Monday, July 6, 2009

தமிழீழ தேசத்தை அமைக்கும் பிரபாகரனின் கனவு நனவாகும் முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி

 
தமிழீழ தேசத்தை அமைக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கனவு நனவாகும் என மலேசியாவின் பினங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி தெரிவித்துள்ளார். உலககெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களின் ஒரே கனவு கண்டிப்பபாகத் தமிழீழத்தை நோக்கியதாகவே இருக்கும் என்பதில் எந்தொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

தற்போது ஆயுதப் போராட்டம் தணிந்துள்ளது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளதால், தமிழீழத்தை நோக்கிய பயணம் மழுங்கி விட்டது என்ற எண்ணம் ஏற்படக் கூடாது. தமிழினத்தின் தானைத் தலைவன் பிரபாகரனின் கனவு, லட்சியம் அனைத்தும் தமிழீழத் தாயகத்தை நோக்கியதாகவே இருந்துள்ளது. இனியும் அது அவ்வாறே தொடரும். போராட்டத்தின் வழிமுறைகள் மாறலாம் போராட்டம் ஒயாது என்பதை உலகத் தமிழர்கள் உணர்ந்தாக வேண்டும். தற்போதைய காலச்சூழ்நிலையில் உலகமெங்கும் பரவிக் கிடக்கும் தமிழினப் பற்றாளர்களின் ஆதரவோடு வெளிநாட்டில் இருந்து இயங்கும் தமிழீழ அரசாங்க கட்டமைப்பை (Tamil Eelam Government in Exile) உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை உருவாக்க உலகமெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக அமைய வேண்டும். தமிழீழ தேசத்தை நோக்கிய பயணமானது, அகிம்சையில் ஆரம்பித்து, ஆயுத போராட்டமாக உருவெடுத்தது. ஆயுதப் போராட்டத்தில் இருந்து தற்போது இராஜதந்திர நகர்வுகளை நோக்கிய போராட்டமாக மாறுதல் காணவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுப்பதால், தமிழீழ தாயகத்தை நோக்கிய புலிகளின் ஆயுதப் போராட்டம் ஓய்ந்து விட்டது. தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கை அடக்கப்பட்டு விட்டன என்ற தவறான கண்ணோட்டங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது.

தமிழீழ தேசத்தை நோக்கிய பயணம் எப்பொழுதும் இல்லாத வகையில் ஒரு புதிய பரிணாமத்தில் பயணிக்க போகிறது. ஆயுதப் போராட்டமும் அமைதிப் போரட்டமும் இணைந்த இராஜதந்திர நகர்வுகள் நிறைந்த ஒரு புதிய போராட்டப் பரிணாமம் தலையெடுக்க போகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழீழ சுதந்திரப் போராட்டம் உலக அங்கீகாரத்தை நோக்கி செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது. உலக அங்கீகாரத்தை நோக்கிய இந்தப் பயண காலகட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் தமிழீழ அரசாங்கத்திற்கு ஒரு வலுவான தலைமைத்துவத்தை ஏற்படுத்தி, காரியங்களை செவ்வனே செயற்படுத்தி, விடுதலைப்புலிகளின் தலைவரின் லட்சிய கனவை நனவாக்குவோம்.

கடந்த காலங்களில் உலகில் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திரப் போராட்டங்களில் வெளிநாட்டில் இருந்து இயங்கும் அரசாங்க கட்டமைப்பு முக்கிய பங்காற்றியுள்ளதை,அந்த போராட்டங்களை உற்றுநோக்குவதன் மூலம் காணமுடியும். ஆச்சே விடுதலைப் போராட்ட இயக்கமான (புயுஆ) சுவிடனில் இருந்து தனது இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்ததை இவ்வேளை மிகச் சிறந்த உதாரணமாக கூறலாம். அதனை போன்ற ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தியே கிழக்கு திமோர் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச அங்கீகாரத்தை பெற வெளிநாட்டில் இருந்து இயங்கிய இந்த அரசாங்க கட்டமைப்புகள் முக்கிய பங்காற்றியுள்ளன.

தலாய் லாம முன்னெடுத்து வரும் தீபேத் அங்கீகாரப் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.தற்போதைய காலக்கட்டத்தில் தமிழீழ சுதந்திரத்தை நோக்கிய பயணம் தமிழர்களுக்கு சாதகமாகவே உள்ளது. இனிவரும் காலங்களில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட போகும் போராட்டத்தின் வழிமுறைகளே தமிழீழ தேசிய கனவை நனவாக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. வெளிநாட்டில் இருந்து இயங்கும் தமிழீழ அரசாங்க கட்டமைப்பின் மூலம் உலக நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி, அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமும், மனித உரிமை விவாதங்களின் ஊடாகவும் தமிழீழ தேசம் அமைய வேண்டிய அவசியத்தை உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பதில் மிக முக்கிய பங்காற்ற முடியும். கடந்த காலங்களில் ஒரு சுதந்திர தேசத்திற்கான அனைத்து அத்தியாவசியங்களையும் உள்ளடக்கி, புலிகளின் தலைவர் பிரபாகரனின் கீழ் கிளிநொச்சியை மையமாக கொண்ட தமிழீழ அரசாங்கம் எவ்வாறு செயற்பட்டது என்பதை உலக தமிழர்கள் அறிவார்கள். ஆகவே தனி தேசத்தை கட்டியெழுப்பி,ஆளும் தகுதிகள் அனைத்து தமிழர்களுக்கு உள்ளன என்பதை புலிகளின் தலைவர் நிரூபித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை முன்னிறுத்தி,தாம் பிறந்த மண்ணில் அனைத்து உரிமைகளையும் பெற்று ஈழத் தமிழர்கள் கௌரவமாக வாழ தமிழீழ தேசம் மாத்திரமே தீர்வாக அமையும். இலங்கையின் வடக்கிழக்கில் தமிழீழம் அமைய, வெளிநாட்டில் இருந்து இயங்கும் தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.அவ்வாறு அமைக்கப்படும் தமிழீழ அரசாங்கத்திற்கு அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் ஆதரவையும் வழங்க வேண்டிய கடப்பாடு உலகத் தமிழர்களுக்கு உள்ளது.

மலேசிய தமிழர்கள், தமிழீழ தேசியத்திற்கான போராட்டத்திற்கு எப்பொழுதும் பக்க பலமாக இருப்பார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்வதாகவும் பேராசிரியர் இராமசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பேராசிரியர் இராமசாமி, வெளிநாட்டில் இருந்து இயங்கும் தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆலோசனை குழுவிலும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails