மாஸ்கோ:மாஸ்கோவில் மெட்ரோ ரயில்களில் பெண் தற்கொலைப் படையினர் நேற்று நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில், 37 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவில் ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த பெரிய தாக்குதல் இது என்பதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயணிகள் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருப்பது மெட்ரோ ரயில் போக்குவரத்து. சுரங்கப் பாதைகள் வழியாக இயங்கும் இந்த ரயில் போக்குவரத்தின் மூலம், தினமும் 50 லட்சம் பேர் பயணிக்கின்றனர். உலகின் மிகவும், 'பிசி'யான போக்குவரத்தில் ரஷ்ய மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு முக்கிய இடம் உண்டு.
உள்நாட்டு பாதுகாப்பு மையமாக விளங்கும் ரஷ்யாவின் பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள், மெட்ரோ ரயில் வழித்தடத்தின் அருகில் தான் உள்ளன.இங்குள்ள லுப்யங்கா என்ற மெட்ரோ ரயில் நிலையத்தில், நேற்று ஒரு ரயில் நின்றுக் கொண்டிருந்தது. மிகவும், 'பிசி'யான நேரம் என்பதால், ஏராளமான மக்கள் ரயிலிலும், நடைபாதையிலும் நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ரயிலின் இரண்டாவது பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.அங்கு நின்றுக் கொண்டிருந்த மக்கள், அலறியடித்துக் கொண்டு ஓடினர். ரயில்வே ஸ்டேஷன் முழுவதும், ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. குண்டு வெடிப்பில் தூக்கி வீசப்பட்ட உடல்கள், ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில், சிதறிப் போய் கிடந்தன.
ரயில் பெட்டிக்குள்ளும், நடைபாதையிலும் உடல்கள் கிடந்தன. இந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தோர், ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இச்சம்பவம் நடந்த 40 நிமிடங்கள் கழித்து, அடுத்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. முதல் குண்டு வெடிப்பு நடந்த ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, நான்கு ரயில்வே ஸ்டேஷன்களுக்கு அடுத்து உள்ள பார்க் குல்ட்ரி என்ற ஸ்டேஷனில் தான், இரண்டாவது குண்டு வெடிப்பு நடந்தது.
ரஷ்யாவின் சிட்டி சென்டரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ஒரு ரயில், இந்த ஸ்டேஷனில் நின்றபோது, ரயிலின் மூன்றாவது பெட்டியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பிலும் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர்.இதில் 12 பேர் பலியாயினர்; மேலும் பலர் காயமடைந்தனர். 40 நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து நடந்த இந்த பயங்கர குண்டு வெடிப்புகளில் மொத்தம் 37 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.
பெண் மனித வெடிகுண்டு: குண்டு வெடிப்பு குறித்து மாஸ்கோ மாநகர மேயர் யுரி லுஸ்கோவ் கூறியதாவது:குண்டு வெடிப்பு நடந்த லுப்யங்கா ரயில் நிலையத்தில், சிதறிய நிலையில் ஏராளமான உடல்கள் கிடந்தன. இதில் ஒரு பெண்ணின் உடல் மட்டும் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தது. அதை சோதனையிட்டபோது, அந்த உடலுடன் வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட, 'பேக்' இணைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பார்க் குல்ட்ரி ரயில் நிலையத்திலும் இதேபோல் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட் டது. மனித வெடிகுண்டுகளான இந்த பெண்கள் தான், இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களையும் நிகழ்த்தியுள் ளனர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இவர்கள் டி.என்.டி., ரக வெடிமருந்தை பயன்படுத்தி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின் றன. ரயில் நிலையங்களில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்ய உள்ளோம். பிரதமர் விளாடிமிர் புடினுக்கு, இதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வருகிறோம்.இவ்வாறு யுரி லுஸ்கோவ் கூறினார்.
யார் காரணம்? ரஷ்யாவின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வரும் செசன்யா பயங்கரவாதிகள் இத்தாக்குதலுக்கு காரணம் என்று தெரியவந்திருக்கிறது. ரஷ்ய குடியரசில் தென்மேற்கில் உள்ளது செசன்யா. இது காகசஸ் மலைப் பகுதியில் உள்ளது.இதன் மக்கள் தொகை எட்டு லட்சம் பேர். இதில் சன்னி முஸ்லிம்களும் ரஷ்ய பாரம்பரிய கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இவர்களுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.கடந்த பிப்ரவரியில் இன்குஷெடியா என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் 20 பயங்கரவாதிகள், ரஷ்ய படையினரால் கொல்லப்பட்டனர். இங்கு வாழும் பயங்கரவாத அமைப்பு தலைவர் டொகு உமரோவ் அப்போது, 'எங்கள் தாக்குதல் இனி ரஷ்ய நகரங்கள் பலவற்றில் இருக்கும்' என்று கோபமாக பேட்டியளித்தார். தற்போது இந்த பயங்கரவாத அமைப்பின் இணையதளத்தில் இரட்டை குண்டு வெடிப்பில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்தியா கடும் அதிர்ச்சி:ரஷ்யாவில் நடந்த குண்டு வெடிப்புக்கு, இந்தியா கடும் அதிர்ச்சி தெரிவித்ததுடன் கண்டனமும் தெரிவித்துள்ளது.ரஷ்ய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிபர் மெட்வதேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதம்:மாஸ்கோவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது கேட்டு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியானது, அதிர்ச்சி அளிக்கிறது. இது, மிகவும் மோசமான தாக்குதல். இது போன்ற வன்முறை சம்பவங்கள், மிகவும் கண்டனத்துக்குரியவை. விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு, இந்திய மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும், ரஷ்ய குண்டு வெடிப்பை கண்டித்துள்ளார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment