பெண் அர்ச்சகர்கள் இந்து முன்னணி கடும் எதிர்ப்பு
ஆலயங்களில் பெண் அர்ச்சகர்களை நியமித்து பாரம்பரிய, ஆகம நடைமுறைகளை சீர்குலைக்க தமிழக அரசு முயற்சிப்பதாக இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருக்கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்கப் போவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கிறார். இது இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, இந்துக்களின் நடைமுறைகளை, மரபுகளை குலைத்து ஆலயங்களின் புனிதத்தை கெடுக்கும்.
பல அம்மன் கோவில்களில் தாய்மார்கள் பூஜாரிகளாக இருந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய அடிப்படை தேவையை கூட இந்து அறநிலையத்துறையோ, தமிழக அரசோ செய்து கொடுப்பதில்லை. அதே சமயம் வருமானம் அதிகமாக வருவதாகத் தெரிந்தால் உடனே அங்கு ஒரு தனி அலுவலரை போட்டு உண்டியல் வைத்து கோவிலை அரசு ஆக்கிரமித்து கொள்கிறது.
இந்நிலையில், ஆலயங்களில் பெண் அர்ச்சகர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்பு, நடைமுறையில் இருக்கும் பாரம்பரிய, ஆகம நடைமுறைகளை சீர்குலைக்க அரசு எடுக்கும் முயற்சியாகவே தெரிகிறது.
கோவில்களில் பூஜை முறைகள், ஒழுங்குகள் ஆன்மீக பெரியோர்கள் வழிகாட்டுதலில் செயல்படுத்தப்பட வேண்டும் தவிர தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல தமிழக அரசு ஆலய வழிபாட்டு முறைகளில் தலையிடுவது அத்துமீறிய செயல்.
மரபுகளை, வழிமுறைகளை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை, அறிவிப்பு நிலையிலேயே தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment