Friday, July 31, 2009
பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: உறுதிப்படுத்துகிறது இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவு
விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதை இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.
விடுதலைப்புலி உறுப்பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும் நாட்டிலிருந்து தப்பி செல்ல தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக ராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போட்டோவை பார்த்து தயவு செய்து சிரிக்காதீங்க.
Thursday, July 30, 2009
புலிகளின் புதுத் தலைவர் கே.பி.-யா - நெடியலனா?
பிரபாகரன் திருமணத்தின்போது மாப்பிள்ளைத் தோழனாக இருந்த கே.பி. இப்போது அவர் இடத்தைப் பிடித்திருப்பதாக வரும் தகவல்கள், உலகத் தமிழர்களிடையே விவாத அலைகளைக் கிளப்பி யுள்ளன. இதே நேரம், 'எம்முடைய ஒரே தலைவர் பிரபாகரன்தான். வேறு யாருமல்ல...' என்ற எதிர்ப்புக் குரல்களும் எழ ஆரம்பித்திருப்பதால், உலகத் தமிழ் அரங்கு மீண்டும் சலசலப்பாகியுள்ளது. நியூயார்க் வாழ் வழக்கறிஞர் விசுவநாதன் ருத்ரகுமாரன் உதவியுடன் புலிகளின் புதிய தலைவர் என அறிவிக்கப் பட்டிருக்கிறார் கே.பி. ஆனால்... நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைப்பதில் தீவிரம் காட்டி வந்த வீரகட்டி மணிவண்ணன் என்கிற கேஸ்ட்ரோ, நார்வேயில் இருக்கும் கே.பி. ரேகி(ஸிணிநிமி), முன்னாள் புலிகளின் பொருளாதார ஆலோசகரான ரூட் ரவி உட்பட பலர் கே.பி-யை தீவிரமாக எதிர்க்கிறார்கள். இது குறித்து பல்வேறுபட்ட உலகத் தமிழ் அமைப்பு களிடமும், தனிப்பட்ட தமிழ் உணர்வாளர்களிடமும் விலாவாரியாக விசாரித்தோம். ''தலைமையிடம் காலியாகவே இருந்தால், அதை தட்டிப்பறிக்க பலர் முயலு
வார்கள். எனவே, கே.பி-யை தலைவர் என்று அறிவித்துவிட்டால், கட்டுப்பாடு தானாகவே வரும் என்று கருதினார் ருத்ரகுமாரன். அதனால், அவரே உலகம் முழுவதும் உள்ள, ஈழ தமிழ்ச் சங்கம் மற்றும் பல அமைப்புகளின் தலைவர்களை பேசி சம்மதிக்க வைத்தார். ஆனால், கேஸ்ட்ரோ தரப்பு இதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. புலிகளின் தலைவர் பதவிக்கு அவர்களின் சாய்ஸ் பேரின்பநாயகம் சிலாபரன் என்கிற நெடியலன். 33 வயது நெடியலன் எஸ்.பி.தமிழ்ச்செல்வனின் பிரதான சீடர். 18 வயதில் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து ரஷ்யாவுக்கு ராணுவப் பயிற்சி பெற அனுப்பி வைக்கப்பட்டவர். தாய்லாந்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் தமிழ்ச்செல்வனுக்கு வலதுகரமாகச் செயல்பட்டவர். நெடியலன் மட்டுமல்ல, அவருடைய குடும்பமே புலிக் குடும்பம்தான். அவருடைய மனைவி சிவகௌரியின் தாய் மாமன் ஞானேந்திர மோகன் எனும் ரன்ஜன் லாலாதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் ஆயுள் உறுப்பினர். இவர், யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தினரால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டவர். இவர் மீது பிரபாகரனுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதைத் தங்களுக்கு சாதகமாக்கி, நெடியலனை தலைமை ஏற்க முயல்கிறது கேஸ்ட்ரோ தரப்பு. கே.பி-யை அயல்நாடுகள் வாழ் ஈழத் தமிழர்களின் பொறுப்பாளராக பிரபாகரன் நியமித்தபோதே, அதை எதிர்த்தவர்கள் இப்போது எப்படி ஆதரிப்பார்கள்?'' என்றவர்கள் தொடர்ந்தனர்.
''பாலியல் குற்றச்சாட்டு, பண மோசடி, ஊழல் வழக்குகளில் சிக்கிய கே.பி-யை 2002-ம் ஆண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் தமிழ்ச்செல்வன் இயக்கத்தை விட்டு விலக்கிவைத்தார். இதையடுத்து, கே.பி., தாய்லாந்து சென்று அந்த ஊர் பெண்ணை மணந்து செட்டிலாகிவிட்டார். ஆனால், பிரபாகரனிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தார். இது தமிழ்ச் செல்வனுக்கே தெரியாது. கே.பி.முழுமையான புலியே அல்ல. அவர் இலங்கை அரசின் ஒற்றர். தமிழ்ச்செல்வனை பழிவாங்கப் போட்டுக் கொடுத்ததே கே.பி-தான். பிரபாகரன் மரணத்தைப் பற்றி அமைப்பு அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில்... முந்திக் கொண்டு மே 18-ம் தேதி அவர் வீரமரணம் அடையவில்லை என்று கே.பி. அறிவித்தார். அதே கே.பி-தான், தமிழக அரசியல்வாதிகள் போல பின், 'பிரபாகரன் வீரமரணம், ஒரு வாரம் துக்கம்' என்று அடுத்தடுத்து பல்டி அடித்தார். 'இதைக் கூற நீயென்ன எங்கள் தலைவனா?' என்று தமிழ் புனரமைப்புக் குழு என்ற அமைப்பு கடுமையாக எதிர்த்தது. அப்பேர்ப்பட்ட கே.பி-யை ஒருபோதும் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் மட்டுமல்ல, நெடுமாறன், வைகோ போன்ற தமிழகத் தலைவர்கள் கே.பி-யை ஆதரிக்கவில்லை. பலமுறை அவர்களுடன் பேசி தங்கள் நியாயத்தை புரியவைக்க கே.பி. முயன்றும் இயலவில்லை!'' என்கிறார்கள். இந்த நிலையில் கே.பி. ஆதரவாளர்களோ... ''வீரகட்டி மணிவண்ணன் என்கிற கேஸ்ட்ரோ இப் போது உயிருடன் இல்லை. பிரபாகரனின் சாவுக்கு முன்பே முள்ளிவாய்க்கால் போரில் சயனைடு கடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் பெயரால் வரும் மின்னஞ்சல்கள் போலியானவை. 2006-ம் ஆண்டு புலிகள் இயக்கம் ராணுவ ரீதியாக பலமிழந்தபோது, பிரபாகரன் அழைத்த முதல் நபர் கே.பி-தான். ஏராளமான வெளிநாட்டு போர் தளவாடங்களை புலிகளுக்கு மீண்டும் வாங்கிக் கொடுத்து உதவினார் கே.பி. அவற்றை சாதுர்யமாக வன்னிப்பகுதிக்கு பத்திரமாக சேர்ப்பித்தும் உதவினார். இது நெடியலன், கேஸ்ட்ரோ போன்றவர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியது. அவர் அனுப்பிய மூன்று ஆயுதக் கப்பல்களில் இரண்டு பத்திரமாக வன்னிக்கு சென்றது. ஒன்றை மட்டும் இலங்கைக் கப்பல் படை அழித்துவிட்டது. கண்கலங்கிய பிரபாகரன் கே.பி-யை மீண்டும் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற அழைத்தார். ஜனவரி 2009-ல் பிரபாகரன் கே.பி-யை சர்வதேசத் தலைவராக நியமித்தார்!'' என்கின்றனர். இதற்கிடையே, லண்டனில் உள்ள 'சின்ன ரன்ஜித்' என்பவரும் கே.பி-க்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் இருக்கிறார். மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் செயலாளராக இருந்தவர்தான் இந்த சின்ன ரன்ஜித். இவர், பாலசிங் கத்தின் மனைவி அடேலின் பாசத்தையும் பெற்றவர். புலிகள் வானொலியின் பொறுப்பாளரும் கூட. தான் மட்டுமல்ல, அடேல் பாலசிங் கமும் கே.பி-யை எதிர்ப்பதாக இவர் பிரசாரம் செய்தும் வருகிறார். ஆக மொத்தத்தில், ''கே.பி. அடிக்கடி, 'பிரபாகரனே என்றும் தலைவர். நான், தலைமைச் செயலாளர்தான். தலைவர் இருந்த இடத்தில் யாரையும் நினைத்துப் பார்க்கவே மனம் கூசும்' என்றும் கூறிவந்தார். அப்படிப்பட்டவர் தன்னைத்தானே தலைவராகப் பிரகடனப்படுத்திக் கொண்டது தமிழ் ஈழ தேசியத் தலைவருக்கு செய்திருக்கும் பச்சை துரோகம்!'' என்கின்றனர் கே.பி-யின் எதிர்ப்பாளர்கள். இதுபற்றியெல்லாம் கே.பி-யிடமே நாம் பேசினோம். ''பிரபாகரன் இறப்பதற்கு முன்பு என்னிடம், 'ராணுவ ரீதியாக இனி புலிகள் செயல்பட முடியாமல் போகலாம். தீவிரவாதி என்கிற இமேஜ் என்னுடன் போகட்டும். இனி உலக நாடுகளை அரவணைத்து தமிழ் ஈழம் காணுங்கள். இயக்கத்தை வழி நடத்தி பிணைக் கைதிகளாக இருக்கும் தமிழர்களை மீட்டு, சிறையில் வாடும் தம்பிகளை வெளியே கொண்டு வாருங்கள்!' என்று கூறினார். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்...'' என்று நம்மிடம் கூறினார் கே.பி. ஆரம்பத்தில் கே.பி-யை எதிர்த்த புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவரான அறிவழகன், இரண்டு தரப்பினரையும் அழைத்து லண்டனில் ஜூலை 20-ம் தேதி பேசினார். ஆனாலும்... கே.பி-தான் ஒருமனதான தலைவர் என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. தலைமைப் பதவிக்கு போட்டி என்பது புலிகளின் வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வு! அறிவழகன் நடத்திய பேச்சுவார்த்தை முறிந்ததா? அதையடுத்து... கே.பி-யே தன்னிச்சையாகத் தலைவராகத் தம்மை அறிவித்துக் கொண்டாரா? இப்படி, பல கேள்விகள் குடைய.... என்ன நடக்கிறது என தெரியாமல் தவிக்கிறார்கள் உலகத் தமிழர்கள்! | |
|
Wednesday, July 29, 2009
இரகசிய கேமராவில் சிக்கிய பெண்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப் பாளையத்தில் தான் இவருக்கு வீடு என்றாலும்,
காயத்ரி ஸ்ரீனிவாஸ் நமக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருந்தது கோவை பீளமேடு அண்ணாநகரில் உள்ளஅவருடைய பங்களாவில்! ''ஆளுங்கட்சியின் பெயரால்... மத்திய - மாநில அமைச்சர்களிடம் சொல்லி காரியத்தை முடித்துக் கொடுப்பதற்கு ஏராளமான புரோக்கர்கள் இருக்கி றார்கள். அவர்களில் டாப் மோஸ்ட் புள்ளிதான் சத்தமில்லாமல் செயல் படும் காயத்ரி ஸ்ரீனிவாஸ்...'' என்று தொடர்ந்து பல மாதங்களாக நமக்கு வந்துகொண்டிருந்த தகவல்களை உறுதிப்படுத்த எல்லா வழிகளிலும் முயன்றுகொண்டிருந்த சமயத்தில்தான், மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கான்ட்ராக்ட் கள்எடுத்துக் கொடுக்கும் இடைத்தரகர் ஒருவர் நம்மைத் தொடர்பு கொண்டார். ''அநியாயம் நடக்குதுங்க. முந்தியெல்லாம் காசு கொடுத்தா, அது போக வேண்டிய இடத்துக்கு முழுசா போயிடும். வேலையும் முடிஞ்சிடும். இப்போ நடுவில் உள்ள நந்திகளுக்கு தீனி போட்டே எங்க சொத்து அழிஞ்சுடும் போலிருக்கு. அதிலும் காயத்ரி ஸ்ரீனிவாஸ் மூலமா போனா, ரெட்டிப்பு செலவு ஆகுது. என்ன பண்றது? வேற யார் மூலமா போனாலும் காரியம் நடக்காதுனு கட்சிக்காரங்களே சொல்றாங்களே...'' என்று சலித்துக் கொண்டார் அந்த இடைத்தரகர் அப்போதும் நாம் நம்பத் தயாராக இல்லை. ஜூ.வி-க்கு மிக நம்பகமான ஒரு நபர், ''ரகசிய வீடியோ பதிவாகவே ஒரு பேரம் நடத்திப் பார்த்துவிட்டால் என்ன?'' என்று முன்வர... அடுத்தடுத்து நடந்தன வேகமான ஏற்பாடுகள். இடைத்தரகர் அளித்த விவரங்களை மிக கவனமாக உள்வாங்கிக் கிரகித்துக்கொண்டபின்.... இரண்டு பேராக இந்த ஆபரேஷனைச் செய்வது என்று முடிவானது. அதாவது, இடைத்தரகர் போல நடிக்க ஒருவர்.... மத்திய அரசின் கான்ட்ராக்டைப் பெற விரும்பும் ஆந்திர மாநிலத்துக் கம்பெனியின் அதிகாரியாக ஜூ.வி. நபர் ஒருவர்...! ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை சாலைகளில் பதிப்பதற்காகத் தொலைத் தொடர்புத் துறையின் - பி.எஸ்.என்.எல்-லின் டெல்லி தலைமையகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருந்த டெண்டர் அறிவிப்புதான் இந்த இருவர் டீமின் 'பொறி'! காயத்ரி ஸ்ரீனிவாஸை தொடர்பு கொள்ளக்கூடியது என்று நம்மிடம் அளிக்கப்பட்ட செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டார் 'இடைத்தரகர்' (அதாவது இடைத்தரகராக நடிக்க முன்வந்தவர்). ஏற்கெனவே இன்னொரு நபர் மூலம் கான்ட்ராக்ட் தொடர்பான விவரங்களை காயத்ரி ஸ்ரீனிவாஸ் காதுக்கு அனுப்பி வைத்துவிட்டு... அதன்பிறகுதான் செல்போனில் விஷயத்துக்கு வந்தார். அந்த ஆடியோ பதிவு இதோ ('இடைத்தரகர் தொடர்புகொண்ட செல் நம்பர் 9442578555. தொடர்பு கொண்ட தேதி ஜூலை 23, வியாழன் மதியம் சுமார் 3 மணி) - இடைத்தரகர்: ''மேடம்... அவங்க என்ன சொல் றாங்க... இப்ப... அதாவது... டெண்டர் டேட் ஆகஸ்ட் ஏழாம் தேதி தள்ளி வச்சிருக்காங்க.'' எதிர்முனை பெண் குரல்: ''சரி!'' இடைத்தரகர்: ''இப்ப டெண்டர் ஃபைல் எல்லாம் வந்துடுச்சு. நாளைக்கு நைட் கிளம்பி சனிக்கிழமை காலையிலே உங்களை பார்க்கட்டுமா?'' எ.மு.பெ.கு: ''எங்கே வந்து பார்க்கறீங்க?'' இடைத்தரகர்: ''கோயமுத்தூர்ல?'' எ.மு.பெ.கு: ''ரைட்டு! அவங்க (டெண்டர் எடுக்க விரும்பும்) கம்பெனியோட ஜி.எம்-மையும் ஒருதடவை அனுப்பி வைக்கிறேன்னு சொன்னாங்க. அவரு வந்து கன்ஃபார்ம் பண்ணுவாரு...'' இடைத்தரகர்: ''அவரு வந்து கன்ஃபார்ம் பண்ணு வாரு... இன்பிட்வீன் உங்களுக்கு என்ன சேரவேண்டியதோ அதை பேசிட்டு ஒரு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி த்ரீ டேஸ்ல குடுக்கச் சொல்லிடறேன். ஏன்னா... நாள் நெருங்கிதான் இருக்கு!'' எ.மு.பெ.கு: ''ஆகஸ்ட் ஏழுன்னா ஃபுல் டீடெயில் ஸையும் கொண்டாந்துடுங்க.. அவரு(?) சி.எம்.டி-யை (பி.எஸ்.என்.எல். அதிகாரி?) வச்சுப் பேசுவாரு. சனி, ஞாயிறு மெட்_ராஸ்ல இருப்பாருனு நினைக்கிறேன்... இல்லேன்னா ஊட்டி வந்திடுவாரு. அப்படி ஊட்டி வந்தார்னா, நீங்க கோயமுத்தூர் வரும்போது ஊட்டிக்குப் போய் பார்த்துடலாம்.'' இடைத்தரகர்: ''ஓ.கே... ஓ.கே. உங்களை முதல்ல பார்த்துட்டோம்னா அவங்களுக்கு சேட்டிஸ்ஃபை ஆயிடும்!'' எ.மு.பெ.கு: ''ரைட்டு!' இடைத்தரகர்: ''ஏன்னா... மேடம்னாலேதான் எல்லாம் முடியும்னு நான் சொல்லி வச்சிருக்கேன்!....'' இவ்வாறாக நீளும் அந்த தொலைபேசி உரையாடலின் பதிவை முதலில் பத்திரப்படுத்திக் கொண்டோம். ''மீடி யேட்டரே இதுல கிடையாது... டைரக்டா அவரே(?)தான் பேசுவாருங்க'' என்பது போன்ற டெல்லி தொடர்புகள் தவிர, வேறு பல விஷயங்களும் அந்த உரையாடலில் பேசப்படுகின்றன. இப்போதைக்கு அவை இந்தக் கட்டுரைக்குத் தொடர்பில்லாததால் வாசகர்களின் பார்வைக்கு அளிக்கவில்லை!
ஜூலை 25-ம் தேதி, சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு கோவையில் பீளமேடு அண்ணாநகர் வீட்டில் காயத்ரி ஸ்ரீனிவாஸ் எதிரில் இடைத்தரகராக ஒரு நபரும் ஜூ.வி. நபரும் ஆஜராகிவிட்டார்கள். நேராக அந்த வீட்டுக்குப் போய்விட முடியவில்லை. பக்கத்துத் தெருவிலேயே நம்மை நிற்கும்படி செல்போனில் உத்தர விட்டார்கள்! நாமும் அங்கே இனோவா காரை நிறுத்திவிட்டுக் காத்திருக்க... 'ராஜேஷ்' என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட ஒரு நபர் அங்கே வந்து காரில் ஏறிக்கொண்டு காயத்ரி ஸ்ரீனிவாஸ் வீட்டுக்கு வழி காட்டினார் (நமது வீடியோ கேமரா பதிவு முழுவதும் இவரும் வருகிறார். விவரமறிந்த தி.மு.க. வட்டாரத்தில் இவர் உருவத்தைக் காட்டி விசாரித்தபோது, ''ராஜேஷ்னா சொன்னாரு? இவர் பேரு சந்திரமோகனாச்சே... அருப்புக்கோட்டை பக்கத்துல பாளையம்பட்டிதான் இவரோட சொந்த ஊரு. அருப்புக்கோட்டையில் கேபிள் ஆபரேட்டரா கஷ்டப்பட்டு ஜீவனம் பண்ணிக் கிட்டிருந்தார் சந்திரமோகன்... செஞ்சியார் மத்திய அமைச்சரா இருக்கும்போது சி.பி.ஐ. வழக்கில் அவரோட உதவியாளர் பாபு மாட்டுனாரே ஞாபகம் இருக்கா..? பாபுவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவரா சந்திரமோகன் ஆயிட்டாருன்னு பிறகு சொன்னாங்க. இப்ப கோவை ஏரியாவில் காரு, பங்களானு ஜம்முனு இருக்கிற சந்திரமோகன், தன்னை காயத்ரி ஸ்ரீனிவாஸோட உதவி யாளர்னு சொல்லிக்கிறாரு'' என்று நமக்கு வேறுவிதமான விளக்கம் 'ராஜேஷ்' பற்றி கிடைத்தது!). நிற்க.... 'ராஜேஷ்' என்கிற சந்திரமோகன் இனோவா காரில் ஏறிக்கொண்டதோடு இடைத்தரகரிடமும் ஜூ.வி. நபரிடமும் பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்டு திருப்தி ஆனவுடன்தான், காயத்ரி ஸ்ரீனிவாஸின் பங்களா வுக்கு அழைத்துச் சென்றார். மேற்கொண்டு நடந்ததை ஜூ.வி. நபர் இங்கே விவரிக்கத் துவங்குகிறார் - வீட்டுக்குள் போன 'ராஜேஷ்', அங்கிருந்த வேலைக் காரரிடம், ''பீமா எக்கட?'' (பீமா எங்கே) என்றார். கொஞ்ச நேரத்தில் கொழுகொழுவென்று ஒரு கறுப்பு நாய் ஒன்று எங்களை நோக்கி ஓடி வந்தது. ''அது எதுவும் செய்யாதுங்க. எங்க மேடமுக்கு எல்லாமே இந்த பீமாதான்'' என்றபடி எங்களை சோபாவில் அமரச் செய்த 'ராஜேஷ்' கலை நயம்மிக்க ஊஞ்சலில் அமர்ந்துகொண்டார். அந்த வீட்டு ஹாலின் ஷோகேஸில் ஸ்டாலின், ஆற்காட்டார், அன்பழகன் என தி.மு.க-வின் மூத்த தலைவர்களுடன் காயத்திரி ஸ்ரீனிவாஸ் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் அழகாக, வரிசையாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தன் மகனோடு தானும் சேர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனியாக தொங்க விட்டிருந்தார் காயத்ரி. பீமா, ஹாலைச் சுற்றி ஒரு ரவுண்ட் அடித்து பெட் ரூமுக்குள் போனபிறகு காயத்ரி பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு பிரசன்னமாகி, எங்கள் எதிரில் சோபாவில் அமர்ந்துகொண்டார். காயத்ரி ஸ்ரீனிவாஸ்: ''என்ன மேட்டர்? செப்பண்டி!'' இடைத்தரகர் : ''ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் டெண்டர்தான், மேடம்... தமிழ்நாட்டுல இருநூறு கிலோ மீட்டருக்கு கேபிள் பதிக்க (என்னைக் காட்டி) இவங்க கம்பெனி பிளான் பண்ணுது!'' காயத்ரி: ''என்ன பர்ப்பஸ்?'' காரில் அந்த வீட்டை அடையும்போதே 'ராஜேஷ்' வசம் இடைத்தரகர் முழு விவரம் சொல்லி, டெண்டர் காப்பியும் கொடுத்திருந்ததால்... அவரே காயத்ரியிடம் எல்லாம் விளக்குகிறார், தெலுங்கில்! இடைத்தரகரைப் பார்த்து காயத்ரி: ''ராஜா(?) சேஸ்தாரு... ராஜாதான் செய்வாரு!'' இடைத்தரகர்: ''மேடம் பத்தி சொன்னாங்க. கேள்விப்பட்டுதான் உங்களைப் பிடிச்சு இந்த வேலையைச் செய்யலாமுன்னு....'' காயத்ரி: ''பை எலெக்ஷன் வருது... எப்படியும் (கட்சியில் எனக்கு) புரோக்ராம்கொடுத்துடுவாங்க. தொகுதிக்குப் போகணும். அதில்லாம பீமாவை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன். டெல்லிக்கு, சென்னைக்குப் போனாலும்கூட பீமாவையும் கூட் டிட்டுப் போயிடுவேன். போன வாரம் மினிஸ்டர்(?) இங்கதான் தங்கியிருந்தாரு!'' இடைத்தரகர்: ''இந்த வீட்டுலயா?'' காயத்ரி: ''குன்னூருக்குப் போனவர், போன வேகத்துலயே இறங்கிட்டாரு. அவருக்கு குளிர் ஒத்துக் காது. கோயம்புத்தூர் வந்து ரெஸிடன்ஸியில அவரு தங்கிட்டாரு. அமைச்சரை ஹோட்டல்ல ரெஸ்ட் எடுக்க விட்டுட்டு அவங்க ஒய்ஃப் எங்க வீட்டுல தங்குனாங்க. உங்க மேட்டரை அமைச்சர்கிட்ட சொல்லிடறேன். உங்களை இந்த வேலைக்காக யார் முன்னால உட்கார வைக்கிறேங்கறதுதான் இங்க முக்கியம்! இதைப் போலத்தான் பி.எஸ்.என்.எல். கான்ட்ராக்ட் ஒண்ணை முடிச்சுக் கொடுத்தேன். இதோ இவரோட ('ராஜேஷ்' பக்கம் கைகாட்டி) ஃபிரெண்டுக்குதான் முடிச்சுக் கொடுத்தோம். அது பி.எஸ்.என்.எல். விளம்பர கான்ட்ராக்ட்...'' இடைத்தரகர்: (ஏற்கெனவே விவரம் தெரிந்தவராக) ''செஞ்சியார் பி.ஏ-வா இருந்த பாபுவுக்கா?'' காயத்ரி: ''ஆமா...!'' இடைத்தரகர்: ''ராஜாவுக்கு வேணுங்கறதை நாங்களே தரணுமா?'' காயத்ரி: ''அவர் வாங்க மாட்டார். என்ன பண்ணணுங்கறதை அவரே சொல்லுவார்!'' ராஜேஷ்: ''அதையெல்லாம் ஸ்பிளிட் பண்ணி பிரிச்சுடுவாங்க...'' காயத்ரி: ''நீங்க உங்க மேட்டரை மினிஸ்டரை வெச் சிட்டு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணணும். சி.எம்.டி-யெல்லாம் பழம் தின்னு கொட்டை போட்ட ஆளு. என்ன பண்ணணுமோ அதை அவர் பார்த்துக்குவாரு. (டெல்லி?) சஞ்சார் நிகம் ரிசப்ஷன்ல உங்களை உட்கார வெச்சு, மேலே அனுப்பிடுவேன். என் பேர்கூட (விசிட்டர் புக்கில்?) வராது. மினிஸ்டரே கூப்பிட்டாதான் உங்களால அந்த கட்டடத்துக்குள்ள போகமுடியும். அவரோட பி.ஏ. செந்திலியாவும் அங்கே இருப்பார். உங்களுக்கு மினிஸ்டர் பர்ஸனல் சிட்டிங் கொடுப்பார். அதுக்கெல்லாம் நான் கியாரண்டி! ஆனா ஒண்ணு.. நாங்க ஃபிளைட் சார்ஜ் போட்டு டெல்லிக்கு வர மாட்டோம். என்கூட ஒருத்தர் வருவாரு. பெரிய புராஜெக்ட்னாத்தான் மினிஸ்டர் வருவாரு...'' ராஜேஷ்: ''இந்த மாதிரி விஷயமெல்லாம் ஒரே சேனல்லதான் நீங்க மூவ் செய்யணும்!'' காயத்ரி: ''நான் ரொம்பவும் வெளியில வரமாட்டேன். தமிழ்நாட்டுல இ.பி. விவகாரங்களையெல்லாம் இவருதான் (ராஜேஷ்) பார்த்துக்குவாரு. மேட்டூர் தெர்மல் பிளான்ட்ல ஆஷ் எடுக்கறதுக்கெல்லாம் இவர்தான் போவாரு. ஸ்டேட்ல இ.பி., ஹெல்த், டிரான்ஸ்போர்ட், ஹைவேஸ் எதுனாலும் நம்ம வேலையை முடிச்சுக்கிடலாம்.'' ராஜேஷ்: ''ஆமா... நாலும் நைன்ட்டி நைன் பர்சன்ட் முடிச்சிடலாம்!''' காயத்ரி: சாமிநாதன் (நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்?) நம்ம பையன் தான். என் சொந்த முயற்சியிலதான் மினிஸ்டர் ஆனான். இ.பி-யிலும் பெரிய லெவல்னா சொல்லுங்க. நீட்டா முடிச்சுடலாம். எங்க இருந்தாலும் என்னோட பாலிஸி என்ன தெரியுமா? சம்பந்தப்பட்ட அமைச்சரோடவே டைரக்ட் சிட்டிங் ஏற்பாடு செஞ்சிடுவேன். சக்சஸ்தான் எனக்கு முக்கியம்!'' இடைத்தரகர் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிப்பது பற்றி சொல்லச் சொல்ல... காயத்ரி சிறு நோட்டில் குறிப்பெடுத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் மொத்தம் 244 கிலோமீட்டருக்கு வை-மேக்ஸ் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத்துக்காக ஆப்டிகல் ஃபைபர் கேபிளை பதிப்பதற்கான கான்ட் ராக்ட் என்றும், இந்த மாநிலத்தில் மட்டும் 60 கோடி ரூபாய்க்கான விவகாரம் என்றும் ராஜேஷ§டன் உரை யாடல் நடக்கிறது. 3-ஜி மற்றும் வை-மேக்ஸ் பற்றி விளக்கமாகவே கேட்டுக் கொள்கிறார் காயத்ரி.
''தமிழ்நாட்டுல மட்டும்தான் கான்ட்ராக்ட் எடுப் பீங்களா? ஆந்திரா, கர்நாடகாவுலகூட எடுக்கலாமே..?'' என்றும் என்னிடம் (ஜூ.வி. நபர்) கேட்டபடியே கையடக்க நோட்டில் விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொள்கிறார். என்னை (ஜூ.வி. நபர்) கான்ட்ராக்ட் பெற விரும்பும் கம்பெனியின் ஜி.எம். என்று அறிமுகப்படுத்தியிருந்ததால் இடையிடையே சில விவரங்களை 'ராஜேஷ்' கேட்டு செக் பண்ணிக்கொண்டே இருந்தார். உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதே, 'ராஜேஷ்' வைத்திருந்த செல்போனை வாங்கி யாருக்கோ டயல் செய்தார் காயத்ரி. படுஅந்நியோந்நியமாக அவர் பேசியதன் விவரம் இதுதான் - ''நான்தான் காயத்ரி ஸ்ரீனிவாஸ்! நேத்து நைட் வந்துட் டீங்களா? (இடைவெளி) ஊட்டிக்கு வர்றீங்களா? (இடை வெளி) எப்ப டெல்லிக்குப் போறீங்க? (இடைவெளி) அப்படியா, சரி நான் நேர்ல வந்து உங்களைப் பார்க் கறேன்!'' போனை கட் செய்தவர் எங்கள் பக்கம் திரும்பி, ''இந்த வீக் அவர் ஊட்டிக்கு வரலையாம். திங்கள்கிழமை டெல்லிக்குக் கிளம்புறாராம். அவர் ஊட்டிக்கு வந்தார்னா இப்பவே உங்களை இவருகூட ('ராஜேஷ்' என்கிற சந்திரமோகன்) அனுப்பி வச்சிருப்பேன்!'' இடைத்தரகர்: ''நீங்க எப்ப அரசியலுக்கு வந்தீங்க, மேடம்?'' காயத்ரி: சிரித்துக் கொண்டே.. ''ஆச்சு, இருபது வருசமாச்சு..! நான் அரசியலுக்கு வந்ததே பிஸினசுக்காகத்தான்... வேற எதுக்கும் இல்ல!'' மீண்டும், பி.எஸ்.என்.எல். ஆப்டிகல் கேபிள் பற்றி விலாவாரியாகப் பேசினார். திரும்பவும் சந்திரமோகன் டெண்டர் குறித்த விஷயங்களை காயத்ரிக்கு தெலுங்கிலும் தமிழிலுமாக விளக்கினார். ''மொத்த கான்ட்ராக்டையும் உங்க ஒருத்தருக்கே தரமாட்டாங்க புரிஞ்சுதா?'' என்றும், ''உங்க கான்ட்ராக்டுக்குள்ளே இன்னொருத்தர் யாராச்சும் ஒரு பார்ட் எடுத்து செய்யறதா இருந்தா, அதுக்கும் நீங்க தயாரா இருக்கணும், புரிஞ்சுதா?'' என்றும் காயத்ரி எங்களிடம் கேட்டு உறுதி வாங்கிக்கொண்டார். இடையிடையே தி.மு.க-வின் பெருந்தலைகள், குடும்பங்கள் பற்றி சில 'புள்ளி'விவரங்கள் வந்து விழுந்தன. அவையெல்லாம் இந்த விவகாரத் தோடு தொடர்பில்லாதவை என்பதாலும், தேவையில்லாமல் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதாலும் இங்கே வெளியிடாமல் தவிர்க்கிறோம். ராஜேஷ்: ''கேபிள் பதிக்கிற கான்ட்ராக்ட் மட்டும்தான் நீங்க எடுக்கப் போறீங்களா..? இல்லாட்டி அதுக்கான கேபிளும் சப்ளை பண்ண விரும்பறீங்களா?'' இடைத்தரகர்: ''கேபிள் பதிக்கறதுக்கு மட்டும்தான் நாங்க டெண்டர் கேட்கலாமுன்னு இருக்கோம். மொத்த புராஜெக்ட் காஸ்ட் எப்படியும் இருநூறு கோடிக்கு மேல வரும்னு சொன்னாங்க...'' காயத்ரி: ''கோடின்னா அந்த வீடு(?) கண்டிப்பா உள்ளே வந்துடும், புரியுதுங்களா, அதான்... சம்பந்தப்பட்ட குடும்பம் உள்ளே வரும். (அடுத்தடுத்து ஆளுங்கட்சியில் சில பெரிய பெயர்களாகச் சொல்லி) .......... பிரஷ்ஷர் வரும். இப்படித்தான் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு சம்பந்தமா பி.எஸ்.என்.எல் விளம்பர கான்ட்ராக்டை பாபு கேட்டப்ப, அமைச்சர் தரலை. 'நீ பாகிஸ்தான் மேட்ச் வரும்போது விளம்பரம் கேளு, தர்றேன்'னாரு. சொன்னபடியே தந்தாரு. ஏன்னா எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணி அவர் போயாகணும். அவர் உட்கார்ந்திருக்கற இடம் அந்த மாதிரி. தனக்கு சிம்மாசனம் கொடுத்த(?) இடத்துக்கு ஏதாவது கொடுத்தாகணும்ங்கறது அவரோட பாலிஸி. சென்ட்ரல் கவர்ன்மென்ட்ல ஒரு இணை அமைச்சரை தனியா போட்டு இதையெல்லாம் வாட்ச் செய்வாங்க. அதிகாரிங்க ஒரு லாபி பண்ணுவாங்க. நம்ம அமைச்சர் அவங்களை மறுத்துப் பேச மாட்டார். ஏன்னு உங்களுக்குப் புரியுதா? நாமளா இருந்தா... 'நான்தான் மந்திரி! மூடிட்டு கையெழுத்துப் போடு'னு (அதிகாரிகளிடம்) சொல்லுவோம். அவர் அப்படியெல்லாம் இல்லை!'' இடைத்தரகர்: ''இவ்வளவு யதார்த்தமா பேசறீங்க... இவ்ளோ தூரம் இன்ட்ரடியூஸ் பண்றீங்க. உங்களுக்கு ஒரு ட்வென்ட்டி லேக்ஸ் (இருபது லட்சம்) வரைக்கும் கொடுக்கலாம்னு இவங்ககிட்டே (என்னைக் காட்டி) சொன்னேன், மேடம்!'' காயத்ரி: ''பணத்தை முதல்ல வாங்க மாட்டோம். முதல்ல டெல்லிக்குப் போவோம். நானும் உங்களைப் புரிஞ்சுக்கணும் இல்லையா... நீங்க டெல்லிக்கு வாங்க. அங்கே ரிசப்ஷன் எப்படி இருக்குனு பாருங்க. அப்புறமா பார்த்துக்கலாம். நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க. இந்த புராஜெக்டை சக்ஸஸ் பண்ணிக் காட்டுறேன். அப்புறம் நீங்களே பார்த்துக் கொடுங்க! அந்தக் குடும்பமே(?) தலையிட்டாலும் பரவாயில்லை. ஆற்காட்டாரை வெச்சு முடிச்சுத் தரேன்!'' ராஜேஷ்: ''இங்கதான் பெரிய குடும்பம்... பிரஷ்ஷர்னு இருக்கும். வேற ஸ்டேட்லயெல்லாம் இப்படியெல்லாம் இல்ல!'' காயத்ரி: ''மேட்டர்னு பெத்தாயின முந்தட்டுல பெட்டுத்தோம். (விஷ யத்தை பெரியவர் முன்னாடி வெப்போம்) சக்சஸ் சேஸ்தாம். நீங்க மினிஸ்டரைப் பார்க்கும்போது நல்லா விளக்கமா புரியுறமாதிரி பேசிடணும். இல்லைன்னா அவர் தன்னோட பி.ஏ-வைப் பார்க்கச் சொல்லிட்டுப் போயிடுவாரு. எப்ப டெண்டர் முடியுது? டெண்டர் போட்டுத்தான் இதைப் பண்ணணுமா? மினிஸ்டரே பண்ணிடக் கூடாதா?'' உடனே, இடைத்தரகர் முதலி லிருந்து அந்த டெண்டர் பற்றி விவரிக்கும் காட்சிகளும், அதை காயத்ரி குறிப்பெடுத்துக் கொள்வதும் நாங்கள் கொண்டு போன ரகசிய வீடியோ கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. காயத்ரி: ''மினிஸ்டர் தொகுதிக்கு வந்தா இதைப் பத்திப் பேச முடியாது. இந்தப் பொம்பளை இங்க ஏன் வந்தாங்கன்னு தொகுதியில பார்ப்பாங்க. அவரும் நம்மளை பார்க்க மாட்டாரு. நாம் டெல்லிக்கு போய்த்தான் இந்த மேட்டரை முடிக்கணும். புதன்கிழமை டெல்லிக்குப் போயிடணும். வியாழக்கிழமை காலையில மினிஸ்டர் வீட்டுக்குப் போய் நேர்ல உங்க விஷயத்தைப் பத்திப் பேசிடுவேன். அப்புறம் நிகம் (தொலைத் தொடர்பு டெல்லி அலுவலகம்) வந்து பார்த்திடுவாரு...'' இடைத்தரகர்: (என்னைக் காட்டி) ''நான்தான் இந்த கம்பெனிக்காரங்களை உங்களுக்கு அறிமுகம் செஞ்சு வெச்சிருக்கேன். ரொம்ப நாளா உங்க அப்பாயின்ட் மென்ட் கிடைக்காம கஷ்டப்பட்டு உங்களைப் பார்க்க வெச்சிட்டேன். எனக்கு இதுல என்ன பங்குங்கறதையும் நீங்களே சொல்லிடுங்க, மேடம்...'' காயத்ரி சிரித்துக் கொண்டே தலையாட்டுகிறார். ராஜேஷ்: ''அம்மா யாரையும் விட்டுர மாட்டாங்க. நீங்க கேக்கவே வேண்டியதில்லை. அவங்களை நம்புங்க...'' மீட்டிங் முடியும் தருணத்தில் திரும்பவும் அறைக்குள் இருந்து பீமா வருகிறது. நாம் கொண்டு போயிருந்த ஸ்வீட் பாக்ஸை வாயால் கவ்வி காயத்ரியிடம் கொடுக்கிறது. காயத்ரி: ''எதுன்னாலும் இது என்கிட்டதான் கொடுக்கும். எனக்குப் பிடிச்சதை கொடுக்கும். என் மனசு இதுக்குப் புரியும்!'' என்று சொல்லிக் கொண்டிருக் கும்போதே இடைத்தரகர் தயார் செய்து எடுத்துப் போயிருந்த பி.எஸ்.என்.எல். தொடர்பான டெண்டர் கோப்புகளை பீமா சட்டென்று கவ்விக்கொண்டு ஓடவும்.... காயத்ரி: ''பார்த்தீங்களா... பீமா கவ்வியாச்சு. இந்த வேலையை பீமா செய்யச் சொல்லுது!'' என்றபடியே வாசல் வரை வந்து எங்கள் இருவருக்கும் விடை கொடுத் தார். அடுத்தநாள், ஜூலை 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை 'இடைத்தரகராக' நடித்தவருக்கு போன் செய்தார் 'பிரகாஷ்' என்று அறிமுகப்படுத்திக்கொண்ட நபர். அழைப்பு வந்த செல் நம்பர் 9842299722. ''மினிஸ்டர்கிட்டே பேசியாச்சு... நாங்க அந்த கம்பெனி ஜி.எம்-கிட்டே அர்ஜென்ட்டா பேசணும். முக்கியமா மேடம்தான் பேசணும்னு சொன்னாங்க. அவரைப் பேசச் சொல்லுங்க'' என்கிற ரீதியில் அடுத்தடுத்து போன் வந்துகொண்டே இருந்தது. 'ராஜா' என்றும் 'மினிஸ்டர்' என்றும் காயத்ரி ஸ்ரீனிவாஸ் கூறுவது மத்தியஅமைச்சரும், சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பானவருமான ஆ.ராசாவை குறிப்பிட்டுத்தான் என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அமைச்சரின் பெயரால் நடக்கும் இந்த பேரத்தின் மூலம் நிஜமாகவே கான்ட்ராக்ட்டுகளை முடிக்க முடியுமா... அப்படி இதற்குமுன் முடிக்கப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் கண்டு பிடிக்கும் பொறுப்பை மத்திய - மாநில அரசுகளிடமே ஒப்படைக்கிறோம். இந்த ஆபரேஷனுக்குப் பிறகு நமது இருவர் டீம் பதிவு செய்து கொண்ட விவரங்களையும், எந்த இடத்திலும் அளிக்கத் தயாராகஇருக்கிறோம். காயத்ரி ஸ்ரீனிவாஸ் என்கிற இந்தப் பெண்மணி ஆளுங்கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்தவர்! அவரிடம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸாரே விசாரணை நடத்தினால் எதிர்க்கட்சிகளாலும் மற்றவர்களாலும் அது ஒருதலைபட்சமாக பார்க்கப்படும் என்று முதல்வர் கருதினால்... பேசாமல் இதை சி.பி.ஐ. விசாரணைக்கேகூட விட்டுவிடலாம். இதுவரை காயத்ரி பேசிய தொலைபேசி எண்கள்... இதுவரை அவர்மூலம் முடிக்கப்பட்ட(?) கான்ட்ராக்ட் தொடர்பான தகவல்கள்.... அதில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள்.... இப்படி எல்லா விவரங்களையும் சி.பி.ஐ. மூலமாக வெளி உலகத்துக்குக் கொண்டு வந்து 'அக்னிப் பிரவேசம்' செய்ய தி.மு.க. அரசு தயங்காது என்றே நம்புவோம்! | ||
|
எல்லை மீறும் இலங்கை தூதரகம்
ஈரோட்டிலிருந்துஒரு தாய். நேரில் பார்த்ததில்லை. தொலை பேசினார். நக்கீரன் வாசகர்,""ஈழத்து அகதி, அனாதைக் குழந்தை கள் 20 பேரைத் தாருங்கள், எல்லாம் நான்பொறுப்பேற்கிறேன். மருத்துவம், பொறியியல், வர்த்தக மேலாண்மை... எந்தப்படிப்பென் றாலும் நான் படிக்க வைக்கிறேன்'' என்றார். இந்த உரையாடல்நிகழ்ந்தது மே மாத இறுதியில். மீண்டும் தளபதி பால்ராஜ் அவர்களைப்படித்துவிட்டுப் பேசினார்.
இருவாரங்களுக்கு முன். திருச்சியிலிருந்து வந்திறங்கி விமான நிலையத்தை விட்டுவெளியே வந்து கொண்டிருந்தேன். மஞ்சள் மீட்டரும் கறுப்பு நிறமுமான வாடகைவாகன ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை விட்டிறங்கி ஓடோடி வந்து வணக்கம் சொன்னார்.""தலைவர் இருக்கிறாரில்லெ சார்...?'' என்று படபடப்புடன் கேட்டார். நான்பதில் ஏதும் கூறாது நின்றேன். ""சார்... என்னாலெ வாகனம் ஓட்ட முடியும்,வாரம் ஒருநாள் தர முடியும், மாதம் செலவுகள் போக 300 முதல் 500 வரை மிச்சம்பிடித்து தர முடியும்'' என்றார். உலகினர் கண்களுக்கு ஏழையாகவும் உணர்வில்மிக்க செல்வம் உடையவராகவும் என் முன் நின்ற இந்த மனிதரின் பெயரைக்கேட்குமுன்னரே காவலர் விசில் அடித்ததால் வாகனத்தை எடுக்க ஓடிவிட்டார்.
நெல்லையிலிருந்தும்ஒரு தாய். ஹோமியோபதி மருத்துவர். ""சோனியாகாந்தியும் ஒரு தாய்தானே. 100பெண்கள் நாங்கள் புதுடில்லி வரை நடந்தே போய் அவரது பாதங்களில் விழுகிறோம்.தண்டித்தது போதும், தாயாகிய நீங்கள் எம் தமிழ் உறவுகளை இனஅழித்தலிலிருந்து காப்பாற்றுங்கள் என மன்றாடுவோம்'' என்றார்.
நல்லசிவன்என்ற உணர்வாளர் நெய்வேலி புத்தக விழாவில் நக்கீரன் வெளியிட்ட "வீரம்விளைந்த ஈழம்' படித்துவிட்டுப் பேசினார். நிறைய படிக்கிறவர், தெளிவானபார்வை களும், உறுதியான நிலைப்பாடு களும் உடையவரென்பதும் தெரிந்தது. ""100புத்தகங்கள் வாங்கி அரசுக் கல்லூரிகளின் தமிழ்த் துறைகளுக்கு அனுப்பிவையுங்கள். அச்செலவினை நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்றார்.
"வீரம்விளைந்த ஈழம்' படித்துவிட்டு சராசரி தினம் பத்து பேராவது கடிதம் எழுதுகின்றனர். எல்லா கடிதங்களிலும் இரண்டு விஷயங்கள் இழையோடி நிற்கின்றன. ஏழுகோடி தமிழர்கள் நாம் கையாலாகாதவர்களாய் இருந்துவிட்டோமே என்ற குற்றஉணர்வும், ஏதேனும் செய்ய வேண்டுமென்ற அங்கலாய்ப்பும்.
சென்னையிலுள்ளஸ்ரீலங்காவின் தூதரக அதிகாரிகளும் கூட மிகுந்த உணர்வுக் கொந்தளிப்பிலும்அங்கலாய்ப்பிலும் இருப்பதாக பத்திரிகைத்துறை நண்பர் ஒருவர் கவலையுடன்கூறினார். ""சற்றேறக்குறைய இங்கு எல்லோரையும் சரிக்கட்டி விட்டோம்,நக்கீரனையும் இந்த ஜெகத் கஸ்பரையும் மட்டும் வழிக்குக் கொண்டுவரமுடியவில்லை''யென்ற கோபமாம். ""குறிவைத்து அடித்தால்தான் சரிப்பட்டுவருவார்கள்'' என்று சிலுப்பியதாகவும் சொன்னார்.
அவர்களதுவெற்றிப் பிரகடனம் உண்மைதான். சற்றேறக்குறைய இங்கு முக்கியமான பலரையும்அவர்கள் சரிக் கட்டி விட்டார்கள்தான். கடந்த பொங்கல் விழா காலத்தில் லிமெரிடியன் ஐந்து நட்சத்திர விடுதியில் பத்திரிகை துறை யினருக்காய்ஸ்ரீலங்கா தூதரகம் உல்லாச விருந்து வைத்ததும், 24 பேருக்கு தலா ஐந்துசவரன் தங்கச் சங்கிலி வழங்கியதும், தொடர்ந்து மூன்று நாளிதழ்களுக்கு தலாமுப்பது "லேப்-டாப்' கம்ப்யூட்டர்கள் அன்பளிப்பாக அனுப்பியதும்,தமிழுணர்வின் பாரம்பரியம் கொண்ட ஒரே ஒரு நாளிதழ் மட்டும்அக்கம்ப்யூட்டர்களை ஸ்ரீலங்கா தூதரகத்திற்கே திருப்பி அனுப்பியதும்...இன்னும் யார் யாருக்கு என்னென்ன "சப்ளை அண்ட் சர்வீஸ்' நடந்ததென்பதும்நமக்குத் தெரியும். இவையும் தெரியும். இதற்கு மேலும் தெரியும்.
"மன்னவனும்,நீயோ, வளநாடும் உனதோ?' என்று மதர்த்த கம்பனும், "நெற்றிக்கண் திறப்பினும்குற்றம் குற்றமே' என நிமிர்ந்து நின்ற நக்கீரனும், "தேரா மன்னா செப்புவதுஉடையேன்' என்று உண்மை முழங்கி காற்சிலம்பை வீசிய கண்ணகியும், "நாம்ஆர்க்கும் குடி அல்லோம்' என்று முழங்கிய நாயன்மார்களும் பெருமையுடன்உலவித் திரிந்த இப்புனித பூமியில் இன அழித்தலுக்குத் துணை நின்று கூலிபெறும் கூட்டமொன்று வாழ்வது காண நெஞ்சு பொறுக்குதில்லை தான். அங்குதுடித்துச் சிதறிய தமிழ் உயிர்களின் மரணப் பழியில் இவர்களுக்கும்தூரத்துப் பங்கு உண்டுதான். துரோகி கள், இழிநிலையோர் ஆனாலும் அவர்கள்இந்நிலத்தவர்கள்- நம் தமிழகத்தவர்கள்.
ஆனால்கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ரீலங்கா தூதரகம் தனது எல்லைகளை நம் நிலத்தில்தங்கு தடையின்றி மீறி வருவது மட்டுமல்ல -"இங்கு எதுவும் செய்யலாம், எவரும்கேட்கமாட்டார்கள்' என்ற ஆணவத் திமிரோடு தங்களை நடத்திக் கொண்டு வருகிறது.
நாடுகளுக்கிடையேயானஉறவு ஒழுங்குகளின்படி அவர்கள் இந்திய அரசின் விருந்தினர்களாக இருக்கலாம்.ஆனால் தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை இன அழித்தல் செய்த ஒரு கொலைகாரக்கும்பலின் பிரதிநிதிகள். இன்னும் 3 லட்சம் தமிழ் மக்களை திறந்த வெளிச்சிறையில் அடைத்து அணு அணுவாகக் கொன்றுவிடும் இரக்கமற்ற ஓர் கூட்டத்தின்ஊதுகுழல்கள். சாமிகளும், ஞானிகளும், ராமர்களும் அவர்களது பந்தியில்அமர்ந்து களிக்கட்டும். தமிழர் களது அழிவில் எப்போதும் களிப்பவர் கள்தான்அவர்கள். ஆனால் மானமுள்ள தமிழர்கள் நிறையபேர் இங்கு மிச்சம்இருக்கிறார்கள் என்பதை மட்டும் அவர்கள் நினைவில் கொள்ளட்டும்.
தி.மு.க.,அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., சிறுத்தைகள், ச.ம.க., புதிய தமிழகம் என எல்லா கட்சிகளினது தொண்டர்களுமே துன்புறும் ஈழத் தமிழனுக்காய் இதயத்தில் இரத்தம் சிந்தும்ஈரத்தமிழர் களாகவே இருக்கிறார்கள். கடந்த புதன் கிழமையன்றுவணக்கத்திற்குரிய மேயர் அவர்களை சந்திக்க மாநகராட்சி அலு வலகம்சென்றிருந்தேன். அமர்வு அரங்கில் கூடிநின்றோர் பலர் தி.மு.க.வின் கட்சிப்பொறுப்புகளில் இருப்பவர்கள். எல்லோரும் நக்கீரன் படிப்பதாகக் கூறினார்கள்.தமது உணர்வுகளை வெளிப்படுத்திய பாங்கு உண்மையிலேயே நெகிழ்ச்சி தந்தது.இப்போதைய போப்பாண்டவருக்கு முன்பிருந்த இரண்டாம் ஜான்பால் ஒரு முறைகுறிப்பிட்டார், ""மனித இதயங்கள் தரையில்லாத பாதாளங்கள் போல. எழுச் சிக்குமுறல்கள் எரிமலையாய் எப்போது வெடிக்குமென எவருக்கும் தெரியாது'' என்று.
மதுரையில்கடந்த சனிக்கிழமை நாம் தமிழர் இயக்க கூட்டம் நடந்தது. "முட்கம்பிகளுக்குள்உயிர்வாடும் மூன்று லட்சம் தமிழர்களை விடுதலை செய்' என்று இயக்குநர்சீமான் முழங்கினார். இருபதாயிரத்திற்கும் மேலான இளைஞர்கள் உணர்வுப்பிழம்பாய் திரண்டிருந்தார்கள்.
கரம்பற்றும் நக்கீரன் வாசகர்கள் எல்லோரும் கேட்பது இரண்டு விஷயங்கள். முதலாவதுதலைவரைப் பற்றியது. இரண்டாவது ""ஈழம் இனி சாத்தியமா?'' என்ற கேள்வி. நான்சொல்வது -இன்றில்லா விட்டாலும் என்றேனும் ஒருநாள் நிச்சயம் ஈழம் மலரும்.ஆனால் அதற்கு சில விஷயங்கள் நடந்தாக வேண்டும். அதில் முதலாவது இந்தியாவின்வெளியுறவுக் கொள்கையும், பாதுகாப்புக் கொள்கையும் மாறவேண்டும். அதுநடந்துவிட்டதென்றால் உலக அளவில் ஈழத்திற்கு ஆதரவான கருத்துருவாக்கம் வேகம்பெறும். வேலுப்பிள்ளை பிரபாகரன் இதனைத் தெளிவாக அறிந்திருந்தார். எனதுநேர்காண லின் நிறைவாக அவர் குறிப்பிட்டவை என்றும் மறக்க முடியாதவை:""இந்தியா வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராந்திய வல்லரசென்ப தும்,இந்தியாவைக் கடந்து இப்பகுதியில் உலக ஒழுங்கு பெரிதாக மாறுபட்டு இயங்காதென்பதும் எமக்குத் தெரியும். இந்திய அமைதிப்படையின் வருகையும் தொடர்ந்தபல துன்பியல் நிகழ்வுகளும் எமது உறவுகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டதோடு, எமது இறுதி இலக்கான ஈழம் அமைவதற்கும் சவாலாக நிற்கிறது.இந்நிலையை மாற்ற நேர்மையோடும் உளப்பூர்வமாகவும் விடுதலைப்புலிகள் இயக்கம்தொடர்ந்து முயற்சித்து வருகிறது'' என்றார்.
ஆம்,இந்தியாவின் நிலைப்பாடு முதலில் மாறவேண்டும். எப்படி மாறும்? இதுவிஷயத்தில் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு கருத்தில் இணைவதுஅதற்கான முதற்படி. குறைந்தபட்ச கோரிக்கை யாக 3 லட்சம் மக்களும் உடனடியாகவிடுவிக்கப்பட்டு தங்கள் வாழ் விடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். நிலஉரிமை -கல்வி உரிமை -பண்பாட்டு, மொழி உரிமை -சட்ட -ஒழுங்கு உரிமைஆகியவற்றை உறுதி செய்யும் கூட்டாட்சி அரசியல் சட்ட ஏற்பாடுஆகியவற்றையேனும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துநடுவணரசுக்கு முன்வைக்கவேண்டும். இத்துணை பேரழிவு நடந்துவிட்ட பின்னரும்ஒருவரையொருவர் இழித்தும் பழித்தும் அரசியல் நடத்தாமல் இணைந்து கோரிக்கைவைத்தால் நடுவணரசு கேட்கும், கேட்டுத்தான் ஆகவேண்டும்.
இரண்டுவாரங்களுக்கு முன் ஞானி என்ற நாடகப் பேர்வழி வாரப்பத்திரிகையொன்றில்""இந்தவார மர்மம்'' என தலைப்பிட்டு ""விடுதலைப்புலிகளுக்கும்பிரபாகரனுக்கும் தீவிர கொள்கை பிரச்சாரச் செயலாளராக செயல்படும் பாதிரிகெஜத்கஸ்பரும், புலி எதிர்ப்பை கொள்கை யாகக் கொண்ட மத்திய ஆளுங்கட்சியானகாங்கிரஸ் பிரமுகர் கார்த்திசிதம்பரமும் கஸ்பரின் தமிழ் மையத்தின்நிதிவசூல் நெடும் ஓட்டத்தில் இணைந்து செயல்படுவதன் மர்மம் என்ன?'' என்றுகேட்டிருந்தார்.
முற்போக்குமுகம் தரித்து மிக நீண்ட காலம் தமிழர்களை மோசடி செய்த இவருக்கு நான் பதில்சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் கார்த்தி சிதம்பரம் எனக்கு நண்பர் தான்,அவரது தந்தை எனது மதிப்பிற் குரியவர்தான்.
அக்கட்சியின்ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் போன்றோரும் என் மிகுந்தமதிப்பிற்குரியவர்கள்தான். ஒளிந்து மறைப்பதும் நுட்பமாக இயங்குவதும்மோசடிக்காரர்களின் வேலை. நாம் அதைச் செய்யவேண்டிய தில்லை. நமக்கு இன்றுதேவை எல்லோரது நட்பும், ஞானியைப்போன்ற சூத்திரதாரிகளின் கூடாநட்பைதவிர்த்து அத்தனைக் கட்சித் தலைவர்களும் ஈழத்தமிழருக்காய் இணையும் நாள்விரைவாக வர உழைப்பது நம் யாவரதும் கடமை.
ஈழம் மலர வேறென்ன விஷயங்கள் நடக்க வேண்டும்?
(நினைவுகள் சுழலும்)
Tuesday, July 28, 2009
இந்தியா மீது போர் தொடுக்குமா சீனா?
"இன்னும் மூன்றே ஆண்டுகளில், அதாவது 2012ம் ஆண்டுக்குள் இந்தியா மீது சீனா போர் தொடுக்கப் போகிறது" என்று அடித்துச் சொல்கிறார் பரத் வர்மா. 'இண்டியன் டிஃபென்ஸ் ரிவ்யூ' என்ற புகழ்பெற்ற பாதுகாப்புத் துறை பத்திரிகையின் ஆசிரியரான இவர், தேசத்தின் முக்கியமான பாதுகாப்பு நிபுணரும்கூட!
எதிர்காலம் பற்றிய கணிப்புகள் கலவரமூட்டுபவை. அந்தக் கணிப்பில் கசப்பு மருந்தும் கலந்திருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. இந்தியாவின் 113 கோடி மக்களையும் தூக்கமிழந்து, துக்கத்தில் தவிக்கவிடும் ஒரு கணிப்பைச் செய்திருக்கிறார் பரத் வர்மா. இதற்கு வர்மா பல காரணங்களைப் பட்டியல் போட்டுக் கொடுக்கிறார். எல்லாமே சரியாக இருப்பதுதான் நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
விவசாயத் தொழிலாளர்களின் ஆதரவோடு சீனப்புரட்சியை சாத்தியமாக்கினார் மாவோ. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இறுக்கமான பிடியில் அந்த தேசம் இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற வளர்ச்சியை கிடப்பில் போட்டுவிட்டு, நகர்ப்புறங்களை தொழில்மயம் ஆக்குவதில் ஆர்வம் காட்டியது அரசு. இந்த தொழில்புரட்சி விஸ்வரூபம் எடுத்ததன் விளைவாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் என எந்த வித்தியாசமும் இன்றி, எல்லா நாடுகளின் மார்க்கெட்டையும் சீனப் பொருட்கள் நிறைத்தன. 'மேட் இன் சைனா' என்ற முத்திரை கொண்ட பொருள், மலிவான விலையில் கிடைக்காத நாடே இல்லை என்கிற அளவுக்கு சீனாவின் ஏற்றுமதி அபரிமிதமாக இருந்தது.
இப்போது உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், சீன பொம்மைகளையும் எலெக்ட்ரானிக் அயிட்டங்களையும் சீந்துவாரில்லை. ஏற்றுமதி வர்த்தகம் அதல பாதாளத்துக்குச் சரிந்துவிட, சீன நிதிச் சந்தையிலிருந்து கோடிக்கணக்கான டாலர் அந்நிய முதலீடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. அந்நியச் செலாவணி கையிருப்பு பெரிதும் குறைந்துவிட, வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.இன்னொரு பக்கம் கிராமப்புற விவசாயிகள் மத்தியில் எழுந்த கசப்புணர்வு, அரசுக்கு எதிரான போராட்டமாக ஆங்காங்கே வெடிக்கிறது.
எப்போதும் இல்லாதபடி இனக்கலவரங்களும் புதிய முரண்பாடுகளை உருவாக்க, சீன சமுதாயத்தின் மீது அரசின் பிடி தளர்ந்து வருகிறது. அரசின் எந்த முடிவையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிற இரண்டு தலைமுறைகளை உருவாக்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இந்த திருப்திகளை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை. போருக்கு இது முதல் காரணம்!
இரண்டாவது காரணம் பாகிஸ்தான்… இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்கும்விதமாக பாகிஸ்தான் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் சீனாவின் ஆசி உண்டு. தீவிரவாத முகாம்களை அமைத்து, பயிற்சி கொடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ வைக்கும் குழப்பங்களுக்கும், வங்க தேசம், நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தலைவலி தரும் தீவிரவாத இயக்கங்களுக்கும் பாகிஸ்தான் நேரடிக் காரணமாக இருக்கிறது என்றால், சீனா மறைமுகக் காரணம்! இப்போது தாலிபன் அமைப்பு பாகிஸ்தானிலேயே புகுந்து குழப்பத்தை ஏற்படுத்த, பாகிஸ்தானின் முழு கவனமும் அங்கு குவிந்துவிட்டது.அமெரிக்காவும் அங்கேயே பார்த்துக் கொண்டிருக்க, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இப்போது பெரிய அளவில் எதுவும் செய்யமுடியாத நிலை.
மூன்றாவது காரணம் அமெரிக்கா… அணுசக்தி ஒப்பந்தத்தில் ஆரம்பித்து, ராணுவக் கூட்டுப்பயிற்சி வரை அமெரிக்காவும் இந்தியாவும் ரொம்பவே நெருங்கி வருவது சீனாவின் கண்களை உறுத்துகிறது. ஆசியாவின் வல்லமை பெற்ற சக்தியாக,சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவை உருவாக்குவதுதான் அமெரிக்காவின் நோக்கமோ என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்திருக்கிறது.
இதுபோன்ற சூழலில் மக்களின் கவனத்தை திசைதிருப்பி,அவர்களிடம் தேசபக்தியை ஏற்படுத்தவும், ஆசியாவின் 'சூப்பர் தாதா' எப்போதும் சீனாதான் என்பதை நிரூபிக்கவும், சீனா இந்தியா மீது போர் தொடுக்கும் என்கிறார் பரத் வர்மா. ''வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளுக்கு மறைமுக உதவி செய்வது சீனாதான்.வடகொரியாவை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் கண்டித்துவரும் வேளையில் அந்தநாடுகளில் ஏதோ ஒன்றின் மீது சீனா போர் தொடுக்கலாமே என்ற கேள்வி எழலாம். பொருளாதார மந்தநிலை நிலவும் வேளையில், இந்த நாடுகளை பகைத்துக்கொண்டால் பொருளாதாரத்தடை போன்ற நடவடிக்கைகளால் சீனா இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும். இந்தியா மாதிரியான தன்னைவிட பலம் குறைந்த தேசத்துடன் போரிடவே அது விரும்பும். வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பகுதியை அபகரித்துக்கொள்ளவும் இந்தப்போர் உதவும். இப்படி ஒருபுறம் சீனாவும், இன்னொருபுறம் பாகிஸ்தானும் போருக்கு வந்தால், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும்'' என்கிற பரத் வர்மா, ''இப்போதைய நிலையில் இப்படி ஒரு சூழ்நிலைக்கு இந்தியா தயாராக இல்லை'' என வருத்தத்துடன் சொல்கிறார்.
இமயமலைக்கு இருபுறமும் இருக்கும் இந்த இரண்டு தேசங்களுக்கு இடையே நட்புறவை வளர்க்க எத்தனையோ முயற்சிகளை இந்தியா எடுத்திருந்தாலும்,இமயமலை அளவுக்கு நம்பிக்கையின்மை இருதரப்பிலும் வளர்ந்திருக்கிறது என்பதுதான் உண்மை. இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நேரத்தில் சீனாவில் புரட்சி தீவிரமாக இருந்தது. தேசியவாதிகள்பக்கமோ, புரட்சியாளர்களான கம்யூனிஸ்டுகள் பக்கமோ சாயாமல் இந்தியா நடுநிலை வகித்தது.கம்யூனிச தேசமாக சீனா உதயமானபோது அதை அங்கீகரித்த, கம்யூனிச ஆட்சியற்ற இரண்டாவது நாடு இந்தியா. (முதல் நாடு பர்மா). ஐக்கிய நாடுகள் சபையில் சீனா இணைவதற்கும் இந்தியா ஆதரவளித்தது. பரஸ்பரம் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் மதித்து, அடுத்த நாட்டு உள் விவகாரங்களில் தலையிடாமல் இணைந்து செயல்பட வேண்டும்; எல்லை பிரச்னை போன்ற விஷயங்களை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என 'பஞ்சசீலக் கொள்கை' 1954ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. சீன பிரதமர் சூ என் லாய் இந்தியாவுக்கு வந்து நட்புறவுடன் நேருவோடு கைகுலுக்கினார்.
ஆனால் உதட்டளவிலான இந்த நட்பை நீண்ட நாட்கள் நீடிக்க விடவில்லை சீனா. 58-ம் ஆண்டில், அசாம் மாநிலத்தின் வடபகுதியை தங்கள் தேசத்தின் ஒரு பகுதியாக சேர்த்து சீன அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மேப் வெளியாக, இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரின் லடாக் பகுதியிலுமாக சேர்த்து சுமா 40 ஆயிரம் சதுர மைல் பரப்புள்ள பகுதியை, 'இவை எல்லாமே சீனாவின் அங்கம்' என வெளிப்படையாக சொந்தம் கொண்டாடினார் சூ என் லாய். அடுத்த ஆண்டே திபெத்தில் சீனர்களின் ஆக்கிரமிப்புப் படை நிகழ்த்திய அட்டகாசங்களைத் தாங்கமுடியாமல் இந்தியா வந்து தஞ்சம் புகுந்தார் தலாய் லாமா. அவருக்கு இந்திய அரசு அடைக்கலம் கொடுக்க, சீன – இந்திய உறவில் வெளிப்படையான விரிசல் ஆரம்பித்தது.
லடாக் மற்றும் சிக்கிம் பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தருவோம் என சர்வதேச வட்டாரங்களில் அவதூறு பிரசாரங்களை ஆரம்பித்த சீனா, 1962ம் ஆண்டு திடீரென எல்லையில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் தலைப்பகுதியாக இருக்கும் காஷ்மீரில் இரண்டை கொண்டைகள் போலத் தெரியுமே… அதில் வலதுபுறக் கொண்டை ஏரியா 'அக்சாய்சின்' பகுதி. ஆக்கிரமித்த திபெத்தோடு சாலைத் தொடர்புகளை ஏற்படுத்த, சீனாவுக்கு இந்த ஏரியா தேவை. இதற்காகவே போர் ஆரம்பித்தது. தன் லட்சியம் நிறைவேறியதும், ஆறே மாதங்களில் போர் முடிந்துவிட்டதாக சீனாவே அறிவித்தது.
காஷ்மீர் மாநிலத்தில் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியை இப்படி வசப்படுத்தி வைத்திருக்கிறது சீனா. இது போதாதென்று, இன்னும் கொஞ்சம் இடங்களை அது பாகிஸ்தானிடமிருந்து வாங்கியது. ஏற்கனவே சுதந்திரம் வாங்கிய கையோடு, காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான், காஷ்மீரின் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
அதிலிருந்து 5120 சதுர கிலோமீட்டர் பகுதியை அது 63ம் ஆண்டு, சீனாவுக்கு தானமாக வழங்கி,தன் நட்பை பலப்படுத்திக் கொண்டது. கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, இப்படிப் போன இடங்களில் ஒரு கையகல நிலத்தைக்கூட நம்மால் திரும்பிப் பெறமுடியவில்லை என்பதுதான் நிதர்சனம்!
இந்தியாவுடனான வர்த்தக உறவுகளில் அக்கறை கொண்டிருப்பது போல சீன தலைவர்கள் அவ்வப்போது டெல்லி வந்து நடிக்கிறார்கள்; நம் பிரதமரோ, ஜனாதிபதியோ பெய்ஜிங் போகும்போதும் நடிக்கிறார்கள். ஆனால் சீன பொருட்கள் அதிக அளவில் இந்தியாவில் இறக்குமதி ஆகுமாறு பார்த்துக் கொள்வதுதான் அவர்களின் வேலையாக இருக்கிறது. என்ன இருந்தாலும், 113 கோடி மக்கள் கொண்ட உலகின் பெரிய மார்க்கெட்டில் வியாபாரம் செய்யாமல் இருக்கமுடியாதே!
அதேசமயம், 'எல்லை பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம்' என ஒருபக்கம் சொல்லிக்கொண்டே, வேட்டியை உருவும் கலையை நன்றாகவும் செய்கிறார்கள் அவர்கள். அருணாசல பிரதேசத்தின் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியை தங்கள் நிலம் என்று சொந்தம் கொண்டாடும் சீனா, அதை இந்தியா ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பிரசாரம் செய்து வருகிறது.
'தெற்கு திபெத்' என அருணாசல பிரதேசத்தை சீனா அழைக்கிறது. கடந்த ஏப்ரலில் அருணாசல பிரதேசத்தில் சில நீர்மின் திட்டங்களை செயல்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி கேட்டது இந்திய அரசு. 'அது சர்ச்சைக்குரிய பகுதி. எங்கள் இடம். அதில் இந்தியா எப்படி அணைகளும் மின் நிலையங்களும் கட்டலாம்?' என்று எதிர்கேள்வி கேட்டு, நிதியுதவி கிடைக்காமல் தடுத்துவிட்டது சீனா.
இந்த ஏரியாவில் அடிக்கடி விளையாட்டுத்தனமாக சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதும், அப்புறம் கொஞ்ச நேரத்தில் சிரித்துக்கொண்டே திரும்பிப் போய்விடுவதும் அடிக்கடி நடக்கிறது. சமீபத்தில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆண்டறிக்கை, 'காஷ்மீரில் தாங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் இந்தியப் பகுதிகள் வழியாக சீனாவும் பாகிஸ்தானும் சாலை தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக' தெரிவிக்கிறது.
அதாவது இந்திய நிலத்தை ஆக்கிரமித்து, ரோடு போட்டு, ஆயுதங்களையும் தீவிரவாதிகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள். அருணாசலப் பிரதேசத்தில் இந்திய எல்லையை ஒட்டி, தனது படைப்பிரிவில் 30 டிவிஷன்களை சீனா குவித்து வைத்திருப்பதாகவும், அவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி ஊடுருவல் நிகழ்த்துவதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது. 30 டிவிஷன் என்பது கிட்டத்தட்ட 3 லட்சம்ராணுவ வீரர்கள். இந்திய & சீன எல்லை கிட்டத்தட்ட 4050 கிலோமீட்டர் நீளமானது. இந்த எல்லையின் சீனப் பகுதியில் சாலை வசதிகளும் ராணுவத்துக்குத் தேவையான கட்டிட வசதிகளும் சமீப ஆண்டுகளில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டன.
திடீரென போருக்குத் தேதி குறித்தால், ஒரே நாளில் பல படைப்பிரிவுகளை இங்கே கொண்டுவந்து இறக்க சீனாவால் முடியும். நம் பகுதியில் மண் ரோடுகள்தான் அதிகம். மாட்டு வண்டிகளில் ராணுவ வீரர்கள் போவது சாத்தியம் என்றால் நாமும் இதே 'வேகத்தில்' படைகளைக் குவிக்கலாம்!
பிரச்னை இதோடு முடியவில்லை… பாகிஸ்தானுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணை போன்ற பல ஆயுதங்களைக் கொடுத்திருக்கும் சீனா, பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை நவீனப்படுத்துவதில் ஏகப்பட்ட பணத்தைச் செலவிடுகிறது. அநேகமாக இதற்குப் பிரதிபலனாக அங்கு சீனா கடற்படை தளம் அமைத்துக்கொள்ள பாகிஸ்தான் அனுமதி வழங்கக்கூடும்.
இதேபோல வங்க தேசத்துக்கு போர் விமானங்களை வழங்கியிருக்கும் சீனா, அந்த நாட்டுக்கு அணு உலை அமைத்துத் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. இதற்கு கைமாறாக, சிட்டகாங் துறைமுகத்தில் தனது கடற்படை கப்பல்களை நிறுத்திக்கொள்ள சீனா அனுமதி வாங்கப்போகிறதாம்!
இலங்கையிலும் இதே கதைதான்… புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்த எஃப் 7 ரக விமானங்கள் உட்பட ஏராளமான ஆயுதங்களை அளித்த சீனா, அங்கிருக்கும் ஹம்பந்தோடா துறைமுகத்தை நவீனப்படுத்தி வருகிறது. அநேகமாக இங்கும் அதன் கடற்படை முகாமிட வாய்ப்பிருக்கிறது.
நேபாளத்தில் மட்டும்தான் சீனா மேற்கொள்ளும் முயற்சிகளை இந்தியாவால் முறியடிக்க முடிந்திருக்கிறது. பிரசாந்தா தலைமையில் அமைந்த மாவோயிஸ்ட் அரசு, இந்திய – நேபாள ஒப்பந்தத்தை முறிக்க முயன்றது. பிரசாந்தாவுக்கு சீனாவுன் முழு ஆசி உண்டு. ஆனால் நேபாள காங்கிரஸ் கட்சி சீனாவை எதிரியாகவும், இந்தியாவை நண்பனாகவும் பார்க்கும் கட்சி என்பதால், அங்கு சீன முயற்சிகள் ஜெயிக்கவில்லை.
இருந்தபோதிலும் இந்தியாவைச் சுற்றி கண்காணிப்பு மற்றும் படை வளையங்களை குவிப்பதில் சீனா வெற்றிபெற்று விட்டதாகவே தோன்றுகிறது. ஏற்கனவே நடந்த இந்திய & சீனப் போரில் விமானப்படையோ, கப்பற்படையோ பயன்படுத்தப்படவில்லை. காரணம், அது டெக்னாலஜி வளராத காலத்தில் மலைமுகடுகளில் நிகழ்ந்த யுத்தம். இப்போது நவீன போர்க்கப்பல்களும் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளுமே போர் வெற்றிகளை தீர்மானிக்க வல்லவை எனும்போது, அந்த சக்தியில் சீனாவை மிஞ்சும் திறன் நமக்கு இல்லை என்பது கவலை தரும் உண்மை!
இன்னொரு பக்கம் பாகிஸ்தானும் எல்லைப் பிரதேசத்தில் பதுங்கு குழிகளையும் கண்காணிப்பு கோபுரங்களையும் அதிகம் அமைத்து வருகிறது என்ற செய்தியும் வருத்தம் தருகிறது. ''மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தக் கட்டுமானங்கள் அதிகமாகி இருக்கிறது. நாங்கள் எத்தனையோ ஆட்சேபங்கள் தெரிவித்தும் அவர்கள் தரப்பில் எந்த மாற்றமும் இல்லை'' என இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் யு.கே.பன்சால் தெரிவித்திருக்கிறார்.
பரத் வர்மாவின் ஜோதிடம் பலிப்பதற்கு இப்படி ஏராளமான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அது பலிக்காமல் போகக் கடவது என்றே நினைப்போம். சீன பாதுகாப்பு நிபுணர்களும் அப்படித்தான் ரீயாக்ட் செய்திருக்கிறார்கள். 'இப்படி பாதுகாப்பு நிபுணர்களை பேசவிட்டு, ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது' என குற்றம் சாட்டுகிறார்கள் சீன நிபுணர்கள்.
சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளைவிட ராணுவத்துக்கு பல மடங்கு அதிகம் செலவிடுவது என்பது இந்தியா போன்ற வறிய நாடுகளுக்கு சாபம்! அந்த சாபம் பாகிஸ்தான் பிரிவினைக் காலத்திலிருந்தே நம் காலைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.
அது இன்னும் மோசமாவதற்கு சீனா காரணமாவதுதான் வருத்தம் தருகிறது.