ஏர்போர்ட்டில் தொழிலதிபர் தவறவிட்ட ரூ.70 லட்சம் டி.டி. ஒப்படைப்பு
வெகுமதியை மறுத்தார் போலீஸ்
சென்னை, மார்ச் 28-
தொழிலதிபர் ஒருவர் சென்னை ஏர்போர்ட்டில் தவறவிட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டியை கண்டெடுத்த போலீஸ்காரர் அதை பத்திரமாக அவரிடம் ஒப்படைத்தார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்ரமணியம். இவர் சென்னையிலிருந்து கோவை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தார். நுழைவாயிலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) போலீசாரிடம் விமான டிக்கெட்டை காட்டிவிட்டு விமான நிலையத்துக்குள் சென்றார். அப்போது, அவர் வைத்திருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டி கீழே விழுந்திருக்கிறது. இதை அவர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எப் போலீஸ்காரர் அந்த டி.டி-யைக் கவனித்து விட்டார். இதுபற்றி மேலதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
டி.டி தொலைந்த தகவல் பற்றி விமான நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட தொழில் அதிபர் பாலசுப்ரமணியம், தனது டி.டி இருக்கிறதா என தேடினார். காணாததால், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, டி.டி தொலைந்த விஷயத்தை கூறினார். சரியான தகவல் மற்றும் ஆதாரங்களை காட்டி தனது டி.டி என்பதை நிரூபித்தார். இதையடுத்து அவரிடம் அந்த டி.டி ஒப்படைக்கப்பட்டது.
மகிழ்ச்சியடைந்த தொழில் அதிபர் டி.டி யை எடுத்து கொடுத்த போலீஸ்காரருக்கு வெகுமதி அளிக்க முன்வந்தார். ஆனால், Ôதவறிய பொருட்களை ஒப்படைப்பது என் கடமைதானே..Õ என கூறிய போலீஸ்காரர் அவர் கொடுத்த வெகுமதியை ஏற்க மறுத்துவிட்டார். அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு நன்றி கூறி சென்றார் தொழில் அதிபர்.
No comments:
Post a Comment