Monday, March 31, 2008

சமூக நீதிகளுக்காகப் போராடாத கிறீத்துவத்தில் கோடி உறுப்பினர்கள் இருப்பதைவிட அப்படி ஒன்று இல்லாமல் இருப்பதே மேல்.

கிறீத்துவம் பரவலாகத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து பல சாதிகளை மீட்டெடுத்து அவர்களுக்கு ஒன்றுமில்லையென்றாலும் கல்வியை மட்டுமேனும் வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆயினும் சாதி அடையாளங்களை கிறீத்துவர்கள் முற்றிலும் துறக்கவில்லை என்பது கிறீத்துவத்தின் அடிப்படைகளை மீறிய செயலே. கிறீத்துவம் பரவிய நாட்க்களிலேயே சாதி அடையாளத்துடன் கிறீத்துவர்கள் செயல்படக்கூடாது என்கிற தீர்க்கமான முடிவு இருந்திருக்குமானால் இன்று எறையூர் போன்ற பிரச்சனைகள் இருந்திருக்காது. அதே நேரம் அப்படி ஒரு நேர்மையான முயற்சி இருந்திருக்குமானால் கிறீத்துவம் இந்தியாவில் இத்தனை தூரம் பரவியிருந்திருக்காது. மதம் பரப்ப செய்த சமரசம் இது.

உயர்சாதி இந்துக்களிடமிருந்து கிறீத்துவர்களுக்கு விடுதலை கிடைத்ததே தவிர உள்ளுக்குள் அவர்களிடம் சாதி அடையாளங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருகிறது. இதனால் இன்று சாதியின் பேரில் சமூகத்தில் நடக்கும் அனைத்து அரசியல்களும் கத்தோலிக்கர்களுக்குள்ளும் நடக்கிறது.

நெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் நாடார் அதிகம் வசிக்கும் பகுதியில் அங்கிருக்கும் பரதவர்களிடம் வரி வசூலிக்காமல், அவர்களை கோவிலில் வகை வைக்காமல் இருக்கும் நிலை உள்ளது. இதற்கு அந்தப் பங்கின் சாமியாரே துணை போவதாக செய்தியுள்ளது.

நகர்ப்புறம் தவிர்த்து எங்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட சாதியினர் ஒரே பங்கில் செயல்படுகிறார்களோ அங்கே இந்தப் பிரிவினை அழுத்தமாகத் தெரிகிறது. நகர்ப்புறக் கோவில்களிலும் தென் தமிழர்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் நாடார், மீனவர் குழுக்கள் உருவாகிவருகின்றன.

சாதி அடிப்படையிலான அரசியல் எழுச்சி இதற்கு ஒரு காரணி. சாதீய எதிர்ப்பு அதிகம் இருந்த காலகட்டங்களை விட இன்று சாதீய உணர்வு அதிகரித்திருப்பதை உணரமுடிகிறது. சாதி அடிப்படையில் சலுகைகளைப் பெற, தங்கள் ஓட்டு வங்கியை ஒருங்கிணைத்து பலம் காட்டச் செய்யும் முயற்சிகளால் இன்று மீண்டும் சாதி தன் அகோர முகத்தை அலங்கரித்துக் காட்டிக்கொள்ளத் துவங்கியுள்ளது.

கத்தோலிக்க கிறீத்துவம் இந்த அரசியலில் சிக்கிக் கொண்டுள்ளது மேலே சொன்னது போல ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் வாழும் பல கத்தோலிக்க பங்குகளிலும் வெளிச்சம். இதில் சாதி அரசியல் செய்யும் கத்தோலிக்க பாதிரியார்களின் பங்களிப்பு மிக அதிகம். வெளியே மக்களிடையே மட்டுமன்றி திருச்சபைக்கு உள்ளேயும், சாமியார்கள் நடுவே சாதி அரசியல் மிகக் கேவலமான முறையில் பின்பற்றப்படுகிறது.

மறைமாவட்ட முக்கிய பதவிகள் அங்கு எந்த சாதி சாமியார்கள் அதிகமோ அந்த சாமியார்களுக்கு வழங்கப்படுவது, கூட்டங்களில் தலித் பாதிரியார்களின் கருத்துக்களை நிராகரிப்பது போன்ற கேவலங்கள் பலவற்றையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எறையூர் கிறீத்துவர்கள் நேரடியாகத் தீண்டாமையை பின்பற்றுவது இன்றைக்கு வெளியில் தெரிந்திருந்தாலும் இத்தனை காலம் அது கிறீத்துவத்தின் மேலாண்மையின் கீழ் அனுமதிக்கப்பட்டிருப்பதை ஜீரணிக்க இயலவில்லை. மிக மேலோட்டமான தாக்குதலையே கிறீத்துவம் தன் மக்களிடம் நிகழ்த்தியுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது.

தென் தமிழக கிறீத்துவ மீனவ கிராமங்கள் பலவும் வன்முறைக் களங்களாக இன்றும் திகழ்கின்றன. குறைந்த பட்சம் 400 ஆண்டுகள் கிறீத்துவப் பின்னணியில் வன்முறை குறித்த மாற்றத்தை கிறீத்துவம் தன் மக்களிடம் ஏற்படுத்தாமல் விட்டதன் பின்னணியில் பாதிரியார்களின் சுயநலப் போக்கும், பூசைகள் செய்வதில், நிறுவனங்களை மேலாள்வதில் மட்டுமான அவர்களின் கவனமும், பலநேரங்களில் இவர்களே இந்த அவலங்களை உருவாக்கித் துணை போவதுமே காரணம்.

ஒரு பங்கிற்கு சாமியார் ஒருவரை அனுப்ப வேண்டுமென்றால் முதலில் கணக்கில் கொள்ளப்படுவது அவரின் சாதி என்றால் கிறீத்துவத்தின் நிலமை கவலைக்கிடத்திலுள்ளதை உணர முடியும்.

தான் சார்ந்த மதத்தினை களையறுக்க உயிரைத் தியாகம் செய்தவர் இயேசு. ஒரு புரட்சியாளனாக, ஒதுக்கப்பட்ட இனத்தினரோடு பழகியவர், பெண்கள் கீழானவர்களாய் நடத்தப்பட்ட காலத்தில் அவர்களைத் தன் சீடர்களாக்கிக்கொண்டவர், பாவிகளோடும் தன் மதம் தடை செய்திருந்த தொழுநோயாளிகளிடமும் பழகியவர், மதத்தின் சட்டங்களை மனிதத்தின் பொருட்டு தூக்கி எறியத் தயங்காதவர், 'நீ சொன்னவற்றை மறுத்துவிடு உன்னை விடுதலை செய்கிறேன்' எனும் வாக்கின் முன்பும் சமரசம் செய்துகொள்ளாதவர் இயேசு. அவரை பலி பீடத்தில் தொழுகைப்பொருளாக்கிவைத்துவிட்டதில் அவரின் புரட்சிப் பின்னணி சாகடிக்கப்பட்டு அவரின் வழி வந்தவர்கள் வெறும் பூசாரிகளாக மாறிவிட்டது கத்தோலிக்க மதம் இயேசுவின் வழிகளிலிருந்து தடம்புரண்டுவிட்ட நிலையையே காண்பிக்கிறது.

மக்களின் வாழ்வைத் தொடாத மதம் வெறும் நிறுவனம். அங்கே பல செயல்களும் நிகழலாம், எல்லோரும் பல அலுவல்களைச் செய்யலாம் ஆனால் கடவுளைக் காண இயலாது, அங்கே ஆன்மீகம் வெறும் வார்த்தை. வெளிவேடம். அதைவிட ஏமாற்று வேலை ஒன்றுமே இல்லை.

சமூக அவலங்களை இயேசுவின் தீவிரத்தோடு எதிர்த்தால் இயேசுவுக்கு நேர்ந்த சிலுவை மரணம்தான் மிஞ்சும். இதுதான் இயேசுவின் வழி. அதன் முடிவாக ஒருவர் பெறுவது இழி பெயரும், அவமானமும் சிலுவை மரணமும்தான். ஆயினும் அதுவே உன்னத வழி என மக்களை நம்பச் செய்யும் வேகத்தில் தாங்களும் அந்த நம்பிக்கையில் சிறிதளவேனும் வெளிக்காட்ட வேண்டியதை சாமியார்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.

இயேசு தன் கடைசி இராவுணவின்போது சீடர்களின் பாதங்களைக் கழுவி தலைவன் என்பவன் தொண்டனாக இருப்பது எப்படி என்பதைக் காண்பித்தார். இன்றைய பாதிரியார்கள் வயதான மக்களையே உட்காரவைத்துப் பேசுவதில்லை. இயேசு எதிர்த்த மதபோதக அதிகார அமைப்பு மீண்டும் அவர் பெயரிலேயே கட்டி எழுப்பப்பட்டுள்ளது என்பதையே இதுபோன்ற செயல்கள் காட்டுகின்றன.

தீண்டாமையை, சாதிப் பாகுபாட்டை கத்தோலிக்கம் அங்கீகரிக்கவில்லை என்பதை வெறும் அறிவிப்போடு நிறுத்திவிடாமல் செயலில் காட்டவேண்டும். சாதிபார்த்து சாமியார்களை பங்குக்கு அனுப்பும் நிலமை மாற வேண்டும். இன்றைக்குத் தேவை சமாதானப் பேச்சு அல்ல சாட்டையடி. இந்தக் கொடுமையை இதுவரை அனுமதித்ததற்காக பாதிரியார்கள் தங்கள் முதுகில் இரண்டு போட்டுக்கொள்ளவும் வேண்டும். தமிழக கத்தோலிக்க திருச்சபை எறையூரில் தீண்டாமையை முன்னிறுத்தக் கேட்கும் கிறீத்துவர்களை உடனடியாக மதத்திலிருந்து விலக்கிவைக்க வேண்டும்.

இந்து மதம் இவர்களுக்கு பாதுகாப்பளிக்காது எனச் சொன்ன தலைவரை மனமார பாராட்டுகிறேன். இவரிடமே உண்மையான இயேசு தெரிகிறார். தன் சுயநலத்திற்காக அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. கொள்கைகளை காசுக்கு விற்க விரும்பவில்லை. எண்ணிக்கைக்காக எதையும் செய்வேன் எனும் மனப்போக்கு இல்லை.

உயிரற்ற கிறீத்துவத்தில், இயேசுவின் வழியில் செல்லாத கிறீத்துவத்தில், மக்களின் மனதைத் தொடாத கிறீத்துவத்தில், சமூக நீதிகளுக்காகப் போராடாத கிறீத்துவத்தில் கோடி உறுப்பினர்கள் இருப்பதைவிட அப்படி ஒன்று இல்லாமல் இருப்பதே மேல்.

Extreme situations require extreme actions.

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails