Friday, April 2, 2010

விக்கிபீடியா நிறுவனத்துடன் இணைந்து தமிழ் தகவல் பக்கங்கள் திரட்டும் போட்டி

 

 

General India news in detail 

சென்னை : உலகத் தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டு, தமிழக அரசு மற்றும் தமிழ் விக்கிபீடியா சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான, விக்கிபீடியா தமிழ் தகவல் பக்கங்கள் போட்டி நடத்தப்படுகிறது.


உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் தேவிதார், 'எல்காட்' மேலாண் இயக்குனர் சந்தோஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின், நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் கூறியதாவது: உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்காக, பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியைத் தொடர்ந்து, தற்போது கல்லூரி மாணவர்களுக்கும் போட்டி நடத்தப்படவுள்ளது. விக்கிபீடியா இணையதளத்தில், உலகில் உள்ள அனைத்து துறைகள் பற்றிய தகவல்களும் உள்ளன.


இந்த இணையதளத்தில், 32 லட்சம் பக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் மொழியில் 22 ஆயிரம் பக்கங்கள் மட்டுமே உள்ளன. இந்திய மொழிகளில், இந்தி 68 ஆயிரம் பக்கங்களுடன் முதல் இடத்திலும், தெலுங்கு 44 ஆயிரம் பக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழ் உலகளவில் 68வது இடத்திலும், இந்திய அளவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.


தமிழ் மொழியிலுள்ள பல அரிய தகவல்களை, இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்காக தமிழக அரசும், விக்கிபீடியா இணையதளமும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு, விக்கிபீடியா தமிழ் தகவல் பக்கங்கள் போட்டியை நடத்துகிறது.'www.tamilint2010.tn.gov.in' இணையதளம் மூலம் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், பிசியோதெரபி, சித்த மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பல் தொழில்நுட்பப் பயிலகம் ஆகிய 13 துறைகளில் போட்டி நடக்கிறது. இப்போட்டியில், பங்கேற்க ஏப்ரல் 30ம் தேதிக்குள், தகவல் பக்கங்களை அனுப்ப வேண்டும்.


தகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில், இனம், சமயம், அரசியல், தனிநபர் குறை, வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பை தூண்டாத வகையில் அமைய வேண்டும். இப்பக்கங்கள் 250 முதல் 500 சொற்கள் கொண்டதாக, 'யுனிகோட்' முறையில் அமைய வேண்டும். இதில் சிறந்த பக்கங்கள் தேர்வு செய்யப் பட்டு, பரிசு வழங்கப்படுவதுடன், தேர்வாகும் பக்கங்கள் விக்கிபீடியா இணையதளத்திலும் வெளியிடப்படும். தமிழகத்திலுள்ள மூன்றாயிரம் கல்லூரிகளிலிருந்து, 50 ஆயிரம் தகவல் பக்கங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தில், ஆண்டுதோறும் இத்தகைய போட்டிகள் நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசுபவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இவ்வாறு அனந்த கிருஷ்ணன் கூறினார்.


அரசு அலுவலகத்தில், 2 மாதத்தில் தமிழ் 'யுனிகோட்' எழுத்துரு: தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் தேவிதார் கூறும்போது, ''அரசு அலுவலகங்களில், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பல்வேறு தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு காண, ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ''தமிழ் இணையப் பல்கலைக்கழகம் சார்பில், இக்குழுவின் கூட்டங்கள் நடத்தப்பட்டு, இரண்டு மாதத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு முன், கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கான பொதுவான தமிழ் எழுத்துரு 'யுனிகோட்' தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்'' என்றார்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails