Thursday, July 2, 2009

இலங்கை: முகாமில் உள்ள உறவினர்களை பார்க்க முயன்ற 2 தமிழர்கள் சுட்டு கொலை

 

உறவினர்களைப் பார்க்க இலங்கை ராணுவம் அனுமதிக்காததால் முள் வேலியைத் தாண்டிச் சென்று பார்ப்பதற்காக பாதை அமைக்க முயன்ற இரு தமிழர்களை ராணுவத்தினர் மிருகத்தனமாக சுட்டுக் கொன்று விட்டனர்.

இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கான தமிழர்களை ஆடு, மாடுகளைப் போல அடைத்து வைத்துள்ளது இலங்கை அரசு. இதனால் போர் முடிந்த பிறகும் கூட ஊர்களுக்குத் திரும்பி அமைதியான வாழ்க்கை வாழ முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர் ஈழத் தமிழர்கள்.

மிகப் பெரிய திறந்த வெளி சிறைச்சாலை போலவே உள்ளது இந்த முகாம்கள். முள் வேலிகளால் இந்த முகாம்கள் சூழப்பட்டுள்ளன. ராணுவத்தினர் பாதுகாப்புக்கு மத்தியில் அடிமைகளைப் போல கிடக்கிறார்கள் தமிழ் மக்கள்.

குடும்பம் குடும்பமாக தங்க வைக்கப்படாமல் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் தமிழ் மக்கள்.

இந்த நிலையில் உறவினர்களைப் பார்க்க முடியாததால், முள் வேலியைத் தாண்டிச் செல்ல பாதை அமைத்ததற்காக 2 தமிழர்களை குருவி சுடுவது போல கொடூரமாகக் கொன்று குவித்துள்ளது ராணுவம்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராமநாதன் முகாமுக்கும், அனந்தக்குமாரசாமி முகாமுக்கும் இடையில் முள் வேலி வைத்து பிரித்துள்ளனர்,.

இரண்டு முகாம்களிலும் இருப்பவர்கள் மற்றைய முகாமில் உள்ள தமது குடும்பத்தவர்களைச் சந்திப்பதற்காக இந்த முட்கம்பி வேலிகளுக்கு இடையில் பாதை ஒன்றை அமைத்துப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.

இதைப் பார்த்த ராணுவம் முகாம்களில் உள்ளவர்களை எச்சரித்து பாதையையும் மூடி விட்டனர். ஆனால் அப்படியும் தமிழ் மக்கள் பாதையை திறந்து போய் வந்ததால், சிமென்ட் தூண்களை வைத்து இறுக்கமாக அதை அடைத்து விட்டனர்.

ஆனால் அதையும் தகர்த்து பாதை அமைத்து தமிழ் மக்கள் சென்று வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராணுவம், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்தப் பாதை வழியாக செல்ல முயன்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து அநியாயமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை ராணுவம் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டது.

உறவினர்களைப் பார்ப்பதற்காக பாதையைப் பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு அப்பாவிகளை ராணுவம் இப்படி மிருகத்தனமாக கொன்று விட்டதால் இரு முகாம்களிலும் தமிழ் மக்கள் மிகுந்த அச்சத்தில் காணப்படுகின்றனர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails