இராக்கில் 'அல்-காய்தா' ஆதரவாளர்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றால் அமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லிமாக மதம் மாறி ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்கிறார் சர்வதேசப் பயங்கரவாதியான பின்லேடன். அல்-காய்தா' இயக்கத் தலைவர் பின் லேடன் பேட்டி 'அல்-ஜஸீரா' தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மிகவும் சுருக்கமாக அதில் அவர் பேசியிருக்கிறார்.
அமெரிக்காவைக் கிண்டல் செய்யும் தொனியில் பேச்சு இருக்கிறது. இம்முறை பயங்கரவாதி போல் அல்லாமல்இ முதிர்ந்த அனுபவம் வாய்ந்த முஸ்லிம் மதகுருவைப் போல பேசியிருக்கிறார். பேச்சு மட்டும் அல்ல தோற்றமும் அப்படியே. 30 நிமிஷங்கள் அந்த விடியோ காட்சி ஓடுகிறது.
'அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக இருக்கிறது; மிகவும் சக்திவாய்ந்த நவீன ஆயுதங்கள் அதன் ராணுவம் வசம் இருக்கிறது. உலகின் பிற நாடுகள் அனைத்தும் தங்களுடைய ராணுவத்துக்குச் செலவழிக்கும் மொத்தத் தொகையைவிட அதிகமாக அமெரிக்கா தன்னுடைய ராணுவத்துக்குச் செலவழிக்கிறது. இப்படி எத்தனையோ சிறப்புகள் இருந்தும் கொண்ட கொள்கைக்கு ஏற்ப காரியங்களைச் செய்து முடிக்கும் லட்சிய வேட்கை கொண்ட 19 இளைஞர்களின் தியாகத்தால் (2001 செப்டம்பர் 11-ல் வாஷிங்டன் நியூயார்க் நகரங்கள் மீது நடந்த தாக்குதல்) அமெரிக்காவின் திசைவழியே மாறிவிட்டது.
'இப்போது எங்கே எதைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் முஜாஹிதீன்களைப் பற்றி நினைக்காமலும் பேசாமலும் அமெரிக்க ஆட்சியாளர்களால் இருக்க முடியவில்லை. உலகின் எந்தப் பகுதியிலும் தங்களுடைய ஆதிக்கம்தான் என்று இறுமாந்து இருந்தவர்கள் இப்போது எந்தப் பக்கத்திலிருந்து தமக்குத் தாக்குதல் வருமோ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சித்தம் கலங்கிப்போயிருக்கிறார்கள்.
'அமெரிக்கர்களான நீங்கள் இராக்கில் சண்டை நடப்பதை விரும்பவில்லை; ஜனநாயக கட்சிக்கு செனட்டில் பெரும்பான்மை கிடைத்த பிறகும் அவர்கள் இராக் கொள்கையை மாற்ற நிர்பந்திக்கவில்லை. அவர்களும் அதிபர் புஷ்ஷின் ராணுவச் செலவுகளுக்கு நிதியை அனுமதித்து வாக்களிக்கின்றனர். எத்தனை ஆண்டுகள் அமெரிக்க ராணுவம் இராக்கில் இருந்தாலும் அங்கு அவர்களால் உறுதியான வெற்றியைப் பெற முடியாது. மாறாக அவர்களுடைய அழிவுக்கு அதுவே ஆரம்பமாகிவிடும்.
'இராக்கில் பிரச்னையைத் தீர்க்க 2 வழிகள்தான் இருக்கின்றன. முதல் வழியை நாங்கள் கையாள வேண்டும். அதாவது அமெரிக்கர்களை ஒருவர் விடாமல் கொன்று இராக்கிலிருந்து தடயம் இல்லாமல் விரட்ட வேண்டும். அதைத்தான் இராக்கில் உள்ள எங்களுடைய சகோதரர்கள் (அல்-காய்தா ஆதரவாளர்கள்) செய்துகொண்டிருக்கிறார்கள்.
'இரண்டாவது வழி அமெரிக்கர்கள் மேற்கொள்ள வேண்டியது. அமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லிம்களாக மதம் மாறிவிட வேண்டும். அப்படி மாறிவிட்டால் உலகில் ஓயாமல் போரைத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவன அதிபர்கள் உங்கள் பின்னால் ஓடிவருவார்கள். இஸ்லாத்தைத் தழுவியதன் மூலம் நீங்கள் ஜனநாயக முறை ஆட்சிக்கு விடை கொடுத்து மாற்றுவிதமான ஆட்சிக்குத் தயாராகிவிட்டீர்கள் என்று போர்த்தொழில் நிறுவனங்களின் கோடீசுவர அதிபர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
'உங்களை மீண்டும் இஸ்லாத்திலிருந்து பிரித்து அழைத்துச் செல்ல உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும் கேட்கத் தயார் என்று கூறுவார்கள். அப்போது நீங்கள் சமாதானத்தை வலியுறுத்தி இராக்கிலிருந்து நாம் உடனே வெளியேற வேண்டும் என்று கேட்டால் ஒப்புக்கொண்டுவிடுவார்கள்' என்று பின் லேடன் பேசியிருக்கிறார்.
இந்தப் பேச்சில் அவர் யாரையும் கடுமையாக ஏசவில்லை சவாலுக்கு அழைக்கவில்லை அடுத்து இந்த ஊருக்குக் குறிஇ இந்தத் தலைவருக்கு குறி என்றெல்லாம் ஏதும் பேசவில்லை.
அவர் பேசிய இடத்தின் பின்னணியில் பழுப்பு நிறச் சுவர்தான் தெரிகிறது. தாடியை முடியை ஒட்ட வெட்டியிருக்கிறார். வளைகுடா பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் மதகுருக்களைப் போல கண்ணியமான ஆடையை அணிந்திருக்கிறார். அவர் பேசிய இடத்துக்குக் கீழே ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகை இருக்கிறது. ''அமெரிக்க மக்களுக்கு ஷேக் ஒசாமா பின் லேடனிடமிருந்து ஒரு செய்தி'' என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. கொஞ்சம் அயர்வாகவும் உடல் தளர்ந்தார் போலவும் இருக்கிறார். பிரான்ஸின் அதிபர் நிகோலஸ் சர்கோஸி பிரிட்டனின் புதிய பிரதமர் கார்டன் பிரெளன் பற்றியும் அவருடைய பேச்சில் குறிப்புகள் இருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில்தான் பேசியிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் ஆகஸ்ட் 6-ல் நடந்த ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு குறித்து அவர் குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது. பிரஸ்னேவ் காலத்தில் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் புகுந்து தோல்வி அடைந்து வெளியேறியதைப் போல இராக்கிலிருந்து அமெரிக்கா வெளியேற நேரும் என்று எச்சரித்திருக்கிறார்.
சி.ஐ.ஏ. உறுதி: பேசியது பின்-லேடன்தான் என்பதை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் தலைவரும் ஒப்புக்கொள்கிறார். குரல் ஒத்துப் போகிறது. படங்கள் குறித்து இப்போதைக்கு எதையும் கூற முடியாது. படத்தைத் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்தால்தான் புதிய விஷயங்கள் தெரியும் என்று சி.ஐ.ஏ. இயக்குநர் மைக்கேல் ஹேடன் தெரிவிக்கிறார்.
http://www.eelamonline.com/index.php?news=1221
No comments:
Post a Comment