பீஜிங்:சீனாவின் திபெத் பீடபூமியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 400 பேர் பலியாயினர்; 10 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், 2008ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சம் பேர் பலியாயினர். இதை தொடர்ந்து தற்போது திபெத் பீடபூமியில் அமைந்துள்ள குங்ஹாய் மாகாணத்தின், யூஷு மாவட்டத்தில் நேற்று காலை 7.1 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது.இதனால் ஏராளமான கட்டடங்கள் தரை மட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 400க்கும் அதிகமானவர்கள் பலியாயினர்; 10 ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீயணைப்பு வீரர்களும், 700 ராணுவ வீரர்களும் பூகம்பம் பாதித்த பகுதிகளுக்கு சென்று இதுவரை 900 பேரை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 25 பேர் கொண்ட டாக்டர் குழு அனுப்பப்பட்டுள்ளது.பூகம்பம் பாதித்த ஜீகு என்ற நகரில் 85 சதவீத வீடுகள் தரைமட்டமாகி விட்டன. இப்பகுதியில் உள்ள அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அணை உடையும் முன், தண்ணீரை திறந்து விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
யூஷு மாவட்டத்தில் அரசு அலுவலகங்களும், பள்ளி கூடங்களும், புத்த மடாலயங்களும் நொறுங்கியுள்ளன. தொழில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.சில பள்ளிகள் இடிந்து விழுந்த போது, பலர் உயிர் தப்பியதற்கு காரணம், மாணவ, மாணவியர் அதிர்வு தெரிந்ததும் பக்கத்தில் உள்ள வெட்ட வெளிக்கு தப்பினர். பூகம்பத்தில் இடிந்து விழுந்த வீடுகள் தவிர சற்று உயரமான வீடுகளில் பெரிய அளவில் சுவர்களில் கீறல் காணப்படுகின்றன.மலை மீது உள்ள இந்த மாவட்டத்தில் தற்போது இரவில் பூஜ்யம் டிகிரிக்கு குறைவான வெப்பநிலை காணப்படுகிறது.
வீடுகளை இழந்த மக்கள் இந்த குளிரில் தவித்து வருகின்றனர்.பூகம்பத்தால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரமும், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பூகம்பத்தை தொடர்ந்து மூன்று முறை நில நடுக்கம் காணப்பட்டது.வீடுகளை இழந்த மக்களுக்கு கூடாரங்களும், போர்வைகளும், கோட்டுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment