Tuesday, April 15, 2008

கொதிக்கும் கொப்பரையிலிருந்து நெருப்புக்குள் தாவும் தலித்துகள்

கொதிக்கும் கொப்பரையிலிருந்து நெருப்புக்குள் தாவும் தலித்துகள்

1000 தலித் கிறித்துவர்கள், இந்து மதத்தை தழுவினார்களாம். திருநெல்வேலியில், நான் பெயர் குறிப்பிடக்கூடாத (ரத்னேஷ் கோவிப்பார்..1000 பேர் என்பதும் சுண்டைக்காய் விடயமா தெரியல்லையே) ஒரு இந்து கட்சி தலைவரால் இது ஏற்பாடு செய்ப்பட்டதாம்.
இது ஏப்ரல் 14ஆம் தேதி, அம்பேத்காரின் 117வது பிறந்த நாளில், செய்தது விஷமத்தனமானது என்பதில் நமக்கு ஐயமிருக்காது. இவர்கள் மதம் மாறுவதற்கான முகாந்திரம், சாதிப் பிரிவினை, அதை தொடர்ச்சியான கொடுமைகளை கிறித்துவ மதத்தில் ஆதரித்து வந்தது தானாம்.

சரவணபவன் பட்டியல் போல், இவர் ஒரு பட்டியல் வைச்சியிருக்காராம். இன்னும், 20000 பேர் மதம் மாற்றுவேன் என்கிறார். மதம் மாறுகிறவர்களை, உறுதிமொழி எடுக்க வைத்ததோடு, உறுதிமொழி ஒப்பமிடவும் செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் இந்து பெயர் வைக்கப் போறாங்களாம். (மொட்டை அடிக்காதவங்க, காது குத்தாதவங்களுக்கு அதுவும் செய்வாங்களா தெரியல்ல). "ஆரிய சமாஜில்" சொல்லி, சான்றிதழ் வாங்கி, அரசு கோப்புகளில் பெயர் மாற்றம் செய்வார்களாம்.

பெரிய அளவில், வேள்வி, பிராய்சித்தம் எல்லாம் செய்து, இவர்களின் மதம் மாற்றம் நடைப்பெற்றதாம். இவர்களுக்கு இவர்களுகது மூதாதையார்கள் பின்பற்றிய நம்பிக்கை முறைப்படி, சைவம், அல்லது வைனவம் அடையாளங்கள் கொடுப்பார்களாம். என்ன கொடுமை ஐயா, இது.

இவர்களின் மூதாதையர்களை எல்லாம், சைவர்களாகவோ, வைனவர்களாகவோ, ஏற்றுக் கொண்டியிருந்தால், ஏன் மதம் மாறினாங்க. மனிதர்களாகவே ஏற்றுக் கொள்ளவில்லை என்கின்ற போது, சைவமாம், வைனவமாம். x(

கருப்பண்ணசாமியயையும், முனியயையும், கோவில் கட்டினால் கூட வெளியே வைத்துக் கட்டித் தானே இன்றும் வைக்கிறார்கள். இந்த கேவலத்திலும் கேவலம், மதம் மாறுகிறவர்களை, கங்கை நீரைத் தெளித்தும், இராமேசுவரம் நீரைத் தெளித்தும், தீட்டு கழிக்கிறார்களாம்.

ஆண்டாண்டுக் காலமாக கேட்கும் கேள்வி. மொத்தமா, எல்லாரும், கங்கைக்குள்ளே இறங்கத் தயார். மொத்தமா, அனைவரையும் ஒன்றுப் போல் ஏற்றுக் கொள்ள தயாரா. அப்படி, இந்து மதம் ஒதுக்கிய நாட்டார் தெய்வங்களை வணங்க, இவர்கள் என்ன சுத்திகரிப்பு செய்து விடுவது.

பெரியார் ஆரம்பித்து வைத்த கோவில் உட்புகும் நிகழ்ச்சியினால், இன்று கோவிலுக்கு உள்ளே சென்று அனைவராலும் வரமுடிகிறது. இதை கண்ணுற்று, நம்பிக்கையுடன் இந்து மதத்திற்குள் வருபவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதற்கு சின்ன உதாரணம். .....
பால்வாடியில் நுழைய முடியாத அருந்ததியர் இனத்துக் குழந்தைகள்

தென் பகுதியில், சாதி பிரச்சனைகளூக்கு குறைவே கிடையாது, அது இரட்டைக் குவளை ஆகட்டும், அல்லது வெட்டுக் குத்து ஆகட்டும். இது அனைத்தும் அன்று இருந்தது, இன்றும் இருக்கிறது. முழுமையாக தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஒரு பொய்யான ஒரு பிம்பத்தை சொல்லி, இத்தகைய மாற்றங்கள் நடைப்பெற்றுக் கொண்டியிருக்கின்றன. ஆனால், உண்மையில் தீண்டாமை, நம் வாழ்வில் தொடர்ந்து இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.

பிரச்சனை வந்தால் மதம் மாறுவது, எந்த விதமான கடவுள் நம்பிக்கை என்றும் புரியவில்லை. சாதிப் பிரிவினை இல்லை என்றுச் சொல்லி, அப்பாவி மக்களை மதம் மாற்றிய கிறித்துவ ஆலங்களில் "executive secretary of the Catholic Bishop Conference of India for SC/ST/BC" என்று பிற்படுத்தப்பட்டோர்,ஆதி திராவிடர், பழங்குடிகளை பிரித்து வைப்பது எந்த விதமான சமத்துவம் என்றும் தெரியவில்லை.


முதல் முறை மதம் மாறியதால், 5 தலைமுறைக்குப் பின்னும் சாதி அடையாளம் கண்டு இழிவு செய்யப்படுகிறார்கள். உயர்(த்தப்பட்ட) சாதிக் கொடுமைகளிலிருந்து, பிற்படுத்தப்பட்டோர் சாதிக் கொடுமைகளில் வந்து விழுந்தனர். இப்போது, மீண்டும், உயர்(த்தப்பட்ட) சாதி மாய்மாலத்தில் மயங்கி, மீண்டும் ஒரு முறை ஏமாறப் போகின்றார்கள் என்பது மட்டும் உறுதி.

மதம் மாறுவதால் பிரச்சனை தீருவதில்லை. கடவுளர்கள் வந்து பிரச்சனைகளை ஒழிக்கப் போவதில்லை.


ஏமாறத் தயாராக இருக்கும், தலித் மக்களை தங்களுடைய சமயப் போர்களுக்கு பலிகடாவக்க மட்டுமே இத்தகைய செயல்களை செய்யும் கோமாளிகள் பெரியார் பூமியில் சுற்றி வருவது மானக்கேடு.

தலித்துகள் கொதிக்கும் கொப்பரையிலிருந்து நெருப்புக்குள் தாவுகிறார்கள் என்பது தான் உண்மை.

http://tbcd-tbcd.blogspot.com/2008/04/blog-post_15.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails