மாஸ்கோ: ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் போலந்து அதிபர், அவரது மனைவி உட்பட 132 பேர் பலியானார்கள். இந்த விபத்தால் போலந்து மக்கள் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ளனர்.
இரண்டாவது உலகப்போரின்போது போலந்து நாட்டு ராணுவ வீரர்கள் 20 ஆயிரம் பேர், ரஷ்யாவில் உள்ள கேட்வின் நகரில் சோவியத் வீரர்களால் கொல்லப்பட்டனர். 70 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த இந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த போலந்து அதிபர் லெக் காசென்ஸ்கி (59) முடிவு செய்தார். இதற்காக அவர் தலைமையிலான போலந்து குழு நேற்று தலைநகர் வார்சாவில் இருந்து டி.யூ.&154 ரக தனி விமானத்தில் ரஷ்யா புறப்பட்டனர். அதிபரின் மனைவி மரியா, ராணுவ தலைமை தளபதி, வெளியுறவுத் துறை துணை அமைச்சர் க்ரீமர், போலந்து அரசு மத்திய வங்கி கவர்னர், அதிகாரிகள் உட்பட மொத்தம் 132 பேர் விமானத்தில் இருந்தனர்.
கடும் பனிமூட்டம்: ரஷ்யாவில் உள்ள ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்க வேண்டும். அங்கு கடும் பனிமூட்டம் இருந்ததால் மாஸ்கோ அல்லது பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் விமானத்தை தரை இறக்க விமானியை ஸ்மோலென்ஸ்க் விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதற்கு விமானி மறுத்துவிட்டார். இதனால், ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது.
மரங்களில் மோதல்:விமானத்தை தரையிறக்க 3 முறை செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 4வது முறையாக இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு விமானத்தை தரையிறக்க விமானி முயன்றார். அப்போது, தாழ்வாக பறந்த விமானம் மரங்களின் உச்சியில் உள்ள கிளைகள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமான நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் விமானம் நொறுங்கிக் கிடந்தது.
கருகிய உடல்கள்: உடனடியாக மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்த பிறகு, விமானப் பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். ஆனால், விமானப் பயணிகளில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை. அதிபர் காசென்ஸ்கி, அவரது மனைவி மரியா, ராணுவ தலைமை தளபதி உட்பட 132 பயணிகளும் பலியாகிவிட்டதாக ரஷ்ய போலீசார் அறிவித்தனர்.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மனித உடல்கள் கருகி சிதைந்து கிடந்தன. விமானத்தின் பெரும்பாலான பகுதிகள் தீயில் கருகி நாசமடைந்தன. சுமார் ஒரு கி.மீ. சுற்றளவுக்கு விமானத்தின் பாகங்கள் சிதறி பரவி கிடந்தன.
sourcedinakaran
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment