ராஞ்சி: சட்டீஸ்கரில் நக்சல்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் சி.ஆர்.பி.எப்., போலீசார் 70 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். நக்சல்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவர் என மத்திய உள்துறை அமைச்சர் கூறி வந்தாலும், நக்சல்கள் தாக்குதலே நாளுக்கு நாள் பெருகி வருகிறது. நக்சல்கள் ஒழிப்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்படாது என்ற மத்திய அரசு முடிவு பரிசீலிக்க வேண்டிய தருணத்திற்கு வந்திருக்கிறது.
பீகார், ஒரிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் நக்சல்கள் உள்ளனர். இந்த நக்சல்களை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு கீரின் ஹன்ட் என்ற திட்டக்குழுவை அமைத்து இவர்கள் மீது கடும் தாக்குதல் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த முடிவு நக்சல்களுக்கு கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கூறிய மாநிலங்களில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரயில் தண்டவாளம் தகர்ப்பு , கண்ணிவெடி வைத்தல் , போலீஸ் முகாம் மீது தாக்குதல் என இவர்கள் சதிச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மேற்குவங்கம் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் நக்சல்கள் ஒழிப்பு பணி குறித்து ஆய்வு செய்தார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து லால்கார் பகுதியில் நக்சல்கள் கண்ணி வெடி தாக்குதல் நடத்தினர். நக்சல்கள் ஆயுதங்களை கீழே போடாதவரை அவர்களிடம் பேச்சுக்கே இடமில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
1000 க்கும் மேற்பட்ட நக்சல்கள் வந்தனர் : இந்நிலையில் இன்று ( செவ்வாய் கிழமை ) காலை சட்டீஸ்கர் மாநிலம் தண்டவத்தா மாவட்டத்தில் மத்திய போலீஸ் படையினர் மீது நக்சல்கள் அதிரடி தாக்குதலை நடத்தினர். 1000 க்கும் மேற்பட்ட நக்சல்கள் கூட்டமாக வந்து பயங்கர ஆயுதங்கள் கொண்டு எதிரே சென்று கொண்டிருந்த வீரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். பலர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. மேலும் பாதுகாப்பு படையினரின் வாகனமும் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. தொடர் சண்டையில் பல இடங்களில் கண்ணி வெடிகளை வெடிக்க செய்தனர். காட்டுப்பகுதிக்குள் வனம் தீப்பற்றி எரிகிறது. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் மற்றும் கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கூடுதல் கவனம் இல்லையே : நக்சல்கள் எந்த பகுதியில் பதுங்கி இருக்கின்றனர் என்ற முழு விவரத்தை மத்திய அரசு எடுத்து அதன்படி உரிய தாக்குதல் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. நக்சல்கள் தரும் நெருக்கடியே அதிகரிக்கிறது. சட்டீஸ்கர் மாநிலம் தண்டவத்தா மாவட்டத்தில் நக்சல்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் போலீஸ் தங்கி இருந்த முகாமிற்குள் நுழைந்து பலரை சுட்டுக்கொன்றனர். எனவே மத்திய போலீஸ் படையினர் தண்டவத்தா மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமே என்ற கேள்வியும் எழுகிறது.
சிதம்பரம் அதிர்ச்சி : இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். நமது போலீசார் நக்சல்கள் சதியில் சிக்கி விட்டனர். இந்த தாக்குதல் கண்மூடித்தனமான, காட்டு மிராண்டித்தனம் என்று கண்டனத்தில் கூறியுள்ளார். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பகுதிக்கு தற்போது கூடுதல் படையை அனுப்பியுள்ளோம் என்றார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment