13 வயதில் அற்புதமாக பிறமொழிக் கதைகளைத்
தமிழில் மொழிபெயர்த்த சாதனைச் சிறுமி!
தமிழில் மொழிபெயர்த்த சாதனைச் சிறுமி!
இலக்கிய வட்டாரத்தில் அப்பெண் ஒரு ஆச்சரியம்! எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அவருக்கு மற்றவர்களிடம் பேச வேண்டுமென்றால் அப்படியொரு கூச்சம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விழாக்கள் எதுவாகவிருந்தாலும் அங்கு அந்த சின்னப்பெண் இருப்பார். விழா மண்டபத்தைச் சுற்றி வந்து கொண்டிருப்பதை விழாவுக்குப் போனவர்கள் பார்த்திருக்க முடியும். விழா தொடங்கினால் இலக்கியவாதிகள் பேசுவதை உற்று நோக்குவார். அந்தப் பெண்ணின் பெயர் சுகானா.
2006-ல் கேரளாவில் சிபிலா மைக்கேல் என்ற சிறுமி தனது எட்டு வயதில் ஆரம்பித்து பதின்மூன்றாவது வயதில், தன் வயதுஒத்த குழந்தைகளுக்காக "மழையும் தீரும்' என்ற தலைப்பில் பன்னிரண்டு கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார். அந்த மலையாளச் சிறுகதைத் தொகுப்பைத் தனது பதின்மூன்றாவது வயதில் "எதிர்பாராமல் பெய்த மழை' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார் சுகானா. அது புத்தகமாக வெளிவந்தபோது, "இவரிடம் இவ்வளவு திறமையா' என இலக்கிய வட்டாரத்தில் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். தொடர்ந்து மொழிபெயர்ப்புக்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள சுகானா தற்போது 11-ஆம் வகுப்பு படிக்கிறார்.
இலக்கியம் சார்ந்த நூல்களை மொழிபெயர்ப்பது என்பது கடுமையான பணி. மொழிமாற்றம் செய்யும்போது வார்த்தைகளின் அழகு, நுட்பம், கருத்து கெடாமல் மாற்ற வேண்டும். அழகான நடையோடு, குழந்தைகளுக்கான மொழியில் மூலக்கதையின் தன்மை கெடாமல் அந்தப் பணியைச் செய்ய வேண்டும். அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சுகானா. ஒரு மாலைப் பொழுதில் அப்பெண்ணைச் சந்திக்க திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றபோது, தன் சித்தி மகன் வம்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அவருடன் பேசியதிலிருந்து...
சுகானா?
""அழகான சங்கீதம்.''
இந்த சின்ன வயசுல உங்களுக்கு இலக்கியத்தின் மீதான ஆர்வம் எப்படி வந்தது?
""நான் பிறந்ததே இலக்கியக் குடும்பத்தில். எங்கம்மா ஜெயஸ்ரீ நிறைய மலையாளப் புத்தகங்களை மொழிபெயர்த் திருக்காங்க. எங்கப்பா உத்தர குமாரும் ஒரு மொழி பெயர்ப்பாளர். சித்தப்பா பவா செல்லத்துரையும் எழுத்தாளர். எங்க சித்தி ஷைலஜாவும் எழுத்தாளர்.
அவுங்க வளர்ப்பு, சூழ்நிலை எனக்குள்ள இலக்கிய ஆர்வத்தை உண்டாக்கிடுச்சி.''
ஒரு தொகுப்பை மொழி பெயர்க்கறதுக்கு ஊக்கமா இருந்தது யார்?
""குடும்பச் சூழ்நிலைதான். நான் ஐந்தாவது வரைக்கும் கேரளாவுல படிச்சதால எனக்கு மலையாளம் தெரியும். அதனால வீட்லயிருக்கற மலையாளப் புத்தகங்களை எடுத் துப் படிப்பேன். அப்படித்தான் எங்கப்பா வாங்கி வந்த "மழையும் தீரும்'ங்கற புத்தகத்தைப் படிச் சேன். எனக்கு அது பிடிச்சிருந்தது. அதை மொழிபெயர்க்கறேன்னு சொன்னேன். அம்மாவும் சித்தியும் என்கரேஜ் பண்ணாங்க. அதனால தான் என்னால மொழிபெயர்க்க முடிஞ்சது.''
அந்தப் புத்தகத்தை மொழி பெயர்க்க ஏதாவது சிறப்புக் காரணமிருக்கா?
""நிச்சயமா. இந்தப் புத்தகத்துல சுற்றுச்சூழல் கெடறதைப்பத்தி சிறப்பா எழுதியிருப்பாங்க. மரங்கள் வெட்டப்பட்டு கட்டிடங்களா முளைக்க றதால சுற்றுச்சூழல் பாதிக்கப்படறதை அழகா சொல்லியிருப்பாங்க. நாம ஒருத்தருடைய பொரு ளுக்குப் பேராசைப் பட்டு மத்தவங்களை அழிச்சா, நமக்கு மற்றொரு ரூபத்துல பிரச்சினை வரும்கிறதை தெளிவா சொல்லியிருப்பாங்க. இந்தக் கரு தான் எனக்குப் பிடிச்சது. அதனால தான் நான் இந்தப் புத்தகத்தை மொழி பெயர்க்கத் திட்டமிட்டேன்.''
அடுத்த மொழிபெயர்ப்பு?
""ஹிட்லர் தன்னோட நாஜிப் படையை வச்சி யூத இன மக்களைத் தன்னோட சித்ரவதை கேம்ப்புக்குக் கொண்டு வந்து கொல்லுவாரு. அப்படிக் கொண்டு வர்ற ஒரு யூதக் குடும்பத்துல 14 வயது சின்னப் பொண்ணும் இருக்கா. நாஜிப் படைகள் யூத மக்களைக் கொன்னுக்கிட்டிருக்கும்போது, அந்தக் குடும்பம் கேம்ப்பை விட்டுத் தப்பிச்சிப் போய் காடுகளில் தலை மறைவு வாழ்க்கை வாழறாங்க. அந்த நாட்களைத் தன்னோட டைரியில் குறிச்சி வச்சிருந்தா இந்த 14 வயதுப் பெண். இந்தக் குறிப்புகள் வெளிஉலகத்துக்குத் தெரிய வந்தப்ப உலகமே அதிர்ந்தது. பல விஷயங்கள் அந்த டைரி மூலமாதான் தெரிய வந்தது. அந்த டைரி குறிப்புகளை வச்சி ஆன் பிராங் டைரின்னு (ஆய்ய்ங் எழ்ஹய்ந் உஹண்ழ்ஹ்) ஒரு புத்தகம் நெதர்லாந்து மொழியில் எழுதப்பட்டது. பின்னால் அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டது. 26 மொழி கள்ல வெளிவந்த அந்தப் புத்தகம் மலையாளத்து லயும் வந்திருக்கு. மலையாளத்துல வந்த அந்தப் புத்தகம் 250 பக்கங்கள் கொண்டது. அதைத் தமிழ்ல மொழிபெயர்த் துக்கிட்டிருக்கேன்.''
வருங்காலத்தில் என்ன சாதிக்க திட்டம்?
""இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கணும். அதான் என்னோட லட்சியம்.''
மொழிபெயர்ப்பைத் தவிர நேரடியா தமிழில் எழுதற திட்டமிருக்கா?
""இதுவரை அந்த மாதிரி எந்த ஐடியாவுமில்ல.''
தமிழ், மலையாள இலக் கியத்தில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்? அவர்களை ஏன் பிடிக்கும்?
""தமிழ்ல பிரபஞ்சனை பிடிக்கும். அவரோட தொகுப்புகள் எல்லாம் படிச்சிருக்கேன். வேல. ராமமூர்த்தி யைப் பிடிக்கும். காரணம் அவ ரோட எழுத்து நடை அவ்வளவு சரளமா- எளிமையாயிருக்கும். அப்புறம் பவா செல்லத்துரை. மக்களோட ரசனைக்கு ஏத்த மாதிரி எழுதுவாரு. அதுக்காகவே அவரோட எழுத்துகளைப் பிடிக் கும். மலையாளப் புத்தகங்களை அவ்வளவா நான் இன்னும் படிக்கல. அதனால யாரையும் சொல்ல முடியல.''
சுகானா மொழிபெயர்த்த புத்தகத்துக்கு அவரது சித்தி மகனும் பவா செல்லத்துரையின் மகனுமான வம்சி, தனது அம்மா விடம் அக்கதைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்டு, கதைகளுக்கு ஏற்றாற்போல் படம் வரைந்து தந்துள்ளான். அந்தப் படங்களை வரைந்து தந்தபோது அவனுக்கு வயது ஐந்து. தற்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் அவனிடம் பேசியபோது...
உனக்கு ஓவிய ஆர்வம் எப்படி வந்தது?
""சும்மா ஏதாவது கிறுக்கிக் கிட்டேயிருப்பேன். அப்பதான் அம்மா ஒருநாள் அக்கா புக்குக்கு வரைடான்னு சொன்னாங்க. அப்பப்ப கதைய படிக்கச் சொல்லிக் கேட்பேன். மூடு வரும் போதுதான் வரைவேன். அப்பப்ப வரைஞ்சி தந்தேன். சில கதை களுக்கு வரையவேயில்ல. புக்ல பாத்தீங்கன்னா தெரியும்'' என்றான் மழலையாய் சிரித்த படி.
உன் லட்சியம்?
""பெரிய ஓவியனா வரணும். வேற எதுவும் வேணாம்.''
எதிர்பாராத நேரத்தில் மழை பெய்தால் விவசாயிக்கு எப்படி ஒரு மகிழ்ச்சியோ, அதேபோல் யாரும் எதிர்பாராத வயதில் எதிர் பாராத விதத்தில் இலக்கிய வட்டத்துக்குள் வந்துள்ள இவர்கள் பலரையும் மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியக் கடலில் ஆழ்த்தியுள்ளனர்.
No comments:
Post a Comment