Wednesday, April 23, 2008

புதுபாலம் கட்ட இடிப்பு ; வெடிகுண்டுகள் வைத்தும் அசையாத 108வயது பாலம்



வேலூர், ஏப்.23-

வேலூர்-விருதம்பட்டு பாலாற்று பாலம் 1901-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. தற்போது இந்த பாலத்திற்கு 108 வயதாகிறது.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெள்ளத்தில் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இதனையடுத்து சுப்பிரமணியபுரம் பாலம் வழியாக காட்பாடிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.

போக்கு வரத்து நெரிசலை தவிக்கக் பாலாற்று பழைய பாலத்தை இடித்து விட்டு ரூ.16கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

கடந்த 16-ந் தேதி பாலத்தில் இருந்த 3 கணவாய்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. வெடி வைத்ததும் கண்ணாடி போல அப்படியே சரிந்து தரைமட்டமானது.

இதனையடுத்து பாலத்தில் உள்ள மேலும் 34 கணவாய்களை நேற்று வெடிவைத்து தகர்க்க போவதாக அறிவித்தனர்.

இதற்காக பாலாற்று கரையில் ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டனர். ஆற்றோர குடியிருப்புகளில் இருந்த பொதுமக்களை போலீசார் வெளியேற்றினர்.

ஹாலிவுட் படங்களில் வருவதை போல பாலம் சரிந்து விழ போகிறது என்று நம்பிய பொதுமக்கள் பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் காத்து நின்றனர்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுச்செல்வம் உள்பட ஏராளமான வி.ஐ.பிக்களு ம் பாலம் சரிந்து விழுவதை காண வந்திருந்தனர்.
 
 

நேற்று மாலை 5.55 மணிக்கு கவுண்டவுண் தொடங்கியது. அங்கிருந்த அனைவரும் திக்திக்கென்ற திகைப்பில் பாலத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சரியாக 6 மணிக்கு பாலத்தில் அனைத்து கணவாய்களிலும் பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. இதனால் அந்த பகுதியே பயங்கர அதிர்வுடன் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

சுமார் 5 நிமிடத்திற்கு பிறகு புகை மண்டலம் நீங்கியது. அப்போதும் பாலம் கம்பீரமாக காட்சியளித்தது.

வெடி வெடித்ததும் பாலம் சரிந்து விழும் என்ற நம்பிக்கையுடன் நின்றிருந்த அனைவரது கண்களிலும் ஏமாற்றம் என்றும் அனைவரது நெஞ்சிலும் ஆச்சர்யம் குடி கொண்டது.

அங்கிருந்த ஒவ்வொரு வரும் அது எப்படி என்று புலம்ப ஆரம்பித்தனர்.

இந்த பலமான பாரம்பரிய பாலத்தை இடிக்காமல் சீரமைத்து பயன்படுத்தி இருக்கலாமே ஏன் இதை இடித்துவிட்டு பல கோடி செலவில் புதிய பாலம் கட்ட போறாங்களோ தெரியவில்லை என்று பொதுமக்கள்ë கருத்து தெரிவித்தனர்.

ஆனால் வெடி வைத்ததையடுத்து பாலம் ஆட்டம் கண்டு விட்டது. இதனை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பாலத்தின் பலத்தை ஆரம்பத்திலேயே சோதனை செய்திருந்தால் வேலூரில் மேலும் ஒரு வரலாற்று சின்னத்தை இழக்காமல் இருந்திருக்கலாம் என்றும் பொதுமக்கள்ë கூறினர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails