ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிராக கன்னடர்கள் வன்முறை சட்டசபையில் அனைத்துக்கட்சிகள் கண்டனம்
சென்னை, ஏப்.2-
"ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிராக கன்னடர்கள் நடத்தும் வன்முறை போராட்டத்துக்கு தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
சிறப்பு கவன ஈர்ப்பு
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடகா மாநிலத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து சட்டசபையில் பேசுவதற்காக அனைத்து கட்சிகளும் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுத்திருந்தன.
நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இதை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானமாக எடுத்துக் கொண்ட சபாநாயகர் ஆவுடையப்பன், அந்தந்தக் கட்சி சார்பாக எம்.எல்.ஏ. ஒருவரை பேச அனுமதித்தார். அவர்கள் பேசியதாவது:-
வேதனை
ஓ.பன்னீர்செல்வம் (எதிர்கட்சித் துணைத் தலைவர், அ.தி.மு.க.):- ஜப்பான் நிதியுதவியுடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வர அம்மா முயற்சி செய்தார். ஆனால் நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை அதற்கு அனுமதி தராத மத்திய அரசு, தற்போது அனுமதி அளித்துள்ளது.
தற்போது சில கன்னட அமைப்புகள் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளன. இதனால் மொழிவாரியாக மக்கள் பிரிந்து விட்டனர். கர்நாடகாவில் உள்ள தமிழர்கள், அவர்கள் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. தமிழக மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை அங்கு உருவாகி இருக்கிறது. குடிக்கக் கூட தண்ணீர் பெற விடமாட்டோம் என்று சகோதர மாநிலமே இறையாண்மையை கெடுப்பது வேதனை. குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி, அங்குள்ள மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கியாக வேண்டும்.
இரும்புக் கரம் கொண்டு
ஞானசேகரன் (காங்கிரஸ்):- தமிழர்களைத் தாக்கி கர்நாடகாவில் நடத்தப்பட்ட சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். அங்கு நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு ஓட்டுக்களை குறிவைத்து குறுகிய நோக்கத்தில் ஒரு கூட்டம் செயல்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தை மத்திய அரசு இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். எடிïரப்பா இங்கு வந்து இடைïறு செய்துள்ளார். காவிரியில் குடிநீருக்கான தண்ணீர் எடுப்பதற்கு எந்தக் கோர்ட்டும் தடை செய்ய முடியாது. நாராயண கவுடா போன்ற சிலர் இந்தத் திட்டத்துக்கு எதிராக இருப்பதை சுட்டிக் காட்டி பிரதமருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கடிதம் எழுத வேண்டும்.
பெங்களூரு எங்களூரு
ஜி.கே.மணி (சட்டமன்ற பா.ம.க. கட்சித் தலைவர்):- இது காமராஜர் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம். ஆனால் 1996-2001-ம் ஆண்டில் முதல் கட்டப் பணிகள் தொடங்கின. அந்த நேரத்தில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதால், ஜப்பான் நிதியுதவி கிடைக்காமல் போய்விட்டது. தற்போது மக்களை திசை திருப்புவதற்காக எடிïரப்பாவின் வஞ்சக வலையில் கன்னட வெறியர்கள் ஆட்டம் போடுகின்றனர்.
சகோதர நல்லுறவு கெடக் கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி நிதானமாக அடி எடுத்து வைக்கிறார். 40 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்து விட்ட எல்லைப் பிரச்சினையையும் இப்போது கிளப்புகின்றனர். தேவையில்லாமல் எல்லைப் பிரச்சினையை கிளப்பினால் நாங்களும், பெங்களூரை எங்களூரு என்போம்; கோலார், கொள்ளேகாலை எங்கள் பகுதி என்று கூறுவோம்.
நடிகர் வீட்டுக்கு காவல்
இங்கு கன்னட நடிகர்கள் வீட்டுக்கு சேதம் வரக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் பெருந்தன்மை கொண்டவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. இந்த விவகாரத்தில் நடுநிலைமையோடு இருக்கும் மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். ஒகேனக்கலுக்கு பிரச்சினையை கிளப்ப வந்த எடிïரப்பாவை அனுமதித்தது வேதனை. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி எடுக்கும் நடவடிக்கைக்கு, அ.தி.மு.க. உட்பட அனைத்து கட்சிகளும் பின்னால் நிற்கின்றன.
கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி):- அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்படும் இந்த சம்பவத்தை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல், உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். முதல்-அமைச்சர் கருணாநிதி எடுக்கும் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும்.
பந்த் நடத்த வேண்டும்
சிவபுண்ணியம் (இந்திய கம்ïனிஸ்டு):- தமிழகத்தை மிரட்டும் இந்தப் போக்குக்கு நாம் அஞ்சப் போகிறோமா? அவர்கள் இங்கு வந்து உரிமை கொண்டாடுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? நமது மன உணர்வுகளை தெரிவிக்கும் விதத்தில் தமிழகத்தில் பந்த் நடத்த வேண்டும். எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்திருப்பதை அவர்களுக்கு இது உணர்த்தும்.
செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்):- கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழ் நடிகர்-நடிகைகள் குரல் கொடுக்க வேண்டும்.
ஆடுகிற மாடு
விஜயகாந்த் (தே.மு.தி.க.):- கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படும் நிகழ்ச்சி அதிகமாக நடக்கிறது. நமக்கு ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கவும் தெரியும், பாடுகிற மாட்டை பாடிக் கறக்கவும் தெரியும். நாம் இப்படி இருப்பதை பயம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பதை அவர்கள் அறியவில்லை.
காங்கிரஸ், கம்ïனிஸ்டு கட்சிகள் கூட்டணி வைத்திருந்தாலும், அணுசக்தி விவகாரத்தில் மத்திய அரசுக்கு கம்ïனிஸ்டு கட்சிகள் புள்ளி வைத்து செயல்படுவது போல், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு புள்ளி வைத்து செயல்பட வேண்டும். அப்படி என்றால்தான், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நமக்குக் கிடைக்கும்.
இவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். ம.தி.மு.க. சார்பில் கம்பம் ராமகிருஷ்ணன் பேசினார். இவர்களுக்கு பதிலளித்து பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
இதே பாசப் பிணைப்பு
உரிமைக்கான அனைவருமே ஓங்கி குரல் கொடுத்து இருக்கிறோம். நாம் இருக்கும் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே ஓரணியில் நிற்பதை வரவேற்று, தமிழக அரசின் சார்பில் நன்றி கூறுகிறேன். இதே ஒற்றுமை, பாசப் பிணைப்பு இருந்தால் பல பிரச்சினைகளில் நாம் வெற்றி காணமுடியும்.
இங்கு பேசிய அனைவருமே, நமது உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்றும், மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறீர்கள். இந்தப் பிரச்சினை குறித்து பிரதமருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி 17-ந் தேதி கடிதம் எழுதி இருக்கிறார் (கடிதத்தை படித்துக் காட்டினார்). கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 30 முதல் 40 லட்சம் பேர் குடிப்பதற்கான நீரை எடுப்பதற்காகத்தான் அந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோமே தவிர, பாசனத்துக்கு தண்ணீர் எடுக்கத் திட்டமிடவில்லை.
குடிநீருக்கா சண்டை?
குடிநீருக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதை தேசிய நீர்க் கொள்கை வலியுறுத்துகிறது. அதைத்தான் கேட்கிறோம். அதுமட்டுமல்ல, காவிரியில் நமக்குத் தரப்படும் பங்கில் 1.4 டி.எம்.சி. நீரைத்தான் கேட்கிறோமே தவிர, அவர்கள் பங்கில் இருந்து யாசகம் கேட்கவில்லை. இந்த 1.4 டி.எம்.சி.யை நீர் அளக்கும் இடத்தில் இருந்து குறைத்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறோம்.
மொழிவாரியாக மாநிலம் அமைந்த போது காவிரி ஆற்றின் நடுவே கோடு போடப்பட்டு பிரிக்கப்பட்டது. நாம் அவர்கள் கரைக்குச் சென்று நீர் எடுக்கப் போவதில்லை. நமக்கு பாத்தியப்பட்ட நமது கரையில் இருந்து நீர் எடுக்கக் கூடாதா? இதற்கு உரிமை இல்லையா? உரிமையை விடுங்கள்; இது மக்களுக்குத் தேவையான குடிநீர்த் திட்டமல்லவா? மனிதாபிமானமும் இல்லையா? குடிநீருக்கா சண்டை போடுவது?
கலந்து பேசிய முடிவு
நமக்கு உரிமை இருந்தாலும் கூட, அந்த வழியில் நாம் போகவில்லை. முறைப்படி மத்திய அரசின் அனுமதி பெற்று, 2 மாநில அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டது. நாம் எல்லை மீறவில்லை. ஆனால் அவர்கள் வேகம் காட்டியுள்ளனர்.
முதல்-அமைச்சர் கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர். அப்போது காவிரி பிரச்சினைக்காக கர்நாடகா முதல்-மந்திரியாக இருந்த வீரேந்திர பட்டீலுடன் வாதிட்டவர். அவருக்கு இந்தப் பிரச்சினை பற்றி நேரடியாகத் தெரியும். அப்படிப்பட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி, அண்டை மாநிலத்துடன் நல்லுறவு வேண்டும் என்பதை விரும்புகிறார். முன்பு மனக்கசப்பு ஏற்பட்டு, அங்குள்ள தமிழர்கள் பலர் ஜோலார்பேட்டை, அரக்கோணம் போன்ற இடங்களுக்கு வந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
வன்முறை நல்ல பாதையல்ல
வன்முறை என்பது சரியான பாதையல்ல. நமது முதல்-அமைச்சரைப் போன்ற அனுபவம் பெறாத சிலரால் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. அவர்கள் திருந்துவார்கள் என்பதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி காட்டும் பொறுமையை பலவீனம் என்று கருதாதீர்கள். அண்டை மாநிலத்துடன் பிரச்சினை இருந்தாலும், அவர்கள் உதவி கேட்டும் போது நிபந்தனை இல்லாமல் உதவிக் கரம் நீட்டும் பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர் நமது முதல்-அமைச்சர்.
அதனால்தான், `எங்கள் எலும்புகளை உடைத்தாலும், கண்ணீர் விட்டுக் கேட்கிறோம்; இந்திய இறையாண்மையை கெடுத்து விடாதீர்கள்' என்று கூறினார். இதுதான் தேச நலனில் அக்கரையோடு நடக்கும் பணி. ஆனால் கர்நாடகாவில் அண்டை மாநிலத்தையோ, சுப்ரீம் கோட்டையோ மதிக்க மாட்டோம் என்ற போக்கு காணப்படுகிறது.
எள்ளளவும் விட மாட்டோம்
பெருந்தன்மை காட்டுவதோடு இதை விட்டுவிட முடியாது. எனவே, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். பொக்ரான் அணுகுண்டு பரிசோதனையால்தான் அன்று ஜப்பான் நிதி தராமல் முறுக்கிக் கொண்டு இருந்தது. தற்போது அந்த முறுக்கு நீங்கி விட்டதால், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்று ஆயிரம் கோடிக்கும் மேலாக நிதியை பெற்று வந்துள்ளார்.
தற்போது இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஒரே நிலையில் நிற்கின்றனர். அதை கர்நாடகா மக்களும், கவர்னர் ஆட்சியும் உணர வேண்டும். மத்திய அரசும் காலம் தாழ்த்தாமல், இந்தப் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஆடிக் கறக்கவும், பாடிக் கறக்கவும் தெரியும். தமிழர்களின் உரிமை எள்ளளவும் விடப்படாது.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=403871&disdate=4/2/2008
No comments:
Post a Comment