மத ரீதியான சம்பிரதாயங்களால் அழுத்தப்பட்டு, பாதிற்பிற்குள்ளான பெண்களின் துயரத்தை தனது எழுத்துக்களால் எடுத்தியம்பிய காரணத்திற்காக மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியும் மனம் தளராமல் போராடிய ஒரு பெண்ணை, தனது அரசியல் லாபத்திற்காக கட்டாயப்படுத்தி வெளியேற்றி தீராத அவமானத்தை இந்தியாவிற்கு பெற்றுதந்துவிட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றின் அடையாளமாக சித்தரிக்கப்பட்ட இந்திய நாடு, தன்னிடம் அடைக்கலமான தஸ்லிமா எனும் மானுட போராளியை நெருக்குதல் அளித்து துரத்தியதன் மூலம் தனது உண்மையான முகத்தை தெளிவாக உலகிற்கு காட்டியுள்ளது. இதுவரை மூடி, மறைத்து மாற்றிக் காட்டப்பட்ட அந்த முகத்தின் உண்மை சொரூபம் இன்று அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது. வங்கதேச அடிப்படைவாதிகளால் துரத்தப்பட்டதனால் கொல்கட்டா வந்த தஸ்லிமா, அங்குள்ள அடிப்படைவாதிகளின் மிரட்டல், துரத்தல், ஆர்ப்பாட்டம் காரணமாக மத்திய அரசின் பாதுகாப்பில் தலைநகர் டெல்லியில் தங்கவைக்கப்பட்டார். இதற்கிடையே ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது முஸ்லீம் மதவாதிகளால் தாக்கப்பட்டார். இந்தியாவில் இருந்து தஸ்லிமாவை வெளியேற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக செய்திகள் வந்தபோது அதனை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வன்மையாக மறுத்தார். ஆனால் டெல்லியிலோ அல்லது மற்ற இடங்களிலோ எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தஸ்லிமா தென்படவில்லை. இந்த நிலையில், நமது நாட்டை விட்டு வெளியேறி லண்டன் சென்ற தஸ்லிமா, தன்னை இந்தியாவை விட்டு வெளியேற்ற மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததாகக் கூறியுள்ளார். "இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு மன ரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது இந்திய அரசு, நான் அதற்கு உடன்படவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறுவதில்லை என்று உறுதியாக இருந்தேன். என்னை மன ரீதியாக வீழ்த்த முடியாது என்று அறிந்துகொண்டவர்கள், உடல் ரீதியான தொல்லைகளைத் தரத் துவங்கினார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். எனவே வேறு வழியின்றி நாட்டை விட்டு வெளியேறினேன்" என்று தஸ்லிமா கூறியுள்ளார். "புது டெல்லியில் நான் தங்க வைக்கப்பட்ட இடம் பாதுகாப்பானது என்று கூறினார்கள். அதனை நான் சித்தரவதைக் கூடம் என்றே கூறுவேன். அது என்னை கொல்லும் கூடம் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்" என்று தஸ்லிமா கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியளிக்கிறது. தஸ்லிமா இவ்வாறு கூறி 24 மணி நேரம் ஆகிவிட்டது, ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதுதான் நமது நாடா? இதனைத்தான் முழுச் சுதந்திரம் உடைய நாடாக நாம் பேசிக் கொள்கிறோம், காட்டிக்கொள்கிறோமா? சிந்திப்பதற்கும், பேசுவதற்கும், நம்பிக்கைக்கும், வழிபாட்டிற்கும் முழுச் சுதந்திரத்தை தனது முகவுரையிலேயே உறுதியளிக்கும் அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்திவரும் ஒரு நாட்டில், பட்டதைக் கூறிடும் உரிமை படைத்த ஒரு பெண் எழுத்தாளரைக் கூட பாதுகாப்பாக வைத்திருக்கும் தகுதியில்லையா? அல்லது விரும்பவில்லையா? என்ன காரணம்? மத்திய அரசு விளக்கிட வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது அரசியல் லாபத்திற்காக இந்த நாட்டினுடைய மதச் சார்ப்பற்ற கொள்கையை காற்றில் பறக்கவிடுகிறதா? மக்கள் கேள்வி கேட்பதில்லை. ஆனால் பதிலளிப்பார்கள். அவர்களின் வாக்குகள் பேசும். அது இந்த நாட்டு அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தை தோலுறுத்திக் காட்டும் | |
No comments:
Post a Comment