Thursday, April 15, 2010

உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்த மடல்

உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது : உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்த மடல்

 நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழ் இனம் நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்தகொள்ளுங்கள். காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம்.

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உருத்திரகுமாரன் அண்ணா!

தமிழர்களின் வரலாற்றில், முக்கியத்துவம் பெறுகின்ற உங்களின் முயற்சிக்கு, முதலில், வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

தோல்வி மனப்பான்மை நெஞ்சைத் தாக்க, ஏக்கமும், துயரமும், வேதைனையும் வாட்டிவதைக்க தமிழினம் துடிதுடித்துத் தவித்துப்போயிருந்த காலத்தில், நாடுகடந்த தமிழீழம் என்ற ஒற்றைவரி, தமிழர்களை சற்று நிமிர்த்தி உட்கார வைத்திருக்கின்றது. எதிர்காலம் பற்றிய ஒருவிதமான நம்பிக்கையை விதைத்திருக்கின்றது. மீண்டும், சிரிக்க ஆரம்பித்திருக்கின்றோம். கால்களை மெல்ல நிலத்தில் ஊன்றி நிமிர்வதற்கான ஒரு தென்பு கிடைத்திருக்கின்றது.

புலத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு நம்பிக்கையைச் சிதைத்தழிக்கும் நடவடிக்கைகளில், சிலர் ஈடுபட்டிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கின்றது.

இது குறித்து நீங்கள், வரைந்த இரண்டு வேண்டுகோள்களையும் ஊடகங்களில் வாசித்தேன். முதல் வெளிவந்த மடலைத் தொடர்ந்து உங்களுக்கு ஒரு மடல் வரையவேண்டும் என நினைத்தேன் பின் அது அப்படியே போய்விட்டது. இன்று நீங்கள் வரைந்திருக்கும் இரண்டாவது மடல் கண்டு இதனை வரைகின்றேன்.

உங்கள் முயற்சிக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கிலும், தடை ஏற்படுத்தும் நோக்கிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து, நீங்கள் வேதனைப்படுவதும், உங்கள் முயற்சிகளை இடையில் நிறுத்திவிட நீங்கள் முயற்சித்து பின் அதிலிருந்து மீண்டதாகவும் இதுவிடயங்களில் மிக நெருக்கமானவர்களினூடாக அறிந்தேன். வேதனைப்பட்டேன். அதனால், இதனை வரைகின்றேன்.

அண்ணா!

இது வரலாறு. உங்கள் மீது சுமத்தியிருக்கும் பெரும் பணி. எமது தேசியத் தலைவர், எத்தனை துன்பங்களை, எத்தனை நெருக்கடிகளை, எத்தனை அவமானங்களை, எத்தனை ஆபத்துக்களைச் சுமந்து கல்லில் நார் உரிப்பதுபோல இந்த விடுதலை இயக்கத்தை கட்டிவளர்த்திருப்பார்? எண்ணிப்பாருங்கள். சுயநல சிந்தனையுடைய யாழ்ப்பாண சமூகத்தில் இருந்து அதி அற்புதமான தியாக மனிதர்களை உருவாக்க அவர் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்?

இன்று, உலகத்தமிழ் சமூகத்தை, நாடு பற்றிய இனம் பற்றிய சிந்தனையுடன் அக்கறையுடன், தமது இனத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புடன், உணர்வுள்ள மக்கள் சமூகமாக மாற்ற அவர் புரிந்த தியாகங்கள் அர்ப்பணிப்புக்கள் நினைத்துப் பார்க்கமுடியாதவை.

விரும்பியோ விரும்பாமலோ, குடும்பத்திற்கு வழிகாட்டவந்த ஒரு மூத்த சகோதரன்போல பெரும் பொறுப்பைச் சுமந்திருக்கின்றீர்கள்.

குழப்பவாதிகள், குழப்படிக்காரர், தங்கள் அதிகார இருப்பு ஆட்டங்கண்டுவிடும் என்ற பயத்தில் இருப்பவர்கள், தங்கள் பிழைப்பில் மண்வீழ்ந்துவிடும் என அச்சப்படுபவர்கள், தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் தங்களின் அனுமதியுடனேயே நடைபெறவேண்டும் என்று, தலைமைக்குப் புறம்பாக சிந்திக்கத் தலைப்படும் குட்டிக் குட்டி குறுநில மன்னர்கள் இப்படியாக பலர் குறுக்கிடுவார்கள். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, பயணப்பட வேண்டியது, தமிழ்மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களினது தலையாய பணி.

நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழ் இனம் நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்தகொள்ளுங்கள்.

அதிகாரங்களை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு, மக்களைப் பிழையாக வழிநடத்துபவர்கள், அவர்களே சில தமிழ் ஊடகங்களையும் தம்கையில் வைத்திருக்கின்றனர். மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பில் இவர்களின் வண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது.

தமது தேவைக்கு ஏற்ப எங்கும் உடைவுகளை மேற்கொள்வதே இவர்களின் தற்போதைய பணி. தாயகத்தில், தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தியதும் இவர்களின் வேலையே. புலத்திலும் தமிழர்களின் பலத்தைச் சிதறடிப்பது இவர்களின் தற்போதைய பணி. அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் சங்கங்கள் குறித்து மக்கள் மெல்ல மெல்லப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.

தாயகத் தமிழர்கள், இந்த பிரகிருதிகளின் முயற்சிக்கு தகுந்த பாடத்தை வழங்கியுள்ளனர். இவர்களின் கருவிகளாகச் செயற்பட்ட மனிதர்கள்தான் பாவம். ஆனால் அவர்களும் தமது பிழைகளை உணர்ந்து திருந்தவேண்டும் என்பதே என்போன்றவர்களின் விருப்பம்.

எந்த நல் முயற்சியும், உடனடியாக வெற்றிபெற்றுவிடாது. அதற்குக் காலம் எடுக்கும்.

காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும்.

உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம்.

அன்புடன்
ராஜநாதன்


source:nerudal


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails