தாய்லாந்தில் வைத்து அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியா அல்லது இலங்கைக்கு அவர் கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதுவும் இடம்பெறவில்லை. விரைவில் கே.பி. விடுதலையாகியிருந்தார். ஆனால், இந்தத் தடவை நிலைமை வித்தியாசமானதாக இருந்துள்ளது. மலேசியாவில் கே.பி.கைதானமை குறிப்பிடத்தக்க விடயமாகவுள்ளது. முதலாவதாக மே 29 இல் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் அகமத் ஹமீதியிடம் கே.பி.யை கையளிக்குமாறும் புலிகளின் வெளிநாடுகளில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக அவரை கையளிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கோரிக்கை விடுத்திருந்தார். சிங்கப்பூரில் இடம்பெற்ற தென்கிழக்காசிய பாதுகாப்பு தொடர்பான வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த வேளையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளை மலேசிய அரசாங்கம் தடைசெய்ய வேண்டுமென இலங்கை கேட்டிருந்த போது அச்சமயம் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாவதாக பிரிகேடியர் உதய பெரேராவை அண்மையில் மலேசியாவிற்கான பிரதி உயர்ஸ்தானிகராக இலங்கை நியமித்திருந்தது. விடுதலைப் புலிகளின் புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. மேஜர் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்ட ஜி.வி.டி.யூ.எ. பெரேரா இராஜதந்திர நியமனத்தைப் பெறும் பதவியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் முதலாவது இராணுவ அதிகாரியாவார். இறுதி யுத்தத்தைத் தொடர்ந்து விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்து வெளிநாட்டுத் தூதுவரை வைத்து விடயங்களை மேஜர் ஜெனரல் பெரேரா தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து அவருக்கு நியமனம் வழங்கப்பட்டது. ஜெனரல் உதய பெரேராவின் பிரதான பகிரங்கப்படுத்தாத கடமை "ஒப்பரேசன் கே.பி' என்பது புரிந்துகொள்ளக் கூடியதொன்றாகும். குறிப்பிட்ட சில காலம் புலிகளின் முக்கியமான நடவடிக்கைகளுக்காக மலேசியாவை கே.பி. பயன்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்பது அனுமதிக்கக்கூடியதாகும். கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் மலேசியாவிற்குச் சென்று கே.பி.யைச் சந்தித்ததைத் தொடர்ந்து கோலாலம்பூரில் கே.பி. பிரசன்னமாகியிருப்பது கவனிக்கக்கூடிய விடயமாக இருந்தது. மலேசியாவில் கே.பி.யை சந்தித்ததாக ஒப்புதல் அளித்திருக்கும் மற்றொருவர் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் லெப்டினன்ட் கேணல் ஆவார். அத்துடன் ஐ.நா.விலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளும் மலேசியாவில் கே.பி.யுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்தனர். ஏனைய நாடுகளின் புலனாய்வுத்துறை அதிகாரிகளின் உதவியுடன் கே.பி.யை கைது செய்து கொழும்புக்கு கொண்டு வந்திருப்பது பற்றி நம்புவதற்கான காரணங்கள் உள்ளன. செப்டெம்பர் 11 ஆம் திகதி இரட்டைக்கோபுர தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க மத்திய புலனாய்வு முகவர் அமைப்பு சி.ஐ.ஏ. எவ்வாறு செயல்பட்டதோ அதனை அடியொற்றிய விதத்தில் இந்த அசாதாரணமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊகிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் "ஒப்பரேசன் கே.பி' தொடர்பாக அதிகளவு தகவல்கள் வெளிவரக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஊடகங்களில் ஒரு பகுதியே கே.பி.மீது நச்சுத்தனமான தாக்குதல்களை தொடுத்திருந்தமை அவர் தொடர்பாக உயர் மட்டப் பகை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. மற்றொரு புதிரான விடயமானது கே.பி.தனது சொந்தப் பாதுகாப்புக் குறித்து அசட்டையீனமாக இருந்ததாகும். அவருக்கு எதிராக இன்ரர்போல் இரண்டு பிடியாணைகளை விடுத்திருந்தது. ஆனால், அவர் ஆட்களை பகிரங்கமாக சந்தித்துள்ளார். பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிக்கும் வானொலிக்கும் அவர் பேட்டியளித்திருக்கிறார். தனது சொந்த இணையத்தளத்தில் கிரமமாக எழுதியுள்ளார். உலகளாவிய ரீதியில் தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்டிருந்திருக்கிறார். இவை சட்டத்தின் பிரகாரம் மிகவும் பலவீனமான விடயங்களாகும். விடுதலைப் புலிகளின் பிரதான ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. கிட்டத்தட்ட புலிகளுக்கு மிகவும் முக்கியமாகத் தேவைப்படுபவராக இருந்திருக்கிறார். கே.பி.யின் அறிவும் சேகரித்து வைத்திருந்த தகவல்களும் இலங்கை அதிகாரிகளுக்கு மட்டுமன்றி பல நாடுகளைச் சேர்ந்த புலனாய்வுத்துறை முகவர் அமைப்புகளுக்கும் மிகவும் பெறுமதி வாய்ந்தவையாகும் என்று டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதியிருக்கிறார். |
No comments:
Post a Comment