Saturday, July 18, 2009

'சீனத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த கல் எறிவதாக சொன்னவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?'

     
  
 

altசீன- சிங்கள உறவு வளருவதால் நாம் வருத்தம் கொள்ளவில்லை. ஆனால், சிங்களத்தில் சீனத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தத்தான் ஈழத்திற்கு எதிராக நாங்களும் கல் எறிகிறோம் என்று சொன்னவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என பத்திரிக்கையாளர் சோலை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

குமுதம் ரிப்போட்டர் இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை..

ஈழம் இன்றைக்கு மயான பூமியாகக் காட்சி அளிக்கிறது. அந்த கோரக் காட்சிகளைக் காண ஐ.நா. அமைப்புக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்இ சர்வதேசப் பத்திரிகையாளர்கள் எவருமே அனுமதிக்கப்படவில்லை. அங்கே ஆந்தைகளும் கோட்டான்களும் கூடுகட்டுகின்றன.

அந்த செவிவழிச் செய்திகளை வெளியிட்ட சிங்களப் பத்திரிகையாளர்கள்கூட சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் இன்றைக்கும் விலை வைத்து தேடப்படுகிறார்கள்.

குண்டுவீச்சுக் கொடுமைகளால் எப்படி முல்லைத்தீவு நகரமே இடிபாடுகளாகக் காட்சி அளிக்கிறது என்பதற்குச் சாட்சியாக ஒரே ஒரு புகைப்படம் மட்டும் வெளி உலகை எட்டிப் பார்த்தது. அந்தப் படமும் வானில் பறந்து போகும்போது எடுக்கப்பட்ட மரண சாட்சியாகும்.

கூண்டுக்குள் சிக்கிய சிறைப் பறவைகளாக லட்சோப லட்சம் ஈழ மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இரவு நேரங்களில் சிங்கள ராணுவக் கழுகுகள் அங்கே சுதந்திரமாகப் பறந்து வருகின்றன. இளம் ஈழத்து தமிழச்சிகளைக் கொத்திக் கொண்டு போகின்றன. அவர்களில் திரும்பாமலே காணாமல் போனவர்களும் உண்டு. ரத்தத்துளிகளோடு நடைப் பிணமாகத் திரும்பியவர்களும் உண்டு.

சொந்த வீடு வாசல்கள் இருந்தும் முகாம்களில் முடக்கப்பட்ட இளைஞர்களைத் தரம் பிரிக்கிறார்கள். இவர்கள் விடுதலைப் புலிகளோ என்று சந்தேகம் எழுந்தால் போதும். அடுத்த சில தினங்களில் அவர்கள் காணாமல் போகிறார்கள்.

ஈழத் தமிழர்களை முன்னர் சுட்டுப் புதைத்தனர். இப்போது புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டி எடுத்து இரவோடு இரவாக எரியூட்டி சாம்பலாக்குகிறார்கள். இனி அவர்களெல்லாம் காணாமல் போனவர்களின் பட்டியலில் கணக்குச் சொல்லப்படுவார்கள்.

இப்படிப் பல்வேறு வழிகளிலும் இன்றைக்கு ஈழத்தமிழ் இனம் அழிக்கப்படலாம். ஆனால், அந்த ஈழம் சபிக்கப்பட்ட பூமி அல்ல. ஒரு நாள் வேழமாக எழும். இட்லர் விரும்பியபடி யூத இனம் அழிந்தா விட்டது? இல்லை.

ஓர் இனத்தை அழிக்க சிங்கள இனவாதம் தொடுத்த போர் ஓய்ந்து விட்டது. ஆனால், அதன் அவலங்களும் ஓலங்களும் சர்வதேச சமுதாயத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

என்ன ஆச்சரியம்? இந்திய அரசின் இதயத்தில் கூட ஈரம் சுரந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்ற ஈழத் தமிழர்களை உடனடியாக அவர்களுடைய இல்லங்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய அரசு கோரியிருக்கிறது. நல்லது.

இன்றைக்கு முகாம்களில் கால்நடைகளைப் போல் அடைக்கப்பட்ட மக்களில் 24,000 பேருக்கு அம்மை கண்டிருக்கிறது. ஐயாயிரம் பேருக்கு மஞ்சள் காமாலை வந்திருக்கிறது. போதிய மருத்துவ வசதிகள் இல்லை. நோய்களாலும் எஞ்சிய தமிழன் இறப்பைத் தழுவட்டும் என்று சிங்கள இனவாதம் எண்ணக் கூடும்.

கண்ணிவெடிகளை அகற்றிய பின்னர்தான் சூழ்நிலைக் கைதிகளை சொந்த ஊர்களுக்கு அனுப்ப முடியும் என்று சிங்கள அரசு சொல்கிறது. அந்தக் கண்ணிவெடிகளை ஒரே வாரத்தில் அகற்றி விட முடியும்.

ஈழத்தமிழ் உணர்வுள்ளவனுக்கு எதிர்காலம் இல்லை என்று முகாம்களிலேயே தீர்மானிக்கிறார்கள். அந்தச் சித்திரபுத்திரன் வேலை நடைபெறுகிறது. எனவே, முகாம்களில் அடைபட்ட தமிழர்கள் சொந்த மண்ணிற்குத் திரும்ப வேண்டும். அழுவதற்குக் கூட அனுமதியில்லாத அவர்கள் பிறந்த பூமியைப் பார்த்தாவது பெருமூச்சு விடவேண்டும். ஏதோ ஈழப் பரப்பைப் பரம்படித்து செம்மைப்படுத்தப் போவதாக இந்திய அரசு கூறுகிறது. அதனை அனுபவிக்க எஞ்சிய தமிழர்களாவது இல்லம் திரும்ப வேண்டாமா?

ஈழத்தை இப்போதைக்கு வெற்றி கொள்ள சீனத்தையும் பாகிஸ்தானையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட சிங்கள அரசு, இந்தியாவையும் பயன்படுத்திக் கொண்டது. ஆனால், சோதனையான நேரங்களில் இந்தியாவை நோக்கித்தான் குரல் கொடுக்க முடியும். திருமதி பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் சிங்கள அரசின் சிம்மாசனம் ஆட்டம் கண்டது. அப்போதும் இந்தியாவின் உதவியைத்தான் நாடியது.

ஆனால், இனி இந்தியாவின் தோழமைக்கு சிங்கள அரசு எந்த அளவிற்கு நேசக்கரம் நீட்டும் என்பதனை இனிதான் காணப் போகிறோம். ஈழத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற சிங்கள ராணுவம் உடனடியாகத் தங்கள் முகாம்களுக்குத் திரும்ப வேண்டும் என்று இந்திய அரசு கோரியிருக்கிறது.

அந்தக் காரியம் நடைபெற்றாலே ஈழ மக்கள் ஓரளவிற்கு நிம்மதி பெறுவார்கள். ஏனெனில், இன்றைக்கு ஈழம் முழுக்க புற்றுநோய்க் கட்டிகளாக ராணுவ முகாம்கள் முளைத்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே சிவாலயங்களையும் தேவாலயங்களையும் சிங்கள அரசு ராணுவ முகாம்களாக மாற்றி விட்டது. இன்றுவரை அந்தத் தெய்வீகத் திருத்தலங்கள் குருதிச் சேற்றில்தான் குளித்துக் கொண்டிருக்கின்றன.

முகாம்களில் அடைபட்டிருக்கின்ற ஈழத் தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டும். சிங்கள ராணுவம் தமது முகாம்களுக்குத் திரும்ப வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கைகளை ஏற்றாலே சிங்கள அரசு இந்திய நட்புறவு பற்றி சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது என்று அர்த்தம்.

ஈழப் பிரதேசத்தில் இன்றுவரை இயல்பு நிலை திரும்பாததற்கு என்ன காரணம்? சிங்கள ராணுவத்தினரின் தங்குதடையற்ற நடமாட்டம்தான். அவர்களை எவராலும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனை சிங்கள அரசு அனுமதிக்கிறது. காரணம், தமிழனுக்கு என்று இனி தனி அடையாளம் இருக்கக் கூடாது என்று கருதுகிறது.

ஈழம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்து விட்டது. இடிந்து போன வீடுகளையும் எரிந்து போன வனங்களையும்தான் காண முடிகிறது. எனவே, இந்தப் பிரதேசத்தில் கூட இனி ராணுவ நடமாட்டம் தேவைதானா?

கண்ணிவெடிகளைக் காரணம் காட்டினால், அதனை அகற்றும் பணியை ஒரே வாரத்தில் நாங்களே செய்து முடிக்க முடியும் என்றும் இந்தியா தெரிவித்திருப்பதாக அறிகிறோம்.

இலங்கை அதிபரின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் பாசில் ராஜபக்சவும், ராணுவத்துறை அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவும் அண்மையில் டெல்லி வந்தனர். உண்மையில் அவர்களை அழைத்ததே இந்திய அரசுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.

அவர்கள் இருவருமே இலங்கை அதிபரின் உடன் பிறப்புக்கள் மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்தின் அச்சாணியாகச் செயல்படுகிறவர்கள். எனவே, அவர்களை அழைத்து அடுத்து ஈழத்தில் என்ன நடைபெற வேண்டும் என்ற தமது நிலையை இந்தியா தெரிவித்திருக்கிறது. அதனை எச்சரிக்கையாகவும் கூறியிருக்கலாம். இந்தப் பணிகளில் உங்களுக்கு உதவத் தயார் என்று வேண்டுகோளாகவும் தெரிவித்திருக்கலாம்.

ஈழத்தின் மறுசீரமைப்பிற்கு எல்லா வழிகளிலும் இந்தியா உதவி செய்யும். அதே சமயத்தில் கல்வி, வேலை வாய்ப்பு உள்பட அனைத்து உரிமைகளும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சிங்களப் பிரதிநிதிகளிடம் இந்திய அரசு எடுத்துக் கூறியிருக்கிறது.

ஈழமே தங்கள் தாயகம் என்று போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம், இப்போதைக்கு அழிக்கப்பட்டதாகத் தோன்றலாம். ஆனால், என்னென்ன காரணங்களுக்காக ஈழ விடுதலை இயக்கம் பிறந்ததோ அந்தக் காரணங்கள் அனைத்தும் பசுமையாக இருக்கின்றன என்பதனையும் சிங்கள அதிபரின் தூதர்களிடம் இந்தியா எடுத்துக் கூறியிருப்பதாகவும் அறிகிறோம்.

அந்தக் காரணங்களுக்கு சிங்கள இனவாத அரசு தீர்வு காண வேண்டும். ஆனால், அத்தகைய தீர்வுகளை சிங்கள இனவெறியர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறிதான்.

"கச்சத்தீவில் ராணுவ தளம் அமைக்க மாட்டோம். சீனம் அங்கே ராணுவ தளம் அமைக்கவும் அனுமதிக்கமாட்டோம்" என்று சிங்கள அதிபரின் தூதர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமைகள் காக்கப்படவேண்டும். அதற்கான உறுதிமொழியை சிங்கள அரசு இதுவரை தரவில்லை.

எல்லை கடந்து வருகின்ற சிங்கள மீனவர்களை இந்தியக் கடற்படையினர் இதுவரை சுட்டுப் பொசுக்கியதில்லை. அவர்களுடைய வலைகளை அறுத்தெறிந்ததில்லை. அவர்கள் பிடித்த மீன்களை அள்ளிக் கொண்டதில்லை. சிறைகளில் சித்திரவதை செய்ததில்லை.

ஆனால், விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி இதுவரை சிங்கள ராணுவம் தமிழக மீனவர்களை வேட்டையாடி வந்தது. இனி புலிகள் என்று காரணம் கூற முடியாது. ஆனால், அத்தகைய கொடுமைகள் இன்றுவரை நீடிக்கவே செய்கின்றன.

இன்னும் ஆறுமாத காலத்தில் ஈழத்தில் வசந்தம் பிறக்கும். முல்லைத்தீவு மணம் பரப்பும் என்று சிங்கள அதிபரின் தூதர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள். ஆறு மாத காலம் என்பது காலைப் பனித்துளியாய் விரைவில் கரைந்து போகும். அதற்குள் நடக்கும் அதிசயத்தைக் காண நாமும் தயாராக இருப்போம்.

ஆனால், இந்தக் கட்டுரையை முடிக்கும்போது மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் உணர்ச்சிக்குரல் கேட்கிறது. வரவேற்கிறோம்.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் மறுவாழ்விற்கு சிங்கள அரசு இதுவரை எந்தப் பணியும் தொடங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். சிங்கள அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அதிருப்தியை அறிவித்திருக்கிறார். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற உலகத் தொண்டு நிறுவனங்கள் ஈழப் பகுதியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்கிறார். ஈழத்தமிழர்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ள முகாம்களை சர்வதேசப் பத்திரிகையாளர்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்கிறார்.

ஈழத்தமிழர்களின் மறுவாழ்விற்கு உதவியாக இந்திய அரசு 500 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது என்றாலும், ஈழத்தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களையே இலங்கை அரசு வகுக்கவில்லை என்கிறார்.

இதனை இந்திய அரசின் முதல் குற்றப்பத்திரிகையாகக் கருதலாமா? சிங்கள அரசு திசை மாறுகிறது என்பதனைத்தான் சிதம்பரத்தின் அடுக்கடுக்கான அறிவிப்புக்கள் உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாமா?

இந்திய அரசு தெரிவித்த எந்த யோசனையையும் இனி சிங்கள அரசு செயல்படுத்தாது. அதற்கு மாறாக, ஈழ மக்களின் சொந்த பூமியை சீனத்திற்குச் சீதனமாகக் கொடுக்கப் போகிறது.

ஆம். முல்லைத்தீவுப் பகுதியின் நிலங்களை முழுமையாகக் கைப்பற்றி, அதனை சீனத்திற்கு அளிக்கிறது. அங்கே பொருளாதார மண்டலங்களை சீனம் அமைக்குமாம்.

அங்கு மட்டுமல்ல திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய ஈழப்பகுதிகளிலும் தமிழர்கள் நிலங்களைக் கைப்பற்றி பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுமாம்.

ஆனால், சிங்களவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களில் பொருளாதார மண்டலங்கள் அமையாதாம். இனி ஈழத்தமிழன் சொந்த பூமிக்காக சிங்கள அரசிடம் பிச்சை எடுக்க வேண்டும். இல்லையேல், இன்னொரு போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். சிங்கள அரசும் இன்னும் பௌத்த குண்டுகளை பத்திரமாக வைத்திருக்கிறது.

சென்ற வாரத்தில் வந்த சில செய்திகளை மட்டும் டெல்லிக்கு நினைவுபடுத்துகிறோம்.

சிங்களப் பரப்பில் சீனம் புதிய துறைமுகம் கட்டித் தருகிறது. மின் உற்பத்தியைப் பெருக்க சீனத்தோடு புதிதாக உடன்பாடு கண்டிருக்கிறது. சீன முதலீடுகளை வெகுவாகக் கவருவதற்கு சிங்கள வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் சென்று இருக்கிறார். இரு நாடுகளின் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வழி வகைகள் காணப்படும்.

பெருமளவில் முதலீடு செய்ய வருகின்ற சீனக் கம்பெனிகள் குறைந்தபட்சம் 33 ஆண்டுகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

இப்படி சீன- சிங்கள உறவு வளருவதால் நாம் வருத்தம் கொள்ளவில்லை. ஆனால், சிங்களத்தில் சீனத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தத்தான் ஈழத்திற்கு எதிராக நாங்களும் கல்லெறிகிறோம் என்று சொன்னவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails