Friday, July 3, 2009

நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர் மக்களே தூண்களாக தாங்கி நிற்க வேண்டும்: உருத்திரகுமாரன்

 

நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்துள்ள மக்கள்தான் தூண்களாக தாங்கி நிற்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாடு கடந்த அரசு குறித்த சிறிய விளக்கத்தை தெரிவிக்க முடியுமா?

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை சரித்திரப் பின்னணியோடு நாங்கள் பார்க்க வேண்டும். சிறிலங்கா தீவு சுதந்திரமடைந்த பின்னர் தமிழ்த் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மூலமும் சாத்வீகப் போராட்டத்தின் மூலமும் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முனைந்தனர். ஆனால் அந்தப் போராட்டங்கள் படையினரால் மிலேச்சத்தனமாக முறியடிக்கப்பட்டதோடு, இனவாதம் தலைதூக்கியதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மூலமூம் அந்த உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் போனது. இதன் விளைவாகவே தமிழ்மக்களின் இந்தப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்மக்களின் இந்த பிரச்சினை அனைத்துலக அரங்கில் முன்வைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது, அங்கு ஒரு கட்டுமானமும் இருந்தது. சிறிலங்கா அரசு இன்று மாறிவரும் பூகோள அரசியல் நிலைமையை தனக்கு சாதகமாக வைத்து அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக அந்த இராணுவப் போராட்டங்களை முறியடித்து விட்டது. எனவே அடுத்த கட்டமாக தமிழர்களின் போராட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசு என்ற வகையில் முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.

"போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் ஒன்றுதான்" என்று சுதுமலையில் இடம்பெற்ற பிரகடனத்தில் தலைவர் கூறினார். அதேபோன்றுதான் போராட்ட வடிவங்கள் மாறினாலும் எமது இலட்சியம் ஒன்றுதான். அனைத்துலக சட்டங்களுக்கும் அனைத்துலக ஒழுங்குகளுக்கும் இணைவாக தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வைக் காண்பதற்காகத்தான் இது அமைக்கப்படவுள்ளது.

பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக் காண்பதற்கு சமபலநிலை அத்தியாவசியமானது. நோர்வேயின் அனுசரணையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது சமபலநிலை எங்களுடைய இராணுவ பலத்தை மையப்படுத்தியிருந்தது. இன்று சமபலமற்ற நிலையில் இருக்கின்றோம். எனினும் சமபலநிலை என்பது இராணுவ பலத்தை மட்டும் கொண்டதல்ல. சமபலநிலை என்பதற்கு பல்வெறு வடிவங்கள், பரிமாணங்கள் உண்டு.

தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு அந்த சமபல நிலையை - தற்போதுள்ள சமபல இடைவெளியை - நிரப்பும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இதனடிப்படையில் பேச்சுவார்த்தையின் மூலம் சுயநிர்ணய அடிப்படையில் ஒருதீர்வைக் காண்பதற்கு இது அடிப்படையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

நாடு கடந்த அரசு குறித்து கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வந்தன. புறநிலை அரசுக்கும் (Government in Exile) நாடு கடந்த அரசுக்கும் (Transnational Government) பல ஒற்றுமைகள் இருந்தாலும் சில வேறுபாடுகள் உள்ளன. புறநிலை அரசு (என்பது ஒரு நாட்டில் ஆட்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் அனைத்துலக சமூகத்தில் இன்னொரு நாட்டின் அனுசரணையுடன் புறநிலை அரசு (Government in Exile) அமைத்துக் கொள்வார்கள். உதாரணமாக ஏஎன்சி, பலஸ்தீனர்கள், இந்தியாவில் தலாய்லாமா அப்படிச் செய்தார்கள்.

மேற்படி இரண்டு விடயங்களிலும் அதாவது நாடு கடந்த அரசிலும் புறநிலை அரசிலும் அரசியல் இடைவெளி என்பது இல்லை. ஒரு நாட்டில் இதற்குரிய இடமளிப்புக்கள் இல்லாத காரணத்தினால்தான் அனைத்துலகில் இதனை அமைக்க வேண்டியுள்ளது.

அத்துடன், நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தாயகத்தில் உள்ள மக்களை மட்டுமன்றி புலம்பெயர்ந்துள்ள மக்களின் சமூக, அரசியல், பொருளாதார நலன்களையும் பேணும். எனவே, புலம்பெயர் தமிழ்மக்கள் ஒரு குழுவாக இருந்தால்தான் அந்த பலத்தின் மூலம் நாங்கள் எமது மக்களின் விடிவிற்கு உதவ முடியும்.

தமிழர்களின் இராணுவ பலம் சமநிலையில் இருந்தபோது அனைத்துலக சமூகத்தால் எமக்கு ஒரு தீர்வையும் வழங்க முடியவில்லை. இன்றைய நிலையில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடாக எவ்வாறு இலக்கினை அடைய முடியும் எனக் கருதுகின்றீர்கள்?

தமிழர்களின் தேசியப் பிரச்சினையானது பூகோள அரசியலுடன் பின்னிப் பிணைந்துவிட்டது. தென்னாசியாவில் எப்படி அரசியல் மாற்றமடைகிறதோ அதன் மையத்தில்தான் தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வும் இருக்கின்றது. எமக்கு என ஒரு இராணுவ பலம் இல்லாவிட்டாலும் இன்று மாறிவரும் பூகோளஅரசியல் நிலையில் - நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு அதிகார மையமாக திகழ்ந்து, அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் அங்கு எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நான் கருதுகிறேன்.

கடல் கடந்த தமிழீழ அரசுக்கு அனைத்துலக நாடுகளின் ஆதரவு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கின்றதா?

நாடு கடந்த தமிழீழ அரசு இன்னும் அமைக்கப்படவில்லை. தற்போது அதனை அமைப்பதற்கான செயற்குழுவே அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைப்பது தொடர்பாக பல்வேறு இராஜதந்திரிகளுடனும், அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் உட்பட பல தரப்புகளுடனும் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றோம். நாங்கள் தயாரித்த அறிக்கையை இராஜதந்திரிகளுக்கும், தொண்டு நிறுவன பிரிதிநிதிகளுக்கும் அனுப்பி அவர்களுடன் கருத்து பரிமாறுவதற்கு கோரியுள்ளோம். அவர்கள் அத்தகைய கருத்து பரிமாறலுக்கு இணங்கியுள்ளனர். அவர்களுடனான சந்திப்புக்கும் ஏற்பாடாகியுள்ளது. விரைவில் ஒரு ஆலோசனைக்குழுவையும் அமைப்போம்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது. எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது எந்தவொரு தொண்டு நிறுவனமோ இந்த கடல் கடந்த தமிழீழ அரசு குறித்த அறிக்கையை நிராகரிக்கவில்லை. மாறாக இதைப்பற்றி முக்கியமெடுத்து கலந்துரையாட வேண்டும் என்று கூறியுள்ளனர். தனிப்பட்ட முறையில் இத்தகைய கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. விரைவில் முறையான ஒரு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

ஆலோசனைக்குழு அமைக்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறீர்கள்?

செயற்குழு அமைப்பது தொடர்பாக கலந்துரையாடி வருகிறோம். குறிப்பாக ஒவ்வொரு நாடுகளுக்குமான செயற்குழுக்களையும் அமைக்கவிருக்கிறோம். அத்துடன் எமது செயற்குழுவில் மேலும் சிலரையும் சேர்க்கவிருக்கிறோம். குறிப்பாக சிறிலங்காவைச் சேர்ந்த முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் தற்போது உள்ளார். அவர் எமக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். இது ஒரு வரலாற்று சந்தர்ப்பம் என்றும் இதில் தானும் இணைந்து தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு சரியான தீர்வைக் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல இந்தியாவிலிருந்தும் சிலர் தொடர்பு கொண்டு எதற்காக இந்தியாவிலிருந்து எவரையும் செயற்குழுவில் இணைக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு செயற்குழுவை விரிவுபடுத்தவிருக்கிறோம். அதன்பின்னர் இந்த குழுக்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தவிருக்கிறோம்.

தமிழ்மக்களுக்கான தீர்வு விடயத்தில் சிறிலங்கா மற்றும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு செல்வது குறித்த உங்களது கருத்து என்ன?

தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கை கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்கள் எமக்கு தெட்டத்தெளிவாக காட்டியது. தமிழ்த்தேசியப் பிரச்சினையில் இந்தியா முக்கிய வகிக்கின்றது. அது நன்மையாகவோ அல்லது தீமையாகவோ இருக்கலாம். எதுஎப்படியிருப்பினும் இந்தியாவுடனும் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

சிறிலங்காவிற்கான கதவுகளையும் நாங்கள் இன்னமும் மூடவில்லை. பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்வை எட்டுவதென்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

அந்தவகையில் சிறிலங்கா அரசுக்கான கதவுகளை திறந்தே வைத்திருக்கின்றோம். இந்தியாவுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றோம். இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கோ அல்லது இந்தியாவின் பூகோள நலன்களுக்கோ எமது செயற்பாடுகள் பாதிப்பாக அமையாது என்பதை வலியுறுத்தி இந்தியாவுடனான எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவிருக்கின்றோம்.

இரண்டு விடயங்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுக்கவிருக்கிறோம். ஒன்று - சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் (Relevant Stake Holders) தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்துவது. இரண்டாவது நிறுவனமயப்படுத்தலையும் (Institution Building) முன்னெடுத்துச் செல்வது.

கடல் கடந்த தமிழீழ அரசு பற்றிய விளக்கத்தை புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவை உள்ளது. அதனை நீங்கள் எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்?

மக்களை இந்த தகவல் சென்றடைய வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் எடுத்திருக்கின்றோம். செயற்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் எமது நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துவார்கள்.

நாடு கடந்த அரசு என்பது எமது மக்களுக்கு புதிய விடயம். எனவே இதனை எமது மக்களுக்கு எவ்வாறு தெரிவிப்பதென்பது குறித்து நாங்கள் கவனமெடுத்து வருகிறோம். குறிப்பாக கேள்வி பதில் வடிவில் புத்தகமாக இந்த விளக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவிருக்கிறோம். ஓரிரு மாதங்களில் இந்த புத்தகம் வெளியாகும்.

நடந்து முடிந்த துயரச் சம்பவங்களிலிருந்து மீண்டெழுந்து மக்கள் எவ்வளவு விரைவாக அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த அறிவிப்பு வெளியாகியதும் அதனை அவசரப்பட்டு மெற்கொண்ட முடிவாக சிலர் கருதினர். மே மாதம் 15, 17 ஆம் திகதிகளில் முள்ளிவாய்க்காலில் நடந்த இராணுவத் தாக்குதல்களின் கொடூரம் எங்களுக்கு தெரியும். அந்த ஒருமாத காலத்தில் சிறிலங்கா அரசிற்கு நாங்கள் ஒரு செய்தியை அனுப்ப விரும்பினோம். இராணுவ ரீதியில் போரியல் சட்டங்களுக்கு மாறாக எங்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அழித்தாலும் அரசியல் ரீதியாக நாங்கள் அழியவில்லை, அழிக்கவும் முடியாது என்ற செய்தியை சிறிலங்கா அரசிற்கு தெரியப்படுத்தவே காலங் கடந்த தமிழீழ அரசை நாங்கள் அறிவித்தோம்.

அத்துடன், அடுத்து என்ன என்று இருந்த மக்களுக்கு ஒரு வழியைக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் அவசரப்பட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டோம்.

புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் தற்போது செய்யவேண்டிய பணிகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

நாடு கடந்த தமிழீழ அரசிற்கு புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் ஆதரவு நிச்சயமாகத் தேவை. புலம்பெயர்ந்துள்ள மக்களின் அமைப்புகள்தான் இந்த அரசை தூண்களாகத் தாங்கி நிற்க வேண்டும். அனைத்துலக நாடுகளில் பரந்து வாழும் புலம்பெயர் மக்களால் தெரிவு செய்யப்படும் இந்த அரசுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதியாக (Authentic Voice) வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

எந்தவொரு குழுவையோ அல்லது எந்தவொரு நபரையோ இது முன்னுரிமைப்படுத்தவில்லை. நாங்கள் தேர்தல் நடத்த இருக்கின்றோம். அது ஜனநாயக முறைப்படி நடக்கும். அதில் எவரும் பங்குகொள்ளலாம். அப்படி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ள எமது அரசு தான் அனைத்துலகில் தமிழ் மக்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட குரலாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

அதற்கு முன்னர் மூன்று இலட்சம் மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே முக்கியமாக ஒவ்வொரு தமிழனும் இதில் ஒன்றுபட்டு இது எனது அரசு என்ற நோக்கில் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails