'அரசியல் இயக்கம் ஆரம்பம்..'' |
தேர்தல் காலம் வரை உரத்து முழங்கிய ஈழ ஆதரவுக் குரல்கள் இப்போது எங்கே போய் விட்டன என்பது தெரியவில்லை. அதேநேரம் ஈழத்தின் கோர வீழ்ச்சி நிஜமான தமிழுணர்வுக் குரல்களையும் விம்மியடங்க வைத்து விட்டது. இதற்கு நடுவில், தொடர்ந்து ஈழ விடிவுக்காக குரல் உயர்த்திக் கொண்டிருக் கிற இயக்குநர் சீமான், வருகிற 18-ம் தேதி ஊர்வலம், பொதுக்கூட்டம் என நடத்தி மதுரையை கலங்கடிக்கத் தயாராகி விட்டார். 'அறுத்தெறிவோம் வாரீர்...' என உணர்வாளர் களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் சீமான், அடுத்தகட்டமாக அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் அனல் கிளம்பி இருக்கும் நிலையில் நாம் அவரை சந்தித்தோம்.
|
''பேரணி, பொதுக்கூட்டம் என திடீர் படை திரட்டல்கள் ஏன்?''
''செழிப்புக்கும் சிறப்புக்கும் குறைவில்லா மண்ணைக் கட்டியாண்ட ஈழத்து தமிழினம், இன்றைக்கு முள் வேலிக்குள் முடக்கப்பட்டிருக்கிறது. பாலுக்கும் கஞ்சிக்கும் ஏங்கித் தவிக்கும் நாதியற்ற இனமாக ஈழச் சொந்தம் வாடிக் கிடக்கிறது.
|
முள்கம்பி முகாம்களில் அம்மை நோய்க்கு ஆளாகி, 24 ஆயிரம் தமிழ் மக்கள் இறந்து போயிருக்கிறார்கள். இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கையில் மழைக்காலம் தொடங்கி விடும். அதற்காகத்தான் சிங்கள அரசு காத்திருக்கிறது. மலஜலம், வியாதி என தமிழினம் புழுபுழுத்துச் சாக வேண்டுமென சண்டாள அரசு திட்டமிட்டுக் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையிலேயே வாராவாரம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை விசாரணை என்கிற பெயரில் எங்கேயோ இழுத்துச் சென்று, சவமாக்கி வீசுகிற கொடுமையும் தொடர்ந்து நடக்கிறது. யூத இனம்கூட இத்தகைய கொடிய சித்ரவதைகளுக்கு ஆளானது கிடையாது. இதயத்தை அறுத்து வீசிய கணக்காக சிங்களப் பேரினவாதத்தோடு பாசம் பாராட்டும் உலக சமூகத்தை நம்பி, இனி பலன் இல்லை. உலகமே வேடிக்கை பார்க்க நம் மடியில் இடி விழுந்து விட்டது. நாமே கத்துவோம்... நாமே கதறுவோம்... சாதி, மதக் கூறுகளை குழியில் போட்டுப் புதைத்து விட்டு, ஆங்கிலேயனை விரட்ட வலிமையான தமிழ்ச்சாதியாக திரண்டோமே... அதேபோல திரளுவோம். முள்வேலியை அறுத்தெறிய முழுமூச்சில் போராடுவோம். அதற் காகத்தான் 'நாம் தமிழர்' என்கிற பெயரில் மதுரையில் அணிதிரளப் போகிறோம். சங்கம் வளர்த்த மதுரையில் சிங்கத் திமிரை அடக்க உறுதியெடுக்கப்போகிறோம்...''
''தேர்தலுக்கு முன் ஈழ உணர்வாளர்கள் தொண்டை கிழிய முழங்கிய வாதம் உரிய பலனைக் கொடுக்காமல் போய் விட்டதே...?''
''ஏன் கொடுக்கவில்லை... அண்ணன் தங்கபாலு, ஈரோடு இளங்கோவன், ராஜபக்ஷேயின் நண்பரானமணிசங்கர் அய்யர் போன்றவர்களின் தோல்வியை ஈழ விவகாரம் தானே தீர்மானித்தது. இன்னும் பெரிய அளவில் பொங்கியெழுந்த ஈழ உணர்வை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் சாதி, மத பிடிப்புகளைக் காட்டிலும் கட்சிப் பிடிப்பில் தமிழன் கட்டுண்டு கிடக்கிறான். காவிரியிலிருந்து சொட்டுத் தண்ணீர்கூட விட மாட்டோம் என கர்நாடகத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுசேர்ந்து முழங்குகிறார்கள். ஆனால், இங்கே மாற்றுக் கட்சிக்காரன் வீட்டில் இழவு விழுந்தால்கூட அடுத்த கட்சிக்காரன் எட்டிப் பார்ப்ப தில்லை. கட்சிவெறி விட்டு நாம் கைகோத்திருந்தால், ஈழத்துக்கு எதிரான அத்தனை கட்சிகளும் நடந்து முடிந்த தேர்தலோடு இல்லாமல் போயிருக்கும்.''
''தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நேர்ந்ததை நினைத்து இப்போ தாவது வருத்தப்படுகிறீர்களா?''
''களத்தில் நிற்கிறபோது எதிரிகள் சூழ்ந்து விட்டால், கைக்கு கிடைக்கிற ஆயுதத்தை எடுத்துத்தானே சுழற்றச் செய்வோம். அதுபோல, காங்கிரஸை வீழ்த்த எனக்குக் கிடைத்த கருவிதான் அ.தி.மு.க. 11 தொகுதிகளில் காங்கிரஸை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிட்டது. அதனால், அந்தத் தொகுதிகளில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தேன். நான் இதுநாள்வரை ஜெய லலிதாவை நேரில்கூட பார்த்ததில்லை. ஆனாலும், காங்கிரஸை வீழ்த்த வேண்டிய கட்டாயம் இருந்ததால் மேடைதோறும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரிக்கக் கோரினேன். இதற்காக நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? தலையைச் சுற்றி ஆயுதங்கள் வந்தபோது தடி எடுத்ததில் தவறே இல்லை.''
''தேர்தல் நேரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கொந்தளித்ததாக சொல்லப்பட்டதே..?''
''ஈழத்துக் கொடுமைகள் ஒரு வீட்டில் விழுந்த இழவல்ல... ஒரு இனமே இழவாக விழுந்திருக்கிறது. கண்ணுக்கு முன்னால் நம் ரத்தமும் சதையும் செத்தழி கையில் நான் எப்படி நின்று நிதானித்து என் கருத்துகளை வலியுறுத்த முடியும்? ரத்தம் கொப்பளிக்க பொதுவாக நான் கொட்டிய வாதங்களில் சில வார்த்தைகள் முதல்வர் மனதை வருத்தி இருக்கலாம். அவரைக் குறிப்பிட்டு ஒருபோதும் நான் பேசியதில்லை. அடக்க முடியாத கோபத்தில் கடுஞ்சொல் ஏதேனும் சொல்லியிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என் அலுவலகத்துக்கு வந்தால் உதயசூரியன் சின்னம்தானே உங்களை வரவேற்கிறது!''
'' 'புலிகளின் பணம்தான் சீமானை பேச வைக்கிறது' எனச் சொல்லப்படும் விமர்சனங்கள் குறித்து?''
'' (சிரிக்கிறார்) புலிகளைப் பற்றிப் பேசினால் வசதி வராது... வாரன்ட்தான் வரும். (சற்று கோபமாகிறார்) பேசி னால் பணம் கிடைக்கும் எனச் சொல்பவர்களை என் பின்னால் வரச் சொல்லுங்கள். அவர்கள் என்னுடன் வந்து பணத்தை அள்ளிக் கொண்டு போகட்டும். சொந்த பந்தங்கள் மடிந்து கிடக்கும் கோரத்தைப் பார்த்து குரல் கொடுக்காமல் இருக்க நான், சூடு சொரணை இல்லாத தமிழன் இல்லை. நெஞ்சு பொறுக்காமல் வயிற்றிலடித்து அழுவதைக்கூட 'வாங்கி'க் கொண்டு அழுவதாகச் சொல்லும் அதிமேதாவிகளே... என் அண்ணன் நாட்டை கட்டமைக்கப் போராடுவதைப் போல் என் தாய் ஒரு வீட்டைக் கட்டத் திண்டாடிக் கொண்டிருக்கிறாள். இன உணர்வுக்காக குரல் கொடுத்த பாவத்துக்காக இந்த சீமான் இழந்தது கொஞ்சநஞ்சமல்ல. நாளைக்கே என் வீட்டில் வருமானவரி சோதனையை நடத்தட்டும். என்னிடமிருந்து அள்ளிக் கொண்டு போக துயரங்களும் கண்ணீரும்தான் இருக்கும்!''
''அரசியல் இயக்கம் தொடங்குவதற்கான முன்னோட்டமாகத்தான் மதுரையில் போராட்டம் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறதே?''
''என் இனத்தின் சதையறுத்து சாப்பிட நினைப் பவர்களை தோலுரித்துத் தொங்கவிடுகிற வேலையை மதுரையிலேயே தொடங்கப் போகிறோம். சிதறிக்கிடக்கும் என் இனத்தை ஒன்றாகக் கட்டிவிட்டால், அதனை எவனாலும் வெட்டிவிட முடியாது! அதற்கான தொடக்கம்தான் இது. வீழ்த்தப்பட்டு கிடக்கும் ஈழ இன விடியலுக்காக, அரசியலை என்ன... அணுகுண்டைக்கூட கையிலெடுக்க தமிழினம் தயங்காது!''
|
No comments:
Post a Comment