கேரள மாநிலத்திலுள்ள கடம்புழா அம்மன் கோயிலிற்குள் சென்று வழிபட பிரபல பாடகர் ஜேசுதாஸிற்கு அக்கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்திருப்பது வெட்கத்தையும், வேதனையையும் அளித்துள்ளது. கிறித்தவராகப் பிறந்த ஜேசுதாஸ் மத வேறுபாடு பாராமல் ஏராளமான பக்தி பாடல்களைப் பாடியுள்ளார் என்பது மட்டுமின்றி, பல கோயில்களுக்கும் சென்று பக்தியுடன் வழிபடுபவர். சுவாமி அய்யப்பன் மீது அவர் பாடிய பாடல் ஒன்றை ஒவ்வொரு இரவும் ஒலித்த பின்னரே சபரிமலை அய்யப்பன் கோயில் நடை சாத்தப்படுவது வழமையாக இருந்து வருகிறது. கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்து பல கோயில்களுக்கு நிதி சேகரித்து அளித்து இறைப்பணி ஆற்றியவர் பாடகர் ஜேசுதாஸ் அவர்கள். அப்படிபட்ட இறைப் பக்தரை, தூய நெறியாளரை, சிறந்த இசைக் கலைஞரை கோயிலிற்குள் அனுமதிக்க மறுத்திருப்பது அடாத செயல் மட்டுமின்றி, இந்து மதத்தின் ஆன்மீக நோக்கத்திற்கு முற்றிலும் எதிரானது ஆகும். "கடவுள் அருகே எலிகளும், பூனைகளும் செல்கின்றன. ஏன் ஜேசுதாஸூக்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது?" என்று வருத்தத்துடன் கேள்வி எழுப்பியுள்ள ஜேசுதாஸ், மற்றொரு விவரத்தையும் கூறியுள்ளார். அதுவே முக்கியமானது: "கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள புகழ்பெற்ற மூகாம்பிகை கோயிலிற்குச் சென்றுள்ளேன். சபரிமலை அய்யப்பன் கோயிலிற்குச் சென்று தரிசித்து இருக்கிறேன். அங்கெல்லாம் இது போன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது கிடையாது" என்று சுவாதித் திருநாள் இசைக்கல்லூரியில் நடந்த விழாவில் வருதத்துடன் அவர் பேசியுள்ளார். மற்ற மதத்தினர் கோயிலிற்குள் நுழைக்கூடாது என்பது இந்துக் கோயில்களில் கடைபிடிக்கப்படும் பொது விதியாக இருக்குமென்றால், ஜேசுதாஸை சபரிமலை அய்யப்பன் கோயிலிற்குள் அனுமதிப்பதும், குருவாயூர் கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் அனுமதி மறுத்து அவரை அவமானப்ப்படுத்துவதும் ஏன்? இது எல்லா பக்தர்களின் உள்ளத்திலும் எழும் கேள்வியாகும். "மற்ற மத்த்தினருக்கு அனுமதியில்லை" என்று எழுதி வைத்திருப்பதே இந்து மதத்தின் ஆன்மீக நெறிகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். நமது வேதங்களிலோ அல்லது கீதை, உபநிஷத்துக்கள் உள்ளிட்ட ஆன்மீக வழிகாட்டு நூல்களிலோ பறைசாற்றப்பட்ட உண்மைகளுக்கு எதிரானதாகும். | |
No comments:
Post a Comment