Saturday, March 27, 2010

பார்லிமென்ட்டில் மணி அடிக்கும் ஆறு தமிழக எம்.பி.,க்கள்

கேள்வியே கேட்காத ஆறு தமிழக எம்.பி.,க்கள் : பார்லியில் தான் இந்த நிலைமை

 

Top world news stories and headlines detail 

பார்லிமென்ட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் ஆகிய இரண்டிலும் கேள்வி கேட்பதற்காக அதிகமாக நோட்டீஸ் அளித்த தமிழக எம்.பி.,க்கள் பட்டியலில் நெல்லை எம்.பி., ராமசுப்புவும், ஒரு கேள்விகூட கேட்காத தமிழக எம்.பி.,க்களின் பட்டியலில் இளங்கோவன், விஜயன், ரித்தீஷ், ஆதிசங்கர், திருவண்ணாமலை வேணுகோபால், மாணிக் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


பார்லிமென்ட்டில் ஒவ்வொரு நாளும் காலை ஆரம்பித்தவுடன் கேள்வி பதில் நேரம் நடைபெறுவதுண்டு. அமைச்சர்களிடம் இருந்து நேரடியாக பதிலைப் பெறும் வாய்ப்பு இதில் கிடைப்பதால் எம்.பி.,க்கள் உட்பட அனைவருமே ஆர்வம் காட்டுவதுண்டு. ஒவ்வொரு பிரச்னை குறித்தும் சந்தேகங்கள் மற்றும் லேட்டஸ்ட் நிலவரங்கள் என அனைத் தையும் அரசு தரப்பு அவையில் விளக்க வேண்டும் என்பதால் கேள்வி பதில் நேரம் மட்டும் மற்ற நேரங்களைக் காட்டிலும் அதிகமாக கவனத்தை ஈர்ப்பதுண்டு. ஆனால், ஒவ்வொரு எம்.பி.,யும் கேள்வி கேட்க வேண்டுமானால் அவர்களது கேள்விகளை கேட்க முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத் தாக வேண்டும். இவைகள் அனைத்தும் குலுக் கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ் வொரு நாளும் 15 கேள்விகள் மட்டுமே அவையில் பதிலளிக்க எடுத்துக் கொள்ளப்படும்.குலுக்கல் முறை என்பதால் நிறைய கேள்விகளுக்கு நோட்டீஸ் கொடுத்தால்தான் ஓரிரு கேள்விகளாவது தேர்வாகும்.



ஆனால், தமிழக எம்.பி.,க்கள் பலரும் கேள்விகளை கேட்டு அமைச்சர்களிடம் பதில் பெறுவதில் ஓரிரு எம்.பி.,க்களைத் தவிர பெரும்பாலானோர் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை.அதுமட்டுமல்லாது பிரதான கேள்வியை கேட்க முடியாவிட்டாலும்கூட அமைச்சர் பதில் அளித்துக் கொண்டிருக்கும்போதே துணைக்கேள்விகள் கேட்லாம். அதையும் கூட பயன்படுத்தி அமைச்சர்களை துணைக்கேள்வி கேட்டு தமிழக எம்.பி.,க்கள் கிராஸ் செய்து வளைப்பதில்லை.நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகிய இரண்டிலும் கேள்வி கேட்டு அதிக அளவில் நோட்டீஸ் அளித்தவர்களில் நெல்லை எம்.பி., ராமசுப்பு முதலிடம் பெற்றுள்ளார். மொத்தம் 224 கேள்விகளுக்கு அவர் நோட்டீஸ் அளித்துள்ளார்.அடுத்து திருப்பூர் எம்.பி.,சிவசாமி 97 கேள்விகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளார். சேலம் செம்மலை 92 கேள்விகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளார் ஜெயதுரை 88, சித்தன் 84, அழகிரி 66, நடராஜன் 54, குமார் 50, கணேசமூர்த்தி 49, டி.ஆர்.பாலு 47, லிங்கம் 46 என நோட்டீஸ் அளித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.



ஒரு கேள்விகூட கேட்கவேண்டுமென நினைக்காமல் ஒரு நோட்டீஸ் கூட அளிக்காமல் உள்ளோர் பட்டியலில் ஆறு தமிழக எம்.பி.,க்கள் உள்னர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் வடசென்னை எம்.பி., இளங்கோவன்தான். காரணம் இவர் அவை நடைபெற்ற 36 நாட்களும் தவறாமல் அவைக்கு வந்து ஆஜரானவர்.ஆனால் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. இது தவிர நாகப்பட்டினம் விஜயன், ராமநாதபுரம் ரித்தீஷ், கள்ளக்குறிச்சி ஆதிசங்கர், திருவண்ணாமலை வேணுகோபால், விருதுநகர் மாணிக் தாக்கூர் ஆகியோரும் ஒரு கேள்விகூட கேட்கவில்லை.கேள்வி கேட்பதில் பெரிய ஆர்வம் இல்லாத வகையில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் நோட்டீஸ் அளித்துள்ள தமிழக எம்.பி.,க்களும் சிலர் உள்ளனர். அந்த வகையில் மயிலாடுதுறை மணியன் 2 கேள்விகளுக்கான நோட்டீஸ்கள் மட்டுமே இதுவரை அளித்துள்ளார். திருவள்ளூர் வேணுகோபாலும் 2 கேள்விகளுக்கு மட்டுமே நோட்டீஸ் அளித்துள்ளார். வந்தவாசி கிருஷ்ணசாமியோ இதுவரை மூன்றே மூன்று நோட்டீஸ்கள்தான் அளித்துள்ளார்.



சிதம்பரம் திருமாவளவனும் மூன்று கேள்விகள் கேட்டுமட்டும் தான் நோட்டீஸ்கள் அளித்துள்ளார். வேலூர் அப்துல்காதர் 18 கேள்விகள் கேட்பதற்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.இவை எல்லாமே கேள்விகளை கேட்பதற்கு அளித்த நோட்டீஸ்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் மட்டுமே. இவற்றில் எத்தனை கேள்விகள் குலுக்கல் முறையில் தேர்வாகி அவைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அமைச்சரால் பதிலளிக்கப்பட்டன என்பதும், எழுத்து மூலமாக பதில் பெறப்பட்டன என்பதும் வேறு விஷயம். மேலும் பிரதான கேள்விகளை கேட்பதற்காக அளிக்கப்பட்ட நோட்டீஸ்கள்தான் இவை. ஆனாலும் தமிழக எம்.பி.,க்களில் கேள்வி நேரத்தின் போது துணைக்கேள்விகளை எழுப்பி கேள்வி கேட்டு பதில் பெற்றனர் என்பது பற்றிய விபரம் எல்லாம் வேறு என்பது குறிப்பிடத்தக்கது.



யார் யார் எத்தனை முறை பேசினார்கள்: பார்லிமெண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் எம்.பி.,க்கள் அவையின் நடவடிக்கைகளில் எந்த அளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை அவைக்கு வந்து இவர்கள் கையொப்பமிடும் வருகை பதிவேட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.அவைக்கு வந்து அமர்ந்து அவை நடவடிக்கைகளை கவனிப்பது ஒருகட்டம் என்றால், அவை நடவடிக்கைகளில் பங்கேற்பது அடுத்த கட்டம் . ஏற்கனவே குளிர்கால கூட்டத்தொடர் மொத்தம் 21 நாட்கள் நடைபெற்றன. தவிர பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பகுதியாக 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளன. ஆக மொத்தம் 36 நாட்கள் பார்லிமென்ட்டில் அவை நடந்துள்ள நிலையில், நிறைய விவாதங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.

இந்த வாய்ப்புகளை தமிழக எம்.பி.,க் கள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பது குறித்து ஆராய்ந்தபோது, இருப்பதிலேயே அதிகபட்சமாக 20 விவாதங்களில் நெல்லை எம்.பி., ராமசுப்பு பங்கேற்றுள்ளார். அதற்கு அடுத்து சித்தன் 18 முறையும், லிங்கம் 16 முறையும் பேசியுள்ளனர். எட்டு நாட்கள் மட்டுமே அவைக்கு வந்துள்ள அ.தி.மு.க., பார்லிமெண்ட் கட்சி தலைவர் தம்பித்துரை 14 முறை விவாதங்களில் பங்கேற்று பேசியுள்ளார். செம்மலை 13 முறையும், டி.ஆர்.பாலு, இளங்கோவன், சிவசாமி ஆகியோர் 11 தடவையும், கணேசமூர்த்தி 9 முறையும், திருமாவளவன்,குமார்,திருவண்ணாமலை வேணுகோபால் ஆகியோர் 8 முறையும் பங்கேற்றுள்ளனர். மிகவும் குறைவான எண்ணிக்கையில் விவாதங்களில் பங்கேற்றவர்களில் ஆனந்தன் மற்றும் மாணிக் தாக்கூர் ஆகியோர் உள்ளனர். இருவரும் ஒரே ஒரு முறைதான் பேசியுள்ளனர்.ஜெயதுரை, சிட்லபாக்கம் ராஜேந்திரன் 2 முறையும், விஸ்வநாதன், ஹெலன்டேவிட்சன், சுகவனம், சுகுமார்,ஆதிசங்கர் ஆகியோர் மூன்றே மூன்றுமுறையும் பங்கேற்றுப் பேசியுள்ளனர். நடராஜன், அழகிரி, ரித்திஷ், திருவள்ளூர் வேணுகோபால், அப்துல் ரகுமான் ஆகியோர் நான்குமுறையும், தாமரைச் செல்வன், மணியன், விஜயன் ஏழு முறையும் பங்கேற்றுப் பேசியுள்ளனர்.

 

சாதிக்கின்றனர் மற்ற மாநில எம்.பி.,க்கள் : அவை நடவடிக்கைகளில் பங்கேற்கும் இந்த வாய்ப்புகளை பிற மாநில எம்.பி.,க்கள் முடிந்த வரை நிறைய பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும் அவரவர் மாநில பிரச்னைகளை அவையில் கிளப்பி வருகின்றனர். குறிப்பாக பீகார் மற்றும் உ.பி., மாநில லாபி என்பது மிகவும் வலுவாக உள்ளது. இம்மாநிலங்களில் ஏதாவது சிறு சம்பவம் நடைபெற்றால் கூட அடுத்த நாள் அது பார்லிமென்ட்டில் எதிரொலிக்கும். இம்மாநில எம்.பி.,க்கள் எழுந்து அந்த பிரச்னையை கிளப்பி அவையையே கிடுகிடுக்க வைத்துவிடுகின்றனர். ஆனால், தமிழகம் தரப்பில் தலைபோகிற எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், அது குறித்து பெரிய அளவில் அவையில் எழும்புவதில்லை. அதுமட்டுமல்லாது தமிழகத்திலிருந்து விவாதங்களில் பங்கேற்று சிறப்புடன் பேசி செயலாற்றியவர்களில் நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், வைகோ, சுவாமிநாதன் என ஒரு சிலர் இருந்தனர். ஆனால் பார்லிமென்ட் நடவடிக்கைகளில் கலக்கிய இவர்கள், மாநிலத்தில் செல்வாக்கு பெற முடியவில்லை. சிறந்த பார்லிமென்ட்டேரியன்களுக்கு மக்கள் ஆதரவே ஊக்கம்.

தமிழகத்தில் அது தலைகீழ். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் இருந்து தேர்வாகி வந்திருப்பவர்களில் நிறையபேர் புதுமுகங்கள். இவர்களுக்கு அவை நடவடிக்கைகள் புதிது. மொழிப்பிரச்னை உள்ளிட்ட காரணங்களும் சற்று சிரமத்தை அளிக்கும். பேசுவதற்கு கட்சி கொறடாவின் அனுமதியும் வேண்டும். இத்தனை பிரச்னைகள் இவர்களுக்கு உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சமாளித்து, மக்களின் பிரச்னைகளை அவையில் எழுப்ப வேண்டுமென்ற வேட்கை வந்துவிட்டாலே, புதுமுகங்களும் எதிர்காலத்தில் அவையில் ஜொலிக்கத் துவங்குவர் என்பதில் சந்தேகம் இல்லை


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails