Friday, August 14, 2009

தமிழ் இளம் பெண்கள்படும் அவலம்: 'இந்தியன் எக்ஸ்பிரஸ்'

தடுப்பு முகாம்களில் தமிழ் இளம் பெண்கள்படும் அவலம்: 'இந்தியன் எக்ஸ்பிரஸ்'
வன்னியில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளம் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், கொடூரங்களை தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்டுள்ளது.

முகாம்களில் உள்ள இளம் பெண்கள் பிரித்தெடுக்கப்பட்டு தற்காலிகக் கூடாரங்களில் சிறிலங்காப் படையினருடன் தங்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சட்ட மா அதிபர் சித்தா றஞ்சன் டி சில்வா ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி, சிறிலங்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரும் வழக்கறிஞருமான நிமல்கா பெர்னாண்டோ இந்த விடயத்தை 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டுக்கு தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாமுக்கு நேற்று வியாழக்கிழமை சென்று அங்குள்வர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர் நிமல்கா பெர்னாண்டோ, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டுக்கு இலங்கை நிலைவரம் குறித்து நேர்காணல் வழங்கினார்.

அதில் அவர் கூறிய முக்கிய விபரங்கள் வருமாறு:

முகாம்களில் உள்ள மக்களுக்கு பற்பசைகளும் சோப்பும் கூட ஆடம்பரப் பொருட்கள். முகாம்களுக்கு வரும்போது அவர்கள் எந்த உடையை உடுத்தியிருந்தார்களோ அதனையோ அவர்கள் தொடர்ந்தும் அணிந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழர்கள் போரால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று நடத்தப்படவில்லை. பதிலாக அவர்கள் போர்க் குற்றவாளிகள் போன்றே அதிகாரிகளால் நடத்தப்படுகிறார்கள்.

சாதாரண பொதுமக்களே இத்தனை அவலங்களைச் சந்திக்கும்போது விடுதலைப் புலி உறுப்பினர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவர்களில் ஊனமுற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிறப்பு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

போரின் போதுதான் குண்டுத் தாக்குதல்கள் நடத்தி அழித்த பகுதிகள் அனைத்தையும் தெளிவாக அடையாளங்கள் இன்றி அரசு துடைத்தழித்து விட்டது. அங்கு இருந்த உடலங்கள் அனைத்தையும் கடலில் வீசி போர்க் குற்றங்களுக்கான தடயங்களையும் மறைத்துவிட்டார்கள் என்றார் நிமல்கா பெர்னாண்டோ.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்புவதில் கண்ணிவெடி ஆபத்து இருக்கிறது என அரசு கூறிவருவது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர் -

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து தடுப்பு முகாம்களுக்கு அந்த மக்களால் மிதிவெடிகள், கண்ணிவெடிகளின் ஆபத்து இன்றி வரமுடிந்திருக்கிறது என்றால் அதே பாதை வழியாக அவர்களால் ஏன் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாது என்று கேள்வி எழுப்பினார்.


No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails