Tuesday, August 11, 2009

விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை தீவிரவாதி கொழும்பு நகருக்குள் ஊடுருவல்

விடுதலைப்புலிகளின்
பெண் தற்கொலைப்படை தீவிரவாதி கொழும்பு நகருக்குள் ஊடுருவல்


கொழும்பு, ஆக.11-

விடுதலைப்புலிகளின் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி கொழும்பு நகருக்குள் ஊடுருவினார். அவர் தற்கொலை தாக்குதல் நடத்தலாம் என்றும், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படியும் இலங்கை அரசு எச்சரித்து உள்ளது.

இறுமாப்பு

விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக அழித்து விட்டதாகவும், அதன் தலைவர் பிரபாகரன் உள்பட முக்கிய தலைவர்களை கொன்று விட்டதாகவும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கொக்கரித்து வருகிறார். புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட பத்மநாதனை கைது செய்ததன் மூலம், அந்த இயக்கம் மீண்டும் தலையெடுக்க முடியாமல் செய்து விட்டதாகவும் இலங்கை அரசாங்கம் இறுமாப்புடன் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.

இந்த நிலையில் பெண் தற்கொலைப்படை விடுதலைப்புலி ஒருவரை கொழும்பு நகருக்குள் அனுப்பி, அவர்களது எண்ணத்தில் மண்ணைப்போட்டு, கிலியை ஏற்படுத்தி உள்ளனர் விடுதலைப்புலிகள்.

பெண் தற்கொலைப்படை தீவிரவாதி

``விடுதலைப்புலிகளின் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் கொழும்பு நகருக்குள் ஊடுருவி இருக்கிறார். 25 வயதான அவரது பெயர் அப்துல் ஷலாம் பாத்திமா யாசின். சேலை உடுத்திய அவர், தலையை முக்காடு போட்டு மூடிக்கொண்டு திரிகிறார்'' என்று, இலங்கை அரசின் தீவிரவாதிகள் புலனாய்வுப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

``கொழும்பு நகரில் தற்கொலை தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் அவர் ஊடுருவி இருக்கிறார். வணிக வளாகங்கள் நிறைந்த பேட்டை பகுதியில் அவர் சுற்றித்திரிகிறார். ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த தீவிரவாதியின் நாச வேலையை, சதித்திட்டத்தை தடுப்பதுடன், அவரை உயிருடன் பிடிக்கவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

இதற்கு முன் நடந்த தாக்குதல்

இந்த பேட்டை கடைவீதி அடிக்கடி விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான பகுதி ஆகும்.

கடந்த பிப்ரவரி மாதம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப்பகுதியில் இருந்து அகதிகளாக வந்த பொது மக்களை ராணுவத்தினர் சோதனைச்சாவடி ஒன்றில் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பெண் விடுதலைப்புலி ஒருவர், உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு வந்து நடத்திய திடீர் தாக்குதலில், 20 ராணுவத்தினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்தான் பெண் தற்கொலைப்படை விடுதலைப்புலி நடத்திய கடைசி தாக்குதல் ஆகும்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails