நெறி தவறிய சீதையும், நெருப்புக் குழியிறக்கிய இராமனும்.
மோகத்தீ மூட்டும் மூன்றாம் ஜாமம். வெண்ணிலவும் தென்றலும் மன்மதனின் தொழிலுக்கு துணை செல்ல தன் அந்தப்புரத்தில் மகிழ்ந்திருந்தான் மன்னன் இராமன். இராவணனை வில்லெடுத்து வென்றவன் மன்மதனை வெல்ல சீதையை நாடினான். இதுவும் ஒரு போர். யுத்தக்களத்தில் அல்ல. மஞ்சத்தில். மோகம் மன்னனையும் மங்கை சீதையையும் ஆரத்தழுவியது. மோகம் தலைக்கேற உடல்கள் இயங்க, முனகல் ஒலிகள் கிளம்பின.
சீதை முனகினாள். "ஆ... இராவணா...".
இராமனின் இயக்கங்கள் நின்றன. காது பிழை செய்யவில்லையே. இராமனின் பத்தினி "இராவணா" என்று முனகுகிறாள்.
சீதை தன் நாக்கை கடித்துக் கொண்டாள். வார்த்தை வாய் தவறி வந்து விழுந்திருந்தது. இராமனின் கண்கள் சினம் கக்கின.
"உடலால் என்னைத் தழுவினாய். உள்ளத்தை யாரிடம் கொடுத்தாய்."
சீதை இனியும் மறைக்க முடியாதவள் ஆனாள். "எனது உள்ளத்தால் இராவணனைத்தான் நினைத்தேன்."
"இது என் செய்தாய். இப்பிறப்பில் என் மனதாலும் இன்னொரு மங்கையை நாடாத மாபெரும் விரதம் ஏற்ற என் மனைவி மாற்றானை மனதில் கொண்டாளா. உடலால் என்னைத் தழுவியவள் உள்ளத்தால் மாற்றானை தழுவினாளா. நீயும் பத்தினியா?"
"நான் பத்தினிதான். தீ இறங்கி நிரூபித்திருக்கிறேன்."
"பேசாதே. மாற்றானிடம் சிறைப்பட்ட மனைவியை ஏற்பதற்காக நான் நடத்திய நாடகம் அது. என் மீது பழி ஏற்படாதிருக்க. எனது கெளரவத்திற்காக. அந்த நாடகத்தில் நீயும் நன்றாகவே நடித்தாய்."
"சாத்திரங்களின் படியும் விதிகளின் படியும் நடக்கும் உத்தமரே. அந்த நாடகத்தில்தான் தங்கள் உண்மையுருவை தரிசித்தேன். உங்களை விடவும் சகலவிதங்களிலும் உயர்ந்தவன் ஒருவனை கண்டேன். மனம் சஞ்சலம் கொண்டாலும் தர்மத்தின் பக்கம் நின்று அவனை விலக்கினேன். உடலளவில் நான் உத்தமிதான். உள்ளம்தான் சஞ்சலம் கொண்டது."
"சீ. உள்ளத்தாலும் அவனை நீ நினைக்கலாமா.".
"மென்மையை மட்டும் தங்களிடம் கண்ட என் பெண்மை, பேராண்மையை அவனிடம் கண்டதால் மனம் சஞ்சலம் கொண்டது. மன்னியுங்கள்.."
"இதை எப்படி மன்னிக்க முடியும். உடலால் நீ மாசுபடவில்லை என்று சாதித்தாலும் மனத்தால் மாசுபட்டவளே. நீ என் முகத்தே விழிக்காதே."
"நான் செய்தது தவறுதான். மன்னியுங்கள். மாற்றானை மனதில் கொண்டது தவறு. இனி மனதாலும் அவனை நினைக்க மாட்டேன்."
"உன்னை எவ்வாறு நம்புவதே. என்னை விட்டு விலகிப் போ."
"போ என்று சொன்னால் எங்கு போவேன். இது பெருங்குற்றம். இந்த குற்றம் புரிந்தேன் என குற்றம் சாட்டினால் இந்த குற்றத்தை கொண்டவளாக என் தந்தை வீட்டிற்கும் செல்ல முடியாதே."
"எங்கேனும் போ. எனது கோபம் எல்லை கடக்குமுன் போய்விடு."
"சுவாமி.."
"போ. மறுமுறை என்முகத்தில் விழித்தால் அந்தக் கணமே உன்னைக் கொல்வேன்."
"மன்னியுங்கள்."
"இப்போது உன்னைக் கொல்லாமல் விடுவதே அதிகம்."
இராமன் உறுதியுடையவனாய் நின்று இருந்தான்.
அழுது கண்ணீர் வற்றிப்போன சீதை மரக்கட்டையாய் வெளியேறி கானகம் புகுந்தாள்.
--------------
ஆண்டுகள் பல கடந்தன.
தனது புகழை பாடிய சிறுவர்களை இராமன் பார்த்தான். அவனுள் அன்பு சுரந்தது.
"குழந்தைகாள். நன்று பாடினீர். யார் உமது பெற்றோர்."
"மன்னா. அவர்கள் தங்கள் புதல்வர்கள். எனது வயிறு உதித்தோர்." சீதை தோன்றினாள்.
"நீயா.. எனது முன்வர என்ன துணிச்சல்."
"இன்னும் உங்கள் மனம் மாறவில்லையா."
இராமன் கல்லாயிருந்தான்.
"இவர்கள் தங்கள் புதல்வர்கள். தங்களிடம் ஒப்புவிக்கவே வந்தேன்."
"எனது புதல்வர்கள் ?"
"ஆம்."
"இவர்கள் எனது புதல்வர்கள்தான் என்பதற்கு என்ன சாட்சி.".
"ஐயோ." சீதை தனது காதுகளை பொத்திக் கொண்டாள்.
"இந்த வார்த்தைகளை கேட்டும் நான் உயிர் வாழ வேண்டுமா. ஏ பூமா தேவி. நீ பிளந்து என்னை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடாதா."
இராமன் ஒரு குரூரப் புன்னகையை வெளிப்படுத்தினான்.
"சீதை. உனது வேண்டுதல் நிறைவேறும்."
பூமியில் குழியொன்று தோண்டப்பட்டது. சீதை அதில் உயிரோடு இறக்கப்பட்டாள். இராமன் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப் போட்டான்.
"பூமித்தாயே. உனது புதல்வியை ஏற்றுக்கொள்."
தொடர்ந்து மண் கொட்டப்பட்டது. சீதை புதையுண்டாள்.
பூமாதேவியால் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்ட தன் மனைவிக்காக இராமன் தன் மகன்களோடு அழத் துவங்கினான்.
ஆதாரங்கள் ஏதுமற்ற கற்பனைக் கதை. கதையின் பின்னிருக்கும் உளவியல் பார்வைக்காக எழுதப்பெற்றது.
No comments:
Post a Comment