Wednesday, April 7, 2010

விடுதலைப் புலிகளின் மறைவின் பின்னால் தமிழர்களின் திண்டாட்டம்?: பிபிசி

விடுதலைப் புலிகளின் மறைவின் பின்னால் தமிழர்களின் திண்டாட்டம்?: பிபிசி சொல்கிறது
 
கடந்த வருடம் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவில் இடம்பெற்றுவந்த இனப்போர் முடிவுக்கு வந்தது. 

அதேநேரம், பெரும்பான்மையினச் சிங்களவர்களின் ஆதரவினைப் பெற்றிருக்கும் குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்ச பாராளுமன்றில் தனது பலத்தினை மேலும் அதிகரிப்பதற்கு விரும்புகிறார். 

எதிர்வரும் வியாழனன்று இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ராஜபக்சவினது அரசாங்கம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது இவ்வாறிருக்க, தங்களது எதிர்காலம் எவ்வாறிருக்கும் என பெரும்பாலான சிறுபான்மைத் தமிழர்கள் அங்கலாய்க்கிறார்கள் என 

பி.பி.சியின் செய்தியாளர் Charles Haviland யாழ்ப்பாணத்திலிருந்து எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

Charles Haviland தொடர்ந்து எழுதியுள்ளதாவது: 

மேளதாளங்கள் முழங்க நல்லூர்க் கோவிலில் முருகப் பெருமான் வீற்றிருக்கிறார். 

பாடசாலை மாணவர்களாலும், தெற்கிலிருந்து வந்த சிங்களவர்களாலும் ஆலயம் நிறைந்து காணப்படுகிறது. 

போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வரமுடிந்ததையிட்டுச் சிங்கள பௌத்தர்கள் அக மகிழ்கிறார்கள். 

குடாநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்யும் சிங்களவர்களை இந்து மதத்தினைச் சேர்ந்த தமிழர்கள் வரவேற்கிறார்கள். 

வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் முருகன் கோவிலில் பௌத்த மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்த ஆண்கள் தங்களது மேலாடையினைக் கழற்றிவிட்டு ஆலயத்தினுள் சென்று வழிபடுகிறார்கள். 

ரமணன் என்ற இந்த மாணவன் தனது ஏனைய மூன்று நண்பர்களுடன் நல்லூர் முருகனிடத்தில் வழிபடுவதற்கு வந்திருந்தான்.

நாட்டினது இனப்போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் தங்களது வாழ்வு பெரிதும் மேம்பட்டிருப்பதாக இந்த மாணவன் கூறுகிறான்.

ஆனால் கடந்த மே மாதத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு அழித்தொழிக்கப்பட்டு விட்ட பின்னரும், படையினர் தம்மீது தொடர்ந்தும் கட்டுப்பாடுகளை விதிப்பதையிட்டு இவன் எரிச்சலடைகிறான். 

'விடுதலைப் புலிகள் இனியும் இல்லை என சிறிலங்கா அரசாங்கம் கருதினால் பின்னர் ஏன் வீதித் தடைகளைத் தொடர்ந்தும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்' என ரமணன் கேள்வி எழுப்புகிறான். 

'விடுதலைப் புலிகள் இல்லையெனில், இராணுவத்தினர் ஏன் இங்கு பிரசன்னமாய் இருக்கவேண்டும். எங்களை எங்கள் பாட்டிற்கு இருக்க விடலாமே. சோதனைச் சாவடிகள் அனைத்தையும் கடந்து கோவிலுக்கு வருவதற்கு மிக நீண்ட நேரம் எடுக்கிறது' என ரமணன் ஆதங்கப்படுகிறான். 

'கலாச்சாரச் காட்டுமிரண்டித்தனம்' 

துறைமுக நகரமாகிய திருகோணமலையில் வசிக்கும் மக்கள் தங்களது வாழ்வில் பெரிதும் நெருக்கடி குறைந்திருப்பதாக கூறுகிறார்கள். 

ஆனால் திருகோணமலையில் மிகமோசமான வன்முறைகள் கடந்த காலங்களில் நிகழ்திருக்கின்றன. இந்த வன்முறைகளின் விளைவாக மனவேதனையுடனேயே மக்கள் வாழ்க்கையினைத் தொடர்கிறார்கள். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராகிய இரா.சம்பந்தன் திருகோணமலையிலேயே வசித்து வருவதோடு அங்கு தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டு வருகிறார். 

விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்த கூட்டமைப்பு நாட்டிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுள் முதன்மையான கட்சியாகத் திகழ்கிறது. 

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களது கலாச்சாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகச் சம்பந்தன் குற்றம் சுமத்துகிறார். 

'அண்மைய நாட்களில் இந்துக்களின் வணக்கத் தலங்கள் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. 

தமிழர்களது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அத்துமீறி, ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் தொடர்கின்றன. 

கேட்பார் யாருமின்றி, கலாச்சாரக் காட்டுமிரண்டித் தனத்திலும் தெய்வ நிந்தனைச் செயற்பாடுகளிலும் வேண்டுமென்றே ஈடுபடும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று இங்கு செயற்பட்டு வருகிறது' என சம்பந்தன் தொடர்ந்து தெரிவித்தார். 

கடும் போக்காளர்கள் எனக் கருதிய சில பாராளுமன்ற உறுப்பினர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் வெளியேற்றியிருந்தது. 

தமிழ் பேசும் மக்களின் கலாச்சார அடையாளத்தினைத் தொடர்ந்தும் பேணிக்காக்கும் வகையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்குச் சுயாட்சி ரீதியிலான தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என கூட்டமைப்புத் தொடர்ந்தும் வாதிட்டு வருகிறது. 

சிறுபான்மையினர் என எவருமில்லை? 

தமிழர்கள் என்னதான் துன்ப துயரங்களுக்கு முகம்கொடுத்தலாலும் அவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கூட்டமைப்புக்கு வாக்களிப்பார்கள் என்றில்லை. 

அரசியல் ரீதியில் அவருக்கு இடஞ்சலாக இருக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக குடியரசு அதிபர் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். 

நடைபெற்று முடிந்த குடியரசு அதிபர் தேர்தலில் குடாநாட்டில் கடுந்தோல்வியைச் சந்தித்த ராஜபக்ச, தீவின் மறுமுனையில் வசிக்கும் ஒரு சிங்களவனாகவே யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்தினை மேற்கொண்டிருந்தார். 

துரையப்பா விளையாட்டரங்கில் கூடியிருந்த மிகச் சொற்பமான தமிழ் மக்கள் மத்தியில், காதை அதிரவைக்கும் சத்தத்துடன் இரைந்து கொண்டிருந்த ஒலிபெருக்கியில் ராஜபக்ச தமிழில் உரை நிகழ்த்தினார். 

அங்கு கூடியிருந்த அரசாங்கத்திற்கு ஆதரவானோர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக அவர் எதனையும் கதைக்கவில்லை. 

மாறாக, வடக்கின் அபிவிருத்தி பற்றிப் பேசினார். பாடசாலைகள், வீடுகள் மற்றும் தொடருந்து சேவைகள் என்பனதான் யாழ்ப்பாண மக்களுக்கு உள்ள தற்போதைய தேவை எனக் கூறினார். 

அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக அண்மைய நாட்களில் ராஜபக்ச எதனையும் பேசுவதில்லை. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பெரும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இலங்கையில் 'சிறுபான்மையினர் என எவருமில்லை' என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

தமிழர்கள் பாரபட்டசமான நடத்தப்பட்டமைக்கு எதிராகச் செயற்படும் ராஜபக்ச வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கிறார் எனச் சிலர் கருதிறார்கள். 

ஆனால், குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கதினது செயற்பாடுகள் சிறுபான்மையினரது உரிமைகள் அடிப்பட்டுப்போவதற்கு வழிசெய்துவிடும் எனப் பலர் அஞ்சுகிறார்கள். 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் சிலர் மகிந்த ராஜபக்சவினது கருத்துடன் தெளிவாக முரண்படும் கருத்துக்களைக் கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் சிறி சரவணபவான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகிறார். 

இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கென சிறப்பான உதவிகள் வழங்கப்படவேண்டும் என அவர் கூறுகிறார். 

சிறிலங்காவின் அரச துறைகளிலுள்ள தொழில் வாய்ப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு வழங்கப்படவெண்டும் எனச் சரவணபவான் கூறுகிறார். 

தவிர, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். 

ஆனால், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு விசேட முக்கியத்துவம் கொடுப்பதற்கு ராஜபக்ச விரும்பவில்லை என்றே பலரும் நம்புகிறார்கள். 

'இந்த எண்ணம் தவறானது. தொடர் வன்முறையினால் பாதிக்கப்பட்டிருக்கும் நாங்கள் அங்கவீனமடைந்த ஒரு மக்கள் கூட்டம். பொதுவாகவே அங்கவீனமடைந்தவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவேண்டும்' என்றார் சரவணபவான். 

அனைத்து அதிகாரங்களும் பொருந்திய குடியரசு அதிபர் 

சிறிலங்காவின் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது வாக்குகளைக் கவருவதற்குப் பலதரப்பட்டோர் முனைந்துகொண்டிருக்கிறார்கள். 

தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுக்களும் தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றன. 

விடுதலைப் புலிகளுகளுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தமிழ் மக்களின் அதிக வாக்குகளைப் பெறும். 

தமிழ் மக்களின் மத்தியில் தங்களின் குரலை எடுபட வைப்பதற்காகக் போராடிவரும் மிதவாதத் தமிழ் அரசியல் தலைமைகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. 

எண்ணற்ற மிதவாத தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

தன்னைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியல் தலைவர்கள் எவருமே சரியாகச் செயற்படவில்லை என யாழ் நகரத்தின் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த நாற்பது வயதுடைய திருமதி வனஜா உமாகாந் கூறுகிறார். 

'நாங்கள் தமிழர்களாக இருப்பதனாலும் எங்களுக்குச் சரியான தலைமைத்துவம் இல்லாதமையினாலும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுத்து வருகிறோம்' என்றார் அவர். 

'தமிழர்களது பிரச்சினையினை நன்கு விளங்கிக்கொண்ட, அனுபவ முதிர்ச்சிபெற்ற ஒரு அரசியல் தலைவர் எங்களுக்குக் கிடைக்கும்போதுதான் எங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தினை நாங்கள் முன்னெடுப்பதோடு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம்' என வனஜா உறுதியுடன் கூறுகிறார். 

நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்ச அதிக வெற்றி பெறுவதோடு அதிக அதிகாரத்தினைத் தன்னகத்தே கொண்ட ஒருவராகவும் இருப்பார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கூட்டாட்சியினை வலியுறுத்திவரும் அதேநேரம் தமிழர்களுக்கு ஏதாவது வழங்கப்படவேண்டும் என குடியரசு அதிபரின் கட்சியினைச் சேர்ந்த சிலர் வாதிட்டு வருகிறார்கள். 

ஆனால், சகல அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட குடியரசு அதிபர் என்ற வகையில் ராஜபக்ச மனம் வைக்காவிட்டால் இவை வெறும் கைவிட்டப்பட்ட நம்பிக்கையாகவே இருக்கும். 

தமிழர்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக எனக்கூறி கடந்த பல பத்தாண்டுகளாக உள்நாட்டு யுத்தம் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் தங்களது எதிர்காலம் தொடர்பாக எந்தவிதமான செல்வாக்கினையும் செலுத்த முடியாதவர்களாகவே தாம் இருப்பதாகச் சிறுபான்மைத் தமிழர்கள் உணர்கிறார்கள்.

source:puthinappalakai

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails