தூக்கமில்லாத இரவுகளுடன் கரைகின்றன தமிழர்கள் பெரும்பாலோரினது இரவுப் பொழுதுகள். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் , இழப்புக்களை தாங்கிக்கொள்ள இயலாமல் விம்மிவெதும்பும் கனத்த இதயங்களுடன், விழியோரத்தில் கண்ணீருடன் கேள்விக் குறிகளாய் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புக்கள். இறுதியாக நடந்துமுடிந்த போரில் தமிழினம் அனுபவித்த வலிகளை வார்த்தைகளினால் விபரிக்க முடியாது. சர்வதேசம் முழுவதினாலும் முற்றுமுழுதாக கைவிடப்பட்ட நிலையில், சிங்கள கொலைவெறி அரசினாலும் பல வல்லாதிக்க வல்லரசுகளின் சுயநலத் தேவைகளுக்கான அவற்றின் கூட்டுதவியினாலும் ஈழத்தமிழினம் அழித்து சின்னாபின்னமாக்கப்பட்டது. யாருமற்ற நிலையில் அநாதரவாய் அந்தரித்து நின்றது ஈழம். முப்பது வருட காலமாய் தனியே நின்று போராடிய தமிழர்படையை வெல்ல முடியாமல் திணறிய சிங்களம் இப்போது பல வல்லரசுகளின் பூரண ஆதரவோடு ஒரு இன அழிப்பு யுத்தத்தை நடத்தி முடித்துவிட்டு புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டோம் என எக்காளமிடுகிறது. சர்வதேசங்களின் ஆசீர்வாதத்தோடு சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பு மற்றும் இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈழத் தமிழினம் இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல. வீடிழந்து, நிலமிழந்து, சேர்த்துவைத்த செல்வங்கள் அனைத்தையும் இழந்து உயிரைத்தன்னும் காப்பாற்றிக் கொள்ளலாமென எண்ணி ஏதிலிகளாய் அகதிகளாய் உணவின்றி, நீரின்றி அலைந்துதிரிந்து... கடைசியில் உயிரையும் உறவுகளையும் பறிகொடுத்து கைகால்களை இழந்து ஊனமாகி இன்னும் கொலைக்கூடாரங்களுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் பேரவலத்துடன் இன்றும் தமிழினம். தமது சுய உரிமைக்காகப் போராடிய தமிழினம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை சிதைத்து அதை இல்லாமற் செய்வதற்கு எத்தனை நாடுகள் போட்டி போட்டு முண்டியடித்தன என்பதை கண்முன்னே கண்டோம். முப்பது வருடத்துக்கும் மேலாக எத்தனையோ சோதனைகளையும் தடைகளையும் தாண்டி வளர்ச்சிபெற்று வந்த தமிழர் போராட்டத்தினை எப்படியாயினும் சிதைத்து விட வேண்டுமென்பதில் சிங்களத்தினைவிட சர்வதேசமே அதீத அக்கறை காட்டியதையும் காண முடிந்தது. பொதுவாக உலகின் விடுதலைப் போராட்டங்களை பார்க்கும் கோணத்திலிருந்து விலகி ஈழத்தமிழரின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை "பயங்கரவாதம்" எனப் பொய்முத்திரை குத்திச் சிறுமைப்படுத்தியது சர்வதேசம். இதற்கு சரியான உதாரணமாக, 2002ற்கு பிற்பாடான சமாதான பேச்சுவார்த்தைக் காலத்தில் புலிகளின் மீதான தடை இலங்கையில் அகற்றப்பட்டிருந்த போதும் , சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளை ஐரோப்பிய நாடுகள்சில தடைசெய்ததனைக் குறிப்பிடலாம். இவைமட்டுமல்லாமல் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கெதிராக வெளிப்படையாகவும், திரைமறைவிலும் பற்பல காலகட்டங்களில் சர்வதேசம் செய்த பாதகச் செயல்கள் பலவுண்டு. இன்றுவரைக்கும், ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான குரல் கொடுத்ததாக எந்தவொரு சர்வதேச நாடுமே இல்லையென்பது ஈழத்தமிழரின் துர்ப்பாக்கியமே. ஈழ விடுதலைப் போராட்டமானது தமிழர்களின் தன்மான உணர்வு, விடுதலையுணர்வு, தியாக உணர்வு, மனோபலமிக்க போராட்ட உணர்வு என அவர்களின் உன்னத உணர்வுகளினாலேயே எல்லாவிதமான சோதனைகளையும் ,சவால்களையும் சமாளித்துத் தாண்டி வந்திருந்தது. சோதனைகளையும் சாதனைகளாக மாற்றினர். சவால்களை எதிரிக்கே திருப்பிக் கொடுத்தனர். ஆனால் இன்று ஒரு இக்கட்டான நிலைமையை ஈழப் போராட்டம் எதிர்கொண்டிருக்கும் நிலைமையில் அனைத்துத் தமிழர்கள் மத்தியிலும் ஒரு குழப்பமான மனநிலையைக் காணக் கூடியதாகவுள்ளது. "எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் , இனிமேல் என்ன?" என்பது தமிழர்கள் எல்லோர் மன ஆழத்திலும் எழும் கேள்வி. உண்மைதான் ... நிறையவே இழந்து விட்டோம். ஆனால் எல்லாவற்றையும் அல்ல.எங்கள் உணர்வுகளை நாங்கள் இன்னும் இழக்கவில்லை. உங்களை நீங்களே ஆத்மார்த்தமாக கேட்டுப் பாருங்கள்! "நாம் எமது தன்மான உணர்வையோ, விடுதலையுணர்வையோ, இன உணர்வையோ அல்லது போராட்ட உணர்வையோ சிறிதளவேனும் இழந்து விட்டோமா?" பதில் என்ன.....? இழப்புக்களின் வலிகள் உங்கள் உணர்வுகளை அதிகமாக்கியிருக்கும். முன்பைவிட பலமடங்கு அதிகமாக உங்கள் உணர்வு தற்பொழுது உருப்பெற்றிருக்கும். நமது போராட்டத்தின் கடந்த கால வரலாறுகளில் எங்கெல்லாம் நாம் விழுந்தோமோ , அங்கெல்லாம் வீறு கொண்டெழுந்திருந்தோம். இப்போதும் வீறுகொண்டெழத் துடிக்கின்றோம். ஆனால் போராட்டக் களம் குழப்பங்களைத் தவிர மீதம் வெறுமையாகவே இருக்கின்றது. இதனால்தான் பலர் மனமொடிந்து இருக்கின்றார்கள் என்பதும் உண்மை. புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த தொடர் போராட்டங்களும் நிறைவுசெய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்டப் போராட்டங்களுக்காக காத்திருக்கின்றார்கள் வீறுகொண்ட உணர்வுகளோடு தன்மானத் தமிழர்கள். இந்நிலையில் அவர்கள் கேட்பதெல்லாம் இனிவரும் களம், அது அகிம்சை வழியோ... அரசியல் வழியோ... போராட்ட வழியோ... எதுவாக அமைந்தாலும் அதை அமைத்துக் கொடுப்பவர்கள் விலைபோகாத விடுதலையுணர்வுடன், இதயச்சுத்தியுடன் இருக்க வேண்டுமென்பதே. மனரீதியில் குழப்பங்களை ஏற்படுத்தும் விடயங்களைத் தவிர்த்து காலத்திற்கேற்ப ஈழ உணர்வாளர்களின் போராட்ட உணர்வுகளுக்கு வழிசமைத்துக் கொடுக்கக் கூடியதாக அவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதும், உணர்வுகளோடு காத்திருக்கும் மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதனை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம். அத்தோடு எதிர்வரும் போராட்டக் களத்தில் இளையோரினதும், மாணவர்களினதும் பங்களிப்பும் பெறப்படவேண்டியதும் மிகமிக அவசியம்.ஏனெனில் இவர்களின் போராட்டங்கள் வீரியமிக்கவை. இயல்பாக எழும் உணர்வுகளோடு வேகமாய்ச் செயற்படும் வல்லமை மிக்கவர்கள் இந்த மாணவர்களும்,இளையோர்களும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது போராட்டத்தினை பன்முகப் படுத்தலாம். தற்போதைய நிலைமையில் தமிழருக்கான போராட்டக்களம் எதுவாக அமைய வேண்டும் என்பதுவும் அப்போராட்டங்கள் எப்படியான முறைமைகளில் வழிநடத்தப்பட வேண்டும் என்பதனையும் பொறுத்தவரையில் மிகப்பெரியளவில் வாதவிவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அவ்வாறான தளம்பல் நிலையிலிருந்து தெளிந்து கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஓரணியில் தமிழர்கள் அனைவரும் திரளவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம் என்பதனை ஒவ்வொரு உணர்வுமிக்க தமிழனும் புரிந்து செயற்படவேண்டும். தமிழர்களின் விடுதலையுணர்வை,எழுச்சியுணர்வை அடக்குவதிலேயே இப்போது சிங்களம் குறியாய் இருக்கின்றது. அதற்கான காய்நகர்த்தல்களில் அது இறங்கிவிட்டது. இலங்கையில் உள்ள தமிழர்களின் இன உணர்வுகளை அடக்குமுறைகளினால் அடக்கிவிடலாம் என நம்பும் சிங்களம், புலம்பெயர்தேச தமிழ்மக்களின் எழுச்சிகளை அடக்குவதற்கு பல்வேறு சதிவேலைகளை முடுக்கிவிட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் புலம்பெயர் உறவுகள் மிக அவதானமாக இருக்கவேண்டும். எதிரியின் சதிகளை முறியடிப்போம். ஒருபோதும் நாம் நமது உணர்வுகளை எதற்காகவும்,எச்சந்தர்ப்பத்திலும் இழக்கப் போவதில்லை என்பதனை செயலில் காட்டுவோம்! தமிழர்களின் விடுதலைப் போராட்ட உணர்வுகளை யாராலும் எவ்விதத்திலும் அழிக்க முடியாது என சிங்களத்துக்கும் அதனோடு துணைநின்ற சர்வதேசத்திற்கும் எடுத்தியம்புவோம்! ஈழத்தமிழ் உணர்வுகளோடு... நம் மாவீரர்களின் கனவுகளைச் சுமந்தபடி... நமது தாயக விடியலுக்காகப் போராடுவோம்! நம் உணர்வுகளால் உலகை உறுத்துவோம்! அதனை நம் பக்கம் மாற்றுவோம்! ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் என்பது இந்த உலகத்தின் வரலாற்றுப் பதிவுகளில் ஒன்று. எழுதப்படப்போகும் அவ்வரலாற்றுப் பதிவுகளில் ஈழத்தமிழரின் நீண்டகால போராட்டம் வீணாகிப்போனது என்று பதியப்படாமல் வெற்றிபடைத்து தனிநாடு கண்டு சரித்திரம் படைத்தது என்றே பதியப்படவேண்டும். எமது எதிர்கால வரலாறு எமது உணர்வுகளில்....... உரிமை இழந்தோம்.. உடைமையும் இழந்தோம்...! - உணர்வை இழக்கலாமா??? உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா??? விடியலுக்கில்லை தூரம்... உன் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்??? உன் நெஞ்சம் முழுவதும் வீரம்... இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்??? [ஊமை விழிகள்] "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" -பருத்தியன்-
|
No comments:
Post a Comment