இலங்கையில் இனமோதல்கள் முற்றாக முடிவுக்கு வந்துவிட்டது என்றால் இலங்கையின் படைக்கட்டமைப்புக்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். அதாவது 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டின் பின்னர் இலங்கையின் படைக்கட்டுமானங்களில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படலாம் என மேற்குலகத்தை சேர்ந்த படைத்துறை ஆய்வாளரான பிரைன் புளேஜெட் (Brian Blodgett) என்பவர் சில கருத்துகளை முன்வைத்திருந்தார். மூன்றாவது ஈழப்போரின் முடிவில் 9 டிவிசன்களை உடைய இராணுவம் 116,000 பேரை கொண்டிருந்தது. அன்று ஏற்பட்ட சமாதானம் நிரந்தர அமைதியை ஏற்படுத்தியிருந்தால் 2010 ம் ஆண்டளவில் இராணுவத்தின் எண்ணிக்கை 20,000 ஆகக் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் 1981 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் கொண்டிருந்த தொகையான 11,000 படையினரே போதுமானது என அவர் தெரிவித்திருந்தார். மேலும் கவசப்படைப்பிரிவு, பீரங்கிப் படைப்பிரிவு, வான்நகர்வு படைப்பிரிவு, கொமோண்டோ படைப்பிரிவு, சிறப்புப் படைப்பிரிவுகள் என்பனவற்றின் அளவுகள் குறைக்கப்பட வேண்டும். கடற்படையினரை பொறுத்தவரையில் தரை நடவடிக்கையில் இருந்து அவர்களின் பணி நிறுத்தப்படுவதுடன், மூன்றாவது ஈழப்போரின் முடிவில் 20,000 படையினரை கொண்டிருந்த கடற்படையினரின் எண்ணிக்கை முதலாவது ஈழப்போரின் போது இருந்த எண்ணிக்கைக்கு (3000) குறைக்கப்படலாம். வான்படையினரின் பலமும் கணிசமான அளவு குறைக்கப்படுவதுடன், தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் தாக்குதல் விமானங்களின் கட்டமைப்புக்களும் இல்லாது செய்யப்படும் என அவர் தெரிவித்திருந்தார். ஆனால், இலங்கை அரசு 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் பின்னர் படைக் கட்டமைப்புக்களில் எதுவித குறைப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. உயர்பாதுகாப்பு வலயத்தை கூட அவர்கள் நீக்க முன்வரவில்லை. நாலாவது ஈழப்போர் ஆரம்பித்த போது இலங்கையின் படைபலம் மீண்டும் பல மடங்கு அதிகரித்தது. 118,000 பேரை கொண்டிருந்த இராணுவத்தின் பலம் 200,000 ஆக உயர்த்தப்பட்டது. ஊர்காவற் படையினரின் எண்ணிக்கையும் 45,000 ஆக உயர்த்தப்பட்டது, வான்படையினரின் பலம் 26,000 ஆக உயர்த்தப்படடதுடன், கடற்படையினரின் பலமும் 48,000 ஆக அதிகரிக்கப்பட்டது. அதாவது ஏறத்தாழ நூறுவீத படைத்துறை அதிகரிப்புக்கள், பல நூறு மடங்கு கனரக ஆயுதப்பாவனை என்பவற்றுடன் தான் நான்காவது ஈழப்போரின் இறுதிச்சமரை இலங்கைப் படைத்தரப்பு நிறைவுசெய்துள்ளது. இலங்கை வான்படை பல ஆயிரம் தொன் வெடிகுண்டுகளை வன்னி மீது கொட்டியதுடன், ஸ்குவாட்றன்- 09 சேர்ந்த எம்.ஐ 24 ரக உலங்குவானூர்திகள் 400 தடவைகளுக்கு மேல் தாக்குதல்களை நடத்தியதுடன் அதில் காணப்படும் 80 மி.மீ ரக உந்துகணைகள் மூலம் 19,792 மேற்பட்ட தடவை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹிங்குராங்கொடயை தளமாகக் கொண்டுள்ள இந்த தாக்குதல் உலங்குவானூர்தி ஸ்குவாட்றனில் 35 அதிகாரிகளும் 375 வான்படையினரும் பணியாற்றி வருவதுடன், எம்.ஐ 24 மற்றும் எம்.ஐ 35 ரக 14 உலங்குவானூர்திகள் சேவையில் உள்ளன.
எறிகணைகளும் பல இலட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏறத்தாழ 150 க்கும் மேற்பட்ட டாங்கிகள், கவசத்தாக்குதல் வாகனங்களும் போரில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் என்ற ஒரு பிரதேசம் இல்லை. ஆனால் விடுதலைப்புலிகள் இல்லை என கருதிவிட முடியாது. கெரில்லாக்களாக மாற்றம் பெற்றிருக்கக்கூடிய விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்களை தேடியழிப்பது என்பது தான் தற்போது படைத்தரப்புக்கு தோன்றியுள்ள புதிய சவால். வன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதியின் அளவு மட்டும் 15,600 சதுர கி.மீ ஆகும். எனவே அவற்றை பாதுகாப்பதற்கும், அங்கு செயற்பட்டுவரும் விடுதலைப்புலிகளை தேடி அழிப்பதற்கும் படைத்தரப்புக்கு அதிக படை வளங்கள் தேவை. விடுதலைப்புலிகளின் மரபுவழியிலான படைக் கட்டமைப்புக்கள் தற்போது கலைந்துள்ளன. ஆனால் அவர்களின் புலனாய்வுக்கட்டமைப்பும், கெரில்லாக் கட்டமைப்புக்களும், அரசியல் கட்டமைப்புக்களும், இராஜதந்திர நடவடிக்கை கட்டமைப்புக்களும் சேதங்களை சந்திக்கவில்லை என்பதுடன் அவை உறங்குநிலைக்கு சென்றுள்ளதும் இந்திய-இலங்கை அரசுகளுக்கு பலத்த தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனது படைக் கட்டமைப்புக்களை மேலும் பலப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது. இராணுவத்தின் வலிமையை 300,000 இராணுவமாக உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதன் முதற்படியாக 50,000 பேரை திரட்டும் நடவடிக்கையை அது ஆரம்பித்துள்ளது. மேலும் புதிய படையணிகளை உருவாக்குவது, சிறப்புப் படையணிகள் மற்றும் கொமோண்டோப் படையணிகளை பலப்படுத்துவது போன்ற முயற்சிகளையும் எடுத்து வருகின்றார். இந்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இராணுவ தலைமைப்பீடங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. இந்த தலைமையகங்கள் மூலம் இரு மாவட்டங்களின் இராணுவ நடவடிக்கைகளை இணைக்கும் திட்டத்தையும் இராணுவம் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இலங்கை முழுவதிலும் பலாலி, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வெலிகந்த, பனாகொட ஆகிய ஐந்து இராணுவத் தலைமைப்பீடங்கள் இயங்கி வருகின்றன. மேலும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தற்போது நிலைகொண்டுள்ள படையணிகளுக்கு மேலதிகமாக புதிய படையணிகளை நிறுத்தும் நடவடிக்கைகளையும் படைத்தரப்பு மேற்கொண்டு வருகின்றது. இந்த புதிய திட்டங்களின் பிரகாரம் இரு மாவட்டங்களிலும் தலா நான்கு டிவிசன்களை (தலா 40,000 இராணுவம்) நிறுத்த படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. அதனைப்போலவே கிழக்கு மாகாணத்திலும் பல பற்றாலியன் படையினரையும், ஊர்காவற் படையினரையும் திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட காடுகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக கிளிநொச்சியில் நிலைகொண்டிருந்த 8 ஆவது கெமுனுவோச், 6 வது விஜயபா இலகு காலாட்படை, 9 வது கவசப்படை பற்றாலியன் ஆகியனவும், மூன்று மேலதிக பற்றாலியன்களும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. கடந்த சமரில் ஏற்பட்ட இழப்புக்களை மனதில் கொண்டு இலங்கை அரசாங்கம் தனது படை வளங்களை பெருமளவில் அதிகரித்து வருகின்றது. அதாவது மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆயுத நடவடிக்கைகள் அதிகரித்தால் அதனை ஆரம்பத்திலேயே முற்றாக அழித்துவிடும் நடவடிக்கைகளை அரசாங்கம் முதன்மைப்படுத்தி வருகின்றது. இராணுவத்திற்கு மேலும் 50,000 பேரை சேர்க்கும் பணிகளை அரசு கடந்த வாரம் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தற்போது 200,000 ஆக உள்ள இராணுவபலம் 250,000 ஆக மாற்றமடையும். மேலும் தற்போது 350,000 ஆக உள்ள முப்படையினர் மற்றும் காவற்துறையினரின் பலம் 400,000 ஆக மாற்றமடையும். இதனை 450,000 ஆக அதிகரிப்பதற்கும் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சமாதான நடவடிக்கைகள் மூலம் எட்டப்படும் அமைதிக்கும், படைத்துறை ரீதியாக எட்டப்படும் அமைதிக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளின் ஒரு அங்கம் தான் இந்த படைத்துறை அதிகரிப்புக்கள். அதாவது போர் மூலம் இனமோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த போதும் அதனால் தனது படைத்துறை கட்டமைப்புகளை தளர்த்த முடியவில்லை. ஆனால் அமைதிப் பேச்சுகள் மூலம் இனமோதல்கள் முடிவுக்கு வந்திருக்குமாயின் படைபல அதிகரிப்புக்கான தேவை இருந்திருக்காது என்பதுடன், அரசிடம் உள்ள படை வளங்கள் கூட குறைக்கப்பட்டிருக்கலாம். இருந்த போதும் படைபலத்தின் இந்த அதிகரிப்புக்கள் இலங்கை அரசின் தற்போதைய பொருளாதார பின்னடைவை மேலும் பின்னோக்கி நகர்த்தவே உதவும். அதாவது, தற்போது ஏறத்தாழ 2 பில்லியன் டொலர்களை தொட்டுள்ள பாதுகாப்பு செலவுகள் மேலும் அதிகரிக்கக்கூடும். இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகள் அதற்கு நிதி உதவி வழங்கும் நாடுகளை விசனமடையவே செய்யும். தமது நிதி உதவிகள் அபிவிருத்திக்கு பயன்படாது பாதுகாப்புக்கு செலவிடப்பட்ட நிதி இழப்பீடுகளை நிரப்பும் நடவடிக்கைக்கே பயன்படலாம் என அவர்கள் கருதலாம். இலங்கைக்குச் செல்வது ஆபத்தானது என அண்மையில் அமெரிக்கா தெரிவித்திருந்ததன் பின்னணியும் அதுவே. மேலும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் தற்போது இழுபறி நிலையில் உள்ள அனைத்துலக நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் டொலர் (1,900 மில்லியன் டொலர்) கடன் தொகையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளலாம் எனவும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இராணுவ பலத்தினை முன்வைத்து தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு தீர்வை அவர்கள் திணிக்க முற்படலாம் என்ற சந்தேகங்கள் ஊகங்களும் வெளியிடப்படுகின்றன. வேல்ஸிலிருந்து அருஷ் |
No comments:
Post a Comment