அருட்தந்தை ஜெகத் கஸ்பர் நேர்காணல்!
தமிழர் வாழ்வியல், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் சமூக ஆய்வு, சமூக விழாக்கள், இசை முயற்சிகள், பதிப்பு முயற்சிகள், சமுதாய ஊடகம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்- சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சாதித்து வரும் "தமிழ் மையம்' அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர்.
இளமையும் துடிப்பும் மிக்க இந்த கத்தோலிக்க குரு, ஈழச் சிக்கல் தீவிரம் கொண்டிருந்த 90-களின் இறுதியில் ஒரு வெற்றிகரமான வானொலி இதழிய லாளராக ஈழ அகதிகளுக்கு இவர் ஆற்றிய பணி அளப்பரியது. தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், மாநகர வாழ்வில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வரும் "சென்னை சங்கமம்', "சென்னை மாரத்தான்' ஆகிய சமுதாய விழாக்களை இணைந்து உருவாக்கியவர்களில் ஒருவர்.
சுதந்திரம், சமத்துவம் ஆகிய இரண்டும் மனித வாழ்வுக்கு இன்றியமையாத இரு கண்கள் என்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஜனநாயகவாதியான ஜெகத் கஸ்பர், அடிப்படை வாதத்தின் அனைத்துவித வடிவங்களையும் அடியோடு வெறுக்கும் தொலைநோக்குத் துறவி. எனினும் மதங்கள், கலாச்சாரங்களுக்கு இடையிலான ஒப்புறவையும், அதுகுறித்த விவாதத்தையும் விரும்பும் இவர் நான்கு நூல்களின் ஆசிரியர். கவனத்துக்குரிய கட்டுரையாளர்.
அவரை "இனிய உதய'த்திற்காக சந்தித்து உரையாடினோம். அதிலிருந்து...
இளையராஜாவின் இசை ஆளுமையைப் பயன்படுத்தி, மாணிக்க வாசகரின் "திருவாசக'த்துக்கு சிம்பொனி இசை வடிவம் தரும் முயற்சியை ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவப் பாதிரியார் முன்னெடுக்கிறார் என்று தெரியவந்தபோது தான், அநேகமாய் உங்கள்மீது புகழ் வெளிச்சம் விழுந்தது என்று நினைக்கிறேன். அருட் தந்தைகளுக்கு இலக்கியப் பணி என்பது புதிதல்ல என்றா லும், உங்களது சிம்பொனி முயற்சி என்பது அடிப்படை மதவாத சக்திகளே பொறாமை கொள்ளும் அளவுக்கு மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்த ஒரு மாபெரும் முயற்சி யாக அமைந்து விட்டது. பொதுவாக மத குருமார்கள் என்போர் மதப்பற்று கொண் டவர்களாக இருப்பார்கள். நீங்கள் இதிலிருந்து மாறு படுவதாகத் தோன்றுகிறது. உங்களது குடும்பப் பின்னணிக் கும், நீங்கள் முன்னெடுக்க விரும்பும் சமய ஒப்புறவுக்கும் தொடர்பிருக்கிறதா?
""குமரி மாவட்டத்தில் காஞ்சாபுரம் என்னும் சின்னஞ் சிறு கிராமத்தில் பிறந்தவன் நான். எனது தந்தையார் திருமணத் துக்காக கிறிஸ்துவத்தைத் தழுவிக் கொண்ட இந்துக் குடும் பத்தைச் சார்ந்தவர். தாயார் பாரம்பரியமான கிறிஸ்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர். தந்தை யாரின் உடன்பிறப்புகள், உறவு கள் அனைவருமே தங்கள் மதத் தின்பால் ஆழ்ந்த பற்று கொண் டவர்கள். குடும்பத்துக்கென்று சிவபெருமான் கோவில், முருகப் பெருமான் கோவில், பத்திர காளியம்மன் கோவில் என்று கட்டி வழிபட்டு வருபவர்கள். இன்றும் அந்தக் கோவில்களைப் பேணி வருபவர்கள். இதுபோன்றதொரு பின்னணியில் பிறந்த எனக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. எங்கள் மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற இந்து- கிறிஸ்துவ கலப்புத் திருமணங்கள் என்பவை வழக்க மான ஒரு யதார்த்தம். இப்படி கலப்புத் திருமணங்கள் நடந்தா லும்கூட பிள்ளை வளர்ப்பு என்பது கிறிஸ்துவ மதம் சார்ந்தே இருக்கும். எனக்கோ இந்த இரண்டு சமயங்களின் பின்னணி யையும் பார்த்து, அறிந்து வளர்கிற வாய்ப்பு அமைந்து விட்டது. இதனால் மத நல்லிணக்கம் என்பது இளமை முதலே எனக் குள் வேர்பிடித்து விட்டது.
அதேபோல எங்கள் ஊர் அமைந்திருந்த விளவங்கோடு தாலுக்கா, இடதுசாரி அரசியல் தீவிரமாக மையங்கொண்டிருக் கும் நிலப்பரப்புக்களில் ஒன்று. இவையெல்லாம் சேர்ந்து சிறுவயதிலேயே ஒரு விரிவான பார்வையைத் தந்துவிட்டன.''
இருவேறு மதப் பின்னணி யில் வளர்ந்த நீங்கள் குருத்து வம் பெற வேண்டும் என்று விரும்பியது உங்கள் தந்தையா, தாயா? பெரும்பான்மையான மாணவர்கள் குருகுலத்தில் படிக்கிறபோதே விலகிவிடுகி றார்கள்- இல்லையா?
""என் தாயாரின் நேர்த்திக் கடன் காரணமாக நான் குரு குலத்தில் சேர்க்கப்பட்டேன். எனது ஏழாம் வயதில் தந்தை யாருக்கு தொடர்ச்சியான தலைவலி. படுத்த படுக்கையாக இருந்து இறந்துபோனார். இப்போது நினைத்துப் பார்க்கிறபோது அது மூளைப் புற்று நோயாக இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். அன்று அதற்கான மருத்துவ வசதிகள் இல்லை. பிறகு நான் எட்டாம் வகுப்பு படிக்கிறபோது, எனக் கும் தொடர்ந்து தலைவலி வந்து விட்டது. என் தந்தையாருக்கு வந்த நோய்தான் எனக்கும் வந்து விட்டதோ என்று பயந்துபோன எனது தாயார், என் தலைவலி குணமாகிவிட்டால் என்னை குருத்துவ வாழ்க்கைக்கு அனுப்பி விடுவதாக இயேசுவிடம் நேர்த்திக்கடனாக வேண்டிக் கொண்டார்.
அவரது வேண்டுதலை இறைமகன் நிறைவேற்றி வைக்க, நான் பத்தாம் வகுப்பு படிக்கிறபோது குருகுலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கே பன்னிரண்டாம் வகுப்பைப் படித்து முடித்தபிறகு மொழிப் பயிற்சி, தத்துவவியல் பயில வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட தைப்போல அந்தக் காலகட்டத் தில் எனக்குள் பல்வேறு கேள்வி கள். கடவுள் இருக்கிறாரா, இல் லையா? கடவுள் இரக்கமுள்ளவர் என்றால் உலகில் ஏன் இத்தனை துன்பங்கள்? மலைக்கும் மடுவுக் குமான ஏற்றத்தாழ்வுகள் ஏன்? பதிலற்ற இந்தக் கேள்விகளோடு குருத்துவ வாழ்க்கையை ஏன் தொடர வேண்டும்... அதை விட்டு விலகி வீட்டுக்குப் போய்விட லாமே என்று எண்ணினேன். ஆனால் நான் இப்படி நினைக் கும்போதெல்லாம் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துவிடும். என் எண்ணச் சிதறல்கள் ஒரு கட்டுக் குள் வந்து நான் குருத்துவப் படிப்பிலேயே தொடரும் அற்பு தம் நடந்தேறியது. அப்போதெல் லாம் இறைவன் நமக்கென்று ஒரு கடமையை வைத்திருக் கிறார் என்று திடமாக விசுவாசம் கொள்ளத் தொடங்கினேன்.''
பிறகு எப்போது குரு பட்டம் பெற்றீர்கள்? உங்க ளுடைய குருத்துவப் பணியின் தொடக்க காலம் என்பது எப்படி அமைந்தது?
""பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தபிறகு குரு பட்டம் பெறுவதற்கு ஓராண்டு காலம் மொழிப்பயிற்சி. லத்தீன், கிரேக்கம், எபிரேயம் (யூத மொழி), ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளைப் படித்தபிறகு மூன்றாண்டு காலம் தத்துவவியல் பட்டப் படிப்பு. பிறகு ஓராண்டு காலம் ஏதேனுமொரு ஊரில் மக்களோடு களப்பணி செய்ய வேண்டும். அதுவும் முடிந்தபிறகு நான்காண்டு காலம் இறையியல் பயிற்சி. இந்தக் கட்டங்களை யெல்லாம் தாண்டி வந்த பிறகு 1991-ஆம் ஆண்டு ஒரு குருவாக திருநிலைப் படுத்தப்பட்டேன்.
அதே ஆண்டில் முளகு மோடு என்ற ஊரில் உதவிப் பங்குத் தந்தையாக ஓராண்டு காலம் பணிபுரிந்தேன். 92-ஆம் ஆண்டு கருங்கல் என்ற ஊருக்கு அருகில் உள்ள சகாயநகர் மறைமாவட்டத்துக்கு பங்குத் தந்தை யாகப் பணியாற்றச் சென்றேன். கடுமையான உழைப்பை நம்பி, சுயமரியாதையோடு வாழ்கிற எளிய மக்கள் வசிக்கும் ஊர். அங்கு சென்றதும், அங்குள்ள இளைஞர்கள், இளம் பெண் களைக் குழுக்களாகக் கட்டி யெழுப்புகிற வேலையைச் செய்தேன். நான் அங்கு கடமையாற்றியபோது அந்த மாவட்டத்தையே குலுக்கி வந்த "மணலி குலுவிளை' பிரச்சினையைக் கையிலெடுத்தேன். மணலிகுலுவிளை பிரச்சினை என்பது ஒரு குட்டி அயோத்தியா பிரச்சினை போன்றது. அந்தச் சிக்கலைத் தீர்க்க மதவாத சக்திகளோடு மோதுகின்ற நிலை ஏற்பட்டது. மோதல் என்றால் அது மதம் சார்ந்த மோதல் அல்ல. அரசியல் சட்ட உரிமை சார்ந்து நீதிமன்றம் சென்றேன். ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழிபாடு நடத்துகிற உரிமை இருக்கிறதா, இல்லையா என்ற கோரிக்கையோடு மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி னோம். இறுதியில் அன்றைய ஜெயலலிதா அரசு, நடேசன் பால்ராஜ், நாகூர் மீரான், லாரன்ஸ் ஆகிய மூன்று அமைச் சர்களைக் கொண்ட குழு அமைத்து, அன்றைய மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜேஷ் பைலட் தலையீட்டுடன் அந்தப் பிரச்சினையை இருதரப்பு சமாதானத்துடன் முடிவுக்குக் கொண்டு வந்தோம். அந்தப் பிரச்சினையை முன்னெடுத்துச் சென்றதில் போராட்ட ஒருங் கிணைப்பு, ஒரு அரசாங்கம் எப்படி இயங்குகிறது, உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது எத்தனை களைப்பான முயற்சி என்பதையெல்லாம் கற்றுக் கொண்டேன். என்னுடைய மறைப்பணியின் தொடக்க காலம் இதுதான்.''
சிம்பொனி முயற்சிக்குப் பிறகு நீங்கள் பரவலாக அறியப்பட்டாலும், அதற்கு முன்பு பிலிப்பைன்ஸ் "வெரிடாஸ்' சர்வதேச வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளின் பொறுப் பாளராக இருந்து, ஈழ தேசிய விடுதலைப் போராட்டத்தை உலக மக்களிடம் எடுத்துச் செல்லும் முக்கியப் பணியைச் செய்தவர் என்பதை இங்குள்ள இன உணர்வாளர்கள், ஈழ மக்கள், புலம் பெயர்ந்தவர்கள் நன்கறிவார்கள். அதிலும் உங்களது "உறவுப் பாலம்' நிகழ்ச்சி ஈழப் போரில் சிதறுண்ட எத்தனையோ உறவு களை ஒன்று சேர்த்திருக் கிறது! அதுபற்றிச் சொல்லுங் களேன்?
"" "வெரிடாஸ்' என்பது பிலிப் பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து இயங்குகிற ஓர் அனைத் துலக வானொலி நிலையம். "வெரிடாஸ்' என்ற லத்தீன் மொழிச் சொல்லின் பொருள் "உண்மை' என்பதாகும். கத்தோலிக் கத் திருச்சபைக்கு இரண்டு அனைத்துலக வானொலி நிலையங்கள் இருக்கின்றன. ஒன்று வாடிகன் நகரிலேயே இயங்கக் கூடியது. மற்றொன்று இந்த "வெரிடாஸ்.' வாடிகன் வானொலியானது கிறிஸ்துவ மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பு செய்கிறது. ஆனால் "வெரிடாஸ்' வானொலி திருச்சபைக்குச் சொந்தமானது என்றாலும், அது கிஞ்சித்தும் மதச்சார்பற்ற பொதுநிகழ்ச்சி களை பதினேழு ஆசிய மொழி களில் ஒலிபரப்பு செய்து வருகிறது. "வெரிடா'ஸின் பாரம்பரியம் என்பதே மனித உரிமைகள், சுதந்திரம், விடுதலைப் போராட் டங்கள் ஆகியவற்றுக்கு இயல் பாகத் துணை நிற்பதுதான்.
பிலிப்பைன்ஸ் நாட்டிலே இமெல்டா மார்க்கோஸின் சர்வாதிகாரக் கும்பல் இருபத் தோரு ஆண்டுகாலம் நடத்தி வந்த ராணுவ எதேச்சதிகார ஆட்சியைத் தூக்கி எறிந்த மக்கள் புரட்சியானது நெறி செய்யப்பட்டது எங்கள் "வெரி டாஸ்' வானொலி மூலம்தான்.
மக்கள் புரட்சியை வழி நடத்திய புரட்சித் தலைவர்களான பிடல்ராமோஸ், கர்தினால் சின் போன்றவர்கள் "வெரிடாஸ்' வானொலியிலிருந்து, "புரட்சிக்கு வரும்போது மக்கள் அனைவரும் தத்தமது பாக்கெட் வானொலியை எடுத்து வாருங் கள்' என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை ஏற்று புரட்சிக்கு வந்த இருபது லட்ச மக்களும் பாக்கெட் வானொ லியை எடுத்து வந்தார்கள்.
பாக்கெட் வானொலியில் தான் மக்கள் இப்போது என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று வழிகாட்டி னார்கள். ஆக, "வெரிடாஸ்' என்பது ஒரு புரட்சிகர ஊடக மாகச் செயல்படும் பாரம்பரி யத்தைக் கொண்டிருக்கிறது. அதேபோல சீனாவில் உரிமைக் காகப் போராடுகிறவர்கள். அதே போல பர்மாவில் "கச்சின்- கரேன்' சிறுபான்மையின மக்களின் இன விடுதலைப் போராட்டத்தை உறுதியாக ஆதரித்த வானொலி "வெரிடாஸ்'. தவிரவும் அனைத்துலக வானொலி என்பது "கான் பிளிக்ட்சோன்' என்று சொல்லக் கூடிய பிரச்சினை அல்லது சண்டை மையம் கொண்டிருக்கக் கூடிய இடத்தின் உண்மை நிலவரத்தை "வெரிடாஸ்' போன்ற அனைத்துலக வானொலிகள்தான் உள்ளபடி சொல்ல முடியும். ஏனென்றால் போரை நடத்துகிற அரசாங்கத் திற்குப் பொய்யைத் தவிர வேறு நிலைப்பாடு இருக்காது. களத் திலே நிற்கக்கூடிய போராளி களும் போர்த் தந்திரம் கருதி பொய் சொல்கிற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இந்த இரண்டு தரப்பினரிடமிருந்தும் உண்மையை மீட்டெடுக்கிற பெரும்பணியை "வெரிடாஸ்' வானொலி செய்திருக்கிறது.
"வெரிடாஸ்' வானொலியில் நான் பணிபுரிந்தபோது ஈழத் தமிழர் சிக்கலில், உலகத்தோடு அந்த மக்களை இணைக்க முடிந் தது. அந்த மக்களின் உண்மை யான நிலையை- உணர்வுகளை- யதார்த்தத்தை உலகத்துக்கு எடுத்துச் சொல்ல முடிந்தது. இந்த இரண்டு பணிகளையும் செய்தோம். நீங்கள் குறிப்பிட்ட தைப்போல, "உறவுப் பாலம்' நிகழ்ச்சி மூலம் ஈழமக்களின் வாழ்வோடு ஐக்கியப்பட்டோம். நான் "வெரிடா'ஸில் பதவியேற்று நான்கைந்து மாதங்கள் கழிந்த போது, யாழ்ப்பாண இடப் பெயர்வு நடைபெற்றது. ஈழமக்க ளின் துன்பியல் வரலாற்றில் இந்தச் சம்பவம் ஒரு மாபெரும் துயர நிகழ்வு. ஒரே இரவில் பத்து லட்சம் தமிழ் மக்கள் கையில் கிடைத்ததை மட்டும் எடுத்துக் கொண்டு யாழ்ப் பாணத்தை விட்டு இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய அவல நிலை! 1995 -ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி இரவு நடந்த சம்பவத்தின் பின்னணியில் இலங்கை ராணுவத்தின் கோரமுகம் ஒளிந்து கொண்டிருந்தது. யாழ்ப் பாணத்தை இலங்கை ராணுவம் பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்தது. அன்றிரவு மக்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு அகன்று சென்றிருக்காவிட்டால், குறைந் தது ஐம்பதாயிரம் மக்களைக் கொன்று குவித்திருக்கும் இலங்கை ராணுவம்.
இந்த நிலையில் அந்த மக்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்து, அவர்களுக்கு நம்பிக்கை யைத் தந்து, உறுதியாக அவர் களை வழிநடத்திய ஒரு பணியை எம்முடைய வானொலி செய்தது. அவர்களது மனித உரிமைப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் அவை, அம்னெஸ்டி இன்டர் நேஷனல், உலக செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது. உலகத் தமிழ் மக்களின் மனிதா பிமானத்தை அந்த மக்களுக்காக இணைக்கின்ற ஒரு வேலையைச் செய்தது. இலங்கை தமிழ்ப்பகுதி ஒன்றில் யுத்தம் வெடிக்கிறது என்றால், அங்கே மின்சாரம் கிடையாது, பெட்ரோல் கிடையாது, மண்ணெண்ணெய் கிடையாது, பேட்டரி கிடையாது. இதுபோன்றதொரு நெருக்கடி யான சூழ்நிலையில்தான் அவர் கள் இருந்தார்கள். இரவு எட்டு மணிக்கு யுத்தம் வெடிக்கிறது என்றால், ஒரு குடும்பத்தில் யார் எங்கு ஓடினார்கள் என்றே தெரியாது. எந்த திசையை நோக்கி ஓடுகிறோம் என்று பார்த்து ஓடுகின்ற அவகாசமெல்லாம் இருக்காது. யுத்தம் தொடங்கிய ஒரு அரைமணி நேரத்தில் ஐம்பது, அறுபது ஆண்டுகள் கூடி வாழ்ந்த குடும்பம் சிதறுண்டு போயிருக்கும். அப்பா புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஓடி இருப்பார். அம்மா ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஓடி இருப்பார். பிள்ளைகள் அங்கு மிங்குமாக அலைக்கழிந்து, ராஜமன்னார் வந்து, இறுதியில் அங்கிருந்து ராமேஸ்வரம் வந்து சேர்ந்திருப்பார்கள். யார் எங்கு போனார்கள் என்று தெரியாமல் தவித்துக் கிடப்பார்கள்.
இந்தப் பிரச்சினையை உணர்ந்து கொண்ட நான் "உறவுப் பாலம்' நிகழ்ச்சியைத் தொடங் கினேன். யார் வேண்டுமானா லும் முதலில் கடிதம் எழுதலாம். ராமேஸ்வரம் உள்ளிட்ட அகதிகள் முகாம்களில் இருந்து பெற்றோரைப் பிரிந்து வந்த பிள்ளைகள், பிள்ளைகளைப் பிரிந்து வந்த பெற்றோர் என்று கடிதம் எழுதுவார்கள். அதை நாங்கள் வானொலியில் அறிவிப்பு செய்வோம். இதை சம்பந்தப்பட்ட பிள்ளைகள்- பெற்றோர் (உயிருடன் இருக்கும் பட்சத்தில்) உடனே கடிதம் வழியாகத் தொடர்பு கொண்டு, நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று எழுதுவார்கள். இப்படி நாங்கள் செய்கிற அறிவிப்பை ஈழத்திலே இருக்கக்கூடிய மக்கள் மிதிவண்டிச் சக்கரத்தைச் சுற்றி, டைனமோவில் ரேடியோவின் ஒயரை இணைத்து அதில் கிடைக்கிற மின்சாரத்தைக் கொண்டு கேட்பார்கள். மனித உயிராற்றலை எந்த அடக்குமுறை சக்தியாலும் தோல்வியடையச் செய்ய இயலாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இப்படி "உறவுப் பாலம்' வழியே தொடர்பு கொள்கிற குடும்பங்களை கடிதங் கள் வழியே தொடர்புகொள்ள வைத்து, திருச்சபைகள் வழியாக வும் ஐ.நா. சபை வழியாகவும் ஏற்பாடுகளைச் செய்து, மீண்டும் ஒன்று சேர்க்கும் பணியை இந்த நிகழ்ச்சியின் வழியே செய்ய முடிந்தது. இப்படி என்னுடைய பணிக்காலத்தில் மட்டும் சுமார் நான்காயிரத்து அறுநூறு குடும்பங்களை ஒன்று சேர்த்து வைத்திருக்கிறேன். 2001-ஆம் ஆண்டுவரை இந்த நெகிழ்வான பணியில் ஈடுபட்டிருந்தேன்.''
"வெரிடாஸ்' போன்று மனித உரிமைக்குக் குரல் கொடுக்கும் ஒரு வானொலி யில் பணிபுரிந்து சென்னை திரும்பிய நீங்கள், இங்கே பண்பாட்டுச் சிதைவுகளாக மாறிப் போயிருக்கும் பண்பலை வானொலிகளைப் பார்த்து வருந்தவில்லையா? தமிழ்நாட்டில் "வெரிடாஸ்' போன்ற வானொலிக்குச் சாத்தியமில்லையா?
""எந்தவொரு ஊடகமாக இருந்தாலும், லாப- நஷ்டக் கணக்குப் பார்த்து- கல்லாப் பெட்டியோடு மல்லுக்கட்டுகிற வர்த்தகமாக நடத்தப்பட்டால் இதுதான் நிலை. ஏனென்றால் இதுவும் முதலீடு. இந்த முதலீட் டின் பின்னணியில் லாப நோக்கத் தோடு அரசியலும் ஒளிந்திருக் கிறது. ஒன்று, மக்களின் சிந்த னையை மழுங்கடித்து அவர்களை ஆட்டுமந்தைகள் ஆக்குவது. இன்னொன்று, தேவைப்படும் போது மக்கள் கருத்தைக் கட்டுப் படுத்தலாம் என்று செயல்படு வது; தங்களுக்கு ஆதரவான அலை தேவைப்படும்போது, மக்களின் பொதுக்கருத்து இதுதான் என்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவது. இதிலிருந்து மாறுபட்டு சமூக நோக்கோடு செயல்படுகிற ஊடக நிறுவனங்களும் இருக்கின் றன. ஆனால் இது போதாது.
"வெரிடாஸ்' வானொலி மக்கள் இயக்கமாக மாற முடிந் தது என்றால், அதற்குக் காரணம் அதனுடைய லட்சியங்களும் நோக்குகளும் தெளிவாக இருந்தன. அதற்கு லாப நோக்கம் கிடையாது. "வெரிடா'ஸில் விளம்பரங்கள் ஒலிபரப்பு செய்யப்படுவது இல்லை. "வெரிடாஸ்' மாதிரியான ஒரு வானொலிக்கான தேவை தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தான் இருக்கிறது.
அமெரிக்காவில் வெற்றி கரமான முன்மாதிரியாக பொது மக்களின் வானொலியும் தொலைக்காட்சியும் இயங்கி வருகின்றன. அதாவது பப்ளிக் ஓனர்ஷிப் மூலம் நடத்தப்படும் இந்த வானொலிகளை நல்ல உள்ளம் கொண்டவர்கள் நேயர் களின் நேரடிப் பங்கேற்போடு நடத்த முன்வரலாம்.
இப்போது நாம் உடனடி யாகச் செய்ய வேண்டியது நம்மிடம் இருக்கக்கூடிய கிராமிய மக்களுக்கான சமுதாய வானொலிகளை- தொழில் சார்ந்த வானொலியை நடத்து பவர்கள் கைப்பற்றுவதற்கு முன் னால், சமூக நோக்கம் கொண்டவர் கள் சமுதாய வானொலியில் பங்கேற்க வேண்டும். இப்படிப் பங்கேற்பு செய்வதன் மூலம் சமூக மாற்றத்தைத் தரக்கூடிய- தனி மனித ஆளுமையைக் கட்டி யெழுப்பக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த சமூக இயக்கமாக சமுதாய வானொலிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.''
"வெரிடாஸ்' வானொலி மூலம் செய்து வந்த ஈழப்பணி யிலிருந்து ஏன் வெளியேறினீர் கள்?
""அதற்குக் காரணம் விடுதலைப்புலிகளின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். 1998 முதல் புலிகளின் "ஓயாத அலைகள்' போர் பெரும் வெற்றி யைச் சந்தித்தது. ஆனையிறவு வரை அவர்களுக்குக் கிடைத்த வெற்றியால், அதுவரை போராட்டத்தில் பங்கேற்காமல் இருந்த மக்கள் பேரளவில் பங்கேற்றது மட்டுமல்லாமல், உலகளவில் பெரிய எழுச்சியைக் கொடுத்தது. இனி தங்கள் உரிமையைத் தாங்களே மீட்டுக் கொள்வார்கள் என்று எல்லா ரையும்போல நானும் நம்பிக் கொண்டிருந்தேன். இந்த நேரத் தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படிப்பதற்கான ஒரு வாய்ப்பு திருச்சபையால் எனக்கு வழங்கப் பட்டது. அப்போது எனக்கு முப்பத்தாறு வயது... இத்தனை வயதில் முனைவர் பட்டத்துக்காக ஐரோப்பா சென்றால், எங்கே ஐரோப்பிய வாழ்க்கை முறைக் குப் பழகி அங்கேயே தங்கி விடுவேனோ என்ற கேள்வி எனக் குள் எழுந்தது. எக்காலத்திலும் தாய் மண்ணைப் பிரிவதில்லை என்ற உந்துதலோடு முனைவர் பட்ட வாய்ப்பை நிராகரித்து விட்டு சென்னை வந்து சேர்ந்தேன். பிறகு தமிழ்ச் சமூகம் சார்ந்த ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, சென்னை வந்ததுமே "தமிழ் மையம்' தொடங்கினேன்.''
இளையராஜாவுடன் எப்படி நட்பு ஏற்பட்டது? "திருவாசக' சிம்பொனித் திட்டம் எப்படி உருவானது? அதில் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைதானா?
""ஒரு கோடி ரூபாய் என்பது தவறான தகவல். எழுபத்தியிரண்டு லட்ச ரூபாய் கடனாளி ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த அற்புதமான முயற்சிக்கு முன்னால் கடன் எனக்கு சுமை யாகத் தெரியவில்லை. நான் 2002-ல் சென்னை வந்து "தமிழ் மையம்' தொடங்கிய பிறகு, இளையராஜா அவர்கள் நல்ல தொரு இசை முயற்சி செய்ய விரும்புகிறார் என்ற தகவல் தற்செயலாக எனக்குக் கிடைக்க, உடனே அவரைச் சந்தித்தேன். சிம்பொனியில் "திருவாசகம்' திட்டத்தைத் தொடங்கினோம். என்னை இளையராஜாவிடம் அழைத்துச் சென்றவர்கள், எனது வெளிநாட்டுத் தொடர்புகளை எல்லாம் நன்கு அறிந்தவர்கள். நிதி திரட்டுவது எளிதாக இருக்கும் என்பதனால், என்னை அவரிடம் அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் ஈழத் தமிழ் மக்களோடு எனக்கிருந்த உறவை, இந்த இசைத் திட்டத் தோடு நான் தொடர்பு படுத்த விரும்பவில்லை. எளிதாக இருக்கும் என்று தொடங்கிய அந்தப் பணி, பெரும் சுமையாக மாறிவிட்டது. மொத்தம் ஒன்றரை கோடி ரூபாய் திரட்ட வேண்டிய கட்டாயம். ஆனால் நன்கொடைகள் மூலம் பதினைந்து லட்சம்தான் திரட்ட முடிந்தது. வேறு வழியில்லாமல் கன்னாபின்னாவென்று வட்டிக்கு கடன் வாங்கி அந்தத் திட்டத்தை முடித்தேன். தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பதால் இவற்றை சரி செய்துவிடலாம் என்று நம்பி னேன். இதையெல்லாம் அந்த நேரத்தில் நான் சொல்லவில்லை. ஏனென்றால் அந்தப் படைப்பு ஒரு அற்புதமான படைப்பாக வெளிவந்தது. இன்னொரு காரணம் "திருவாசகம்' ஒரு புனிதமான பக்தி நூல். அதை நான் கறைபடுத்த விரும்பவில்லை.''
"திருவாசக' சிம்பொனிக்கு வரவேற்பு எப்படியிருந்தது? திருவாசக சிம்பொனி சிம்பொ னியே அல்ல; அது தேவாலயங் களில் வாசிக்கப்படும் ஆரட் டோரியா என்ற விமர்சனங் கள் வந்ததே?
""திருவாசகத்துக்குப் பெரு வாரியான மக்களிடமிருந்து வரவேற்பு குவிந்தது. என்னைப் பொறுத்தவரை அதுதான் முக்கியம் என்று கருதுகிறேன். எப்போதுமே ஒரு நல்ல முயற்சி யில் இறங்குகிறபோது அடிப் படைவாதிகளிடமிருந்து விமர் சனம் வரும். ஒரு கத்தோலிக்க பாதிரியார் எதற்காக இவ்வளவு பெரும் பணத்தை, ஒரு இந்து "திருவாசக'த்துக்குக் கொட்ட வேண்டும் என்று கிறிஸ்துவ அடிப்படைவாதிகளிடமிருந்து விமர்சனம் வந்தது. இந்து அடிப் படைவாதிகளுக்கோ சமரச சன்மார்க்கம் என்பது சுட்டுப் போட்டாலும் வராது. ஒரு பகைமை இருந்தால்தான் நாம் பிழைப்பு நடத்த முடியும் என்று அஜண்டா வைத்திருப்பவர்கள். எனவே அவர்களிடமிருந்தும் "இதைச் செய்வதற்கு நீ யார்?' என்கிற ரீதியில் எதிர்ப்புகள் வந்தன. யாரும் எதற்கும் உரிமை கொண்டாட முடியாது என்பது எனது கருத்து. மேலும் நாம் சரியாக இருக்கும்போது, யார் நம் சட்டையைப் பிடித்துக் கேட்க முடியும் என்ற கர்வம் எப்போதும் எனக்கு உண்டு. எனவே திருவாசக சிம்பொனி, சிம்பொனி அல்ல என்பதையெல்லாம் நான் காதில் போட்டுக் கொள்ளவோ கண்டுகொள்ளவோ இல்லை. காரணம், உலகில் இரண்டு விஷயங்களை மட்டும்தான் வரையறுத்துக் கட்டுப்படுத்த முடியாது. ஒன்று கடவுள்; மற் றொன்று இசை. இசைக்கென்று பல்வேறு வடிவங்கள் இருக் கின்றன. நாங்கள் முயன்றது சிம்பொனி ஆரட்டோரியா என்ற புதிய வடிவம். இதில் சிம்பொனித் தன்மையும் உண்டு; ஆரட்டோரியா தன்மையும் உண்டு. இந்த இணைதல் மிக மேன்மையாக நிகழ்ந்தது. இதில் யாரை ஏமாற்றினோம் அல்லது ஏமாற்ற வேண்டிய தேவைகள் என்ன? இசைக்கு எந்த பங்களிப் பும் செய்யாமல் விளம்பரம் தேட நினைக்கிற கும்பலின் புலம்பல்களை நாம் பொருட் படுத்தத் தேவையில்லை.''
"சென்னை சங்கமம்' என்பது மாநகர மக்களுக்குப் புதிய அனுபவமாக மாறி விட்டிருக்கிறது. "சென்னை சங்கம'த்துக்கான பொறி எங்கிருந்து கிடைத்தது?
" ""திருவாசகம்' திட்டத்துக் குப் பிறகு மிகவும் களைத்துப் போயிருந்தேன். அந்தக் கால கட்டத்தில்தான் கனிமொழி அவர்களோடு இணைந்து செயலாற்றுகிற வாய்ப்பு ஏற்பட் டது. அச்சமயத்தில் இயல்பான ஓர் உரையாடல் மூலம் "சங்கமம்' பற்றி நான் அவரிடம் சொன் னேன். தமிழர்களின் தலை நகரமாக இருக்கக்கூடிய சென்னை நகரில் தமிழ்ப் பண்பாடு, வரலாறு சார்ந்த ஒரு விழாகூட இல்லையே என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டேன். சென்னையிலே கொண்டாடப் படுகிற ஆங்கிலப் புத்தாண்டாக இருக்கட்டும், கிறிஸ்து பிறப்பாக இருக்கட்டும், தீபாவளியாக இருக்கட்டும் - இவை மூன்றுமே தமிழர்களின் பண்பாட்டு வேர்களைச் சார்ந்த விழாக்கள் அல்ல. எனவே நமது மக்களின் பண்பாடு, வாழ்வியல் சார்ந்த விழா ஒன்றை உருவாக்க வேண்டும். அதை பொங்கலைச் சார்ந்து நாம் உருவாக்கலாம். பொங்கல் என்பது அறுவடை சார்ந்த ஒரு விழா. விவசாயமோ அறுவ டையோ இல்லாத மாநகரில் பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படுகிற நிகழ்ச்சியாக அதை நாம் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டேன். இதை ஏற்றுக் கொண்ட கனி மொழி அவர்கள், "சங்கம'த்தைத் தொடங்கலாம் என்றார். ஒரு சிறிய விழாபோல தொடங்கியது "சென்னை சங்கமம்!' இன்று வரலாறு இதனை வேறுமாதிரி யாகச் சிந்திக்க, வேறுபாடுகளை எல்லாம் மறந்துவிட்டு மாநகர மக்கள் ஒன்றுகூடும் ஒரு விழாவாக "சென்னைச் சங்கமம்' மாறிவிட்டது.''
பேரறிஞர் அண்ணாவின் காலம் தொடங்கி, திராவிடக் கட்சிகளுக்கும்- கிறிஸ்துவ திருச்சபைகளுக்கும் இடையில் மிக இணக்கமான ஓர் உறவு வளர்ந்து வந்திருக்கிறது. இந்த உறவு எத்தகையது?
""முறைசெய்யப்படாத- இயங்கியல் சார்ந்த ஓர் உறவு இது. காரணம், கிறிஸ்துவத்தின் பயணம் என்பதும் சமூகநீதி நோக்கியது. தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில்தான் அது அதிகமாகப் பணி செய்திருக்கிறது. திராவிட இயக்கங்களின் பணியும் இந்தத் தளத்தில்தான் அதிகமாக இயங்கி இருக்கிறது. ஆக ஒன்றுக்கொன்று நெறி செய்யப்படாத கொடுக்கல்- வாங்கல் என்பது, கொள்கை ரீதியான உறவுக்கு வழி செய்தி ருக்கிறது. இதனால் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து தி.மு.கழக பாரம்பரியத்துக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள்.''
தாழ்த்தப்பட்ட- பிற்படுத் தப்பட்ட மக்களிடம் பணி செய்வதில் ஒருமித்த கொள்கை கொண்ட திராவிடக் கட்சிகள் என்றாலும்- கிறிஸ்துவம் என்றாலும்- இந்த இரண்டு தரப்புமே சாதி ஒழிப்பில் தோல்வி அடைந்து விட்டதை ஒப்புக் கொள்கிறீர்களா?
""நிச்சயமாக... சாதியைத் துளிகூட நாம் ஒழிக்கவில்லை. சாதியைப் பற்றிய புரிதலில் எனக் கும்கூட இன்று நிறைய கேள்வி கள் உண்டு. மாறாக இஸ்லாம் சாதி அமைப்பைத் தகர்க்கிற ஆற்றல் கொண்ட ஒரே மதமாக, மார்க்கமாக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம், வழிபாட்டு முறைகள். நம்பிக்கைகளைப் பொறுத்தவரை மிக எளிமையான மதம் இஸ்லாம். ஒரே கடவுள் என்ற இறைக்கொள்கையோடு, மிகவும் சிக்கலான சடங்குமுறை, சம்பிரதாயங்கள் போன்றவையும் அதற்குக் கிடையாது. மெக்கா இருக்கும் திசையைப் பார்த்து தொழுதால் போதும் என்பதான எளிய வழிபாடு. மாறாக, உருவங் கள், சிலைகள் இவற்றையெல் லாம் அவர்கள் உருவாக்கிக் கொள்வது கிடையாது. இந்த இடத்தில் கத்தோலிக்க மதம், கல்விப்பணியை ஒரு இயக்கமாக எடுத்துக் கொள்வதன் மூலம் சாதியை மெல்ல மெல்ல ஒழித்து விட முடியும் என்று நம்புகிறது. எனவே தாழ்த்தப்பட்ட- ஒடுக் கப்பட்ட மக்களின் விடுதலைக் காகப் பணி செய்வதிலும், தரமான கல்வியை ஜாதியிடம் தீவிரமாக இருக்கும் கிராமப்புறங் களுக்கு ஓர் இயக்கமாக எடுத்துச் செல்வதையும் முக்கிய கடமை யாகக் கொண்டு தொடர்ந்து இயங்கி வருகிறது.''
"நக்கீர'னில் தற்போது நீங்கள் எழுதிவரும் "மறக்க முடியுமா?' கட்டுரைத் தொடரானது, ஈழ விடுதலைப் போர் குறித்த பல்வேறு உண்மைகளை வெளிக் கொண்டு வருவதாக இருக்கி றது! பிரபாகரன் ஒரு போர் விரும்பி, ஈழ மக்களின்மீது போரைத் திணித்தவர் என்றெல் லாம் இந்திய ஊடகங்கள் சித்தரித்துக் காட்டிய பிம்பத்துக்கும், "இதயத்தில் உண்மையுள்ளவன், எல்லை இல்லா நன்றி உள்ளவன்' என்று நீங்கள் தரும் சித்திரத் துக்குமான வேறுபாடு ஆச்ச ரியமூட்டக்கூடியதாக இருக்கி றது. அப்படிப்பட்ட பிரபாக ரனை நீங்கள் முதன்முதலாகச் சந்தித்த தருணம் பற்றிக் கூறுங் கள். உண்மையில் புலிகளின் இத்தனை பெரிய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
""என்னைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழ் வரலாற்றில் மகத்தான ஒரு விடுதலைப் போராட்டம் என்றால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம் தான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்த அளவுக் குக் கட்டியெழுப்ப முடிந்தது என்றால், அதற்கு பிரபாகரன் என்ற மாபெரும் ஆளுமைதான் காரணம். தண்ணீரால் சூழப் பட்ட ஒரு நிலப்பரப்பில், மிக மிகச் சிறிய ஒரு இனத்திலிருந்து, அண்டை நாடான இந்தியா எப்படியும் இவர்களை அழித்து விட வேண்டும் என்ற வைராக் கியத்தை எப்போதும் காட்டிக் கொண்டிருக்க, உலகத்தில் எந்தவொரு நாட்டின் உதவியும் இல்லாமல், மரபு வழி ராணுவம் என்று நாம் சொல்லுகிற தரைப் படை, பீரங்கிப் படை, கடற் படை; செறிந்த ஒரு புலனாய் வுப் பிரிவு; சர்வதேச அளவி லான ஒரு கொள்வனவுப் பிரிவு; தேர்ந்த உளவுப்பிரிவு; இவற்றையெல்லாம் தாங்கி நடத்துவதற் காக ஒரு நிதிவள ஏற்பாடு; இன்னும் தன் ஆளுகைக்கு உட் பட்ட மக்களுக்கு ஒரு நிர்வாகத்தைக் கொடுக்கிற மேலாண்மைப் பிரிவு- இத்தனையையும் கட்டி எழுப்பிய மனிதன் ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியாது. அபூர்வ ஆற்றல் கள் அமையப் பெற்ற ஒரு மனித னால் மட்டுமே இது சாத்திய மாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்களுக்கு போர்க்குணம் இருந்தது என்று புறநானூற்றுக் காலத்தை நாம் சொன்னாலும், கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் நாம் போர்க்குணம் மிக்க மக்களாக இருந்தோம் என்பதற்கு எம்மால் எந்தவித ஆதாரங்களை யும் சொல்ல முடியவில்லை. பெரிய அளவில் தொழில் முனைதல் இல்லாத- தாழ்வு மனப் பான்மை கொண்ட- எதையும் விதியே விதியே என்று ஏற்றுக் கொள்கிற ஒரு மக்கள் இனத்தின் மனவெளிகளுக்குள் புகுந்து புரட்சி செய்து, தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கின்ற தலைமுறையையே உருவாக்கிக் காட்டிய மனிதன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது.
பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது. தமிழினம் பிரபாகரனால் தாழ்ந்ததா, உயர்ந்ததா என்று கேட்டால், உயர்ந்தது என்று உறுதியாகச் சொல்லுவேன். பிரபாகரனின் ஆளுமைக்கு அப்பால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு வரலாற்றுச் சூழமைவுகளும் தாக்கத்தை ஏற்படுத்தின. முதலில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் காலம் அப்படியே நீடித்திருக்குமானால் எப்போதோ ஈழம் கிடைத்திருக்கும். ரஷ்ய வல்லரசு உடைந்து போனதால் பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டது. இந்த காலகட்டத்தில் தான் ஈழப் போராட்டம் வளர்ச்சி கண்டிருந்தது. பனிப்போர் முடிந்தபிறகு உலகம் ஒற்றைத் திசையில் பயணப்பட ஆரம்பித்தது. நமக்கான ஆதரவு சக்திகள் இல்லாமல் போனார்கள்.
ஈழத்துக்குச் சென்ற இந்திய அமைதிப் படை, பதினைந் தாயிரம் அப்பாவித் தமிழர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது. அதன் பின்னணியில் ராஜீவ் காந்தி படுகொலை எனும் துயர நிகழ்வு. ஆனால் பதினைந் தாயிரம் மக்களைச் சாகடித்த பழியும் குற்றமும் யாராலும் பேசப் படவில்லை. ராஜீவ்காந்தி படுகொலை மட்டும்தான் பேசப் பட்டது. அதற்காக நான் ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்த வில்லை. அது நடந்திருக்கக் கூடாது. ராஜீவ் மரணத்திற்காக அழுதவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் அந்தவொரு நிகழ்வை வைத்துக் கொண்டு பழிவாங்கித் தீர்க்க வேண்டும் என்ற பழியுணர்ச்சியை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வந்திருக்கிறது; வருகிறது. இதையும் சந்தித்தபடி புலிகள் ஓர் கட்டுப்பாடு மிக்க இயக்கமாக முன்னேறி வெற்றிகளைக் குவித்து வந்த நேரத்தில்தான், ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள்மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதம் என்பது ஓர் எதிர் அரசியலாக மாறுகிறது. இதனுடைய எதிர்விளைவுகளை எல்லாம் புலிகள் இயக்கமும் சந்திக்க வேண்டிய கட்டாயம்.
உலக அளவில் புலிகளின் கட்டமைப்புகள், நிதிவளங்கள் எல்லாம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி, பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாக முடங்கிப் போய் பெரும் இன்னல்களைச் சந்தித்தார்கள். களத்திலே அவர்கள் பெரும் வெற்றியைக் குவித்தாலும்கூட, விடுதலையை முன்நகர்த்திச் செல்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனையிறவு வரைக் கும் வென்று ஏறக்குறைய தமிழ் ஈழத்தை சாதித்துவிட்ட நிலையில்தான், ஒருவகையில் அவர்கள் ஏமாற்றப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வரப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களது இயக்கத்துக்குள் பிளவை உண்டாக்கி, உளவு அமைப்புகளில் ஊடுருவி புலிகளைப் பலவீனப்படுத்தி னார்கள்.
இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் புலிகள் சமாதானம் பேசிய கால கட்டத்தில்தான் அவர்களைப் பயங்கரவாதிகளாக உலக நாடு கள் மத்தியில் சித்தரித்துக் காட்டிய ஈன ராஜ தந்திரத்தை சிங்கள அரசு கையாண்டது.
பிராந்திய அளவில், உலக அளவில் பகைவர்களாக இருக்கிற நாடுகள் எல்லாம் இந்த விஷயத்தில் சேர்ந்து நின்றார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நின்று இலங்கைக்குக் கை கொடுத்தார் கள் என்பதைவிட, அள்ளிக் கொடுத்தார்கள் என்பது சரியாக இருக்கும். அதேபோல இந்தியா வும் சீனாவும் சேர்ந்து உதவினார் கள். அமெரிக்காவும் ரஷ்யா வும் சேர்ந்து உதவினார்கள். ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உதவினார்கள். அவ்வளவு ஏன்- உலகமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து உதவி, தமிழினத்தின் விடுதலை உணர்ச்சியைத் தகர்த்தெறிந்திருக்கிறார்கள். இத்தனை சக்திகளை மீறியும் புலிகள் தாக்குபிடித்து நின்றிருக்கிறார்கள் என்பது ஒரு மகத்தான வரலாறு. அதை நீங்கள் மறுக்கவே முடியாது!
புலிகள் தவறு செய்யாதவர் கள் அல்ல; பல்வேறு தவறு களைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டிய வர்கள்தான். ஆனால் அவற்றையெல்லாம் மீறி அவர்கள் தார்மீகப் போராட்ட நேர்மை கொண்டவர்களாக நடந்து கொண்டார்கள்.
கடைசி கட்டப் போரில் அவர்கள் நினைத்திருந்தால் கொழும்பு நகரில் ஐம்பதாயிரம் பேர்களையாவது கொன்று குவித்திருக்க முடியும். அந்த அளவுக்கு ரசாயன ஆயுதங்களை அவர்கள் நிச்சயமாக வைத்தி ருந்தார்கள். ஆனால் செய்ய வில்லை. கடந்த பத்தாண்டுகளில் பார்த்தோமேயானால் சிங்களப் பேரினவாதம் எத்தனை அப்பாவித் தமிழர்களைக் கொன்றார்கள், புலிகள் எத்தனை சிங்களவர்களைக் கொன்றார்கள் என்று கணக்கெடுத்தால், புலிகள் உயிரின் மதிப்பை உணர்ந்த வர்களாகப் போராடியிருக் கிறார்கள். கடந்த பத்து மாதத்தில் மட்டும் சிங்களப் பேரினவாதம் அறுபதாயிரம் பேரைக் கொன்றழித்திருக்கிறது. புலிகள் அறுநூறு பேரைக்கூட கொல்ல வில்லை. குறிப்பாக அப்பாவி மக்களைக் கொல்லவே இல்லை. "கட்டுநாயக' விமான தளத்தில் அவர்கள் தாக்குதல் நடத்திய போது பயணிகளில் ஒரு உயிர் கூட போய்விடக்கூடாது என்று கவனத்தோடு தாக்குதல் நடத்தி னார்கள். தாக்குதல் நடத்திய தினத்தன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அன்று மதியம் 1.30 மணிக்கு தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால் காலதாம தமாக 3.30 மணிக்குத்தான் தரை இறங்கியிருக்கிறது. பயணிகள் அனைவரும் வெளியே வந்த பிறகே மாலை 5.30 மணிக்குத்தான் தாக்குதல் தொடங்கினார்கள். புலிகள் இதைக் குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் 1.30 மணிக்கே தாக்குதல் தொடங்கி இருப்பார்கள் என்றால், இலங்கை விமானப் படையை அன்றைக்கே ஒன்றுமில்லாமல் நிர்மூலம் ஆக்கியிருப்பார்கள். ஆனால் என்ன செய்வது? ஊடக பலம் இல்லை. உலகத்தில் எல்லா ரும் அவர்களை அழித்துவிட வேண்டும் என்று துடிக் கிறார்கள்.
சந்திரிகா அம்மையார் 1995 முதல் 2000-ஆவது ஆண்டு வரை மிகப்பெரிய பொருளா தாரத் தடையை அங்கு விதித் திருந்தார். கடுகைக்கூட தமிழ் ஈழத்துக்குள் நுழைய விடாமல் பார்த்துக் கொண்டார். அப்படியிருந்தும் புலிகள் தம் மக்களைப் பட்டினிச்சாவில் விட்டுவிடவில்லை. விவசாயத் தைத் திட்டமிட்டு அவர்கள் நடத்தினார்கள். ஏழு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு அரிசி வேண்டும், எவ்வளவு தேங்காய் வேண்டும் என்பதைக் கணக்கிட்டு விவசாயத்தை ஒழுங்கு படுத்தினார்கள்.
இவையெல்லாம் உலகத் துக்கு எடுத்துச் சொல்லப்பட வில்லை. ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்தன. எல்லா இயக்கங் களையும் போல இவர்களும் பல தவறுகள் செய்திருக்கிறார்கள். ஆனாலும் எல்லா தவறுகளையும் மீறி ஒரு மகத்தான மக்கள் இயக்கமாக இருந்திருக் கிறார்கள்.
2002-ல் நான் பிரபாகரனைச் சந்தித்தேன். நான் சந்திக்கும் இடத்திற்குள் அவர் உள்ளே நுழைந்தபோது, அவருக்கு யாரும் சல்யூட் அடிக்கவில்லை. தனக்கான இருக்கையைத் தானே எடுத்துப் போட்டுக் கொண்டார். சின்ன போராளிகள்கூட அவருக்கு வணக்கம் சொல்ல வில்லை. பணிவுடன் கடந்து சென்றார்கள்; அவ்வளவுதான். தனக்கு தாகம் எடுத்தபோதுகூட தானே போய் தண்ணீர் எடுத்து அருந்தினார். ஒரு தன்முனைப்பு இல்லாத மனிதர். எல்லா பொறுப்புகளையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, லட்சியத்தை நிர்வகித்துச் செல்லக்கூடியவராக இருந்தார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தெளிவாக- பிசிறில்லாமல் அவரால் பதில் சொல்ல முடிந்தது. மிக முக்கிய மாக தாமொரு மாபெரும் தலைவர் என்ற பெருமையே இல்லாத மனிதர்.''
கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்களின் மரணம் குறித்து இந்தியா கிஞ்சித்தும் அலட்டிக் கொள்ளாததும்; ஈழத்தமிழர்களை அழிக்க ஆயுதம், பயிற்சி கொடுத்த துரோகமும்; இந்திய தேசியம் என்ற ஒருமை- ஒரு மாயை என்று இங்குள்ள பெரும் பான்மை தமிழர்களை எண்ண வைத்திருக்கிறது. இந்தப் பழியிலிருந்து இந்தியா விடுபட முடியுமா?
""இந்தியாவின் கை ரத்தப் பழி சுமக்கிறது. இதை ஒரு போதும் அது கழுவிக் கொள்ள முடியாது. என்றேனும் ஒருநாள், தமிழினத்துக்கு அது பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். கடைசி கட்டத்தில், மூன்று லட்சம் மக்கள் ஒரு சிறிய நிலப் பரப்பில் முற்றுகையிடப்பட்டு தொடர்ச்சியான எறிகணை வீச்சு, பாஸ்பரஸ் குண்டுகள், கிளெஸ்டர் குண்டுகள் என்று உயிர்கள் பொசுக்கப்பட்டபோது கூட, அப்போதைய வெளியுறவு அமைச்சர் முற்றுகையிடப்பட்ட இடத்தில் எண்பதாயிரம் பேர் தான் இருக்கிறார்கள் என்றார். ஆனால் யுத்தம் முடிந்த பிறகு மூன்று லட்சம் மக்கள் வந்து சேர்ந்தார்கள் இல்லையா? அப்படியானால் மூன்று லட்சம் பேரில் இரண்டேகால் லட்சம் பேர் செத்தால்கூட பரவாயில்லை என்ற நிலையைத்தான் இந்தியா எடுத்திருக்கிறது. இவையெல் லாம் நினைத்துப் பார்க்க முடியாத துரோகம்.
அதேபோல கடைசி மூன்று நாட்களில் படுகாயம் அடைந்த பத்தாயிரம் மக்களை புல்டோசர் ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள். மே-18-ஆம் தேதி சண்டையில் மட்டும் இருபதாயிரம் மக்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் தெரியாதவை அல்ல. லண்டனில் இருந்து வெளிவருகிற "டைம்ஸ்', "கார்டி யன்' பத்திரிகைகள், பாரீஸிலிருந்து வெளிவருகிற "லெமோண்ட்' போன்ற உலக அளவில் மதிக்கப் படும் பத்திரிகைகள் இவற்றையெல்லாம் பதிவு செய்திருக் கின்றன. இருந்தும்கூட மனித உரிமை ஆணையத்தில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்கிறது. இந்த இனப்பழியிலிருந்து - இலங்கை யின்பின் நின்ற பாவத்திலிருந்து இந்தியா தப்பித்துக் கொள்ள முடியாது. வரலாற்றின்- மனசாட்சியின் முன்னால் என்றேனும் ஒருநாள் பதில் சொல்லியே தீர வேண்டும்.''
பிரபாகரன் மரணம் குறித்து இருவேறு கருத்துகள் இருந்துவரும் நிலையில், அயல் ஈழம் அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஈழத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் தற்போது என்ன செய்வது என்று குழம்பிக் கிடக் கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
"" "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற பழைய சலித்துப் போன உண்மையைத்தான் நானும் இப்போது சொல்ல விரும்புகிறேன். உலகம் முழுவ தும் தமிழர்கள் ஒரு கருத்தில் பிளவுபடாமல் இணைந்து நின்றார்கள் என்றால், உலகம் நமது கோரிக்கையைக் கேட்டுத் தான் ஆகவேண்டும்- இது ஒன்று. நாம் இனி இரண்டு திசை களில் பயணப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை ஆயுதப் போராட்டம் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்குத் துணையாக அரசியல் பின்னால் நின்றது. இப்போது அரசியல் போராட்டம் முதன்மை பெறும். ஆயுதப் போராட்டம் முடிய வில்லை. அது கட்டாயம் தொடர்ந்து நடக்கும். நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒரு கொரில்லா யுத்தம் மையம் கொள்ளும்.
இந்தப் போரினால் பாதிக் கப்படாத உங்களுக்கும் எனக் குமே இவ்வளவு வேகம் இருக்கும் என்றால், நேரடியான பாதிப்பைச் சந்தித்த அந்த மக்களுக்கு எத்தனை கோபம் இருக்கும். எனவே கொரில்லா யுத்தம் நிச்சயம் நடக்கும். ஆனால் அதனைவிட மேலாக உலக அளவில் ஒரு அரசியலைக் கட்டி எழுப்ப வேண்டும். தமிழகத்தில் ஈழ ஆதரவு அரசியல் என்பது, அனைத் திந்திய மக்களுக்கும் உண்மைகளை எடுத்துச் சொல்வது, ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் ஈழம் பற்றி கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம். முல்லைத்தீவில் நடந்த அந்த உச்சபட்சக் கொடுமைதான் தமிழீழத்துக்கான தார்மீக நியாயப்பாடாக இருக்கும் என்பதுதான் எனது கருத்து. தொடர்ந்து நாம் பணியாற்றி னால் 2020-க்குள்ளாக தமிழ் ஈழம் வரும் என்பது எனது நம்பிக்கை!''
உங்களின் கட்டுரைகளில் "போரியல்' பற்றியெல்லாம் பேசுகிறீர்கள்! உங்கள் வாசிப் புத்தளம் பற்றிச் சொல்லுங் கள்?
""நான் குருத்துவப் படிப்பு படித்திருந்தாலும்கூட அதற்கு அப்பால், அரசியல் விஞ்ஞானத் தில் முதுகலைப் பட்டம் பெற்றி ருக்கிறேன். கேந்திரவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கி றேன். எனவே என்னுடைய வாசிப்பு என்பது ராணுவ வரலாறு, அரசியல் வரலாறு, வியூகம் வகுத்தல் என்பதில் அதிக ஆர்வமுடையதாக இருக்கி றது. மற்றபடி தீவிரமான இலக்கிய வாசிப்பு என்பது எனக்கில்லை. கல்லூரிப் பாடமாக படித்த துணைப்பாட நூல்கள் மூலம் தான் தமிழ் கற்றேன். அந்தக் காலகட்டத்தில், பாரதி, புதுமைப் பித்தன், ஜெயகாந்தனை வாசித்த தோடு சரி. பிறகு என்னை வெகு வாகக் கவர்ந்து கொண்டவை கட்டுரைகள்தான். காரணம், கட்டுரைகள் மட்டுமே நேரடி யாக- காத்திரமாக சமூக மாற்றத் துக்காகப் பேசுகின்றன.''
நேர்காணல் :ஆர்.சி. ஜெயந்தன்.
No comments:
Post a Comment