ஆரியநஞ்சு கலந்த குறள் உரை
தமிழ் மன்னர்கள் ஆரியப் பண்பாட்டுக்கு அடிமைப் படுத்தப்பட்டதுபோல, நம்முடைய பழக்க வழக்கங்கள் எப்படி அதற்கு வயப்பட்டு மாறின என்பதை முந்தையக் கட்டுரையில் கண்டோம்.
நமது இலக்கியங்கள் கூட, பார்ப்பனப் பண்பாட்டுக்கு ஆளாக்கப்பட்டது; அந்த பழைய நூல்களுக்கு உரையெழுதிய பல பார்ப்பனர்கள் அதற்கு அவர்களது இன உணர்வுக்கு ஏற்ப உரைகளையும், விளக்கங்-களையும் எழுதி உலா வரச் செய்தனர்.
திருவள்ளுவரின் திருக்குறள் என்ற அறநூல் உலக மாந்தர் அனைவருக்கும் உரிய வாழ்க்-கைக்கு வழிகாட்டிடும் ஒரு நூல்.
என்றாலும் இதனையும் ஆரியமயமாக்கிட - ஆரியக் கருத்து என்னும் வட்டம் வளையத்-திற்குள் கொணர பார்ப்பனப் புலவர்கள் தமிழாய்ந்தவர்கள் - அதனை மிக இலாவகமாகச் செய்துள்ளனர்.
திருக்குறள் எழுதப்பெற்று ஆயிரம் ஆண்டு-களுக்குப் பின்னர் வந்து அதற்கு உரை எழுதியவர் பரிமேலழகர் என்ற பார்ப்பனர்.
இவரது குறளுக்கு ஆரியப் பூச்சுப் பூசும் பல்வேறு முயற்சிகளை, குறளுக்கு இவர் எழுதிய உரைகள் மூலம் காணலாம்!
பரிமேலழகர் எழுதிய நுழைவு வாயிலான உரைப்பாயிரத்திலேயே திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் என்பதில், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செயலும், விலக்கியன ஒழிதலுமாம் என்று மனுதர்மத்தைப் பின்-பற்றித்தான் வள்ளுவர் குறள் எழுதினார் என்று கூறிய விஷமம் எளிதாக ஒதுக்கி விட முடியாத ஒன்று!
தொடக்கத்திலேயே ஆரிய நஞ்சு கலந்த நிலை அது!
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி? என்று கேட்டார். மனோன்மணியம் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள்!
மனுவின் மொழி அறமான-தொரு நாள் அதை மாற்றிய-மைக்கும் நாளே தமிழர் திருநாள் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
இராவண காவியம் இயற்றிய இனமானப் பெரும் புலவர் குழந்தை அவர்கள், திருவள்ளுவரும், பரிமேலழ-கரும் என்ற ஓர் ஆய்வு நூலையே இது குறித்து மிக விளக்கமாக எழுதியுள்ளார்!
ஆரியக் கருத்துகளுக்கு மறுப்பு நூலே வள்ளுவரின் குறள் என்பது குறள் பற்றிய கருத்துகள் எழுதிய பல்வேறு புலவர்களின் - குறள் பற்றி பாடியவர்களின் தொகுப்பு மாலையில் காணலாம்.
வள்ளுவர் குறளை பரிமேலழகர் எப்படி அவர் என்னதான் சிறந்த புலவர் ஆயினும் - ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக் குரித்தாக்கிக் காட்ட முயன்றார் என்பதற்கு ஏராளமான குறள் உரைகள் ஆதாரங்கள் உண்டு.
வள்ளுவர் குறளில், கடவுள், கோயில், ஜாதி, ஆத்மா போன்ற சொற்களை 1330 பாக்களில் எங்கு தேடினாலும் கண்டறியவே முடியாது.
(குறளில் கோயில் இல்லை என்பதை குடும்ப விளக்கு நூலில் முதியோர் காதல் என்ற அய்ந்தாம் பாகத்தில் புரட்சிக் கவிஞர் ஒரு தாத்தா, தன் பெயரனுக்குக் கூறுவது போல் அமைத்துள்ள நயமான கதை சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.)
ஒல்காப்புகழ் படைத்த தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உச்சி மேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் (இவர் பார்ப்பனர் என்பது முடிபு) எழுதுவதை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தனது தொல்காப்பியப் பூங்கா நூலில் (294ஆம் பக்கத்தில்).
... களவொழுக்க முறையை ஒட்டி காதலர்கள் கூடிப் பேச வாய்ப்பு வந்த வேளை ஓரையும் நாளும் உத்தமமாயில்லை யென்று ஒத்திப்போடும் வழக்கம் மட்டும் உண்டாம் என்று; நச்சினார்க்கினியர் என்னும் உரையாளர் நவிலுகின்றார். நாளும் ஓரையும் பார்த்தல் நலமே என்று இன்னொரு உரையாளர் இளம் பூரணர் என்பார் இதற்கு அதே உரை கூறியுள்ளார் ஏறத்தாழ! ஆய்வுரை எழுதியுள்ள அறிஞர் வெள்ளை வாரணனார், ஓரை எனில் விழாவும் விளை-யாட்டும் என்கின்றார் ....
காப்பியர் நூற்பாவில் ஓரையென்ற சொல்லுக்கு கால நேரமெனும் பொருள் தவிர்த்து விழாவெனவும் ஒரு பொருள் கொள்வதானால், அக்கால வழக்கத்தில் நாள்கோள் பார்ப்பதில்லை எனும் செய்தி நிலைநாட்டப்படும்! இல்லை இல்லை பார்ப்பதுண்டு என்று சொன்னால்; இடையில் புகுந்த கொள்கையினால் நாளும் கோளும் நம்மினத்தில் தேளும் பாம்புமாய் வந்து சேர்ந்தன என்போம்!
(தொல்காப்பியப் பூங்கா, பக்கம் 295)
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய பெரும் ஆய்வாளரான புலவர் கா.வெள்ளைவாரணன் அவர்கள் (அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் யான் பயின்ற காலத்தில் அவர் என் தமிழாசிரியர் என்பது மகிழத்தக்க பெருவாய்ப்பு ஆகும்).
அவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம் என்ற நூலில் (1957) (அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு) பண்பாட்டுப் படையெடுப்பு களவியலையும் விட்டு வைக்கவில்லை என்று எழுதுவதை அடுத்த இதழில் காண்போம்.
(வளரும்)
http://unmaionline.com/20080401/pa-12.html
No comments:
Post a Comment