அரசாங்கத்தின் முக்கிய பெண்மணியொருவரின் சகோதரரே கே.பி.யை அழைத்துச் சென்றார்
இதன்போது சீ.சீ.ரி.வி. வீடியோ கமெராக்களில் அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றதற்கான ஆதரங்கள் எதுவும் இல்லையென விடுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பத்மநாதன் விடுதிக்கு வந்துசென்றதாகவோ அங்கு கைதுசெய்பய்பட்டதாகவோ எதுவித அறிகுறிகளையும் காணவில்லை என்று ரியூன் விடுதியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
விடுதியின் சீ.சீ.ரி.வி. கமெரா கட்டமைப்பில், குறிப்பிட்ட காலப் பகுதியில் பத்மநாதனின் உருவ அமைப்பைக் கொண்ட எவரது நிழற்படமும் பதியப்படவில்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கோலாலம்பூரிலுள்ள ஏனைய விடுதிகளுடன் ஒப்பிடுகையில், தமது விடுதியில் அதிகளவான கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், விடுதிக்கு வாகனத் தரிப்பிடம் இல்லாததால் கே.பி. விடுதியின் வளவுக்குள் எங்கு வைத்தேனும் கைதுசெய்யப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கே.பி. என்றவொரு நபர் தமது விடுதியில் தங்கியிருந்தாரா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரியும் தங்களிடம் விசாரிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஊடகங்களில் தமது விடுதியின் பெயர் வெளியானமையால், தாம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கே.பி. தமது விடுதியில் தங்கியிருந்திருந்தாலும், அவரது சொந்தப் பெயரை பயன்படுத்தியிருக்க மாட்டாரென்பது தங்களுக்குத் தெரியும் என்றும், அதனால் பத்திரிகைகளில் வெளியான அவரது உருவப்படத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்த போதும் அத்தகைய நபர் எவரையும் இனங்காண முடியவில்லை எனவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கைதுசெய்யப்பட்டாரா அல்லது தன்னிச்சையாக அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே சந்தேகங்கள் வலுத்துவருகின்றன.
எமது இணையத்தளத்திற்கு கிடைக்கப் பெற்ற மிகவும் இரகசியமான தகவலொன்றின்படி, அரசாங்கத்தின் முக்கிய பெண்மணியொருவரின் சகோதரரே கே.பி.யை தனியாக வந்து இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
கே.பி. தொடர்பாக இலங்கை அரசாங்கம் அறிவிக்கும் வரையில், இலங்கைப் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள்கூட கே.பி.யின் விடயம் குறித்து அறிந்திருக்கவில்லையெனவும் அந்தளவிற்கு இந்த விடயத்தில் இரகசியம் பேணப்பட்டுள்ளதாகவும் அந்த இரகசியத் தகவல் மேலும் தெரிவித்தது.
இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்திற்கமைய, கே.பி. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துகொண்டிருக்கலாம் எனவும் அந்தத் தகவல் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment