மேற்கு வங்கத்தில்
பறவைக் காய்ச்சல் மனிதருக்கு பரவும் அபாயம் ? அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
கொல்கத்தா, ஏப். 18-
மேற்குவங்க மாநிலத்தில் கோழிகள் மத்தியில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோயை முறையாக தடுக்க தவறினால் வெகு விரைவில் அந்நோய்க்கு மனிதர்களை பலிகொடுக்க நேரிடும் என மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் பறவைக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தன. தொடர்ந்து பக்கத்து மாவட்டங்களில் பரவத் தொடங்கியது. இதையடுத்து கோழிகளை கொல்லும் பணியை மாநில அரசு தொடங்கியது. சுமார் 20 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன.
பறவைக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த சில வாரங்களில் இந்நோய் மீண்டும் சில இடங்களில் தலைகாட்டியது. மீண்டும் கோழிகளை கொல்லும் பணி தொடங்கியது. ஜனவரி முதல் இன்று வரை மேற்குவங்கத்தில் சுமார் 39 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில் தோன்றிய நாடியா மாவட்டத்தில் மீண்டும் பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் தென்படத் தோன்றியுள்ளன. முதல்முறையிலேயே முழுத் தீவிரத்துடன் செயல்பட்டு பறவைக் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக தற்போது மீண்டும் இந்நோய் பரவத் தொடங்கியிருப்பதாக இந்திய உணவு மற்றும் விவசாய அமைப்பு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 3 மாதங்கள் ஆகியும் இன்னும் பறவைக்காய்ச்சல் நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், ஒரு சில வார இடைவெளியில் புதிய புதிய இடங்களில் இந்நோய் பரவி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்குவங்க பறவைக் காய்ச்சல் நிலைமை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், Ôபறவைக் காய்ச்சலை முறையாக கட்டுப்படுத்த தவறினால் விரைவில் இந்நோய்க்கு மனித உயிர்களை பலிகொடுக்க நேரிடும். நோயைக் கட்டுப்படுத்துவதில் மேற்கு வங்க அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லைÕ என்றார்.
மே.வங்க அரசின் கால்நடைத்துறை அமைச்சர் அனிஸ் உர் ரகுமான், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 'பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி வருகிறோம்' என்றார் அவர்.
No comments:
Post a Comment