Tuesday, April 27, 2010

கம்ப்யூட்டர் முன்பு உங்கள் குழந்தை? உஷார்... உடல் நலம் பாதிக்கப்படலாம்

 

 

புதுடில்லி : உங்கள் வீட்டுக் குழந்தை அதிக நேரம் கம்ப்யூட்டரில் செலவழிக்கிறதா? உடனடியாகக் கண்காணியுங்கள். அவர்களின் பழக்க வழக்கங்கள் மாறிப் போனால் டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.


பயமுறுத்தவில்லை. உண்மை அதுதான். இன்றைய கம்ப்யூட்டர் உலகில் அருகிலிருப்பவர் கூட இணையம் மூலம்தான் தொடர்பு கொள்கிறார். இச்சூழலில் நம் வீடுகளில் கம்ப்யூட்டர் இருக்குமானால், நம் குழந்தைகளின் நடவடிக்கைகளை ஆராய்வது அவசியம். டில்லி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிக்கின்றனர். தங்கள் கருத்துக்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக வலைத்தளங்கள் இன்றைய நிலையில் பெரும்பாலோரை அடிமையாக்கி வைத்துள்ளன. இதுபோன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் கேம்ஸ் வலைத்தளங்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவழிப்பதால் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் வருகின்றது. அவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூட நன்றாகப் பேசி சிரித்து இருப்பதில்லை. எப்போதும் கனவுலகில் மிதக்கின்றனர். இது அவர்களுக்கு எளிதாகவும் வாய்க்கிறது.


'secondlife.com, gojiyo.com, farmville போன்ற வலைத்தளங்கள் 'அனிமேஷன்' மூலம் கற்பனை உலகிற்குள் குழந்தைகளை இழுக்கின்றன. இதனால், குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அவர்கள் இந்த உண்மையான உலகிலிருந்து துண்டிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களது கல்வி இரண்டாமிடத்துக்குத் தள்ளப்படுகிறது. வலைத்தளங்களின் விளையாட்டுகளில் ஜெயிப்பதுதான் அவர்களது குறிக்கோளாகிறது' என்கிறார் ஒரு டாக்டர். உடல்நலம் பாதிப்பதால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படுகிறது. இது பல நோய்களுக்கு வித்திடுகிறது. குறிப்பாக, தொடர்ச்சியான தலைவலி, கண் எரிச்சல், இமைகளில் எரிச்சல் உணர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதனால் தொடர்ந்து, கம்ப்யூட்டர் முன்பு உங்கள் குழந்தை இருந்துவிடாமல் அவ்வப்போது அவர்களுடன் விளையாடுங்கள். அப்படி 'நெட்' அடிமையாகும் அறிகுறி தெரிந்தால் உடனடியாக டாக்டரை அணுகுவது நலம் என்கின்றனர் உளவியல் துறை நிபுணர்கள்


source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails