அமெரிக்க மக்களை மட்டுல்ல, உலக மக்கள் அனைவரையும் கவர்ந்தவர், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எப் கென்னடி.
புகழின் உச்சியிலிருந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்தது.
கம்பீரமான தோற்றமும், நல்ல பேச்சாற்றலும் கொண்ட கென்னடி, அமெரிக்கர்களால் மட்டுமல்ல; உலக மக்களாலும் நேசிக்கப்பட்டார்.
அவர் ஆட்சியின்போதுதான் வானவெளி ஆராய்ச்சிகளில் அமெரிக்கா வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.
1962 அக்டோபர் மாதம், அமெரிக்கா அருகில் உள்ள கிïபாவில் ஏவுகணை தளம் அமைக்க ரஷியா முயன்ற போது, கிïபாவைச் சுற்றிப் போர்க்கப்பல்களை நிறுத்தி, "கடல் முற்றுகை"யிட்டு ரஷியாவின் முயற்சியை முறியடித்தார், கென்னடி. அதே மாதத்தில், இந்தியா மீது சீனா படை யெடுத்தபோது, இந்தியாவுக்கு ஆயுதங்களை அனுப்பி உதவினார்.
உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கிய கென்னடி 1964_ல் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.
குண்டு பாய்ந்தது
இந்நிலையில், 1963 நவம்பர் 22_ந்தேதி, டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகருக்குச் சென்றார். மனைவி ஜாக்குலினுடன் காரில் ஊர்வலமாகச் சென்றபோது, ரோட்டின் இருபுறமும் திரளான மக்கள் கூடி நின்று வரவேற்றனர். மக்களைப் பார்த்து கை அசைத்தபடி சென்று கொண்டிருந்தார், கென்னடி.
திடீரென்று, ஒரு கட்டிடத்தின் 6_வது மாடியிலிருந்து சீறி வந்த மூன்று துப்பாக்கிக் குண்டுகள் கென்னடியின் தலையிலும், கழுத்திலும் பாய்ந்தன. காருக்குள் சுருண்டு விழுந்தார், கென்னடி. அவரை ஜாக் குலின் தாங்கிக் கொண்டு கதறினார்.
கண்மூடிக் கண் திறப்பதற்குள் இந்தச் சம்பவம் நடந்து விட்டது. என்ன நடந்தது என்பது கூடப் பொது மக்களில் பலருக்குத் தெரியவில்லை.
காரிலிருந்த மெய்க்காவலர்கள், காரை அருகில் இருந்த ஆஸ்பத்திரியை நோக்கித் திருப்பினார்கள். அங்கு கென்னடிக்கு ஆபரேஷன் நடந்தது.
அவர் உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் பெருமுயற்சி செய்தனர். ஆனால் பலனில்லை. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அரை மணி நேரத்தில் கென்னடியின் உயிர் பிரிந்தது.
மர்ம மனிதன் கைது
கென்னடி கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்குள் ஆஸ்வால்டு (வயது 24) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான். அவன் முன்பு கடற்படையில் பணியாற்றியவன்.
சிறையில் வைக்கப்பட்டிருந்த அவனைக் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக 24_ந்தேதியன்று போலீசார் வெளியே அழைத்து வந்தனர்.
ஜெயிலுக்கு முன்னால் பெரும் கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஜாக் ரூபி (வயது 42) என்பவன், ஆஸ்வால்டை வெகு அருகிலிருந்து சுட்டான்.
குண்டு குறி தவறாமல் நெஞ்சில் பாய்ந்தது. ஆஸ்வால்டு அதே இடத்தில் செத்து விழுந்தான். ஆஸ்வால்டு கொல்லப்பட்டதால், கென்னடியை அவன் எதற்காகச் சுட்டுக்கொன்றான், அதன் பின்னணி என்ன, அவனை யாரும் தூண்டிவிட்டார்களா என்பதே தெரியாமல் போய் விட்டது.
ரூபிக்கு மரண தண்டனை
ஆஸ்வால்டை சுட்டுக்கொன்ற ரூபியை உடனே போலீசார் கைது செய்தனர். ரூபி "இரவு விடுதி" ஒன்றின் சொந்தக்காரன்.
அவன் மீது வழக்குத் தொடரப்பட்டது. அவனுக்கு 1964 மார்ச் 14_ந்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையிலேயே 1967 ஜனவரி 3_ந்தேதி மரணம் அடைந்தான்.
No comments:
Post a Comment