பாயும் புலிக்கொடியுடன் தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி
தமிழகத்தின் முன்னனி திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான திரு சீமான் அவர்கள் நாம் தமிழர் என்ற கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளதுடன், வீறுகொண்டு பாயும் புலியையும் அதன் கொடியாக வெளியிட்டுள்ளார்.
தமிழீழம் உருவாக்கப்படுவதே தமிழகத்தின் தமிழ் மக்களுக்கு ஒரு உளவியல் ஆதரவை வழங்கும் என கடந்த சனிக்கிழமை (10) நடைபெற்ற கொடி அறிமுக விழாவில் பேசும் போது சீமான் தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எதிர்வரும் மே 18 ஆம் நாள் மதுரையை நோக்கி மிகப்பெரும் பேரணி ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். ஈழத்தமிழ் மக்களின் போரட்டம் இராணுவ நடவடிக்கை மூலம் நசுக்கப்பட்ட இந்த நாள் தமிழ் மக்களுக்கு ஒரு கறுப்பு தினமாகும்.
இந்த நாளை எமது புதிய கட்சி துக்கதினமாக கடைப்பிடிக்கும். நாம் தமிழர் கட்சி ஒரு மாற்றுக்கருத்துள்ள அரசியல் கட்சியாகும். நாம் இன மற்றும் மத வேற்றுமைகளை கடந்தவர்கள்.
எமது கட்சியில் உள்ள தலைவர்கள் பொன்னாடையை ஏற்கொள்ளப் போவதில்லை (இது தமிழகத்தின் பாரம்பரிய விளம்பர பிரச்சாரம்) நாம் புத்தகங்களையே ஏற்றுக்கொள்வோம். தமிழீழம் என்பது ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்குரிய நாடல்ல அது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் தாயகமாகவே அமையும்.
சிறீலங்கா அரசு போர்க்குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக அயர்லாந்தில் உள்ள மக்கள் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் அதனை தமிழக சட்டசபை பரிந்துரை செய்ய மறுத்துள்ளது.
18 மில்லியன் சிங்கள மக்கள் தமிழ் மக்களை வெற்றிகொண்டுள்ளனர் ஆனால் நாம் 75 மில்லியன் மக்கள் இங்கு செயல்திறன் அற்று உள்ளோம். இந்தியாவில் உள்ள 15 மில்லியன் சீக்கியர்கள் தமது உரிமைகை பெற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அதனை பெறவில்லை.
ஏன்??
சீக்கியர்கள் சீக்கியர்களாகவே உள்ளனர் ஆனால் தமிழர்கள் தமிழர்களாக இல்லை.
தமிழகத்தை தமிழர்கள் ஆட்சி செய்ய வேண்டும். புலிச்சின்னம் சோழர்களில் சின்னம். எனது அண்ணண் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சின்னமும் அதுவே. எனவே தான் நாம் அதனை வரித்துக் கொண்டுள்ளோம்.
தமிழ் மக்களை காப்பாற்ற வானத்தில் இருந்து யாரும் வரமாட்டார்கள். முன்னரை போல சினிமாவில் இருந்தும் வரப்போவதில்லை. நீங்கள் தான் உங்களின் உரிமைக்காக போராட வேண்டும். உங்கள் விடுதலை உங்களின் கையில் உள்ளது.
போரிடாமல் இந்தியா உங்களுக்கு சுதந்திரத்தை தரப்போவதில்லை. அமெரிக்கா வந்து உங்களை விடுவிக்காது. சீனாவும், யப்பானும் உங்களுக்கு உதவாது. சிங்கள மக்கள் உங்களுக்கு எதனையும் இலகுவாக தரப்போவதில்லை.
தமிழீழத்தை உருவாக்க உலகில் உள்ள எந்த நாடும் உதவிக்கு வராது. நாமே அதனை உருவாக்க வேண்டும்.
இந்தியாவின் ஆதரவுகள் இன்றி தமிழீழம் உருவாகாது, ஆனால் தமிழகத்தின் அழுத்தங்கள் இன்றி இந்தியா உதவிக்கு வராது. சீமானோ, வைகோவோ, நெடுமாறனோ அல்லது திருமணவாளனோ ஆதரவுகளை தருவதால் மட்டும் தமிழீழம் உருவாகாது.
தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகியன ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவுகளை வழங்க வேண்டும். அந்த கட்சிகளின் தலைவர்கள் விரும்பினால் தான் அது சாத்தியமாகும். ஆனால் அவர்கள் அதனை செய்யப்போவதில்லை என்பதை நாம் அறிவோம்.
எனவே நாம் என்ன செய்யலாம்?
தமிழீழத்தை உருவாக்குவதற்கு இந்திய அரசை உந்தித்தள்ளும் கட்சி ஒன்றே தமிழகத்தை ஆட்சிசெய்ய வேண்டும்.
அது தான் ஒரே வழி.
தமிழகத்தை தமிழ் மக்கள் 2016 ஆம் ஆண்டு ஆட்சிபுரிவார்கள். அதுவரை நாம் அடிமைகளாக வாழ்வோம். நாம் இந்தியாவின் இறைமைக்கு பாதகமானவர்கள் அல்ல. ஆனால் தமிழகத்தை தமிழ் மக்கள் ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
source:tamilspy
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment