Thursday, March 4, 2010

சாகச சச்சின் வறுபடும் தோனி


பிப்ரவரி 24-ம் தேதி... ரயில்வே பட்ஜெட்டை டி.வி-யில் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவர்கள்கூட அவசரகதியில் சேனலை கிரிக்கெட் பக்கம் திருப்பினார்கள். சாதனை மன்னன் சச்சின், ரெட்டை சதம் அடிப்பாரா... மாட்டாரா என கிரிக்கெட் ஆர்வலர்கள் நெஞ்சை இறுகப் பிடித்தபடி காத்திருக்க... அடுத்தடுத்த அடியால் 195 ரன்களை நெருங்கினார் சச்சின்.

மைதானத்தில் இருந்தவர்களும், டி.வி-க்குள் தலை நுழைக்காத குறையாக இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் எப்போதடா இன்னும் ஐந்து ரன்களைக் கடப்பார் என 195-ல் நகம் கடித்துக் காத்திருந் தனர்! மும்பையில் பல இடங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள் சச்சின் ரசிகர்கள். 'பெட்டிங்' உலகும் கோடான கோடிகளில் மூழ்கியது!

1997-ல் சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் குவித்த 194 ரன்களே ஒருநாள் போட்டிகளில் தனி நபரின் அதிகபட்ச ரன்களாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை சென்ற ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே வீரர் கோவென்ட்ரி சமன் செய்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எட்டாக்கனியாகவே கருதப்பட்டு வரும் 'ரெட்டைச் சதம்' சாதனையை நிகழ்த்த சச்சின் மட்டுமல்ல... எத்தனையோ வீரர்கள் அதற்காக மெனக்கெட்டார்கள்.

1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி 183 ரன்கள் குவித்த நிலையில், துரதிர்ஷ்டமாக ரெட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். அதே ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், சச்சின் டெண்டுல்கர் 186 ரன்கள் குவித்திருந்தபோது, 50 ஓவர்கள் முடிந்ததால் சாதனை சாத்தியப்படாமல் போனது. 2000-ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அதிரடி வீரர் ஜெயசூர்யா 189 ரன்கள் குவித்திருந்தபோது, எதிர்பாராத வகையில் ஸ்டம்பிங் செய்யப்பட... சோகத்தோடு வெளியேறினார் அவர்.

2005-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் தற்போதைய இந்தியகேப்டன் மகேந்திர சிங் தோனி 183 ரன்கள் குவித்தார். மேற்கொண்டு ஆட ரன்கள் இல்லை! 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் கொஞ்சமும் தடுமாற்றமின்றி 175 ரன்களை எட்டியபோது, 'கண்டிப்பாக ரெட்டை சதம் போட்டுவிடுவார்' என உலகமே எதிர்பார்த்தது. ஆனால், அந்த மேட்சில் துரதிர்ஷ்டமாக கிப்ஸ் விக்கெட்டை இழந்தார்.

அதே ஆண்டு மீண்டும் ஒரு வாய்ப்பு சச்சினுக்கு கிடைத்தது. நியூ சிலாந்துக்கு எதிரான போட்டியில் ரெட்டை சத கனவோடு 163 ரன்களை சச்சின் குவித்தார். மேற்கொண்டும் நிறைய ஓவர்கள் பாக்கியிருந்த நிலையில் கண்டிப்பாக சாதனை செய்வார் என நினைக்க... திடீரென அவருக்கு கடுமையான வயிற்று வலி! 'உடல்வலியா... சாதனையா..?' என சச்சின்சுதாரிப்பதற்குள்... மருத்துவர்களே மைதானத்துக்குள் வந்து சச்சினை அழைத்துப்

போனார்கள். கடந்த ஆண்டு ஆஸ்தி ரேலியாவுக்கு எதிரான போட்டியில் 175 ரன்களில் சச்சின் எதிர்பாராத வகையில் ஆட்டமிழக்க... மூன்றாவது முறையாகவும் அவருடைய டபுள் செஞ்சுரி கனவு தகர்ந்தது.

14 ஆண்டுகளாக பலிக்காமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்த இந்த சாதனையை இன்னும் சில நிமிஷங்களில் சச்சின் நிகழ்த்தப் போகிறார் என்றால்... ரசிகர்களின் பதற்றம் எப்படி இருக்கும்! அந்தப் பதற்றத்தை பன்மடங்காக்கி லட்சக் கணக்கான ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளானார் இந்திய அணியின் கேப்டன் தோனி. ரெட்டை சதத்துக்கு வெறும் ஐந்து ரன்களே சச்சினுக்கு தேவை என்கிற நிலையில், தோனி அவரை 26 பந்துகள் வரை காத்திருக்க வைக்க... ரசிகர்கள் கோபத்தின் உச்சத்துக்கே போய்விட்டார்கள். ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேட்சில் இதேபோல் சச்சின் ரெட்டை சதத்தை நெருங்குவதற்கு வாய்ப்பில்லாதபடிரவீந்திர ஜடேஜா அடித்து விளையாடினார். அன்றைக்கு இந்தியா ஜெயிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஆனால், பெருமளவிலான ரன்களைக் குவித்திருக்கும் நிலையிலும் சச்சினுக்கு வாய்ப்பு கொடுக்காமல் 46, 47, 48 ஆகிய ஓவர்களில் முக்கால்வாசி பந்துகளை தோனியே எதிர்கொண்டு ஆடினார்.

உச்சகட்டமாக, ரெட்டை சதத்துக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 49 ஓவரில் ஓட்டங்கள் எடுக்காமல் முழு ஓவரையும் தோனியே எதிர்கொண்டார். அதேபோல், 50-வது ஓவரிலும் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டியவர், இரண்டாவது பந்தை பவுண்டரியை நோக்கி விரட்டினார். ஆனால், தென் ஆப்பிரிக்க வீரரின் துள்ளலான ஃபீல்டிங்கால் அப்பந்து எல்லைக் கோட்டில் தடுக்கப்பட... ஒரு ரன்னே எடுக்கப்பட்டது. அப்படியும் அடுத்த ரன்னுக்கு தோனி முயல... சச்சினோ ஒரு ஓட்டத்துடன் நிறுத்திக் கொண்டார்... தோனி பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

ஒருவழியாக தனக்குக் கிடைத்த இறுதி ஓவரின் மூன்றாவது பந்தை சச்சின் நேக்காக தட்டிவிட... அரங்கமே ஆர்ப்பரித்துக் கொண்டாட ரெட்டை சதக் கனவு நிறை வேறியது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் சச்சினை வாழ்த்து மழையால் நனைய வைக்க... கிரிக்கெட் விமர்சகர்களோ, ''இந்திய அணிக்குள் இருக்கும் உட்பூசலை இந்த ஆட்டம் அம்பலப்படுத்திவிட்டது...'' என்றே சொல்லிக் குமுறுகிறார்கள்.

சச்சினின் சாதனையை தோனி தடுக்க நினைத்ததாகவே குற்றம்சாட்டும் சிலர், ''சச்சினுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து பேட்டிங் முனையில் இருந்தார் தோனி. அதையும் மீறி ஒருவழியாக ரெட்டை சதத்தை சச்சின் அடித்த பிறகும் கேப்டன் என்கிற முறையிலாவது தோனி சந்தோஷத்தில் துள்ளிய படி சச்சினை கொண்டாடி இருக்க வேண்டும். அவரோ எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் இருந்ததே... அவருடைய மன அழுக்கை அம்பலமாக்கிவிட்டது. தோனி இருந்த இடத்தில் கங்குலி இருந்திருந்தால் மைதானத்திலேயே சச்சினை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்பார்!'' என்கிறார்கள்.

தோனியின் ஆதரவாளர்களோ, ''சச்சின் ரெட்டை சதத்தை நெருங்க ஊக்கப்படுத்தியதே தோனிதான். கடைசி நேரத்தில் சச்சினுக்கு ரொம்பவே டயர்டாகிவிட்டது. ஆடுமுனையில் இருந்திருந்தால் அவரால் தாக்குப் பிடித்து தன்னை ஃப்ரெஷ்ஷாக்கி இருக்க முடியாது. அதுதெரிந்துதான் அனைத்து பந்துகளையும் தோனியே எதிர்கொண்டார். தோனி இப்படி உதவியிருக்காவிட்டால், சச்சின் 190 ரன்களிலேயே வெளியேறி இருப்பார். இந்தளவுக்கு தோனி கைகொடுத்ததால்தான் 20 ஆண்டு நிறைவு சாதனை விருதை வாங்கிய சச்சின் அதனை தோனியின் கையில் கொடுத்து அழகு பார்த்தார்!'' என்கிறார்கள்.

எது எப்படியோ... கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதன் ஆடம்பரத் தன்மை மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களேகூட, சாதனை படைத்த அந்த வீர மகனை நோக்கி மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்து காட்டப்பட்ட வாசகங்களை மறுக்கவில்லை -''கிரிக்கெட் என்பது ஒரு மதம் என்றால்... சச்சின் அதன் கடவுள்!''

source:vikatan

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails