வரலாற்றுச்சுவடுகள்:இலங்கை தமிழர் வரலாறு-6
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் எப்படி சூழ்ச்சிகள் செய்து நாட்டைப் பிடித்தார்களோ, அதேபோல் இலங்கைக்கு வியாபாரம் செய்யப்போன ஐரோப்பியர்கள் தந்திரமாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இலங்கைக்கு முதன் முதலாக வந்த ஐரோப்பியர்கள் போர்ச்சுக்கீசியர்கள். ஏறக்குறைய இந்தியாவுக்குள் போர்ச்சுக்கீசியர்கள் அடியெடுத்து வைத்த காலக்கட்டத்தில்தான் அவர்கள் இலங்கையையும் கைப்பற்றினர். கி.பி. 1505-ம் ஆண்டின் இறுதியில் போர்ச்சுக்கீசியர்கள் வந்த கப்பல் ஒன்று, புயலில் சிக்கியது. புயலில் திசை மாறி அந்த கப்பல் இலங்கையின் கடலோரப் பகுதியில் ஒதுங்கியது. அந்த கப்பலின் கேப்டன் பெயர் டாம் லூரங்கோ.
உள்நாட்டு குழப்பம்
அப்போது இலங்கையில் கோட்டை, சித்தவாகா, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய 4 ராஜ்ஜியங்கள் இருந்தன. இந்த 4 ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்களிடம் ஒற்றுமை இல்லை. உள்நாட்டுக் குழப்பங்கள் நிலவின.முதலில் வியாபாரம் செய்வதே போர்ச்சுக்கீசியர்களின் நோக்கமாக இருந்தது. பின்னர், இலங்கையின் சூழ்நிலையைப் பார்த்த அவர்கள், "ஆட்சியைப் பிடிக்க இதுவே தக்க தருணம்'' என்று தீர்மானித்தனர்.அவர்களிடம் நவீன போர்க் கருவிகள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி, இலங்கையின் மேற்கு கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பகுதிகளிலும் ஊடுருவினர்.
தமிழ் மன்னன்
போர்ச்சுக்கீசியர்கள் இலங்கையில் கோட்டை ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிக் கொண்டபோது, யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை ஜெகராஜசேகரன் என்கிற முதலாவது சங்கிலி (1519-1561) என்ற தமிழ் மன்னன் ஆண்டு வந்தான். யாழ்ப்பாண அரசை கைப்பற்ற போர்ச்சுக்கீசியர்கள் பலமுறை முயன்றும் தோற்றுப்போனார்கள்.
முடிவில், "மன்னாரில் வியாபாரம் மட்டும் செய்து கொள்கிறோம்'' என்று சங்கிலி மன்னனிடம் அனுமதி பெற்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வியாபாரம் செய்து வந்த போர்ச்சுக்கீசியர்கள், தமிழரிடையே இருந்த சாதிப்பாகுபாட்டை பயன்படுத்திக் கொண்டு, ஒரு பகுதியினரை தங்களோடு சேர்த் துக்கொண்டு, சங்கிலிக்கு எதிராகக் கலகம் செய்தனர்.
சங்கிலி அங்கு தன் படையோடு சென்று கலகத்தை அடக்கினான். கலகத்துக்கு காரணமாக இருந்தவர்களின் தலையைத் துண்டித்தான்.
இதனால் ஆத்திரம் அடைந்த போர்ச்சுக்கீசியர்கள், யாழ்ப்பாண அரசை கைப்பற்ற தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
முதலாம் சங்கிலிக்குப் பிறகு இரண்டாம் சங்கிலி (1615-1619) ஆட்சிக்கு வந்தான். அப்போது, போர்ச்சுக்கீசியர்கள் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டனர். இதற்கு, பிதுறு பொட்டன்கோன் என்ற போர்ச்சுக்கீசிய பாதிரியார் தலைமை தாங்கினார்.
கடும் போர்
உள்நாட்டுக் கலவரத்தை ஒடுக்க இரண்டாவது சங்கிலி மன்னன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டான். தனக்கு உதவி செய்யுமாறு, தமிழ்நாட்டில் இருந்த ரகுநாத நாயக்க மன்னனுக்கு செய்தி அனுப்பினான். நாயக்க மன்னனும் வர்ணகுலத்தான் என்ற தளபதி தலைமையில் 5,000 வீரர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தான்.
அதே சமயம், மன்னன் சங்கிலியை முறியடிக்க போர்ச்சுக்கீசியர்கள் படை திரட்டினர். கோட்டையில் இருந்து மன்னாரை நோக்கி நூறு போர்ச்சுக்கீசிய வீரர்களும், சில நூறு சிங்களக் கூலிப்படையினரும் அனுப்பப்பட்டனர்.
அதே நேரத்தில் தரை வழியாகவும் 130 போர்ச்சுக்கீசிய ராணுவ வீரர்களும், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிங்களக் கூலிப்படையினரும் யாழ்ப்பாணத்தை நோக்கி விரைந்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்தது. சிங்கள கூலிப்படையின் உதவியுடன் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியை போர்ச்சுக்கீசியர் தோற்கடித்து கைது செய்தனர்.
தூக்கு தண்டனை
இந்தக் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள கோவா நகரம் போர்ச்சுக்கீசியர் வசம் இருந்தது. அங்கு சங்கிலியை கொண்டு சென்றனர்.
சங்கிலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் தூக்கில் போடப்பட்டான்.ஈழமன்னன் முதன் முறையாக அந்நியர்களான போர்ச்சுக்கீசியர்களிடம் தோற்றதுடன், மரணத்தையும் தழுவ நேர்ந்தது. அதற்கு போர்ச்சுக்கீசியர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் சிங்களர்கள்.
இலங்கையின் மத்தியப் பகுதி, கிழக்கு கடற்கரைப் பகுதி ஆகியவை தவிர இலங்கையின் மற்ற பகுதிகள் போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கத்தின் கீழ் வந்தன.
ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளுக்கு போர்ச்சுக்கீசியர்களும், தாழ்ந்த பதவிகளுக்கு தமிழரும், சிங்களர்களும் அமர்த்தப்பட்டனர்.
சிங்களர்களையும், தமிழர்களையும் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தவர்களும், `கீழ்ச்சாதி' என்று கருதப்பட்டவர்களும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினர்.போர்ச்சுக்கீசியர்கள், இலங்கையின் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை. மிளகு, லவங்கப்பட்டை, பாக்கு போன்றவற்றையும், யானைகளையும் தங்கள் நாட்டுக்கு கொண்டு போயினர்."போர்ச்சுக்கீசியர்கள் ஆட்சி காலத்தை இலங்கையின் இருண்ட காலம்'' என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment