ஐக்கிய நாடுகள், ஏப்.15,2010 மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய தேசமும், பொருளாதாரத்தில் மிக விரைவாக வளர்ந்து நாடுமான இந்தியாவில் கழிப்பறைகளை விட செல்போன்களின் எண்ணிக்கையே மிக அதிகம் என்ற கவலைக்குரிய புள்ளி விவரங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. "மக்கள் தொகையில் பாதி பேர் செல்போன்கள் வைத்திருக்கும் வகையிலான பொருளாதார நிலையைக் கொண்டிருப்பதும், பாதி பேரால் அடிப்படைத் தேவையான 'கழிப்பறை'யை பயன்படுத்த முடியாதவர்களாக இருப்பதே இந்தியாவின் கவலைக்குரிய முரண்பாட்டு நிலை," என்கிறார் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துக்கான ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் ஜாஃபர் அதீல். கனடாவில் உள்ள ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழக ஆய்வு முடிவின்படி, 2008-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் 54 கோடியே 50 லட்சம் பேர் (45 சதவீதத்தினர்) சொந்தமாக செல்போன் வைத்திருக்கின்றனர்; 36 கோடியே 60 லட்சம் பேர் (31 சதவீதத்தினர்) மட்டுமே கழிப்பறையை உபயோகிக்கின்றனர் என்பது தெரிய வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 100 பேருக்கு 0.35 ஆக இருந்த செல்போன் பயன்பாட்டு விகிதம், தற்போது 100 பேருக்கு 45 செல்போன் என்ற நிலையை எட்டியிருக்கிறது. உலக அளவில் மொத்தமுள்ள 6.7 பில்லியன் மக்கள் தொகையில் 1.1 பில்லியன் மக்கள் கழிப்பறை வசதியை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இந்தச் சூழலுக்கிடையே, '2025-ல் அனைவருக்கும் கழிப்பறை வசதி' என்ற இலக்கை அடைவதற்கான செயல்பாடுகளுக்கு உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு அழைப்பு விடுக்கிறது. வளரும் நாடுகளில் மக்களின் சுகாதாரத்துக்கு கொடுக்கப்பட்டும் முக்கியத்துவத்தை வெளிக்கொண்ரும் வகையிலேயே, மக்களின் செல்போன் பயன்பாடு மற்றும் கழிப்பறை வசதி ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பீட்டு ஆய்வை மேற்கொண்டிருக்கிறது, ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம். 2015-க்குள் உலக மக்கள் தொகையில் பாதி பேருக்கு கழிப்பறை வசதி அமைக்கப்படுவதற்கு 358 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் மதிப்பிட்டுள்ளது. சொந்தமாக வசிக்க வீடு இல்லாத ஏழை மக்கள்தான் கழிப்பறை இல்லாமல் குப்பை மேடுகளையும் புதர் மறைவுகளையும் பயன்படுத்துகின்றனர். பிறகு, கை கால் கழுவ அசுத்தமான குட்டை நீரையே பயன்படுத்துகின்றனர். இதனால், நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். உலகம் முழுக்க அன்றாடம் சுமார் 4,000 குழந்தைகள் இத்தகைய நோய்த் தொற்றால் மட்டுமே இறக்கின்றன என்கிறது புள்ளிவிவரம். இந்தியாவைப் பொறுத்தவரையில், கிராமப்புறங்களிலும் நகர் பகுதிகளிலுள்ள குடிசைப் பகுதிகளிலும் தான் மக்கள் தங்களுக்கென்று தனி கழிப்பறை வசதி இல்லாமல் அவதியுறுகின்றனர் source:vikatan |
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment