Thursday, April 29, 2010

வீரம் விளைந்த குடும்பத்தில் சோகம்: வறுமையில் வாடும் கட்டபொம்மன் வாரிசு

 
 

Front page news and headlines today 

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க, ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மத்தியில், வித்தியாசமாக தெரிந்தது ஒரு முகம். 'சினிமாவில் வரும் கதாநாயகனை விவரிக்க நினைக்கிறார்களோ' என, நினைக்க வேண்டாம். சமீபமாக பார்த்த போது, காதுகளையும், பாதி முகத்தையும் மறைக்கும் கம்பீர மீசை. சரித்திரத்தை நினைவு கூறச் செய்யும் முண்டாசு.


வீரப்பரம்பரையை சேர்ந்தவர் என்பதை யூகித்து பேசத் துவங்கும் வேளையில், தொலைக்காட்சியில் ஏதேச்சையாக பார்த்த 'வானம் பொழிகிறது; பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி' என்ற வீர வசனத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.காட்சி முடிந்தவுடன் கண்களில் இருந்து எட்டிப் பார்த்த கண்ணீரைத் துடைத்து, பூமியை நனைய விடாமல் தடுத்தார். சற்று நிதானித்த அவரின் முகத் தில் சோகம்; இருந்தும் வீரம் குறையவில்லை. நாம் சுதாரித்து விவரம் கேட்டபோது தான் தெரிந்தது, வீரபாண்டிய கட்டபொம்மனின் 5வது தலைமுறை என்று.தனியிடத்தில் அமர்ந்து, இவர் குடும்ப வீர வரலாற்றை விவரிக்க துவங்கினார். வீமராசா (எ) ஜெகவீரபாண்டிய சுப்ரமணிய கட்டபொம்ம துரை (70) என்பது தான் இவரது பெயர். கட்டபொம்மன் என்று உச்சரித்தாலே, இவரை மவுனம் தொற்றிக் கொள்கிறது. இயல்பு நிலைக்கு வந்தவர் தற்போதைய நிலையை விவரிக்கத் துவங்கினார்.


அவர் உதிர்த்தது: காலம் செல்லச் செல்ல, எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்டது. எங்களின் சோகம் அறிந்த 'தினமலர்' நிறுவனர் ராமசுப்பையர் அவர்கள் தினமலர் பத்திரிகையில் செய்தி வெளியிடச் செய்து, பண உதவியும் அளித்தது, மறக்க முடியாதது. 'தினமலர்' நாளிதழில் வெளிவந்த பின் தான், எங்களின் கஷ்ட ஜீவனம் பொதுமக்களுக்கு தெரிய துவங்கியது.கடந்த '67ம் ஆண்டு அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பதவி வகித்த, தற்போதைய முதல்வர் கருணாநிதி, எங்கள் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு மாதம் 50 ரூபாய் வழங்கத் துவங்கினார். 71ம் ஆண்டு ஜனவரி மாதம் மேலும் 5 பேருக்கு உதவித்தொகை கிடைக்கத் துவங்கியது. '97ம் ஆண்டு எனக்கும், வ.உ.சிதம்பரனார் பேரன், பாரதியார் பேரனுக்கும், தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில், மூப்பனார் பேரவை சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.


'எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்' என மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்தியதால், பாஞ்சாலங்குறிஞ்சியில் எங்கள் உறவினர்கள் 202 பேருக்கு வீடு, 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. விவசாயம் மேற்கொள்ள நிலம் ஏற்றதாக இல்லாததால், பலர் வீடுகளை விற்று விட்டனர். எங்களின் வீடும் சிறிது, சிறிதாக பெயர்ந்து பாழடைந்து வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.எங்களின் நிலை அறிந்த, பாஞ்சாலங்குறிஞ்சியில் வசித்து, யுத்த காலத்தில் மலேசியா சென்ற குடும்பத்தினரில் தற்போது வசிக்கும் பூபதி பிரம்மநாயக்கர் என்பவர், கை கொடுத்து வருகிறார். தமிழக அரசு வழங்கி வரும் ஆயிரம் ரூபாயில் 'தொண்டை'யை நனைத்து வருகிறோம். மகன், மருமகனுக்கும் போதிய வருவாய் இல்லாததால், நடுத்தெருவுக்கு வந்து விடுவோமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது.சுதந்திர வேட்கைக்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் குடும்பம், நிர்கதியாக விடப்பட்டுள்ளது, மாநில அரசுக்கு தெரிந்தும், உதவிகளை அதிகரிக்க முன்வரவில்லை.


ஆண்டுதோறும் நடக்கும் சுதந்திர தின விழாவின் போது, சால்வை போர்த்தும் 'முதல் மரியாதை' மட்டுமே எங்களுக்கு கிடைக்கிறது.தியாகிகளுக்கு தரப்படும் பென்ஷனை போன்று எங்களுக்கும் தர வேண்டும். கட்டபொம்மன் புகழை அறிந்து கொள்ளும் வகையில், சென்னையில் கட்டபொம்மனுக்கு சிலை வைக்க வேண்டும்.இவ்வாறு, குரல் 'கம்ம' கூறி முடித்தார் வீமராசா. ஈரம் உள்ள இதயங்கள் இருக்கத் தான் செய்கிறது என்று நிரூபிக்க நினைத்தால், 97519-13832 என்ற எண்ணில், இவரை தொடர்பு கொள்ளுங்களேன்...!



source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails